2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும்

Editorial   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது.

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த நிலையில்,   தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டமை முதலாவது பார்வையாகும்.

இரண்டாவது, ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதரும்  சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல், அங்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி வரையிலும் நங்கூர​மிட்டிருப்பதாகும்.

சீன உளவுக் கப்பல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தால் தெளிவான பதில்கள் எவை​யும் வழங்கப்படவில்லை. இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, “எரிபொருள் நிரப்புவதற்காக வருகைதருகின்றது” என்றார்.

இந்த பதில், இராஜதந்திர மட்டத்திலான பதில் அல்ல என்பது பலருக்கும் புரிந்திருக்கும். முன்னதாக அந்தக் கப்பலின் வருகை தொடர்பில் தங்களுக்குத் தெரியாது என்று அறிவித்திருந்த இன்றைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வழங்கிய அனுமதியின் பிரகாரமே அக்கப்பல் வருகைதருகிறது என, இவ்வரசாங்கம் பதிலளித்திருந்தது.

சீனாவின் உளவு கப்பல்கள் இலங்கைக்கு வருகைதருவது இது முதன்முறையல்ல. சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பலானது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 2014 ஆம் ஆண்டு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்து நங்கூரம் இடுவது தொடர்பில், இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலின் வருகைதொடர்பில் இலங்கை முறையாக பதிலளிக்கவில்லை என்றாலும் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்றடிப்படையில், தங்களுடைய உதவி தொடருமென இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆசியான் பிராந்திய மாநாட்டின் இணை நிகழ்வாக, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரிக்கும், டாக்டர் ஜெயசங்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். “நெருங்கியதும் நட்புமிகுந்ததுமான அயல் நாடுகளின் சந்திப்பு” என அச்சந்திப்புக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

அயலுறவுக்கு முதலிடம்” எனும் கொள்கையின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணியப்பை டாக்டர் ஜெய்ஷங்கர் மீண்டும் வலியுறுத்தியிருப்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளவேண்டும். 

குறிப்பாக இலங்கைக்கு பாரியதொரு நிதியுதவியை இந்தியா அளித்த உடனே சீன உளவுக்கப்பலின் வருகையானது இந்தியாவுடனான இலங்கையின் உறவைப் பாதிக்குமென பெரும்பாலும் கூறப்பட்டிருந்த நிலையில், ஜெய்ஷங்கரின் அறிவிப்பானது ஓரளவுக்கு திருப்தியூட்டுவதாய் அமைந்துள்ளது. எ

 

இலங்கையின் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற நெருக்கடியின்போது இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியாவாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், சீன உளவுக்கப்பலின் வருகையானது இந்தியாவின் பாதுகாப்பு சவாலுக்கு உட்படுத்துமாயின் அதன் பிரதிபலனை இலங்கையே அனுபவிக்கவேண்டும். அதற்கெல்லாம் எதிர்காலமே பதில் சொல்லும்.

ப்பட்டால் பின்னர் இலங்கை அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டும்.

சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் காரணமாக ராஜபக்‌ஷக்களின் மோசடி நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப்பட்டதுடன், இலங்கையை நெருக்கடிக்குத் தள்ளியதுடன்,

இலங்கைக்கும், சீனாவுக்குமிடையிலான ஹம்பந்தோட்டை துறைமுகத்தைக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் இத்துறைமுகத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சீனாவின் நகர்வானது ஒப்பந்தத்தின் மீறலாகும் என்பதை நினைவில் கொள்ள​​வேண்டும்.

கப்பலானது செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடியதுடன், இலங்கையையும், இந்தியாவின் தென் பகுதியையும் ஆபத்துக்குள்ளாக்கும் மேம்பட்ட உணரிகளையும் கொண்டுள்ளது. இந்தியா இதை ஏற்கெனவே உணர்ந்துள்ளது. கப்பலானது 100 சதவீதம் நீர்மூழ்கி உளவு மற்றும் மேம்பட்ட கொள்ளவுகளை உடைய பாதுகாப்புத் தரையிறக்கக் கப்பலுடனான இராணுவக் கப்பலாகும்.

இலங்கை அரசாங்கம் கூறுவதைப் போல, எரிபொருள் நிரப்புவதற்குத்தான் அந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடுகிறது என்றால், ஓகஸ்ட் 11 முதல் ஓகஸ்ட் 17 ஆம் திகதிவரையிலும் 6 நாட்களுக்கு நங்கூரமிடப்பட்டிருப்பது ஏன்? என்ற சந்தேகம் நியாயமானது. ஆனாலும் சில திருத்த வேளைகளுக்காக அவ்வாறு தரித்து நிற்குமென பதிலும் அளிக்கலாம்.

சீன கப்பலின் விஜயமானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்,    இடையே பிரிவினையை ஏற்படுத்தும். ஏனெனில், அந்தக் கப்பலானது. கப்பலானது இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் அணு நிறுவல்களை இலக்கு வைத்துள்ளது.

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவியளித்து வரும் இந்தியாவை சீனா சீண்டிப்பார்க்கிறது என்பதில் தவறில்லை. 

Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே  இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா? என்பதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா? என்பதுவும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயமாகும். எவ்வாறோ, இந்தியா தனது கழுகுப் பார்வையை இலங்கையின் மீது ஆழப்பதித்துள்ளது என்பது மட்டுமே உண்மையாகும்.

சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா? என்பது மறுபுறத்தில் உள்ள ​​கேள்வியாகும். தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

மொத்தமாக பார்க்குமிடத்து கீழ் கண்ட விடயங்கள் தொடர்பில் ஆகக் கூடுதலான கரிசனையை காண்பிக்கவேண்டிய நிலைமைக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

SEA OF SRI LANKA  எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

எனினும், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங்கைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் வகையிலான ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒரே சீனா” கொள்கை தொடர்பான இலங்கையின் பின்பற்றல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு சாசன கோட்பாடுகள் தொடர்பான இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மோதலின்மைக்கு முக்கிய அடிப்படையாக அமையும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆக, சீன உளவு கப்பலின் வருகையானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொண்டுள்ளார். ஆகையால்தான், சீன தூதுவரிடம் இவ்வாறான கருத்து அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கவேண்டும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .