Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Thipaan / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com
“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு...குபு...வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர், பல வீடுகளின் மீது குப்பை மலை, அப்படியே சரிந்துவிட்டது”
கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், கடந்த 14ஆம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற, குப்பை மலை சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயர்தப்பிய ஒருவர், தன்னுடைய அனுபவத்தை மேற்கண்டவாறே விவரித்தார்.
குப்பை மலை அடிவாரத்தில் இருந்த வீடுகளின் மீது, சுமார் 300 அடி உயரமான மலையே, எல்லோரும் புத்தாண்டுக் குதூகலிப்பில் இருந்தபோது சரிந்துவிழுந்துள்ளது. அதுவும், தீப்பிடித்துக் கொண்டே, கரும் புகையைக் கக்கியவாறு, இந்தச் சோகமயமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“’ஓடுங்கோ... ஓடுங்கோ... ஐயையோ... ஓடிவிடுங்கடா...’ என்ற சத்தம் கேட்டது. எதனை எடுப்பது, எதனை விடுவது, எங்கே ஓடுவது. எதற்காக ஓடுவது, ஏன் ஓடவேண்டும் என்றெல்லாம் யோசிப்பதற்குள் அந்த அனர்த்தம் தாண்டவமாடிவிட்டது.
பலர் ஓடிவிட்டனர். குப்பை மலை அடிவாரத்தில் இருந்தவர்களில் சிலர், குப்பைக்குள் குப்பையாகப் புதைந்துகொண்டனர். இன்னும் சிலர், உயிருக்குப் போராடிய நிலையில் காப்பாற்றப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர், தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“புத்தாண்டுக்குப் பாற்சோறு உண்ணவேண்டியவர்கள், துக்கச்சோற்றை உண்ணும் வகையில், குப்பை மலை செய்துவிட்டது” என, குப்பை மலையை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் அரச அதிகாரிகளையும், இன்னும் சிலர் திட்டித்தீர்த்துக் கதறியழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர்.
புத்தாடைகளை அணிந்து, பலகாரங்களை எடுத்துகொண்டு, பட்டாசு வெடிகளின் சத்தங்களுக்கு மத்தியில், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு விருதினர்களாகச் செல்ல நினைத்த கனவெல்லாவற்றையும் குப்பைமலை, ஒரே அடியாக தன்னுள் புதைத்துக்கொண்டது எனலாம்.புத்தாண்டுக்கு விருந்தினராக வந்தவர்களில் பலரையும் இந்த குப்பை மலை தின்றுவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால், உருகுலையாத நிலையில் மீட்கப்பட்ட சடலங்களில் பல அடையாளம் காணப்படாத நிலையிலேயே உள்ளன.
இவையெல்லாம், கண்களை மூடித் திறப்பதற்குள், இரண்டொரு விநாடிகளுக்குள் நடந்தேறிவிட்டன. அனர்த்தத்தை உணர்ந்து, ஓடோடிவந்தவர்கள், சிலரைக் காப்பாற்றி வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசென்றனர்.
மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனையின் பிரகாரம், இராணுவத்தினரும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும், சம்பவம் இடம்பெற்று, இரண்டு மணிநேரத்துக்குப் பின்னரே, ஸ்தலத்துக்கு இராணுவத்தினர் விரைந்தனர் என, பிரதேசவாசிகள் குற்றஞ்சுமத்தினர். இராணுவத்தினர் வருவதற்கு முன்னர், பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து பலரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எரிந்துகொண்டிருந்த குப்பை மலையின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகெப்டர்களும், தீயை அணைத்துக் கொண்டிருந்தன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், சனிக்கிழமை விடுத்திருந்த தகவலின் பிரகாரம், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 145ஆகும். அதில் வாழ்ந்த 180 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 625 பேர், தற்காலிக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் 500 பேரும் விமானப்படையினர் 100 பேரும், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் 500 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் மீட்பு நடவடிக்கைகள், கடுமையான இருள் (இருட்டு) மற்றும் குப்பை மலையிலிருந்த தண்ணீர் பெருக்கெடுத்தமையால், 15ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் நிறுத்தப்பட்டன.நேற்று(16) ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 500 இராணுவத்தினர், மீட்பு பணிகளில் இணைத்துகொள்ளப்பட்டனர் என இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும், அங்கு குழுமியிருந்த பிரதேசவாசிகள், இரவு 12 மணிவரையிலும் தங்களுடைய உறவுகளையும் நண்பர்களையும் தேடுவதில் ஆர்வத்துடனேயே இருந்தனர். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் காரணமாக, குப்பை மலைக்கு அருகில், பிரதேசவாசிகளை செல்வதற்கு, பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் ஸ்தலத்துக்கு சனிக்கிழமை (15) விரைந்தனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்தான் இவ்விருவரும் அவ்விடத்துக்கே அழைத்துசெல்லப்பட்டனர்.
அங்கு, பிரமுகர் பாதுகாப்புப் பிரிவைச்சேர்ந்த அதிகளவானோர் பாதுகாப்புக் கடமைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இவ்விருவரும், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல முயற்சிகையில், அங்கு குழுமியிருந்தவர்கள், ஹூ... ஹூ.., ஹூ... ஹூ... கோஷமெழுப்பி கிண்டல் செய்தனர். இன்னும் சிலர் தூஷித்தனர்.
‘மரணத்துக்குப் பின்னர் என்னத்தப் பார்க்க வந்தீர்’, ‘அரசியல்வாதிகள் இணைந்து, மனிதர்களை கொல்கின்றனர்’, ‘மனிதப் படுகொலையாளிகளே இங்கே வரவேண்டாம்’ எனக்கூறிக்கொண்டே, அங்கிருந்தவர்கள் கதறியழுததையும் அவதானிக்க முடிந்தது.
எந்தவோர் அரசியல்வாதியையும் இங்கு அனுமதிக்கவேண்டாமென, பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் கெஞ்சிக் கேட்டு மன்றாடியதையும் பார்க்கக்கூடியதாய் இருந்தது.
இந்நிலையில், குப்பை மலையை அகற்றுமாறு வருடக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிடோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றும், சனிக்கிழமையன்று மீத்தொட்டுமுல்லையிலேயே நடத்தப்பட்டது.
அதில், அவர்களுடன் கலந்துகொண்ட பிரதேசவாசிகள், மிகவும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களின் கண்களில் வெறிதன்மையை காணக்கூடியதாய் இருந்தது. சோகமும் ததும்பியிருந்தது. கொதித்தெழுந்திருந்த அவர்கள், மீதொட்டமுல்ல குப்பை மலையின் உண்மையை, ஊடகங்கள் வெளிகொணரவில்லை என்றே குற்றஞ்சாட்டினர்.
உண்மையையும் குப்பை மலையின் பயங்கரமான தன்மையையும் வெளிகொணர்ந்திருந்தால், இவ்வனர்த்தத்தை தவிர்த்திருக்கலாம் என மிக, மிக ஆவேசமான முறையில் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.
குப்பை மலை சரிவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர், அந்த மலை தீப்பற்றிக்கொண்டது. எனினும், அங்கிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று செல்லவில்லை என, அனர்த்த முகாமைத்து மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
இந்த குப்பைகளை வேறிடத்துக்கு எடுத்துச்செல்லுமாறு,தொடர்ச்சியாகக் கோரிக்கைவிடுத்திருந்த போதிலும், அதிகாரிகள் அவற்றைக் கணக்கில் எடுக்கவே இல்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மீதொட்டமுல்லயில், நாளொன்றுக்கு 800 டொன் முதல் 1,200 டொன் வரை, குப்பைகள் கொட்டப்படுவதாக, கொழும்பு மாநகர சபையின் தகவல் தெரிவிக்கின்றது.
கொழும்பு-14 புளுமென்டலில் இருந்த குப்பை மலை அகற்றப்பட்டு, அங்கு குப்பைகள் கொட்டும் நடவடிக்கை, 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்தான், கொழும்புக் குப்பைகள், மீதொட்டமுல்லயில் கொட்டப்பட்டன.
தற்போது குப்பை மலையாகக் காட்சியளிக்கும், மீதொட்டமுல்ல குப்பைமலை, பொத்துவில் வயல் என்றழைக்கப்பட்ட வயல்நிலமாகவே, 1989ஆம் ஆண்டு இருந்துள்ளது.
அந்தவருடம், கொழும்பு நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக, அந்த வயல்வெளி, முற்றுமுதாகச் சேதமடைந்தது.
அக்காலப்பகுதியில் தான், முல்லேரியா நகரசபையினால், இவ்விடம் நிரப்பப்பட்டு, கொட்டிகாவத்த, முல்லேரியா பிரதேச சபைகள் மற்றும் கொலன்னாவை நகர சபை ஆகிய மூன்று சபைகளுக்கும் உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது, அங்கு குப்பைகள் மட்டுமே கொட்டப்படவில்லை. குப்பைகளுக்கு மேல், மண் படைகளும் போடப்பட்டன. குப்பைகள் உக்கவைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இவை, போட்டப்பட்டன.
பழைய குருடி கதைவைத் திறடி என்ற கதையைப்போல, காலப்போக்கில், குப்பைகளுக்கு மேல், மண்ணைக் கொட்டும் நடவடிக்கை முற்றுமுழுதாகக் கைவிடப்பட்டு, குப்பைகள் மட்டுமே கொட்டப்பட்டன.
குப்பைகளைக் கொட்டுவதற்கு, சுமார் இரண்டு ஏக்கர் மட்டுமே மீதொட்டமுல்லயில் அன்று ஒதுக்கப்பட்டிருந்து. எனினும், மீதொட்டமுல்ல குப்பைமலை, சுமார் 20 ஏக்கர் விஸ்தீரணத்தை தற்போது கொண்டிருக்கிறது.
எட்டு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர், அந்த குப்பை மலையைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மரணத்துக்கும் பின்புதான், தீர்வு கிடைக்கும் என்றால், மனிதன் உயிரோடு இருக்கும் போது, எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
மீதொட்டமுல்ல அனர்த்தமும், அவ்வாறாதொரு படிப்பினையையே புகட்டிச் சென்றுள்ளது. மற்றையவர்களின் குப்பைகளைத் தங்களுடைய பூமியில் போடவேண்டாம் என்று, பலவருடங்களாகப் போட்டங்களை முன்னெடுத்த தீர்வாக, கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் நீர்த்தாரைப் பிரயோகம் மட்டுமே அந்தமக்களுக்கு கிடைத்தன. அவர்களுக்கு உருப்படியான தீர்வெதுவும் கிட்டவே இல்லை.
எனினும், குப்பை மலைக்கு எதிராக அன்று போராட்டம் நடத்தியவர்களே, இன்று குப்பையோடு குப்பையாக புதையுண்டு போய்விட்டனர் என்றும் சிலர், முணுமுணுத்துகொண்டனர்.
குப்பைமலை சரிந்த விவகாரம், தற்போதைக்கு அரசியலாக்கப்பட்டு விட்டது. குற்றச்சாட்டுகளே, ஊடகங்களுக்குத் தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் எனச் சந்தேகிக்கப்படும், இரண்டொருவர் சடலங்களாக நேற்றும் (16) மீட்கப்பட்டனர்.
எனினும், குப்பை மலைக்கு, உடனடியான தீர்வொன்றை அரசாங்கம் இதுவரையிலும் முன்வைக்கவே இல்லை. கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஜா-எல மற்றும் பிலியந்தலையில் கொட்டப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது.
அப்படியாயின், இவ்விரு பிரதேசங்களிலும் இன்னுமிரண்டு குப்பை மலைகள், இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் உருவாகாது என்பதற்கு என்னதான் உத்தரவாதம் இருக்கிறது. வேறுறொருவரின் குப்பைகளை கொட்டுவதற்கு, ஜா-எல, பிலியந்தலை பிரதேசவாசிகள் விட்டுக்கொடுப்பார்களா என்பதற்கெல்லாம் எதிர்காலம் தான் பதில்கூறும்.
எனினும், மீதொட்டமுல்ல குப்பை விவகாரம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில், வழங்கப்பட்ட கட்டளைகளை கடந்த ஆட்சியாளர்கள் கடைப்பிடித்திருந்தால், இவ்வனர்த்தத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று, குப்பை மலைக்கு எதிராகக் குரல்கொடுப்போர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago