2025 மே 17, சனிக்கிழமை

கருணாநிதியின் அழைப்பும் அரசியல் பின்னணியும்

Thipaan   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயகாந்த், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்' என்ற, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் அறிக்கை, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில், கூட்டணிக் கட்சிகள் யார் யார் என்பதுதான் இப்போது முக்கியக் கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக 'எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்' என்று வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்தை சந்தித்து கோரிக்கை வைத்த தினத்தில் 'விஜயகாந்துக்கு அழைப்பு' என்ற ஆயுதத்தை கையிலெடுத்த கருணாநிதி, வைகோவையும் மற்ற மக்கள் நலக்கூட்டணியினரையும் திகைக்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் நலக்கூட்டணியினருக்கு முன்பு, பா.ஜ.க.வினரும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்கள். இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணிக்கு 5 சதவீத வாக்குகள் மட்டுமே தேர்தலில் கிடைக்கும். அவர்களுக்கு விஜயகாந்த், வாசன் போன்றவர்கள் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஏதாவது அர்த்தமுள்ள வாக்கு வங்கியைப் பெற முடியும். அப்போது கூட விஜயகாந்த் தலைமையில் மக்கள் கூட்டணி இயங்கினால் கூட, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது சிரமம் என்பதுதான் தேர்தல் புள்ளிவிவரங்கள் காட்டும் பாடம்.

இதே போல் தான் பா.ஜ.க. கூட்டணியில் சேருவதும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியின் மோகத்தில் அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு அந்த அளவு வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே, இந்த இரு அணிகளிலும் சேருவது 'தற்கொலைக்குச் சமம்' என்பது விஜயகாந்துக்கு மட்டுமல்ல, அக்கட்சியில் உள்ள முன்னணித் தலைவர்கள் அனைவருக்குமே புரியும்.

இருந்தாலும் தி.மு.க. சார்பில் வெளிப்படையாக 'தே.மு.தி.க வேண்டும்' என்று சொல்லவில்லை என்ற கோபம் விஜயகாந்துக்கு இருந்தது. அவர் சில பேட்டிகளில் கூட, 'ஏன், தி.மு.க. இறங்கி வராதா' என்றே கூடக் கேள்வி கேட்டார். முன்கூட்டியே விஜயகாந்தை அழைத்தால், 'துணை முதலமைச்சர், அதிக தொகுதிகள் போன்ற கோரிக்கையை' விஜயகாந்த் வைப்பார் என்ற தயக்கத்தினாலேயே தி.மு.க. தரப்பில் அமைதி காத்தார்கள்.

இதுபோன்றதொரு சூழலில்தான், வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியினர், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் அவரைச் சந்தித்தார்கள். அந்த சந்திப்பின் போது 'நம் அணி ஜெயிக்குமா' என்ற கேள்வியைக் கேட்டு மக்கள் நலக் கூட்டணியினரை திக்குமுக்காட வைத்துள்ளார் விஜயகாந்த். பேச்சுவார்த்தையின் இறுதியில் 'புத்தாண்டு பிறந்ததும் நல்ல முடிவு சொல்லுங்கள்' என்று கூறிவிட்டு, வைகோவும் அவருடன் சென்றவர்களும் திரும்பி விட்டார்கள்.

இனியும் தாமதிக்கக் கூடாது என்ற எண்ணத்துக்கு வந்த தி.மு.க., உடனடியாக விஜயகாந்துக்கு நேரடி அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பின் மூலம் முதல் சுற்றில், வைகோ மற்றும் பா.ஜ.க.வை விட தி.மு.க. மிக முக்கியம் என்று விஜயகாந்தை நினைக்க வைத்துள்ளார் கருணாநிதி.

அதே போல் தி.மு.க.வே அழைப்பு விடுத்துள்ளதால், வைகோ மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி முயற்சிகள் ஸ்தம்பித்து நிற்கும் நிலைக்கு வந்து விட்டன. பத்திரிகைகளில் தி.மு.க.வின் அழைப்புத்தான் 'டாக் ஆப் தி டவுன்' ஆனதே தவிர, வைகோ- விஜயகாந்த் சந்திப்பு அல்ல.

தி.மு.க. தரப்பில், 'கூட்டணிப் பந்தை' உருட்டி விஜயகாந்தின் கதவு அருகில் நிற்க வைத்துள்ளார் கருணாநிதி. இனி, 'தி.மு.க. கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா' என்று முடிவு தெரிவிக்க வேண்டிய இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார். அவர் முன்பு இருக்கும் ஒரே சவால், அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவதுதான் என்று அக்கட்சியினரே சொல்லுகிறார்கள்.

தன்னை, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட விடாமல், தன் மீது அடுக்கடுக்காக அவதூறு வழக்குகளை பதிவு செய்து, தன் கட்சியினரை ஆங்காங்கே கைது செய்யும் அ.தி.மு.க அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் முக்கிய வியூகமாக இருக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் 'ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து இறக்க என்ன தியாகத்தையும் செய்யத் தயார்' என்று வெளிப்படையாகவே பேசினார் விஜயகாந்த்.

அதே நேரத்தில் பொதுக்கூட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் தாக்கிப் பேசி வருகிறார். அவர் அறிவித்த 'எந்த தியாகத்துக்கும் தயார்' என்ற அறிவிப்பானது தன் முதலமைச்சர் வேட்பாளர் அந்தஸ்தையும் விட்டுக் கொடுத்து, தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் தயார் என்பதாகவே அரசியல் வட்டாரத்தில் எடுத்துக் கொண்டார்கள். அது தவிர ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 'என் கட்சியினர், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கருதியது உண்மைதான்' என்று வெளிப்படையாகவே விஜயகாந்த் அறிவித்தார்.

அவர் தே.மு.தி.க.வை ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை 'தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க என் தொண்டர்கள் விரும்புகிறார்கள்' என அறிவித்தது இதுதான் முதல் முறை. இந்நிலையில் கூட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க மீதான தாக்குதலை விஜயகாந்த் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

தேர்தல் கூட்டணியில் தனக்கு வேண்டிய தொகுதிகள் கிடைக்கும் நிலை உருவாகும் வரை இப்படியொரு வியூகத்தை வகுத்து செயற்படுவது அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானதுதான். அந்த வழியில்தான், தி.மு.க. கூட்டணியில் தனக்கு எத்தனை தொகுதிகள் என்று தெரிகிற வரை, தி.மு.க. மீதான தாக்குதலையும் அவர் தொடரவே செய்வார். இருந்தாலும் அவரது மனம் தி.மு.க.வை நோக்கி இருக்கிறது என்பதற்கு சாட்சியாகத்தான் அவர் மக்கள் நலக்கூட்டணியினரை சந்தித்தாலும், பா.ஜ.க.வினரை சந்தித்தாலும் 'தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறதே.

இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை' என்று கூட்டணிக் கதவை திறக்காமல் இருக்கிறார். ஆகவே, தி.மு.க.வின் நேரடி அழைப்புக்காகவே அவர் காத்திருக்கிறார் என்பதை, விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். வழக்கமாக ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின் போதும் ஜனவரி மாதத்துக்கு மேல் 'யாருடன் கூட்டணி' என்பதை மாநாடு ஒன்று போட்டு அறிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

அதேபோல், இந்த முறையும் அது போன்றதொரு மாநாட்டைப் போட்டு யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார் என்பதுதான் தகவல். தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் இந்த அறிவிப்பின் மூலம், 'நாங்கள் கூட்டணிக்கு ரெடி. உங்கள் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்' என்று தே.மு.தி.க.வில் உள்ள தொண்டர்களுக்கு செய்தி சொல்லியாகி விட்டது.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற அழுத்தம், தே.மு.தி.க தொண்டர்களிடமிருந்து விஜயகாந்துக்கு  இனி வரும். அந்த ஓர் அழுத்தத்துக்கு, தி.மு.க. இப்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை 'தி.மு.க.- தே.மு.தி.க' கூட்டணியை நோக்கி உருவாகியிருக்கிறது. இனி அடுத்த கட்டக் காட்சிகள் அரங்கேற வேண்டும்.

இதற்கிடையில், வருகின்ற டிசெம்பர் 31 அன்று அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. அன்றைய தினம் 'கூட்டணி பற்றிய வியூகத்தை ஜெயலலிதா வெளியிடுவார்' என்று அ.தி.மு.க வினர் எதிர்பார்க்கிறார்கள். 'அ.தி.மு.க வும்- பா.ஜ.க.வும்' கூட்டணி சேருமா என்ற கேள்விக்கான சூழ்நிலைகள் நெருக்கமாகி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களில் உதவி செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் ஒருவரின் பின் ஒருவராக தமிழகத்துக்கு வருவதே இதற்கு சாட்சியாக இருக்கிறது.

இதுவரை வெள்ளம் வந்த எந்த மாநிலத்துக்கும் மத்திய அமைச்சர்கள் படை இப்படிச் சென்று முட்டி மோதியதில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.கவுக்கும் இருக்கும் நெருக்கமான உறவு தேர்தல் கூட்டணியை மனதில் வைத்தே என்றாலும் பா.ஜ.க.வின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ் 'பா.ஜ.க.- அ.தி.மு.க கூட்டணி என்பது கற்பனையானது' என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அவரின் வார்த்தைக்கு அதிக அர்த்தம் தேடி அலைய வேண்டியதில்லை. இப்போது தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டு விட முடியும் என்று நினைக்கிறது பா.ஜ.க. அதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்றாலும், இன்னமும் கூட 'எங்களை விட்டு விஜயகாந்தும், டொக்டர் ராமதாஸும் பிரிய மாட்டார்கள்' என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள்.

பா.ஜ.க.வில் உள்ள முக்கிய மாநில தலைவர்கள் அனைவருமே இப்படிப் பேசிக் கொண்டிருந்தாலும், அ.தி.மு.க தரப்பிலிருந்து 'பா.ஜ.க.வுடன் கூட்டணி' என்பதற்கு பாஸிட்டிவ் அம்சம் ஏதும் வெளிவரவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பும் ஏதும் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் மீலாதுன் நபி விழா, கிறிஸ்மஸ் என்று வழக்கம் போல் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் அவர் 'அ.தி.மு.க தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும்' என்ற தோற்றத்தைத்தான் வெளிப்படுத்தி வருகிறார். ஆகவே, தமிழக அரசியலில் திடீரென்று கூட்டணிப் பரபரப்பு சூடுபிடித்துள்ளது.

விஜயகாந்துக்கும் தி.மு.க. விடுத்த அழைப்பும், அ.தி.மு.க கூட்டப் போகும் பொதுக்குழுவும் 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தின் போக்கை படம்பிடித்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது. தி.மு.க.வும், அ.தி.மு.க வும் கூட்டணிக்காக களத்தில் இறங்கும் போது 'யார் யாருடன் கூட்டணி' என்ற கேள்விக்கு பதில் காணப்பட்ட, தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு அணியும் அமையும். இந்நிலையில் இதுவரை தனி ஆவர்ததனம் செய்து கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் தாக்குப் பிடித்து தனியாகவே நிற்குமா அல்லது தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா? என்பது புரிந்து விடும்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .