Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெய்வீகன்
உலகின் சொர்க்கபுரிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர் அண்மையில் சர்வதேச பொருண்மிய சஞ்சிகை ஒன்றினால் ஆறாவது தடவையாகச் சிறந்த வாழ்வாதாரத்துக்கு ஏற்ற இடமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆறு தடவைகள் இந்த இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள மெல்பேர்ன் நகர் சுமார் 140 நகரங்களுக்;குள் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு, கலாசாரம், உறுதித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மகிழ்ச்சியான இந்தச் செய்தியை கொண்டாடும் அவுஸ்திரேலியாவினால் அதே சம விகிதத்தில் துயரத்தையும் அனுபவித்துவரும் ஒரு மக்கள் கூட்டம் இந்த நாட்டின் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் தினம் தினம் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்தச் சர்வதேச சஞ்சிகையும் பட்டியலிடுவதில்லை. ஏன்? இதனை உள்ளுர் ஊடகங்களே பெரிதாகக் கவனிப்பதில்லை.
அந்த இடம்தான் மானஸ் தீவுகள் மற்றும் நவுறூ தீவுகள் ஆகும். அங்கு அவுஸ்திரேலியாவின் பிரத்தியேக அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக நுழைய முற்படும் அகதிகளைப் பிடித்துச்சென்று இந்தத் தீவுகளில் பாரிய அகதிகள் முகாம்களை அமைத்து, அங்கு அடைத்து வைப்பதற்கு முன்னாள் பிரதமர் ஜோன் ஹவார்ட் அடியெடுத்துக் கொடுத்தார். பின்னர், அவரது ஆட்சியிலேயே பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியதால் அவற்றை இழுத்து மூடினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் ஆட்சிக் காலத்தின்போது பல்லாயிரக் கணக்கில் படையெடுத்த அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் கெவின் ரட் அவர்கள் மீண்டும் இந்த முகாம்களைத் திறந்தார்.
படகு வழியாக வருபவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் எங்கு தரைதட்டினாலும் அவர்கள் மானஸ் மற்றும் நவுறூ தீவுகளில் உள்ள முகாம்களுக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டு, அங்கு வைத்து அவர்களது அகதிக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே நாட்டுக்குள் கொண்டு வருவது பற்றி முடிவெடுக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்தார்.
இந்த அறிவிப்பின் பின்னர், 2014 இல் மானஸ் தீவு அகதிகள் முகாமில் மாத்திரம் சுமார் 1,300 அகதிகளால் நிரம்பி வழிந்தது. அங்கு அடைக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள், குடும்பத்தவர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களினால் அவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டு, ஏதோ ஒரு வகையில் குடியுரிமை வழங்கப்பட்டது.
ஆனால், சுமார் 854 ஆண்கள் மாத்திரம் கடந்த மூன்று வருடங்களாக மானஸ் தீவுகள் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 24 பேர் தமிழர்கள். எஞ்சியோரில் பெரும்பாலானவர்கள் ஈரான் நாட்டவர்கள்.
இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற வலுவான கோரிக்கைகள் சகல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு எல்லோரும் களைத்து விட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சியோ இவர்களை நாட்டுக்குள் கொண்டு வருவதில்லை என்பதில் விடாப்பிடியாக உள்ளது.
இவர்களின் ஊடாக இந்த நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய எத்தனிக்கும் அனைவருக்கும் ஒரு பாடம் படிப்பித்துக் காட்டுவது என்று லிபரல் அரசாங்கம் உறுதியாக நிற்கிறது.
'இங்கு வருவோர்கள் எல்லோரையும் மானஸ் தீவுகளுக்கு கொண்டு போய்விட்டு, பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு வருவதில் எந்தப் பயனும் இல்லை. முற்றுமுழுதாக இவர்களுக்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் தடையை உண்டுபண்ணினால்தான், இனிமேலும் இவர்களை இங்கு ஏற்றிவரும் ஆட்கடத்தல்காரரின் வியாபாரம் நிறுத்தப்படும். இவ்வாறு இங்கு வருபவர்கள் கடலில் மூழ்கி இறந்து போகும் அவலங்களும் குறையும்' என்று அகதிகளின் மீது படுபயங்கரமாக கரிசனை கொள்வது போன்ற காரணங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து கூறிவந்தது.
ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகளை மானஸ் தீவுகளில் முகாம் அமைத்து, அங்கு கொண்டு சென்று விடுவது என்பது அந்த நாட்டின் அரசியலமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணானது என்று கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.
இதற்கு நிச்சயம் பதில்கூற வேண்டிய கடப்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தள்ளப்பட்டதுடன், அங்குள்ள அகதிகளின் எதிர்காலம் குறித்தும் ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானது.
இதற்கிடையில் மானஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட கலவரமொன்றில் ஒரு ஈரான் அகதி அடித்துக் கொல்லப்பட்டார். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இதைவிட, அண்மையில் அந்த முகாமிலிருந்து கசிந்த ஆவணங்களின்படி, அங்கு போதைப்பொருள் பாவனை, பாலியல் முறைகேடுகள் என்று பல குற்றச்செயல்கள் நடைபெறுவதாக தெரியவந்தது. அதேவேளை, அங்குள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் ஆதாரபூர்வமான ஆவணங்கள் வெளிவந்தன.
இதுநாள் வரையில், அரசாங்கத்துடன் ஒத்தோதும் ஊடகங்களைத் தவிர, ஓரிரு இடது சாரி ஊடகங்கள் மாத்திரம் இந்த மானஸ் தீவு விவகாரங்களை செய்திகளாக வெளியிட்டுவந்தபோதும், தற்போதைய நிலைவரத்தின் பிரகாரம் எல்லா ஊடகங்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதன் விளைவாக, அவுஸ்திரேலிய ஊடகங்கள் மாத்திரமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் சர்வதேச அகதிகள் நல அமைப்புகளும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எதிராகத் தமது பார்வைகளை முன்வைக்க ஆரம்பித்தன.
இவை எல்லாவற்றுக்கும் பதில் கூறவேண்டிய நிலையில், கடந்த வாரம் மானஸ் தீவுகளுக்குப் பயணம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர், அந்நாட்டுப் பிரதமருடன் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களின் முடிவில் அங்குள்ள அகதிகள் முகாமினை மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முகாமை மூடினாலும் அங்குள்ள ஒருவரைக்கூட அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று குடியமர்த்துவதில்லை என்று அடித்துக் கூறிவிட்டு வந்திருக்கிறார் அவுஸ்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர்.
இதுநாள் வரைக்கும் மானஸ் தீவு முகாமில் உள்ளவர்களின் அகதிகள் கோரிக்கையை பரிசீலனை செய்ததில் சுமார் 98 சதவீதமானவர்கள் உண்மையான அகதிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தற்போது அடுத்த கட்டம் என்ன என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு சென்று குடியமர்த்துவதில்லை என்று அறிவிக்கப்பட்டால் இந்த அகதிகளை ஒன்றில் மானஸ் தீவுகளில் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்றும், அதற்கு விருப்பம் தெரிவிக்காவிட்டால் அந்த அகதிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், தற்போது முகாமினை மூடுவதாக வெளிவந்துள்ள அறிவிப்புக்கூட எந்தப் பயனும் தராது என்று முகாமிலுள்ள அகதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த முகாமிலுள்ள அகதி ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர்களை தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் செலவிட்டு வருவதாகவும் அந்தத் தொகையை மானஸ் தீவுகள் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எழுந்துள்ள கேள்வி எல்லாம் இந்த 854 அகதிகளினதும் நிலை என்ன என்பதே ஆகும்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்போது கடல்வழியாக வரும் அகதிகளின் தொகையைக் கணிசமான அளவு குறைத்துவிட்டது என்று கூறலாம். ஆங்காங்கே கரைதட்டும் ஓரிரு படகையும் திருப்பி அனுப்பி விடுகின்ற அவுஸ்திரேலிய கடலோர காவல்துறையினர், மீறி வருபவர்களை விமானத்தில் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இப்படியாகக் கடுமையான கொள்கையைக் கடைப்பிடித்துவரும் இந்த அரசாங்கத்தின் அகதிகள் கொள்கை குறித்து சர்வதேச மட்டத்திலும் விசனங்கள் மற்றும் விமர்சனங்கள் கிளம்பி விட்டன.
அரசாங்கத்தின் போக்கிற்கு உள்நாட்டில் எழுந்துள்ள அதிருப்தியின் உச்சமாக அவுஸ்திரேலியாவின் ஒரு மாநிலமான மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் இந்த மானஸ் தீவுகளிலுள்ள அகதிகளை தனது மாநிலத்தில் குடியமர்த்துவதற்கு தயார் என்று அரசாங்கத்தின் முடிவுக்கு சவால்விடுக்கும் அளவுக்கு நிலமை சென்றுள்ளது.
ஆனால், இந்த 854 அகதிகளின் மீது தான் காண்பிக்கப்போகும் கடும்போக்கின் அடிப்படையில்தான் தனது அரசியல் மானமே தராசிடப்படப்போகிறது என்ற பீதியுடன் தொடர்ந்தும் தனது கொள்கையில் இறுக்கமாக உள்ளது அரசாங்கம்.
பார்ப்போம் கங்காரு எதுவரை பாயப்போகிறது என்று.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
34 minute ago
54 minute ago