Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், விக்னேஸ்வரன் அணியில் ஐங்கரநேசன் முக்கிய பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்திலேயே, ஐங்கரநேசனின் சாதியை விக்னேஸ்வரன் அறிய முயன்றிருக்கிறார். தன்னுடைய அணியில் முக்கிய நபராகச் செயற்பட்ட இன்னொருவரின் சாதியை சுட்டிக்காட்டியே, ஐங்கரநேசனின் சாதியையும் விக்னேஸ்வரன் அறிய விரும்பி இருக்கிறார்.
தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் சாதியவாதிகளும் மதவாதிகளும் நிரம்பி இருக்கிறார்கள். இன்றும், ஒருவரின் சாதியையும் மதத்தையும் அறிந்து, தேர்தல்களில் போட்டியிட அனுமதிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் நிலை இருக்கிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி இந்த நிலைக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கானது அல்ல. ஆனால், வெளிப்படையாக சாதியவாதத்தையோ மதவாதத்தையோ பேசுவதை தவிர்க்கின்றன. அதற்கு, ஆயுதப் போராட்டம் சாதிய, மதவாத சிந்தனைகளுக்கு அப்பால் நின்று எழுந்த ஒன்று என்பதும் காரணம். அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்பது, சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மத நல்லிணக்கத்திலும் நிலைத்து நின்றது. அதன் தொடர்ச்சியைப் பேண வேண்டிய கடப்பாடு, இப்போதுள்ள தேர்தல் நோக்கு அரசியல் கட்சிகளின் தலையில் தவிர்க்க முடியாமல் இறக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால்தான், வெளிப்படையாக சாதிய, மதவாத சிந்தனைகளை இந்தக் கட்சிகள் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால், சாதிய, மதவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர், எவ்வளவுதான் பொதுவெளியில் மறைத்துச் செயற்பட்டாலும், அவரை அறியாமல் எங்காவது வெளிப்பட்டுவிடும். இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சியில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மலைய மக்களை நோக்கி, சாதிய அடையாளங்களைக் குறிக்கும் வார்த்தைகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தி இருந்தார்.
பௌத்த சிங்கள அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனக்கலவரங்களை அடுத்து, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், கிளிநொச்சியிலும் வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறார்கள். அந்த மண்ணின் மைந்தர்களாகி விட்டார்கள்.
அவர்கள், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அதியுச்சம் என்று நம்பப்படும் ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மாவீரர்களாகவும் போராளிகளாகவும் இறுதி மோதல் வரையில் பங்களித்து இருக்கிறார்கள். அதனால், அவர்கள் இன்றைக்கும் போராட்ட வடுக்களோடு பின்தங்கிய நிலையில் வாழ வேண்டி இருக்கின்றது.
அவர்களை, மலையக மக்களாக அடையாளப்படுத்தும் வேலைகளை தென் இலங்கை இனவாத சக்திகள் திட்டமிட்டு செய்து வருகின்றன. அதற்கு, சிறிதரன் போன்ற சாதியவாத சிந்தனை கொண்டவர்கள் மறைமுகமாக உதவுகிறார்கள். வாக்குக்காக மட்டுமே அந்த மக்களை சிறிதரன் போன்றவர்கள், மாற்றான்தாய் மனநிலையிலேயே தொடர்ந்தும் அணுகி வருகிறார்கள். அதைத்தான், சிறிதரனின் சாதியவாத உரையாடல் வெளிப்படுத்தியது.
மலையகத்திலிருந்து வடக்கு, கிழக்கில் குடியேறிவிட்ட மக்கள் இன்றைக்கு, தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியினர். அவர்களைப் பிரித்து வைத்து, சிறு அரசியல் புரிந்தாலும் அது அநாகரிகத்தின் உச்சம்.
சிறிதரனின் சாதியவாத உரையாடல்கள் ஒலிவடிவில் வெளியாகிய பின்னரும் கூட, தமிழரசுக் கட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது குறித்து எந்தவொரு பதிலையும் கூட வெளிப்படுத்தவில்லை. தமிழ்த் தேசிய அரங்கில் இருக்கின்ற கட்சிகளில் பிரதான கட்சியாக தமிழரசுக் கட்சி அப்போது பொறுப்போடு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால், வாய்மூடி மௌனியாக இருந்ததுதான் வரலாறு.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த காலத்தில், அதற்குள் சாதிய பாகுபாடுகள் இருந்ததில்லை.
ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பின் சாதியவாத அணுகுமுறை தெளிவாக வெளிப்பட்டது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குக்கூட, சாதிய அடிப்படைகளுக்காக, கூட்டமைப்புக்குள் சரியாக மதிப்பளிக்கப்படாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்து வரப்பட்டதும் சாதியவாத, மதவாத, மேட்டுக்குடி அணுகுமுறைகளால்தான் நிகழ்ந்தது. அவர், அரசியலுக்கு வந்தது முதல் தன்னை தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக முன்னிறுத்துவதைக் காட்டிலும், தன்னுடைய மதத்தையும் மேட்டுக்குடி மனநிலையையும் வெளிப்படுத்துவதிலும் குறியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியிடம், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருந்தார். அது அவரின் மதவாத நோக்கு நிலையால் வந்ததொன்று!
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், விக்னேஸ்வரனை மேட்டுக்குடி என்பதற்காக அரசியலுக்கு அழைத்து வந்தார் என்பது வெளிப்படையானது. ஆயுதப் போராட்டத்தின் மீது சம்பந்தனுக்கு சிறிதும் அபிமானம் இல்லை. அந்தப் பின்னணியில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும், அவர்களை ஒவ்வாமையோடுதான் அணுகி வந்திருக்கிறார். அதனை அவர், பொது வெளியிலேயே வெளிப்படுத்தி இருக்கின்றார். அதனால்தான், விக்னேஸ்வரனை அவர் அரசியலுக்கு அழைத்து வந்தார். சம்பந்தனின் எண்ணத்தை நிறைவேற்றுவதில், அப்போது எம்.ஏ சுமந்திரன் பெரும்பங்காற்றினார். அதில், விக்னேஸ்வரன் மீதான குரு என்கிற விசுவாசம் கூட இருந்திருக்கலாம்.
விக்னேஸ்வரன் எவ்வாறான அணுகுமுறைகளோடு தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றார் என்பது, சிறிய காலத்துக்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டது. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிக் கொண்டு யாழ். மையவாத புத்திஜீவிகளும், அரசியல் ஆய்வாளர்களும் தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்து, விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமையாக கட்டமைக்க முயன்ற வரலாறு, தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பக்க அவலத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமானதாகும்.
விக்னேஸ்வரன் ஒரு சாதிய மேட்டுக்குடி சிந்தனைகள் நிரம்பிய மதவாதி என்பது வெளிப்படையானது. அவரை, சம்பந்தனுக்கு மாற்றான தலைவராக நிறுத்துவதற்காக அவருக்கு ஜனவசிய பிம்பங்களை நாளும் பொழுதும் வரைந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், விக்னேஸ்வரனை சித்திரிக்கும் வேலைகளை எல்லாம் தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் யாழ். மையவாத குழு பண்ணியது.
அப்போது, விக்னேஸ்வரனை மிகப்பெரிய உன்னத தலைவராக, ஐங்கரநேசன் நம்பியதாக இப்போது கூறுகிறார். விக்னேஸ்வரன், சாதி கேட்டதை மாபெரும் குற்றமாக இப்போது அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால், இதில் இருக்கும் வியப்பு என்னவென்றால், வடக்கு மாகாண சபையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அளவில் விக்னேஸ்வரனின் அமைச்சரவையில், அவருக்கு அடுத்த நிலையில் ஐங்கரநேசன் இருந்திருக்கிறார். விக்னேஸ்வரனை அனைத்து இடங்களிலும் நியாயப்படுத்துவதிலும் குறியாக நின்று அப்போது இயங்கியிருந்தார்.
அப்படிப்பட்டவருக்கு, விக்னேஸ்வரனின் உண்மையான சாதியவாத, மதவாத முகம் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில்தான் வெளிப்பட்டது என்பதைதான் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் சாதிய, மதவாத, வகுப்புவாத, பிரதேசவாத சிந்தனைகளைப் புறந்தள்ளி, மக்களை ஒரே மக்களாக, ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான அடிப்படை நோக்கங்களைக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.
ஆயுதப் போராட்ட காலத்தில் குறிப்பாக, புலிகளின் காலத்தில் அதனை நோக்கி நகர்வு குறிப்பிட்டளவு இருந்தது. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பயணம் என்பது, சமூக விடுதலைக்குப் புறம்பான சிந்தனை கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்படும் சூழல் இருக்கின்றது.
விக்னேஸ்வரன், சிறீதரன் போன்றவர்கள் ஒருசில உதாரணங்கள் மட்டுமே! அவர்கள், ஆர்வக்கோளாறு அல்லது தன்னிலை மறந்து நின்று தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! மற்றப்படி, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருப்பவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் சாதிய, மதவாத சிந்தனைளோடு இருப்பவர்கள்தான் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
இது, தமிழ்த் தேசிய இயக்கத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது. இந்த யதார்த்தத்தை மறைத்து நின்று, தமிழ் மக்கள் எந்த விடுதலையையும் பெற்றுவிட முடியாது.
11 minute ago
3 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
26 Aug 2025