Janu / 2026 ஜனவரி 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர்.
கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் வட மாகாணத்திலேயே இந்த பாதிப்பு அதிகமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள்; வருடக் கணக்காக உரிமை பற்றியே பேசி வருகின்ற ஒரு பின்புலத்தில் வடக்கின் பல பகுதிகளில் வாழ்வாதார உதவிகள் தேவையான மக்கள் இன்றும் இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் சற்று முன்கூட்டி இடம்பெற்றமையால் மக்கள் வாழ்வில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் அபிவிருத்திகள், நலனோம்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இருக்கவே செய்கின்றார்கள்.
இந்த விடயத்தில், வடக்கையும் கிழக்கையும் விட மலையக தோட்டப்புற மக்கள்தான் அதிகமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர்.
சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு கிழக்கு மாகாணத்திற்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. கிழக்கு விடுக்கப்பட்ட பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து இது இன்னுமொரு பரிமாணத்தை எடுத்தது. ஆனால், ஒப்பீட்டளவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகக் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.
வீதிகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கிலான செயற்றிட்டங்கள், சமூகத்திற்குப் பரவலாகப் பயன்படக் கூடிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறைவாகும்.
அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதோ இந்தப் பிரதேசத்தை துணையாக, சிங்கப்பூராக மாற்றப் போகின்றோம் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களே தவிர, கிழக்கில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தவிர, மற்ற யாருமே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் கொண்டு வரவில்லை.
சமகாலத்தில், தமிழ் அரசியல்வாதிகள் வடக்கைப் போல, கிழக்கிலும் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு செல்வதற்குத் தவறி விட்டனர். அபிவிருத்தி திட்டங்களுக்கான அழுத்தங்களையாவது அவர்கள் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் ஊடாக அபிவிருத்திகள் பெரியளவில் கிழக்கிற்கு வந்து சேரவில்லை எனலாம்.
இப்போது, நிலைமைகள் சற்று மாறி வருகின்றது. புதிய அரசாங்கம் எல்லா மக்களுக்கும் அபிவிருத்தியை சமமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றது. இருப்பினும், ஒரு காலத்தில் கிழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவதில்லையா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.
ஆனால், வேறு அரசியல் மற்றும் பரப்புரை சார் காரணங்களுக்காக வட மாகாணத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு, பிம்பம் கட்டியெழுப்பப்படுகின்றதா? என்றும் அந்த விடயத்தில் கிழக்கு இரண்டாம் பட்சமாக நோக்கப்படுகின்றதா? என்பதும் ஒரு சாதாரண பொது மகனுக்கு எழுகின்ற சந்தேகமாகும்.
தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவையும் அதனூடாக சர்வதேச சமூகத்தை ஆசுவாசப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது. 13ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் ஒரு படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்த நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருப்பது யதார்த்தமானதே.
இந்தப் பின்னணியில் ஒரு அவதானிப்பு இருக்கின்றது. அதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது, அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்ற போதும், வடக்கிற்கான விஜயங்கள் கிழக்கிற்கான விஜயங்களைவ விட அதிகமாக இடம்பெற்றதை, இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
அரசுக்கு எதிரான தமிழ்த் தரப்பின் அழுத்தத்தைக் குறைப்பது, இந்தியாவைக் கையாள்வது, தமிழ் மக்களை மனம் குளிரச் செய்வது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு மாகாணத்திற்கு முக்கியத்துவம், அந்த நிர்ப்பந்தம் இல்லாத மாகாணத்திற்கு வேறு ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
வடக்கிற்கு அபிவிருத்தி செய்தால் எமக்கும் தர வேண்டும் என்று பொறாமைக் கண்ணுடன் கிழக்கு மக்கள் கேட்கின்றார்கள் என்று இதனைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் அதிக அபிவிருத்திகள் இடம்பெற்றபோது, நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. கிழக்கில் அபிவிருத்திகள் பெருவீச்சில் இடம்பெற்றபோது, வடக்கு, மலையக மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை.
எனவே, இப்போது வட மாகாணத்திற்கோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளுக்கோ அதிக கவனம் செலுத்தப்படுவது கிழக்கு போன்ற ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனால், அதே கவனம் தங்கள் மீது ஏன் செலுத்தப்படவில்லை என்று அவர்களது மனக் கிடக்கை நியாயமானதுதானே.?!
வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு வாழ்கின்றனர். அங்கு நடக்கின்ற விடயங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இதில் மக்கள் சேவைக்கு அப்பால் ஆளும் கட்சிக்கு ஒரு அரசியலும் இருக்கின்றது எனலாம். கிழக்கில் நிலைமைகள் வேறு மாதிரி உள்ளன.
கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமாகும். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்களவர்களும் கணிசமாக உள்ளனர்.
எனவே, வடக்கில் செய்கின்ற அரசியலைக் கிழக்கில் அதே பாணியில் செய்ய முடியாத ஒரு சிக்கல் கடந்த அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே என்.பி.பி. அரசாங்கமும் இருப்பதாக கருதுவதற்கு இடமுள்ளது.
எது எப்படியாயினும், நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக பகிரப்படப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் வடக்கும், கிழக்கும் இரு கண்கள் போன்று பார்க்கப்பட வேண்டும்.
கிழக்கிற்கும் அபிவிருத்திகள், அரச அலுவலகங்கள் வர வேண்டும். பாரிய செயற்றிட்டங்கள், முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கைப் போல, கிழக்கிற்கும் அரச தலைவர்கள், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக அபிவிருத்தியில் பாரிய தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளது. மக்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடக்கிற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்திற்குக் கொடுக்கப்படுவதாக ஆறுதல் கொள்ள முடியாத நிலைமைகளே உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் சுமார் 75,000 ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே தமிழ், சிங்கள மக்களுக்கும் காணிப் பிணக்குகள் உள்ளன. கிழக்கைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். பல நூறுபேர் ஒவ்வொரு வாரமும் கடவுச்சீட்டு எடுப்பதற்காக நெடுந்தூரம் செய்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் கிழக்கில் ஒரு அலுவலகமாவது இதுவரை திறக்கப்படவில்லை?
கிழக்கு மாகாணத்திலும் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிறுவப்படுவதுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களும் தொழில்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
பெரிய கனவுகளோடும் பெரும் பொருட்செலவிலும் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலனில் கால்வாசியைக் கூட பெற்றுத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றுக்கும் உதவாத ஒரு செயற்றிட்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஏனைய துறைமுகங்களை மேம்படுத்துவது போல, அனுர அரசாங்கம் ஒலுவில் துறைமுகத்தையும் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க விடாமல் தடுப்பதுடன், நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் இத்துறைமுகமும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
வாழைச்சேனை காகித ஆலை, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என கிழக்கில் பல தொழிற்சாலைகள் ஒன்றில் மூடப்பட்டுள்ளன அல்லது தூர்ந்து போயுள்ளன. இவற்றை மறுசீரமைக்கவும் இதுபோன்ற திட்டங்களைக் கிழக்கிலும் அமுல்படுத்தவும் வேண்டிய கடப்பாட்டைச் சமத்துவம் பேசும் என்.பி.பி. அரசு கொண்டுள்ளது.
கிழக்கிற்கான புகையிரத பாதையை பொத்துவில் வரைக்கும் விஸ்தரிப்பதற்கான செயற்றிட்டத்தை அனுர அரசு மேற்கொள்ளுமாயின், அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த வாக்கின் பலனை அடுத்த தலைமுறையிலும் உணர்வார்கள். இன்று நாட்டில் எத்தனையோ அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றைக் கணிசமான வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் முடிவடைந்து விட்டது.
ஆனால், பெயருக்காவது கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தவில்லை. எனவே கிழக்கில் உள்ள மக்கள் சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்தே குருணாகல் அல்லது மாத்தறை நெடுஞ்சாலையில் ஏற வேண்டியிருக்கின்றது. கிழக்கு மக்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது என்பதை இந்த அரசாங்கமாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
தங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கிழக்கு மக்கள் கருதுவது நியாயமில்லை என்று எந்த நியாயவாதியாவது கூற முடியுமா?
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026