Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலரது மனக்கணக்குகள் எல்லாம் பிழையாகிப் போக, அரசியல் களநிலைவரங்கள் முற்றுமுழுதாகத் தலைகீழாக மாறியுள்ளதைக் காண்கின்றோம். பொதுவாக, மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் எதுவும் எந்தநொடியிலும் மாறலாம்; யாரும் யாருக்கும் நண்பனாகவோ, எதிரியாகவோ ஆகலாம் என்பதற்குக் கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த அனுபவத்தையே இலங்கை மக்கள் கடந்த இரு மாதங்களாகப் பெற்றிருக்கின்றனர்.
ஓர் அந்தி மாலைப் பொழுதில், பதவியிறக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்; தன்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிரதமர் பதவி காட்டிமறைக்கப்பட்டு இருக்கின்றது; திடீர் பிரதமராகியிருந்த மஹிந்தவுக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதில் கூட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன; மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நிறுவப்படுவதற்கு பங்களிப்புச் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி கைநழுவிப் போயுள்ளது; மீண்டும் ரணில் பதவிக்கு வந்தால், ஒரு மணிநேரமேனும் நான் பதவியில் இருக்க மாட்டேன் என்று சொன்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் அந்தப் பதவியில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்.
இந்த அடிப்படைகளோடு, இப்போது ஆட்சியை நிறுவுவது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 50 நாள்கள் இடம்பெற்ற இந்த ‘நீயா - நானா’ அரசியல் போட்டியில் வெல்வதற்காகச் சிறுபான்மைக் கட்சிகள், சிறுகட்சிகள் ஆகியவற்றின் உதவியை, ஐக்கிய தேசியக் கட்சி மன்றாட்டமாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டதால், எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய அல்லது கைமாறு செய்தாக வேண்டியது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடமை என்றாகியுள்ளது.
அவ்வாறே, அடுத்த தேர்தலிலாவது சுதந்திரக் கட்சியின் தனித்த ஆட்சியை நிறுவி, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியின்றித் தனித்தியங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் பக்கமுள்ள பலருக்கும் அமைச்சுப் பொறுப்புகளை வழங்க வேண்டியுள்ளது.
அப்படியென்றால், 40க்கு மேற்பட்ட அமைச்சுகளும் அதற்குக் குறையாத இராஜாங்க, பிரதியமைச்சுப் பதவிகளும் வேண்டும். ஆனால், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், அமைச்சரவையின் எண்ணிக்கை 30 இனைத் தாண்ட முடியாது.
அதைவிட அதிகரிப்பதென்றால், தேசிய அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். அப்படியாயின், பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தைப் பிரதிநிதிதித்துவம் செய்யும் கட்சியில்லை. ஐ.தே.கவுடன் அல்லது தமிழரசுக் கட்சியுடன் சேரலாம்.
ஆனால் ஐ.தே.கவுடன் சேர்வதில்லை என்ற முடிவில் சுதந்திரக் கட்சி இருக்கின்றது. அத்துடன், சு.க.வை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்றால், அக்கட்சி ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் இருக்க முடியாது. தமிழரசுக் கட்சியோ, மக்கள் விடுதலை முன்னணியோ ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என்றாலும் கூட்டாட்சியில் பங்காளியாகப் போவதில்லை.
இப்படியான ஒரு குழப்பகரமான சூழலில், ஏனைய சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகளுடன் கூட்டாட்சி அமைப்பது பற்றிய ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.
இரு பிரதான முஸ்லிம் கட்சிகளில், தமது கட்சி ஊடாகப் போட்டியிட்டு ஒரேயொரு எம்.பி. பதவியைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இதர சிறுகட்சிகளுடன் சேர்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்துக் கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தக் கூட்டாட்சி நாளையோ, நாளை மறுதினமோ அமைக்கப்படப் போவதில்லை என்றும் சில நாள்கள் செல்லும் என்றும் அறிய முடிகின்றது.
இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி, கூட்டாட்சியின் ஓர் அங்கத்துவக் கட்சியாக ஆகாவிட்டாலும் கூட, இரு முஸ்லிம் கட்சிகளும் இந்த மீளமைக்கப்பட்ட அரசாங்கத்தில் பங்காளர்கள் என்பது பட்டவர்த்தனமானது. இதேநேரம், பிரதான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் உட்பட, இரு சிறுபான்மைத் தலைவர்கள் ‘தமக்கு அமைச்சுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ என்ற பாணியில் கருத்து வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தக் கதையாடல்களை எல்லாம் கடந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு நல்ல பலமான அமைச்சுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட அமைச்சரவை நியமனத்தின்போது, பிரதி அமைச்சுகளும் கிடைக்கும். அதேநேரம் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் இம்முறை கொழுத்த அமைச்சுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
எத்தனையோ விமர்சனங்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடியாமைக்கான காரணங்களை எல்லாம் தாண்டி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக, முஸ்லிம் கட்சிகள் நின்றன. ஆதலால் இவ்விரு கட்சிகளுக்கும், நல்ல கைமாறு கிடைப்பதுவும் நமது முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சு, பிரதியமைச்சு கிடைப்பதுவும் மகிழ்ச்சியானதே. ஆனால் இவ்விடத்தில், இரு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றன.
முதலாவது, ஏற்கெனவே இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தது போல, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள் பற்றிய என்ன கோரிக்கையை முன்வைத்து, ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலில் இருந்து மீண்டுவர, முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தன என்பதாகும்.
இரண்டாவது, இப்போது கூட்டாட்சியில் ஒரு கட்சியாக இணைவதன் மூலம், அன்றேல் பலமான அமைச்சுகளைப் பொறுப்பேற்று ஆட்சியில் அங்கத்துவம் பெறுவதன் மூலம், முஸ்லிம் சமூகத்துக்கு எவ்விதமான அனுகூலங்கள் கிடைக்கும் என்பது பற்றியதாகும். அதுமட்டுமன்றி, இவ்விதமான பதவியை வகித்தவர்கள், கடந்த காலங்களில் எதைச் சாதித்தார்கள் என்றும் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி அமைவதையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது. கூட்டமைப்பு மீது முன்னரை விட விமர்சனங்களும் ‘மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்ற சூழ்நிலையிலும் கூட, நல்ல கொழுத்த அமைச்சுகளைப் பொறுப்பேற்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை.
இதற்குப் பிரதான காரணம், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டால், ‘நக்குண்டாரின் நிலை’ வரும் என்பதால் ஆகும். அமைச்சுப் பதவிகளையும் அதன்மூலம் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு, உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் ஒற்றைக் காலில் நின்று காரியம் சாதிப்பதும் முடியாது போய்விடும் என்றும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இது பெருமளவுக்கு உண்மை என்றும் கூறலாம்.
இவ்வாறிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கொழுத்த அமைச்சுப் பதவிகளும் பிரதியமைச்சுப் பதவிகளும் வழங்கப்படுவது சிறப்பானதே. அதுவும், பிரதான கட்சித் தலைமைகளுக்கு நல்ல பலம்பொருந்திய அமைச்சுகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த ஆட்சியை நிறுவுவதற்காக, ‘நிறைய’ இழந்தவர்கள் என்ற வகையில், அதுவே நியாயமானதும் கூட. அமைச்சுப் பதவிகள் இருந்தால் பெயரளவிலேனும் அதிகாரம் இருப்பதுடன், ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களாவது அபிவிருத்தி அரசியலைக் கொஞ்சமேனும் முன்னெடுக்க வழிபிறக்கும்.
ஆனால், இங்கிருக்கின்ற கரிசனைக்குரிய விடயம் யாதெனில், கடந்த காலங்களில் கொழுத்த அமைச்சுகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் வகித்த காலப்பகுதியில், அந்த அமைச்சுகளின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார்ந்த எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் எந்தளவுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதாகும். இவ்வினாவுக்கு விடைதெரிந்த யாரேனும் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களால் நல்லது எதுவும் நடக்கவில்லை என்று கூறவரவில்லை. அப்படிச் சொன்னால், அது அபாண்டமும் ஆகும்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மட்டுமன்றி அவருக்கு முன்னரும் பின்னரும் ஒரு சில அமைச்சர்கள் அபிவிருத்தி அரசியலை (சேவைகளை) செய்திருக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். உரிமை சார்ந்த விடயங்களிலும் குறிப்பாக அஷ்ரபும் அதற்கு முன்னிருந்த ஓரிருவரும் சமூகம் சார்ந்த நகர்வுகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
ஆயினும், பலம்பொருந்திய பல முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் நமக்கிடையில் இருந்த போதிலும் அவ்வளவு பலத்தையும் வைத்து, உரிமை அரசியலில் எதைச் சாதித்திருக்கின்றோம் என்பதுதான் இங்குள்ள கேள்வி. பதவிகளைப் பெறுவதில் காட்டுகின்ற வேகத்தை, சமூகத்தின் அபிலாஷைகளைத் தீர்ப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளிப்படுத்தியதாகச் சொல்ல முடியாது. இதனால், பலம்பொருந்திய கொழுத்த அமைச்சுகளை வகித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் அபிலாஷைகள் நலிவடைந்திருக்கின்றன.
அமைச்சுகளின் ஊடாக நான்கைந்து தொழில் வழங்குவது, அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தின் அலுவலகம் திறப்பது, வீதி செப்பனிடுவது எல்லாம் அபிவிருத்தி அரசியலின் ஆகக் குறைந்த படிநிலையாகும். ஆனால், உரிமை அரசியல் என்பது வேறு பரிமாணங்களைக் கொண்டதாகும்.
எனவே, அதற்காக இந்த அமைச்சுகளும் அதிகாரங்களும் எந்தளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டுமோ, அந்தளவுக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது.
அதேபோன்று, இதற்கு முன்னர் அமைச்சராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் ‘எமக்கு அமைச்சு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அதற்குப் பதிலாக முஸ்லிம்களின், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்’ என்று கோரியதாகவும் இல்லை; பெற்றுக் கொண்ட அமைச்சைப் பயன்படுத்தி, மக்களின் நீண்டகால அபிலாஷைகளை வென்று கொடுத்ததாகவும் இல்லை. அதற்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதும் இல்லை.
இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்ற போது, ஏதாவது சமூகம் சார்ந்த கோரிக்கையை முன்வைத்து அந்த ஆதரவை வழங்கியிருக்கலாம் என்பது போலவே, அமைச்சுப் பதவிகள் விடயத்திலும், பெரிய அமைச்சுகளைப் பெறாமல், அதற்குப் பதிலாக ‘எனது சமூகத்துக்கு இதைச் செய்து தாருங்கள்’ என்று யாரேனும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி சொல்லியிருந்தால் அவர் ஒரு புதிய முன்மாதிரியாக இருந்திருப்பார்.
கடந்த காலத்திலோ, அன்றேல் இப்போதோ எப்போதாகினும், “எனக்கு அமைச்சு தருவதில் பற்றாக்குறை இருந்தால் தரவேண்டாம். ஆனால், பதவி இல்லாவிட்டாலும் அதற்குப் பதிலாக, வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற காணிப் பிரச்சினையைத் தீர்த்து தாருங்கள்; இன, மத தனித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்; வடபுல முஸ்லிம்களை முழுமையாக மீள்குடியேற்றுங்கள் உள்ளடங்கலாக இன்னும் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சினைகளை முன்வையுங்கள்” என்று கூறி.... அதற்கு எழுத்துவடிவ உடன்பாடு கண்ட அரசியல்வாதிகள் யாராவது இருப்பாராயின், அவரை அடுத்த தலைமுறைகளும் போற்றும்.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் எம்.பிகளுக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அடுத்த பொதுத் தேர்தல் வரை வழங்கப்பட்டிருப்பது, உண்மையில் காலஅவகாசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தோல்வியால் கோபமடைந்துள்ள மஹிந்த தரப்பு, கடுமையான நகர்வுகளை மேற்கொள்ளும். புதிய முஸ்லிம் அணியொன்றை உருவாக்கலாம் என்பதுடன், கிழக்கில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்குச் ‘சவாலான’ புதிய புதிய அரசியல் சக்திகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலைமைகள் அடுத்த தேர்தலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை ஒரு சந்தர்ப்பமாகக் கருதி, தமக்குக் கிடைத்திருக்கின்ற கொழுத்த அமைச்சுகளையும் கிடைக்கவுள்ள பலமான பிரதியமைச்சுகளையும் பயன்படுத்தி, நலிவடைந்த முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், உரிமைகளை வென்றெடுக்க இந்தக் காலப்பகுதியிலாவது முன்னிற்பார்களாயின், அது எல்லோருக்குமே நல்லது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
49 minute ago
56 minute ago