R.Tharaniya / 2025 நவம்பர் 17 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
“எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு
இடமில்லை.
எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும்
இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம்.
ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது.
பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம்.
ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது அக்கிராசன உரையில் தெரிவித்திருந்தார்.
அது அவருடைய பொது நிலைப்பாடாகும். ஆனால், அதில், உட்பொதிகை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அன்னியராக்கப்பட்டமை, ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு போன்ற பல விடயங்களுக்கு முக்கியமானது.
தமிழர்களைப் பொறுத்தவரையில், இது மாவீரர் வாரம். ஆனால், பாதுகாப்புத் தரப்பினர் இதனை மாவீரர் மாதமாகவே கொள்வார்கள். கார்த்திகை தொடங்கினாலே தகவல்களைச் சேகரிப்பார்கள்,
வடக்கு, கிழக்கில் எந்த அமைப்பு, தனிப்பட்ட நபர்கள், யாரெல்லாம் மாவீரர் தினத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டுவார்கள். கடந்த வருடங்களில் செயற்பட்டவர்களைக் கண்காணிப்பார்கள். இது வழமையாகவே நடைபெற்று வருகின்ற விடயம்.
யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த அச்சத்துடன், இந்த
வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், புலிகள் எங்கு வருவார்கள்,
எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம். அதே நேரத்தில், புலிகளின்
பகுதிகளுக்கு தமிழ் மக்கள் செல்லும் போதும், திரும்பும் போதும்
அவர்களுக்கும் விசாரணைகள், கைது, மரண அச்சங்கள் இருந்தன.
ஆனால், யுத்தம் மௌனத்திற்கு வந்த பின்னர் இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு விதமாக நிலைமை இருந்து வந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கான செயற்பாடுகள் தமிழர்களின் பிரதேசங்களில் குதிரைக் கொம்பாகவே இருந்தது.
தடை உத்தரவுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், கைதுகளாக இருந்தன. அவற்றினையும் மீறி, ரகசியமாக நிகழ்வுகள் ஒருவாறு நடந்து விட்டாலும், அதன் பின்னரும் கைதுகள், விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிலைமை சற்று மாறியிருந்தாலும், முழுமையாக இருக்கவில்லை.
அதன் பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. அப்போது, கொவிட்- கொரானா காரணமாக காட்டப்பட்டு கைதுகள், நெருக்குதல்கள் நீதிமன்ற தடைய உத்தரவுகள் இருந்தன. பின்னர் உருவான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ் மக்களுக்குச் சாதகமான வேறு முறைகளைக் கையாண்டிருந்தனர்.
இப்போது, கடந்த காலத்தில் நாட்டைக் கைப்பற்ற இரண்டு முறை ஆயதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன, தமது தலைவர் உட்பட பலரையும் பலிகொடுத்த ஒரு போராட்ட இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம்.
கடந்த வருடம் ஆட்சி பீடம் ஏறியபோது, கொஞ்சம் பாதுகாப்புத் தரப்பினருடைய பிரச்சினைகள் இருந்தாலும், இவ்வருடம் கெடுபிடிகள் எதுவுமின்றி மாவீரர் தினத்துக்குரிய ஏற்பாடுகள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன.
ஆனால், சிறியளவுக்கான அச்சத்தினைத் தமிழர்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு நம்பிக்கை மாத்திரம் அவர்களிடம் இப்போது இருக்கிறது. ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு. கடந்த 13ஆம் திகதி கொழும்பு
விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஜே.வி.பியின் 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தினார்.
ஒரு போராட்ட இயக்கத்தின் கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு உளப்பூர்வமான நிறைவுதான் அதனை ஒவ்வொரு வருடத்திலும் உணர்பவர் அவர். அந்தவகையில், தங்களுடைய கொள்கைகளுக்காக மணரத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற ஆத்மார்த்த முன்வருதலானது மாவீரர் தினமாகும்.
ஆனால், எழுச்சிமிகு நாளாக வடக்கு கிழக்கில் நிகழ்வெடுக்கப்படுகின்ற இந்த மாவீரர் வாரத்தில் தமிழர்களின் அரசியல் தரப்புகள் கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களால் பிரச்சினைகள் எழுந்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் உருவாக்கி வருகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல்வேறு முக்கியப்படுத்தல்கள், நினைவுபடுத்தல்கள், கௌரவிப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அன்னை பூபதி, தியாகி திலிபன் ஆகியோர் இந்திய இராணுவத்திற்கெதிராக உண்ணா நோன்பிருந்து தங்களது உயிர்;களைத் தியாகம் செய்திருந்தார்கள்.
இப்போது அவர்களுடைய தியாகங்கள் நம்மவர்களாலேயே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய நிகழ்வுகளாக உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் அரசியல் போட்டியும், தனிப்பட்ட சுய லாபங்களுக்கானதாக மாறி வருகின்றன. தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகளைத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களாகப்
பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் இது தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கின்ற விடயங்களாக உணராமல் இவ்வாறு நடைபெறுகின்றதாகக்கூடக் கொள்ளலாம்.
அதேநேரத்தில், தமிழர்களின் அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே உருவாகியிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தினமாக நினைவு கூரப்படுகின்ற மே-18 நிகழ்வுகளும் அரசியல் சுய லாபத்திற்காக நடத்தப்படுகின்ற ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
அது மக்களை அரசியல் மயப்படுத்தாதிருப்பதன் பலாபலனே. அதே நேரத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டமானது ஏன் தொடங்கப்பட்டது, அதன் அரசியல் வரலாறு என்ன, பட்டறிவுகள் எவ்வாறானது. அதன் பாதிப்புகள் எத்தகையது.
அதற்கானஅடுத்த கட்டம் என்ன, உலக மயமாதலால் எவ்வாறான விளைவுகள் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்படும் போன்ற விடயங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டதா, கடத்தப்படுகிறதா?, அதற்கான வேலைத்திட்டங்கள் செய்யப்படுகின்றன.
வா போன்றவைகள் ஆராயப்படவில்லை.அதனாலேயே தமிழர்களுக்கான அரசியலை செய்யவென புறப்பட்டவர்கள், கட்சிகளும்கூட தமக்கென ஒவ்வொரு வழிகளில் சென்று கொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களின் அரசியல் வரலாறுகளிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற மாதமாக இந்த கார்த்திகை மாதம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.
இந்தஎதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான அரசியலைச் முன் நகர்த்துவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயலாமல் இருப்பது உண்மையிலேயே அவர்களின் இயலாமையாகக்கூட இருக்கலாம்.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை நிச்சயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் மாறாதவரையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான சுயநிர்ணய உரிமை என்கிற இலக்கு நிறைவேறப்போவதில்லை.
இதற்காக தமிழ்த் தேசிய அரசியலைச்செய்துவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களைப் பொதுக் கலந்துரையாடல்களுக்குட்படுத்தி தமிழ்த் தேசியத்துக்கான பொது நிலைப்பாட்டுக்கு வருதலே சிறப்பாகும்.
நாட்டுக்குள் சிங்கள மக்களிடம் காணப்படுகின்ற புலிகளின் மீளுருவாக்கம் நடைபெற்றுவிடும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடும், மாவீரர் தினம் அதற்கான வழியைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள்மா வீரர் நினைவுகூரலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதாக இருந்து
வருகிறது.
அதற்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்புத் தரப்பினரும் ஒருவித காரணமாகும். இவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான எந்தவித ஏதுக்களும் இல்லையானாலும் ஆரம்பத்திலிருந்தான அவர்களின் அச்சம் அதனைச் செய்யத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனாலும், அதற்காக அவர்கள் முன்வைக்கப்படுகின்ற காரணங்கள் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பது
வேடிக்கை.மொத்தத்தில்,ஆயதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு மோசமான முறையில்
அடக்கப்பட்டுத் தோற்றுப் போய் அரசியல்வழியில் நாட்டைக் கைப்பற்றியிருக்கின்ற ஜே.விபி. கைக்கொண்ட மக்களை அரசியல்மயப்படுத்தும்
செயற்பாடு தமிழ்களுக்கும் முன்னுதாரணமாகும். இந்த அரசியல் மயப்படுத்தலை செய்யாதவரையில் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.
இதற்கான உறுதிபூணலை இந்தக் கார்த்திகையிலேனும் தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டாக வேண்டும். இதுவே கொண்ட கொள்கைக்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கும்.
9 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Nov 2025
23 Nov 2025