2025 மே 16, வெள்ளிக்கிழமை

காரணங்களும் கற்பிதங்களும்

Thipaan   / 2016 ஜனவரி 31 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் எனும் 'அரசியல் திரைக்காட்சி', இடைவேளைக் கட்டத்தை தாண்டியிருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சியினால் பிரதியுபகாரமாக மு.கா.வுக்கு வழங்கப்பட்ட இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் தற்காலிகமாக இருவர் நியமிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், அதில் ஓர் இடத்துக்குத் திருமலையைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட கையோடு இடைவேளைக் கட்டம் முடிந்து போனது. வன்னியை சேர்ந்த ஒருவரை நியமிக்கும் கிளைமேக்ஸ் கட்டத்தை நோக்கி கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

தேசியப்பட்டியலுக்கு அவசரமாக இருவரை நியமிக்க வேண்டிய நிலை மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்ட வேளையில் தனக்கு நம்பிக்கையானவர்களை அவர் தேடினார். இதற்கமைய ஹக்கீமின் நம்பிக்கையை வென்றிருந்த அவருடைய சகோதரர் டொக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் அவரது 'விடயங்களை' கையாளும் சட்டத்தரணி சல்மான் ஆகியோருக்கு நாடாளுமன்றம் செல்லும் அதிர்ஷ்டம் அடித்தது. 'சில நாட்களுக்கு' என்ற அடிப்படையில், இந்நியமனம் தற்காலிகமாக வழங்கப்படுவதாக கட்சி முன்னர் அறிவித்திருந்த போதிலும் 4 மாதங்கள் கடந்த பின்னரும், இப் பதவியில் இருந்து இவ்விருவரும் இராஜினாமாச் செய்திருக்கவில்லை.

அன்றேல் அதற்கான பணிப்புரையை கட்சித்தலைவர் விடுக்கவில்லை. ஒருவாறாக 19ஆம் திகதி ஹபீஸின் பதவி உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யப்பட்டது 'தற்காலிகமாக' என்று சொல்லியே இப்பதவிகள் வழங்கப்பட்டாலும், கூட்டிக்கழித்துப் பார்த்தால், இவ்விருவரும் கிட்டத்தட்ட சுழற்சி முறையிலான எம்.பி. பதவிகளையே பெற்றிருக்கின்றனர் என்பது புலனாகும். 

ஹபீஸ் இராஜினாமாச் செய்ததை மிக இரகசியமாக வைத்திருந்து, தனக்கு விருப்பமான 'ஒருவரை' தேசியப்பட்டியல் எம்.பி.யாக நியமித்து முடிந்த பிற்பாடே, இத்தகவலை வெளியில் விடுவதற்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் எண்ணியிருந்தார். இருப்பினும் இப்பதவி மீது வழக்கம்போல கிழக்கு முதலமைச்சர் கண்வைத்தார். ஆனால், அவர் 'என்னதான்' தந்தாலும் அப்பதவியை அவருக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை தலைவர் கூறியதாகவும் இதனால் வெறுப்புற்ற முதலமைச்சர் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீஸின் இராஜினாமாச் செய்தியை கசியவிட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு ரவூப் ஹக்கீமின் திட்டம் சிறு தடங்கல்களை சந்தித்ததால், இன்னுமொரு வியூகத்தை வகுக்க வேண்டிய இக்கட்டான நிலை தலைமைக்கு ஏற்பட்டது எனலாம். அதாவது, இராஜினாமாச் செய்த செய்தி எல்லோருக்கும் தெரிந்து, மீண்டும் தேசியப்பட்டியல் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துவிட்டதால் தனக்கு 'பிரியமான' யாரொருவரையும் தேசியப்பட்டியல் எம்.பி.யாக பிரேரிக்க முடியாத நிலை தலைமைக்கு ஏற்பட்டது.

அம்பாறையிலும், மட்டக்களப்பிலும் மீண்டும் ஏற்பட்ட பாரிய நெருக்கடி ஒருவிதத்தில் ஹக்கீம் நழுவிக் கொள்வதற்கான காரணத்தையும், வாய்ப்பையும் மறைமுகமாக ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

இச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு, தலைவருக்கு ஏதாவது ஒரு கற்பிதம் தேவைப்பட்டது. ஏதேனும் ஒரு காரணத்தை மக்களுக்கு கூறி, அந்தக் காரணத்தின் அடிப்படையில் வேறொரு மாவட்டத்துக்குத் தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்க முனைந்தார். இதில் கொஞ்சம் - அரசியல், கொஞ்சம் - கட்சி மீதான அக்கறை, கொஞ்சம் - சமூக சிந்தனையும் இருந்ததை மறுப்பதற்கில்லை. எனவேதான், 'அரசியல் அதிகாரம் இல்லாத மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல்' என்ற தாரக மந்திரத்தை மு.கா. தலைவர் பிரகடனப்படுத்தினார்.

இதயச் சுத்தியுடன் கட்சித் தலைவர் இதைச் செய்திருந்தால், அவரைப் பாராட்ட வேண்டும். திருமலை மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கப்பட்ட விடயத்தை ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எதிர்ப்புக்காட்டலோடு, மு.கா. உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் பாராட்டுதலுக்கு உரியதே.

ஆனால், மு.கா. உறுப்பினர்கள் மற்றும் தேசியப்பட்டியலுக்கு உரிமை கோரிய யாருமே கட்சித் தலைமையின் இத்தீர்மானத்தை நியாயங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கட்சிக்குள் 90 சதவீதமானோர் ரவூப் ஹக்கீமுக்கு பயந்தும், அவர் வழங்குகின்ற வரப்பிரசாதங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காகவும், சுருங்கக்கூறின், அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்திலேயே மௌனம் காக்கின்றனர் என்பது நாடறிந்த இரசியமாகும்.

திருமலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.எஸ் தௌபீக் கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதற்கு அவரும் அவருடைய தேர்தல் உபாயமுமே முக்கிய காரணம் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு மக்களால் வாக்களிப்பின் ஊடாக நிராகரிக்கப்பட்ட ஒருவரை வேறு அதிகாரப் பலம் ஒன்றினூடாக எம்.பி.யாக நியமிப்பது சட்டப்படி நியாயம் என்றாலும், அது ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என்ற ஒரு விமர்சனமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், இவற்றையெல்லாம் தவிர்த்து எம்.எஸ்.தௌபீக்கை நோக்கினால், அவரிடம் நல்ல பல பண்புகள் இருக்கின்றன. அப்பதவிக்கு பொருத்தமானவராகவும் தெரிகின்றார். தமக்கு எம்.பி. பதவி தரவேண்டும் என்று அழுத்தம் கொடுப்போரில்  பலரும், எம்.எஸ்.தௌபீக்கிற்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை நியாயமென்றே கருதுகின்றனர்.

இதேவேளை, இங்கு 'அரசியல் அதிகாரம்' என்ற ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. 'அரசியல் அதிகாரம்' என்ற அடிப்படையில் நோக்கினால் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இல்லாவிட்டாலும் வேறு  ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஊடாகவேனும் முஸ்லிம்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கின்றது.

இந்நிலைமையே வன்னியிலும் உள்ளது. எனவே, அரசியல் அதிகாரம் என்று முஸ்லிம் காங்கிரஸ் சொல்வது, மு.கா.வுக்கான அரசியல் அதிகாரமாகும். மக்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்ற தோரணையில் மு.கா.வின் வேட்கை என்பது தமது கட்சிசார்பு அரசியல் அதிகாரத்தை உயர்த்திக் கொள்வதாகும்.

மு.கா.கட்சியின் ஸ்தாபக தலைவர் உயிருடன் இருந்தபோது வன்னியிலும் திருகோணமலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் உச்சத்தில் இருந்தது. இவ்விரு மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு இருந்தனர். தற்போதிருக்கின்ற தலைவர், கட்சியை பொறுப்பேற்ற பின்னரே இங்கெல்லாம் கட்டம் கட்டமாக கட்சியின் வீழ்ச்சி இடம்பெற்றது. வன்னியை கிட்டத்தட்ட முற்றுமுழுதாக முஸ்லிம் காங்கிரஸ் இழந்து விட்டது, திருமலையிலும் கடுமையான வீழ்ச்சி இருக்கின்றது.

இவ்விரு மாவட்டங்களிலும் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்று மு.கா. தலைமை தெரிவிக்கின்ற கருத்துக்களே, மறுதலையாக அவ்விரு மாவட்டங்களிலும் கட்சி வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது என்பதை குறித்து நிற்கின்றது.

எது எப்படியோ, முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களுக்குரிய கட்சி என்ற அடிப்படையில் அதனை திருமலையிலும் வன்னி பெருநிலப்பரப்பிலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான வியூகமே இன்று அரசியல் அதிகாரம் வழங்குதல் என்ற மாய வார்த்தைக்குள் ஒளிந்திருக்கின்றது. எனவே, அடுத்த கட்டமாக வன்னியைச் சேர்ந்த ஒருவருக்கே இரண்டாவது தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படும் சாத்தியமிருக்கின்றது.

வன்னியைச் சேர்ந்தவரும் ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பியுள்ளவருமான மு.கா. உறுப்பினர் ஒருவரிடம் 'அடுத்தது வன்னிக்குத்தான்' என்று தலைவர் கூறியிருக்கின்றார். அவருக்கு தருவதாகப் பேச்சுவாக்கில் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. பெரிய பிரளயங்கள் ஒன்றும் நிகழ்த்தப்படவில்லை என்றால் வன்னிக்கே அடுத்த தேசியப்பட்டியல் எம்.பி. எனும் அரசியல் அதிகாரம் போய்ச்சேரும்.

கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் தலைவர் ஹக்கீமுக்கு ஏற்படுவதற்கு பல வருடங்கள் சென்றிருக்கின்றன என்பது உறுத்தலாக இருக்கின்றது என்றாலும், அவரில் பிழை காண இயலாது. இது அவருடைய பொறுப்பு மட்டுமல்ல. அக்கட்சியை நேசிக்கின்ற எல்லோருடைய பணியுமாகும். ஆனால், அரசியல் அதிகாரம் வழங்குவது அல்லது கட்சியை கட்டியெழுப்புவதே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் என்றிருந்தால் தலைவர், தேசியப்பட்டியல் தொடர்பான வார்த்தைப் பிரயோகங்களை அவதானமாக வெளியிட்டிருக்க வேண்டும்.

அரசியல் அதிகாரம் இல்லாத (அதாவது எந்தக் கட்சியின் ஊடாகவும் முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத) மற்றும் முஸ்லிம் காங்கிரஸை இன்னும் வளர்க்க வேண்டியுள்ள பிரதேசங்களுக்கே தேசியப்பட்டியல் எம்.பி. நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே தேசியப் பட்டியலில் உத்தேச உறுப்பினர்களை பிரேரிக்க முடியுமானளவுக்கு முயற்சித்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல், பல ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசியப் பட்டியல் பற்றி ஆசை வார்த்தைகளை கூறி, வாயூற வைத்ததும், கட்சியில் முக்கியமானவர்கள் உள்ளடங்கலாக பிரதேச வாரியாக உள்ள மு.கா. முக்கியஸ்தர்களை இன்று வரையும் நம்ப வைத்துக் கொண்டிருப்பதும் சாணக்கியம் என்று சொல்லவே முடியாது. கட்சி வீழ்ச்சியடைந்துள்ள, அரசியல் அதிகாரமற்ற பிரதேசங்களுக்கே எம்.பி.யைக் கொடுப்பது என்று தலைமை தீர்மானித்திருந்தால் அதை முன்கூட்டியே ஊர் மக்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்க வேண்டியது ஒரு கட்சித் தலைவரின் கடமை.

கட்சியில் மசூறா (கலந்தாசோனை) மூலம் இம் முடிவை எடுத்து, அதற்கான நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்குமளவுக்கு போராளிகள் ஒன்றும் படுமோசமானவர்கள் அல்லர்.

அரசியல் அதிகாரம் இல்லாத மாவட்டங்களுக்கு அதிகாரம் வழங்குவதே கட்சியின் நோக்கமென்றால், தேசியப்பட்டியலில் மு.கா. தலைவரின் சகோதரர் ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி சல்மான் போன்றோர்களின் பெயர்களைப் போட்டது எதற்காக? அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக இருந்த இந்த 5 மாத காலத்தையும் ஓர் அரசியல் அதிகாரம் வழங்கும் நோக்கில்  பயன்படுத்தாதது எதற்காக? இப்படி அதிகமான 'எதற்காக' என்ற கேள்விகள் மக்களிடம் உள்ளன. இதில் மிகப் பெரிய வினா - நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் எப்போது தனது பதவியை இராஜினமாச் செய்வார்? என்பதாகும்.

இரண்டு எம்.பி.க்களையும் சமகாலத்தில் இராஜினமாச் செய்து வேறு இருவரை நியமிக்க முயற்சி செய்தால் தனது நிலைமை மிக மோசமடைந்து விடும் என்று கட்சித் தலைவர் கருதினார். அதனை ஒரே சமயத்தில் கையாளும் கொள்திறன் அவருக்கு இருப்பதாக சொல்லவும் முடியாது. ஆகவே ஒரு எம்.பி.யை வழங்கிவிட்டு சிலகாலம் கழித்து மற்றையதை வழங்கினால் எதிர்த்தாக்கங்களை குறைக்கலாம் என்றே இவ்வாறான நகர்வொன்றை செய்தார்.

ஆயினும், ஓர் ஊருக்கு இரண்டு எம்.பி. கிடைக்கக் கூடாது என்று கூறிக் கொண்டு ஒரு குடும்பத்துக்குள்ளேயே இரு எம்.பி. பதவிகளை வைத்திருந்த கட்சித் தலைவர், ஐந்து மாதங்கள் கடந்தும் சல்மானை பதவி விலக பணிக்காமல் இழுத்தடிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.

கட்சிக்குள்  தேசியப்பட்டியலுக்கான உள்ளக மோதலை காரணம் காட்டித் தனது கூட்டாளியை எம்.பி.யாக வைத்துக் கொண்டே நெடுங்காலம் இழுத்தடிப்பதற்கு தலைவர் முனைகின்றாரோ என்ற ஐயப்பாடு கட்சி உறுப்பினர்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் காலதாமதம் இன்ற சல்மான் எம்.பி.யை இராஜினாமாச் செய்ய வைத்துவிட்டு, நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினரை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சாணக்கியத்தின் மரியாதையை தலைவரும், அமானிதத்தின் மரியாதையை சல்மானும் - காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .