2025 மே 01, வியாழக்கிழமை

காணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்

மொஹமட் பாதுஷா   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், அதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தளபதிகளும் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்றும் எழுதிக் கொண்டும் வலியுறுத்திக் கொண்டும் இருக்கின்றோம்.   

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், இச்சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளுக்கும் செவி கொடுப்பதற்குக் கூட விரும்புகின்றார்கள் இல்லை என்பதை உணரும்படியான சம்பவங்கள், தொடர்ச்சியாக இடம்பெறுவதைக் காண முடிகின்றது. அந்த வேளைகளில் எல்லாம், ‘கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவர்கள், வானமேறி வைகுண்டம் போவதாகச் சொல்வார்களாம்’ என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய அரசியலை மய்யமாகக் கொண்டு செயற்படுகின்ற அரசியல்வாதிகளோ, தமிழ்ச் சமூகத்தின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசியலைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் கூட, தமிழர்களுக்குப் பெரிதாக ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.   

என்றாலும், சமூகம் என்று வரும்போது, தமிழர்களின் பிரச்சினைகள் என்று வரும்போது, எங்கிருந்தாலும் அந்தப் புள்ளியை நோக்கி, தமிழ் அரசியல்வாதிகள் ஓடோடி வருகின்றார்கள்.  

ஓர் உண்ணாவிரதம் நடந்தால், ஒரு சத்தியாக் கிரகமோ, பேரணியோ முன்னெடுக்கப்பட்டால், தமிழ் அரசியல்வாதிகள் களத்துக்குச் செல்கின்றார்கள். அதுவோர் அரசியல் உத்தியாக இருக்கலாம்; அவர்களால் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் கூடப் போகலாம். ஆனால், மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக, அவற்றுக்குச் செவிசாய்ப்பதற்காக, அவர்கள் நேரத்தை ஒதுக்கி, முக்கியத்துவம் அளிப்பதை மறுக்க முடியாது.  

ஒருவேளை, விடுதலைப் புலிகளைப் போல, அரசியல் தலைவர்களையும் ஆட்டுவிக்கும் ஒரு விடுதலை இயக்கம், முஸ்லிம்களிடையேயும் இருந்திருந்தால், முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையேயும் ஒற்றுமையும் மக்கள் சார்ந்த அரசியல் போக்கும் ஏற்பட்டிருக்குமோ என்னவோ?   

ஆனால், நிகழ்காலத்தில் அவ்வாறான ஓர் அபூர்வ அரசியல் கலாசாரத்தை, முஸ்லிம் சமூகத்தில் காணக் கிடைப்பதில்லை. இவ்வாறான ஒரு சம்பவம், அண்மையில் கூட இடம்பெற்றது.  

மனித அபிவிருத்தி நிறுவனமானது, அம்பாறை மாவட்டக் காணி உரிமைக்கான செயலணியுடன் இணைந்து, ‘காணி உரிமைக்கான பொறுப்புக்கூறல்’ என்ற நிகழ்வைக் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், முஸ்லிம் தலைமைகளோ, மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ இந்நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை.  

அம்பாறை மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற மேற்படி அமைப்பு, பல்வேறு காத்திரமான ஆவணங்களுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கையொன்றை முன்வைப்பதுடன், ஆவணப் படம் ஒன்றையும் வெளியிடுவது, ஏற்பாட்டாளர்களின் நோக்கமாக இருந்தது.  

காணிப் பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; தமிழர்கள், சிங்களவர்களுக்கும் இருக்கின்றன என்ற அடிப்படையில், இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள மூவின மக்களும் மதத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.   

முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னிலையில், இந்தத் தரவுகளை எல்லாம் சமர்ப்பித்து, அவர்களின் பொறுப்பை உணர்த்தி, பொறுப்புக்கூறலுக்கான உத்தரவாதத்தை அவர்களிடமிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.  

இந்நிலையில், இந்த நிகழ்வுக்குத் தேர்தல் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டதை குறிப்பிட்டாக வேண்டும். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இந்நிகழ்வு நடைபெறவிருந்த மண்டபம், பங்குபற்றுநர்கள் உள்நுழைய முடியாதவாறு மூடப்பட்டதுடன், உதவித் தெரிவத்தாட்சி அதிகாரியான மாவட்ட செயலாளரால் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அங்கு அல்லோலகல்லோலமும் சலசலப்பும் ஏற்பட்டது.  

உண்மையில், இது ஓர் அரசியல் நிகழ்வல்ல; மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஒரு களமாகும். மேலோட்டமாகப் பார்த்தால், இதற்குத் தேர்தல் சட்டத்தில் தடை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், அரசியல்வாதிகள் கலந்து கொள்வதால் ஏற்படும் ‘சாத்தியமுள்ள நிலைமைகள்’, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவதாக அமையலாம் என்ற கோணத்திலேயே, உதவித் தெரிவத்தாட்சி அதிகாரி, இதற்குத் தடை விதித்ததாக அறிய முடிகின்றது.  

இது துரதிர்ஷ்டவசமானது என்றாலும், உதவித் தெரிவத்தாட்சி அதிகாரி, தனக்கிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைச் செய்திருக்கின்றார். இது கவலைக்குரியது என்றாலும் கூட, தேர்தல் சட்டங்களின் படி, அந்த நடவடிக்கை சரி என்றால், அதனை விமர்சிக்கத் தேவையில்லை.   

ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை, இந்நிகழ்வுக்குத் தடைவிதிக்கப்பட்டதல்ல; மாறாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும், இந்நிகழ்வுக்கு வரவில்லை என்பதாகும்.  

இலங்கை முஸ்லிம்களின் பிரதான பிரச்சினை, காணிப் பிரச்சினைகளாகும். இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, முஸ்லிம்களுக்குக் காணிகள் இல்லை என்ற பிரச்சினை தீவிரமடைந்து கொண்டிருக்க, பெருமளவான காணிப் பிணக்குகள், முரண்பாடுகள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாது கிடப்பில் கிடக்கின்றன.  

வடக்கிலும் கிழக்கிலும், இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. கிழக்கில், இது பல்வேறு சமூக எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறு, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்துவரும் காணி உரிமைக்கான செயலணியே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.  

முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து, காணிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கும், இந்நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை வழங்குவதற்கும் பெரும் சிரமப்பட்ட ஏற்பாட்டாளர்கள், இந்த நிகழ்வில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்களையும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களையும் வெளியிட, முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதற்காக முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றது.  

ஆனால், முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஓரிருவரையும் தவிர, வேறு எந்தத் தலைவர்களும் இந்நிகழ்வுக்கு வரவில்லை என்பது, படுமோசமானதும் கவலைக்குரியதும் ஆகும்.  

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால், இந்நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டது வேறு விடயம்; ஆனால், இது முஸ்லிம் மக்களின் பிரச்சினை என்றபடியால், ‘இந்தச் சமூகத்துக்காகவே எல்லாவற்றையும் செய்கின்றோம்’ என்று கூறுகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவ்விடத்துக்கு ஒரு சம்பிரதாயத்துக்கேனும் வந்து, திரும்பிச் சென்றிருக்கலாம்.  

ஆனால், பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களோ, அம்பாறை மாவட்டத்தில் தேசியப் பட்டியல் எம்.பியைப் பெற்றுக்கொண்ட இருவர் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அங்கு குழுமியிருந்த மக்களைச் சந்திக்க வரவில்லை. நிகழ்வுக்கு தடை என்றாலும், அங்கு வந்து ஒரு ஐந்து நிமிடம் மக்களைச் சந்தித்துச் செல்ல நினைத்தால், அதை எப்படிச் செய்வது என்று அரசியல் தலைமைகளுக்குத் தெரியும்.  

ஆனால், அவர்கள் வரவும் இல்லை; அவர்களது பிரதிநிதிகளை அனுப்பிக் காணிப் பிரச்சினை தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு வருகைதந்த பைஸர் முஸ்தபா எம்.பி, அங்கு கூடிநின்ற மக்களுக்குக் ‘காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதாக’ வாக்குறுதியளித்துச் சென்றார்.   

அவர் சொன்னதைப் போல, காணிப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவார் என்பது நிச்சயமில்லை என்றாலும் கூட, அரசியலுக்காகவோ, சமூகத்துக்காகவோ அவர், அங்கு சமூகமளித்திருக்கின்றார்.    

ஆனால், பெரிய அரசியல் சாணக்கியர்கள், அரசியல் மேதைகள் எனக் காட்டிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இந்தச் சூட்சுமம், உத்தி கூடத் தெரியவில்லை.  

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் பெருமளவில் வந்திருந்தார்கள்; இந்நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டதை அம்மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், தங்களது பிரச்சினைகளைக் கேட்பதற்கு, முஸ்லிம் தலைவர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ அங்கு, ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது வந்துவிட்டுப் போகவில்லை என்பது, பெரும் கவலை கலந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.  

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான, தெளிவான ஆவணங்களோ, தரவுகளோ எந்தக் ‘காங்கிரஸ்’ கட்சிகளிடமும் கிடையாது. பதவியில் இல்லாத ஓரீர் அரசியல் பிரமுகர்களிடம் மாத்திரம் சில தரவுகள் உள்ளன. அதுதவிர, அம்பாறை மாவட்டத்திலோ, வடக்கு, கிழக்கிலோ அரசியல் பிழைப்பு நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கேட்டவுடன் சமர்ப்பிக்கக்கூடிய புள்ளிவிவரங்கள் இல்லை. அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்காததாலோ, என்னவோ அவர்கள் அத்தரவுகளை ஆவணப்படுத்தியதாகவும் தெரியவில்லை.  

உண்மையில், ஊருக்கு ஊர் தமக்குச் சார்பான பல குழுக்களை உருவாக்கி மோதவிடுகின்ற அரசியல் தலைமைகள், ஒவ்வொரு பிரதேசத்திலும் இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள் என்று பதவிகளைக் கொடுத்து, அவர்களுக்கு வாகனமும் எரிபொருளும் வழங்கி, ‘எல்லாம் மக்கள் சேவைக்காகத்தான்’ என்று பொய்த்தோற்றம் காட்டுகின்ற முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்தான் காணிப் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி எடுத்திருக்க வேண்டும்.  

அதையும் செய்யாமல், அதை மிகவும் சிரமப்பட்டு மேற்கொண்டு, ஆவணமாகத் தொகுத்து, ஆவணப்படமாக வடிவமைத்து, ஓர் அமைப்பு வெளியிட முற்படுகின்ற போது, அதைக் கண்டுகொள்ளாமல், அரசியல்வாதிகள் கொழும்பில் ‘பிஸியாக’ இருக்கின்றார்கள் என்றால், இதைவிடக் கேவலமான, சுயலாப அரசியல் வேறெதுவும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.   

அத்துடன், தலைவர்களையும் எம்.பிக்களையும் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டாடும் ஒரு சில முஸ்லிம்களுக்கு, இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.  

முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனோநிலை எப்படி இருக்கின்றது என்பதையும் அவர்கள் என்ன விடயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள் என்பதையும் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு உறைக்கும்படி உணர்த்திய ஒரு சம்பவமாக இதைக் கருதலாம். 

நம்மைப் பற்றிக் கவலைப்படாத, நமது அபிலாசைகளைக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத அரசியல் பேர்வழிகளைத்தான், நாம் தலைவர்கள் என்றும், அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.  

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குச் சமூகத்தின் பிரச்சினைகள், நீண்டகால அபிலாசைகள் என்ன என்பது பற்றிய தெளிவான பிரக்ஞைகளோ அவற்றை நிறைவேற்றுவதற்கான கொள்கைகளோ இல்லை என்பதையும் சமூகத்தின் பிரச்சினைகள் அவர்களுக்கு இரண்டாம் பட்சமானவை என்பதையும் முஸ்லிம் மக்கள் இதுபோன்ற சம்பவங்களின் ஊடாகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பாடம் கற்பதுடன் நின்றுவிடாது, நேரம் வரும்போது பாடம் கற்பிக்கவும் வேண்டும்.  

கட்சி மாறல்கள்

அரசியலைப் பொறுத்தமட்டில், அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் கொள்கைகள் நிரந்தரமானவையல்ல; கட்சித் தாவல்கள்தான் என்றும் நிரந்தரமானவை என்பதை, சிறுவயதில் இருந்தே கண்டுவருகின்றோம்.  

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பான்மைக் கட்சிகளில் மட்டுமன்றி, முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலும் கட்சித் தாவல்கள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்கள் வந்தால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘கட்சி தாவும் படலம்’ இதைவிடத் தீவிரமாக இருக்கும்.  

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் எம்.எம். பஹீஜ் ஆகியோர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளனர்.  

இவர்கள் எல்லோருமே அதற்கு முன்தினம் வரை, தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸில் இருந்து விட்டு, மறுநாள் மு.காவில் இணைந்து கொள்ளவில்லை. அக்கட்சிகளில் இருந்து விலகி, சிறிது காலம் செயற்பட்டவர்கள்.   

எவ்வாறிருப்பினும், இந்த விடயத்தில் மு.காவின் நகர்வு வெற்றி அளித்திருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.  

தமது கட்சிக்காரர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் மற்ற இரு காங்கிரஸ்களும் வெற்றிகாணவில்லை. ‘போனால் போகட்டும் போடா’ என்ற மனநிலையில், எவ்வித சமரசங்களும் செய்யாமல், அவர்களைப் போக விட்டுள்ளன என்றும் கூறலாம்.  

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா, ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டு, அக்கட்சியை விட்டு வெளியேறிய போது, அதாவுல்லாவுடனேயே உதுமாலெப்பையும் வெளியேறினார். அதாவுல்லாவும் அவரும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக இருந்தனர். அதாவுல்லாவுக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்ததற்கு உபகாரமாக, உதுமாலெப்பைக்கு அரசியல் அதிகாரங்களை தே.கா தலைவர் வழங்கினார்.  

2015 தேர்தலில் அதாவுல்லா எடுத்த நிலைப்பாட்டால், உதுமாலெப்பை தடுமாறினார். பின்னர் உள்ளூராட்சித் தேர்தலில், தலைவரின் வியூகத்தை அவர் ஏற்கவில்லை. அதேபோல, உதுமாலெப்பை வேறு ஒரு கட்சியுடன் தொடர்பில் இருக்கின்றார் என்று நம்பினார். 

சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவோர், இவர்களுக்கு இடையில் பகையை மூட்டிவிட்டதால், பிரிவு நிச்சயிக்கப்பட்டது. உதுமாலெப்பையுடன் சட்டத்தரணி பஹீஜூம் பிரிந்தார்.  

பின்னர் உதுமாலெப்பை, ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸில் இணையப் போகின்றார் என்று, அதாவுல்லா தரப்புச் சொன்னது. இப்பின்னணியில், மு.கா, ம.கா ஆகிய இரு கட்சிகளுடனும் சமகாலத்தில் பேச்சுகளை நடத்திய உதுமாலெப்பை, தனது தாய்க் கட்சியான மு.காவுக்குத் திரும்பி இருக்கின்றார். 

இதேபோல், மு.காவில் இருந்து, தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் எனக் ‘கூடுவிட்டுக் கூடு பாய்ந்து’ வந்த ஜெமீலும் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் சங்கமித்து இருக்கின்றார்.   

ஏற்கெனவே, முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளுக்கு, இவர்களை இணைப்பதில் நூறுசதவீத உடன்பாடு இல்லை என்றாலும், கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகள், தமக்கு இவர்களிடம் இருந்து கிடைக்கக் கூடிய அனுகூலங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, இவ்விணைவுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகச் சொல்ல முடியும்.  

இப்போதைக்கு இவர்களை இணைத்துக் கொண்டமை, மு.காவுக்கு ஓரளவு அனுகூலம்தான்.  இவ்வாறு இணைந்து கொண்டவர்களால், உண்மையாகவே கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்குமா? இணைந்தவர்களின் சொந்த அரசியலில் முன்னேற்றம் ஏற்படுமா? ஊர்களுக்குள் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரிவுகள் அதிகரித்து, முரண்பாடுகள் வலுக்குமா, என்பதையெல்லாம் இன்னுமொரு பத்தியில் விரிவாகப் பார்ப்போம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .