Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (18) பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து, ஆற்றிய கொள்கை விளக்க உரை பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற நிலையில், அதை மீட்டெடுப்பது பற்றிய எந்தவித சிந்தனையோ, திட்டங்களோ இல்லாமல், ஜனாதிபதி தன்னுடைய உரையை ஆற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகளும் தென் இலங்கை ஊடகங்களும் விமர்சிக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் எதுவுமே குறிப்பிடாதது, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவும் காத்திருந்தன. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்ற நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இந்தியா அர்ப்பணிப்போடு செயற்பட்டுவருகின்றது. அதன்மூலம், சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை குறைக்க முடியும் என்று இந்தியா நம்புகின்றது. அதன்போக்கிலான இராஜதந்திர ஆட்டத்தை இந்தியா, இலங்கைக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதியின் உரை ஆற்றப்பட்ட அன்றுதான், பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக இந்தியா 500 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கியது. இலங்கைக்கு வழங்கப்படும் கடன்கள், மீளப் பெற முடியாதவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டே இந்தியா வழங்குகின்றது. அதற்கு பிரதிபலனாக, சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையைத் தன்னுடைய வளையத்துக்குள் கொண்டுவர முடியும் என்று இந்தியா நினைக்கின்றது. அப்படியான நிலையில், தற்போதைய நெருக்கடி நிலைகளுக்கு உதவும் இந்தியாவைக் குளிர்விக்கும் கருத்துகளை கோட்டா, தன்னுடைய உரையில் வெளிப்படுத்துவார் என்று நம்பியது. ஆனால், கோட்டா அவ்வாறான எந்தவொரு விடயத்தையும் செய்யவில்லை.
மாறாக, தங்களுடைய இராஜதந்திர ஆட்டங்களில், இலங்கையை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற தொனியை வெளிப்படுத்தினார். இது, உதவிக்கு வந்துள்ள இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.
இன்னொரு பக்கம், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை, இந்தியா கையாள ஆரம்பித்திருக்கின்ற நிலையில், இந்தியாவை குளிர்விக்கும் வகையில், கோட்டா ஏதாவது கருத்தை வெளியிடுவார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நினைத்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி ஏதாவது குறிப்பிடுவார் என்று இரா.சம்பந்தன் நம்பினார்.
ஆனால், தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையென்ற ஒன்று இல்லவே இல்லை என்ற தோரணையிலேயே கோட்டா உரையாற்றினார். இது, சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை கோபப்படுத்தியது. இதனால், ஜனாதிபதி வழங்கும் சம்பிரதாய தேநீர் விருந்தைக் கூட, சம்பந்தன் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.
தென் இலங்கை அரசியல்வா திகளோடு, அரசியல் கொள்கை சார் முரண்பாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரிகத்தோடு விடயங்களை கையாண்டு வருபவர் சம்பந்தன். மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க தொடங்கி, எந்தவோர் அரசியல் தலைவரும் மதிக்குமளவுக்கு தன்னை வைத்துக் கொள்வார். பாராளுமன்ற சம்பிரதாய நிகழ்வுகள் தொடங்கி எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்.
ஜனாதிபதிகளை அல்லது அரசாங்கங்களை பிடிக்குதோ இல்லையோ, சம்பிரதாய நிகழ்வுகளில் சம்பந்தன் கலந்து கொள்வார். தான் மட்டுமல்லாது, தன்னுடைய கட்சி உறுப்பினர்களையும் பங்கெடுக்க வைப்பார். அதன்மூலம், ஆளுமையும் அனுபவமும் உள்ள தலைவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அப்படிப்பட்ட சம்பந்தனே, இம்முறை ஜனாதிபதியின் தேநீர் விருந்தை புறக்கணித்தது மட்டுமல்லாது, பசில் ராஜபக்ஷவிடம் “.... ஜனாதிபதியிடம் சொல்லுங்கள், அவரது இன்றைய கொள்கை விளக்க உரை வெறும் குப்பை...” என்று ஆவேசப்பட்டது எல்லாம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்த தலைவனாக, தான் என்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டும் என்பது சம்பந்தனின் நீண்டகாலக் கனவு. அதற்காக அவர் பாரிய விட்டுக்கொடுப்புகளைக்கூட செய்வதற்கு தயாராக இருக்கிறார். கடந்த நல்லாட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற நிலை தாண்டி நின்று, அரசின் பங்காளிக் கட்சித் தலைவர் போன்றே செயற்பட்டார்.
அதற்கு, புதிய அரசியலமைப்பொன்றின் மூலம், தமிழ் மக்களுக்கான தீர்வை உறுதி செய்துவிட வேண்டும் என்பது காரணமாகும். அதற்காக அவர், ‘ஒன்றையாட்சிக்குள் சமஷ்டி’ என்ற வார்த்தை ஜாலங்களை எல்லாம் தமிழ் மக்களை நோக்கிச் செலுத்தினார். குறிப்பாக, புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கு முதலிடம் என்கிற விடயத்தை அங்கீகரிக்கவும் செய்தார்.
அத்தோடு, தமிழ் மக்களிடம் மாத்திரமல்லாது, வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் தொடங்கி பல தரப்பினரிடமும் நல்லாட்சி அரசாங்கம், புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்கிவிடும் என்று நம்பிக்கை ஏற்படுத்தினார். ‘பொங்கலுக்குள் தீர்வு; தீபாவளிக்குள் தீர்வு’ என்று சம்பந்தன் சொன்னதெல்லாம், அப்படிப்பட்ட நிலையில்தான். ஆனால், அவரின் எதிர்பார்ப்பை மைத்திரியும் ரணிலும் பொய்யாக்கிவிட்டனர்.
அவ்வாறான நிலையில்தான், மீண்டும் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல், சம்பந்தன் பெரியளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதற்குக் கொரோனா பொருந்தொற்றையும் வயது மூப்பையும் வெளிப்படைக் காரணங்களாகச் சொல்லலாம்.
ஆனால், மறைமுகமாக ராஜபக்ஷர்களுக்கு தென் இலங்கை மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றி என்பது பாரியளவானது. அதனை, தாண்டி நின்று ராஜபக்ஷர்கள் என்றைக்கும் சிந்திக்க மாட்டார்கள் என்பதுவும், குறிப்பாக கோட்டாவோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்பதெல்லாம் இயலாத காரியம் என்பது எல்லாமும் சம்பந்தனை அமைதியாக இருக்க வைத்தது.
ஆனாலும், ஒரு சாக்குக்காக ஜனாதிபதியோடு பேசுவதற்கு சம்பந்தன் நேரம் கேட்டு வைத்தார். அவருக்கு தெரியும் கோட்டாவோ, அவரது ‘வியத்கம’ அணியோ கூட்டமைப்போடு பேசும் நிலையில் இல்லை. அதனால், பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் தவிர்க்கப்படும் என்று.
ஆனாலும், காலம் சம்பந்தனை மீண்டும் சுறுசுறுப்பான அரசியல்வாதியாக மாற்றும் நேரத்தை வழங்கியது. நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியதும், இந்தியா, அமெரிக்கா வடிவில் அது கனிந்தது. அதன்போக்கில்தான், என்றைக்குமே ராஜபக்ஷர்களை நம்பாத சம்பந்தன், இம்முறை கோட்டாவின் உரைக்காக காத்திருந்தார்.
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காக கூட்டமைப்பினர் அழைக்கப்பட்டபோது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி அந்தச் சந்திப்பை சம்பந்தன் தவிர்த்தார். இதனால், இந்தியாவுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பை சம்பந்தன் தவிர்த்தமைக்கு தென் இலங்கை மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பது காரணமாக இருக்கலாம் என்பது பலரது எதிர்பார்ப்பு.
ஏனெனில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தென் இலங்கை மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டு தீர்வைப் பெற்றுவிட முடியாது என்பது அவரது நீண்டகால எண்ணம். அப்படியான நிலையில், இந்தியாவின் அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டதன் மூலம், ராஜபக்ஷர்களும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்வார்கள் என்று அவர் நினைத்தார். அதன் பிரதிஉபகாரத்தை கோட்டா தன்னுடைய உரையில் வெளிப்படுத்துவார் என்று சம்பந்தன் நம்பினார்.
ஆனால், கோட்டாவின் சிந்தாந்தமோ பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தினாலும் இராணுவ மனநிலையாலும் வார்க்கப்பட்டது. அதில் அவர் எந்த மாற்றங்களையும் செய்யார். ஜனாதிபதியாக பதவியேற்றதும் இந்தியாவுக்கு சம்பிரதாயபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த கோட்டா, அங்கு வைத்தே இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை, நாங்கள் பார்த்துக் கொள்வோம்; வெளியாரின் தலையீடுகள் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடி நிலை மாத்திரம் அவரது நிலைப்பாடுகளை மாற்றிவிடும் என்று இந்தியாவும், சம்பந்தன் போன்றோரும் நிலைப்பதெல்லாம் வீணானது.
கோட்டாவைப் பொறுத்தவரை, ‘இது சிங்கள நாடு; இங்கு வாழும் தமிழ் பேசும் சமூகத்தினர் இரண்டாம் தரப் பிரஜைகள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினை என்ற ஒன்று இருக்கவே முடியாது’ என்பதாகும். இதைத்தான் அவர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
43 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago