2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கறுப்பு ஜூலை இன அழிப்பு

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 98)

இனஅழிப்பு  

இன அழிப்பு (Genocide) என்பதை, 1948 ஆம் ஆண்டின் இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தின் இரண்டாவது சரத்து, பின்வருமாறு வரையறை செய்கிறது: ‘இந்தச் சாசனத்தின்படி, இனவழிப்பு என்பது ஒரு தேசம் அல்லது இனம் (race and, ethnicity) அல்லது மதம் சார்ந்த குழுவை, முற்றாக அல்லது பகுதியளவில் அழிக்கும் நோக்கத்துடன் பின்வரும் செயல்களேதும் செய்யப்படுதல்:

(அ) அக்குழுவைச் சேர்ந்தவர்களைக் கொல்லுதல்;

(ஆ) அக்குழுவைச் சேர்ந்தவர்களின் மேல், உடல் ரீதியான அல்லது உள ரீதியான கடுமையான தீங்கை இழைத்தல்;

(இ) முழுமையானதோ அல்லது பகுதியளவிலானதோவான உடல் ரீதியான அழிவை, அக்குழுவுக்கு இழைக்கும் வகையில் திட்டமிட்டு, ஒரு வாழ்க்கை நிலைமையை அக்குழுவின் மீது வேண்டுமென்றே திணித்தல்;

(ஈ) அக்குழுவுக்குள்ளே பிறப்பைத் தடுக்கும் திட்டங்களைத் திணித்தல்; மற்றும்

(உ) அக்குழுவைச் சார்ந்த குழந்தைகளை வேறொரு குழுவுக்குப் பலவந்தமாக மாற்றுதல் என்பனவாம்.   

இச்சாசனத்தின் மூன்றாவது சரத்து, இனஅழிப்பு, இனஅழிப்பைச் செய்வதற்காக சூழ்ச்சி செய்தல், நேரடியாகவும் பொதுவிலும் இனஅழிப்பைச் செய்வதைத் தூண்டுதல், இனஅழிப்புச் செய்வதற்கான முயற்சி, இன அழிப்புச் செய்வதற்கு உடந்தையாக இருத்தல் ஆகியவற்றைத் தண்டனைக்குரிய குற்றமாகப் பறைசாற்றுகிறது.   

இந்த இனஅழிப்புச் சாசனம், உருவாக்கப்படுவதில் இனஅழிப்புக்கு எதிரான செயற்பாட்டாளராக விளங்கிய சட்டவியலாளர் ரபேல் லெம்கின்னின் பங்கு குறிப்பிடத்தக்கது.   

இனப்படுகொலையை ரபேல் லெம்கின் இவ்வாறு வரையறுக்கிறார்: ‘இனப்படுகொலை என்பது ஓர் இனக் குழுவை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல; அதன் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் கொல்லும்போது, மட்டுமே இவ்வாறு பொருள்கொள்ள முடியும். 

மாறாக இனப்படுகொலை என்பது, ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்து அழிக்கும், வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயற்பாட்டையே குறிக்கிறது’ என்கிறார்.   

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜேர்மனியின் நாஸிப் படைகள், ஏறத்தாழ ஆறு மில்லியன் யூதர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்ததை ‘மாபெரும் இன அழிப்பு’ (ஹொலோகோஸ்ட்) என்ற பதம் பொதுவாகச் சுட்டி நிற்கிறது.

யூதர்களைப் பெரும் பிரச்சினையாகக் கருத்துருவாக்கம் செய்த அடொல்ப் ஹிட்லரின் நாஸி அரசாங்கம், அந்த ‘யூதப் பிரச்சினைக்கு’ இறுதித் தீர்வாக, ‘ஹொலோகோஸ்டை’ முன்வைத்தது.   

இந்த யூதப் படுகொலைகள் நாஸிகளால், அவர்களின் அரச இயந்திரத்தால் பல படிமுறைகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் என்ற தகுதிநீக்கம் செய்து, அவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கியது நாஸி அரசாங்கம்.   

அதன்பின், வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே யூதர்களும் நாஸிகளுக்கு எதிரானவர்களும் கொண்டு வரப்பட்டு, சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய நாஸிகள், அங்கிருந்த யூதர்களையும் தமக்கு எதிரானவர்களையும் கொன்றொழித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை அங்கிருந்து சரக்குப் புகையிரதங்களில் அடைத்து, பல நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த கொலை முகாம்களுக்கும், வதை முகாம்களுக்கும் கொண்டு சென்று, நச்சுவாயு அறைகளுக்குள் அடைத்துக் கொல்லப்பட்டனர்.   

நாஸி அதிகார அமைப்பின் ஒவ்வொரு மட்டமும் பிரிவும் இப்படுகொலைகளிலும், யூத இனவழிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டாம் உலக மகாயுத்தமும் இந்த இனப்படுகொலையும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவின் பின், உலகை விளிப்படையச் செய்தன.   

‘மனித உரிமைகள்’ எனும் கருத்தியல் முக்கியத்துவம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலக மனித உரிமைகள் பிரகடனம் 1948 இல் ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு, இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனமும் இயற்றப்பட்டது.   

இவற்றின் அடிப்படை நோக்கம், இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நடந்த இனப்படுகொலை, இன அழிப்பு உள்ளிட்ட பேரழிவுகளையும் அநீதிகளையும் இனியும் மனித குலம் சந்திக்கக் கூடாது என்பதுதான்.

இலங்கையானது 1950 ஒக்டோபர் 12 ஆம் திகதி, இனஅழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்துக்கு இணங்கியிருந்தது. 1955 டிசெம்பர் 14 ஆம் திகதி, இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டது. நிற்க.   

கறுப்பு ஜூலை இனஅழிப்பின் ஆரம்பம்

ஒரு தாக்குதலில் 13 இராணுவம் பலியானது இதுதான் முதல் தடவை. போர்க்களத் தகவல்களைப் பிரசுரிக்கவோ, ஒலிபரப்பவோ தடை இருந்த காரணத்தால், 23 ஆம் திகதி நடந்த இந்தத் தாக்குதல் பற்றிய தகவல்கள் ஒரேயடியாகப் பரவவில்லை.  

 ஆனால், வாய்மொழியாக அதிகளவில் பரவியது என்று ‘கறுப்பு ஜூலை’ பற்றி எழுதிய சில நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். 1983 ஜூலை 24 ஆம் திகதி மாலை, கொழும்பு, கனத்தை பொது மயானத்தில் குறித்த 13 இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. 

 கொழும்பு, கனத்தை பொது மயானம், பொரளை சந்திக்கருகில் அமைந்திருக்கிறது. அதிலிருந்து சிலதூரத்தில்தான் கொழும்பு நகரின் இதயம் என்று சொல்லப்படுகின்ற கொழும்பு - 07 பகுதி அமைந்திருக்கிறது.   

கொழும்பு - 07 என்பது, பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் இல்லங்களை உள்ளடக்கிய பகுதி. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இல்லமும் அங்குதான் அமைந்திருந்தது.   

கனத்தை பொது மயானத்தைச் சுற்றி, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பலியான இராணுவத்தினரின் உறவினர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். 

பலியான இராணுவத்தினரின் உடல்களை விமானம் மூலம் இரத்மலானை விமான நிலையத்துக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து ‘ஏ.எப். ரேமண்ட்’ மலர்ச்சாலைக்கு கொண்டு வந்து, உடல்கள் இறுதிக் கிரியைகளுக்குத் தயாராக்கப்பட்டு, கனத்தை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகளை நடத்துவதுதான் திட்டமாக இருந்தது என்பதுடன், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வது என்றும் முடிவாகியிருந்தது எனக் கறுப்பு ஜூலை பற்றி எழுதிய சில நூலாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.   

ஆனால், ஏதோ காரணங்களின் நிமித்தமாக குறித்த உடல்களை வடக்கிலிருந்து கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டுவருவது தாமதமாகியது. இதேவேளை, இறுதிக் கிரியைகள் பற்றிய செய்தி பரவியதால், நேரம் செல்லச் செல்ல கனத்தை பொதுமயானத்தில் மக்கள் கூட்டமும் கூடத்தொடங்கியது. இதன்பின் நடந்த சம்பவங்கள் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.   

1983 இனக்கலவரத்தின் சம்பவங்களைத் தொகுப்பதும், ஒவ்வொரு சம்பவத்தையும் பதிவு செய்வதும் இங்கு அவசியமில்லாதது என்பதனாலும் 1983 கலவரத்தின் போக்குபற்றியும் அதன் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகள் பற்றியும் ஆராய்வதே ‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள்’ பற்றிய தேடலில் முக்கியம் பெறுவதனாலும், நடந்த சம்பவங்கள் பற்றிய வேறுபட்ட பதிவுகள் தொடர்பிலான விரிவான ஆய்வு தவிர்க்கப்படுகிறது.   

பலியான இராணுவத்தினரின் உடல்கள் வந்து சேரத் தாமதமாகியபோது, பொரளைக் கனத்தை பொது மயானத்தில் கூடியிருந்த, பலியான இராணுவத்தினரின் உறவினர்களிடையே குறித்த உடல்களைத் தமக்குக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியது. பொதுவானதொரு இறுதிக் கிரியை அல்லாது தமது பாரம்பரியங்களுக்கு ஏற்றவாறான இறுதிக் கிரியைகளை நடத்த அவர்கள் விரும்பினார்கள்.   

இதேவேளை, யாழ்ப்பாணம் சென்றிருந்த இராணுவத்தளபதி, மீண்டும் கொழும்பு திரும்புவது திட்டமாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தவது அவசியம் என்று கருதியதால் ஜனாதிபதி ஜே.ஆர், இராணுவத் தளபதியை இன்னொரு தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்குமாறு பணித்ததாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார்.   

பலியான இராணுவத்தினரின் உடல்கள் இரத்மலானை விமானநிலையத்தை வந்தடைய இரவு 7.20 மணியானது. இந்தநேரத்தில் கொழும்பு, கனத்தை பொது மயானத்தில் கூடியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருந்தது. ஏறத்தாழ, 8,000-10,000 பேர் வரை கூடி இருக்கலாம் என வேறுபட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   

 உடல்கள் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்படக்கூடாது என்ற கோரிக்கை மெதுவாக வலுக்கத் தொடங்கியதுடன், உடல்களை அடக்கம் செய்வதற்கு தயாராகவிருந்த குழிகளை மண்ணிட்டு மூடத்தொடங்கியதுடன், இறுதிக் கிரியைகளுக்குத் தயாராக இருந்தவற்றையும் சிதைக்கத் தொடங்கினர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் மீது கல்வீச்சும் நடந்தது.  

 அங்கிருந்த பொலிஸாரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததை உணர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், கலவரமடக்கும் பொலிஸ்படையை வரவழைத்தனர்.

இதன் பின்னர், கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சும், தடியடியும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டத்தை அடக்கும் பொறுப்பிலிருந்து பொலிஸார் பின்வாங்கி, அந்தப் பொறுப்பு இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.  

இரவு 8.30 மணியளவில் இரத்மலானையிலிருந்து கொழும்பு மயானத்தை நோக்கி, பலியான இராணுவத்தினரின் உடல்கள், பலத்த பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் புறப்பட்டது.

இதனிடையே கனத்தை பொது மயானத்தில் ஏற்பட்டிருந்த கலவர சூழல், மற்றும் தம்மிடம் உடல்களை ஒப்படைக்குமாறு எழுந்த உறவினர்களின் கோரிக்கை என்பவற்றைக் கருத்தில்கொண்டு, குறித்த இறுதிக்கிரியைகளை நிறுத்தி, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது.   

உள்ளக பாதுகாப்பு அமைச்சர் ரீ.பீ.வெரப்பிட்டிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சேபால ஆட்டிகல ஆகியோர் ஜனாதிபதி ஜே.ஆரைக் கனத்தை பொது மயானத்திலிருந்து சிறிது தொலைவில், வோட் ப்ளேஸில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் சந்தித்து, இதுபற்றிய தமது கருத்தையும் தெரிவித்தார்கள்.

அதன்பின்னர் குறித்த இறுதிக் கிரியைகளை நிறுத்திவிட்டு, இராணுவத் தலைமையகத்தில் வைத்து உடல்களை உறவினர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உத்தரவிட்டார்.   

இரவு 10 மணியளவில், கனத்தை பொது மயானத்தில் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இறந்தவர்களின் உறவினர்கள் இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.   

கனத்தை மயானத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படலாமென எதிர்பார்த்த பொலிஸார், ஜனாதிபதி ஜே.ஆரின் இல்லம் அமைந்திருந்த வோட் ப்ளேஸ் உள்ளிட்ட பிரதேசத்தைப் போக்குவரத்துக்கு மூடியதுடன், பாதுகாப்பையும் அதிகப்படுத்தினர்.   

கனத்தை பொது மயானத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்கள் பொரளைச் சந்தியை நோக்கிப் படையெடுத்தனர். அவர்கள் சென்ற வழியில் அமைந்திருந்த ‘நாகலிங்கம் ஸ்டோர்ஸ்’ என்ற தமிழருக்குச் சொந்தமான கடை அடித்து நொறுக்கப்பட்டது என்று ரீ.டீ.எஸ்.ஏ. திசாநாயக்க பதிவு செய்கிறார்.  

இதைத் தொடர்ந்து, வன்முறைத்தாக்குதல்கள் கடுகதியில் பரவத் தொடங்கின. ஒரு சங்கிலித் தொடர் விளைவாகத் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், கட்டடங்கள் என்பன தாக்கப்பட்டன; எரியூட்டப்பட்டன.   

அன்று, கொழும்பினதும் இலங்கையினதும் வணிக மற்றும் வர்த்தகத் துறையைப் பொறுத்தவரையில் தமிழர்களது பங்கு கணிசமானளவில் இருந்தது. சில்லறைக் கடைகள் முதல் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என வணிக மற்றும் உற்பத்தித் துறையில் தமிழர்களின் பங்கு பெருமளவு இருந்தது. பொரளையிலும் அதை அண்டிய பகுதிகளிலும் தமிழர்களுக்குச் சொந்தமான வணிக, வர்த்தக ஸ்தாபனங்கள் இயங்கின, இவையே இந்தக் கலவரத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளாகின. பல கட்டடங்களில் தீ கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. வியாபார ஸ்தாபனங்களின் மீது தொடங்கிய தாக்குதல்கள் அடுத்தகட்டமாகத் தமிழ் மக்களின் வாசஸ்தலங்களை நோக்கித் திரும்பியது.   

பொரளைப் பிரதேசத்தினருகே இருந்த தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, வீடுகளுக்கு எரியூட்டப்பட்டது. பல தமிழ் முக்கியஸ்தர்களது வீடுகளும் முதலில் தீக்கிரையாக்கப்பட்டன. குறுப்பு வீதியில் அமைந்திருந்த முன்னாள் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான செல்வரட்ணத்தினது வீடும், கொட்டா வீதியில் அமைந்திருந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர்  தவராசாவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டன என்று ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார்.  

பொரளையில் வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபர் ருத்ரா இராஜசிங்கம் தலைமையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு மற்றும், வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துதல் ஆகியவற்றை முயற்சித்துக் கொண்டிருந்தனர்.   

( அடுத்த வாரம் தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X