2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜெனீவா பிரேரணையும் ஜனாதிபதியின் உரையும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, சர்வதேச சமூகத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து, தாம் காப்பாற்றியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலவேளைகளில் கூறுகிறார்.   

அதேவேளை, இம்முறை ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “எமது பிரச்சினைகளை, நாமே தீர்த்துக் கொள்ள இடமளியுங்கள்” என, சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்.   

அவரது இந்த இரண்டு கருத்துகளும், ஒன்றுக்கொன்று முரணாக அமையவில்லையா?   
இலங்கையில், போர் நடைபெற்ற காலத்தில், இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்ய முற்படும் சர்வதேச சமூகம், போர்க் காலத்தில் இலங்கை அரச படைகள், போர்க் குற்றங்களைப் புரிந்ததாகத் தீர்ப்பளித்து, அப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரியாக இருந்த தம்மை, மின்சாரக் கதிரையில் அமர்த்த, திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பதவியில் இருந்த காலத்தில் கூறி வந்தார். அல்லது, தமது சகாக்கள் மூலம், அவ்வாறு கூறச் செய்தார்.   

அதன் மூலம், புலிகளை வெற்றி கொண்ட தம்மைத் தண்டிக்கப் போகிறார்கள் என, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்தை உருவாக்கி, அதன் மூலம் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதே, அக்காலத்தில் மஹிந்தவின் யுக்தியாக இருந்தது.   

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், சர்வதேச சமூகம், இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், கூடுதல் அக்கறை செலுத்தியமையும் அவருக்கு, இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது.  

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து, இனப்பிரச்சினை, நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆகிய விடயங்களில், சர்வதேச சமூகம் வரவேற்கும் பல நடவடிக்கைகளை, புதிய அரசாங்கம் எடுத்தது. அதன் காரணமாக, இலங்கை மீதான சர்வதேச நெருக்குதல்கள் வெகுவாகக் குறைந்தன .   

2012ஆம் ஆண்டு முதல், வருடாந்தம் இலங்கை தொடர்பாகப் பிரேரணைகளை நிறைவேற்றி வந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை, 2015 ஆம் ஆண்டு, இலங்கை அரசாங்கத்தின் அனுசரணை உடனேயே பிரேரணையொன்றை நிறைவேற்றியது.   

அந்தப் பிரேரணையின் மூலம், இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய, சர்வதேச பொறிமுறையொன்றை அமைக்க, இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. 2016ஆம் ஆண்டு, பிரேரணையொன்று நிறைவேற்றப்படவில்லை. அது, இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீதான, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையே காட்டியது.  

இதன் காரணமாக, ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாகவும் அவர் சர்வதேசக் கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லும் போதெல்லாம், உலகத் தலைவர்கள் அவரைத் தேடி வந்து, அளவளாவிவிட்டுச் செல்வதாகவும் அரசாங்கத்தின் தலைவர்கள் கூறி வந்தனர். அதுவும் உண்மை தான்.  

இந்நிலையில், மஹிந்தவின் மின்சாரக் கதிரை பிரசாரம் செல்லுபடி அற்றதாகிவிட்டது. மஹிந்தவும் அதை மறந்துவிட்டார். இதைத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றினேன்” எனக் கூறி வருகிறார்.  

அடுத்ததாக, “எமது பிரச்சினைகளை, நாமே தீர்த்துக் கொள்ள, எமக்கு இடமளியுங்கள்” என ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நாவில் கூறியிருக்கிறார். இங்கும் அவர், மனித உரிமை விடயத்தைத் தான் கூறிப்பிடுகிறார் என்பது, தெளிவான விடயமாகும்.   

அதாவது, மனித உரிமை மீறல் தொடர்பாக, அரச படைகளுக்கும் புலிகளுக்கும் எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விடயத்தில், ஐ.நா மனித உரிமைப் பேரவை போன்ற நிறுவனங்கள் தலையிடாது, உள்ளூரிலேயே நடவடிக்கை எடுத்து, அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இடமளியுங்கள் என்றே அவர் கூறுகிறார்.   

இது, இந்த அரசாங்கம் அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் ஆண்டுப் பிரேரணைக்கு முரணான கருத்தாகும்.   

அப்பிரேரணை, மனித உரிமை பற்றி எழுந்துள்ள சர்ச்சையை, உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை. அது, பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் அடங்கிய பொறிமுறையொன்றின் மூலமே, மனித உரிமைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறுகிறது.  

அந்தப் பிரேரணையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்த்ததாக, எந்தவொரு செய்தியையும் நாம் அந்நாள்களில் காணவில்லை. பின்னர் அவர், அதில் வரும் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான ஆலோசனையை எதிர்த்தாலும், பிரேரணை செல்லுபடியானதாகவே இருக்கிறது.   

அத்தோடு, புதிய அரசாங்கம் ஜனநாயக வழியூடாகப்  பல நடவடிக்கைகளை எடுத்தது. பல தமிழ் இயக்கங்கள், தனி நபர்கள் மீதான தடைகளை நீக்கியது. ‘தமிழ்நெற்’ போன்ற இணையத்தளங்கள் மீதான தடைகளை நீக்கியது. அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுவதாகச் சந்தேகிக்கப்படும் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் போன்றவை நிறுத்தப்பட்டன.   

இந்த நிலையிலேயே, மைத்திரியின் அரசாங்கத்துக்குச் சர்வதேச வரவேற்புக் கிடைத்தது. குறிப்பாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையுடன் இணங்கிச் செயற்பட, அரசாங்கம் முற்பட்டமை, இந்த வரவேற்புக்கு முக்கிய காரணமாகியது. அதன் அடிப்படையிலேயே, ஐரோப்பிய நாடுகள், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க முன்வந்தன. அவ்வாறு தான், மின்சாரக் கதிரையும் மறக்கப்பட்டது.  

இவ்வாறு, மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய பொறிமுறையொன்றை அமைக்க, வாக்குறுதி அளித்துவிட்டு, அதனால் பல சலுகைகளையும் பெற்றுவிட்டு, “எமது பிரச்சினைகளை நாமே, தீர்த்துக் கொள்ள இடமளியுங்கள்” என்று ஜனாதிபதி கூறுகிறார்.   

பதவிக்கு வந்த ஆரம்பத்திலேயே அவர், “எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்கிறோம்” என்று கூறியிருந்தால், சர்வதேச வரவேற்பும் கிடைத்திருக்காது; ஜீ.எஸ்.பி பிளஸும் கிடைத்திருக்காது; மின்சாரக் கதிரையும் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டே இருந்திருக்கும்.   

அதனால்தான், “மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றினேன்” என்பதும் “நாமே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இடமளியுங்கள்” என்பதும், முரண்பட்டக் கருத்துகள் என, ஆரம்பத்தில் கூறினோம்.  

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை இன்மையைக் காரணம் காட்டியே, மனித உரிமைப் பேரவை, மனித உரிமைப் பிரச்சினைகள் விடயத்தில், சர்வதேசப் பொறிமுறையொன்று அவசியம் எனக் கூறி வருகின்றது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரும், 2016, 2017 ஆம் ஆண்டுகளில், ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகராக இருந்த இளவரசர் ஷெய்த் ராத் அல் ஹூஸைன் வெளியிட்ட அறிக்கைகளில், இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.   

மேற்படி பிரேரணைக்கு அனுசரணை வழங்கிவிட்டு, இப்போது “எமது பிரச்சினைகளை, நாமே தீர்த்துக் கொள்ள இடமளியுங்கள்” என்கின்ற போது, நம்பிக்கையீனம் மேலும் வலுக்கின்றது.   

இதிலுள்ள முக்கியத்துவம் என்னவென்றால், மஹிந்தவின் காலத்தில், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்த சர்வதேச சமூகம், இலங்கையைத் தண்டிக்க முற்பட்ட போது, பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், “நாம் அவ்வாறு செய்ய மாட்டோம்; எம்மை நம்புங்கள்” என்று கூறியே, சில சலுகைகளைப் பெற்றது.   

ஆனால், இப்போது இந்த அரசாங்கமும், மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒன்றைக் கூறிவிட்டு, இப்போது மற்றொன்றைக் கூறுகிறது. மைத்திரி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முதன் முறையாக, மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அப்போதைய வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, “கடந்த கால வாக்குறுதி மீறல்கள், அனுபவங்கள், பின்னோக்கிச் செல்லல் போன்றவற்றால், எம்மை எடை போடாதீர்கள்” (Don’t judge us by broken promises, experiences and U-turns of the past) என்று கோரிக்கை விடுத்தார். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், அவ்வாறான நம்பிக்கை மீறல்கள் இடம் பெற்றமையே, அவ்வாறு கூறுவதற்குக் காரணமாகும்.  

2009ஆம் ஆண்டு மே மாதம், போர் முடிவடைந்து ஒரு வாரம் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முனும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.   

‘போர்க் காலத்தில் இடம்பெற்ற, மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பாக இருவரும் அதன் மூலம் உடன்பாட்டுக்குக்கு வந்தனர். அதே ஆண்டு, மனித உரிமைகள் பேரவையில், இலங்கையால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான விசேட பிரேரணையில், அந்த உத்தரவாதம் மீண்டும் வழங்கப்பட்டது.   

ஆனால், குறித்த விடயத்தில், மஹிந்த அதன் பின்னர், எதையும் செய்யாத காரணத்தால், ஐ.நா செயலாளர் நாயகம், அந்த விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க, 2010ஆம் ஆண்டு ‘தருஸ்மான் குழு’வை நியமித்தார்.  

அதை எதிர் கொள்ளவே, மஹிந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அதே ஆண்டில் நியமித்தார். அதன் பின்னர், 2011 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட அதன் அறிக்கையையும் கிடப்பில் போட்டார்.   

அதனாலேயே, 2012ஆம் ஆண்டு, மனித உரிமைப் பேரவையில், அமெரிக்கா தலைமையில் இலங்கை தொடர்பான முதலாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில், மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது.   

இந்த வரலாற்றை தான், மங்கள சமரவீர “கடந்த கால வாகுறுதி மீறல்கள், அனுபவங்கள், பின்னோக்கிச் செல்லல்” என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.   

அதன் பின்னர், இந்த அரசாங்கமும் 2015ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையொன்றின் மூலம், ஒன்றைக் கூறிவிட்டு, இப்போது “எம்மை விட்டு விடுங்கள்” என்று கூறும் போது, அதுவும் ‘வாக்குறுதி மீறல்’ அல்லது ‘பின்னோக்கிச் செல்லல்’ என்றே, மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள் கருதுவார்கள்.   

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கைக்கு, முன்னரே மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள், மைத்திரியின் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையைப் பற்றி சில சந்தேகங்களை வெளியிட்டு இருந்தனர்.   

2016ஆம் ஆண்டு, அப்போதைய மனித உரிமை உயர் ஸ்தானிகர் அல் ஹூஸைன் வெளியிட்ட வருடாந்த அறிக்கையிலும் அது காணப்பட்டது. “எம்மை நம்புங்கள்” என்று மங்கள சமரவீர கூறி, ஒரு வருடத்திலேயே இந்த நிலை ஏற்பட்டது.   

ஜனாதிபதி, “எம்மை விட்டுவிடுங்கள்” என்று கூறிய போதிலும், இலங்கை அரசாங்கம், தாம் அனுசரணை வழங்கிய பிரேரணைப்படி, சில விடயங்களைச் செய்துதான் வருகிறது.   

காணாமற்போனோருக்கான அலுவலகத்தை ஆரம்பித்தமை அதற்கு உதாரணமாகும். மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் அதுதான் நடந்தது. மஹிந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை நிராகரித்தார். ஆனால், அந்தப் பிரேரணைகளின்படி, தேசிய நடவடிக்கைத் திட்டம் (National Action Plan) போன்றவற்றைத் தயாரித்து, பேரவையில் சமர்ப்பித்தார். காணாமற்போனோருக்கான, ‘பரணகம ஆணைக்குழு’வை நியமித்தார். அதற்கு வெளிநாட்டு ஆலோசகர்களை நியமித்தார்.  

ஆனால், ஏதோ சாப்பிட மறுக்கும் குழந்தையை, சாப்பிட இழுத்துச் செல்வதைப் போல்த்தான், இலங்கையிடம் அந்த வேலைகளைச் சர்வதேச சமூகம் செய்து கொள்கிறது.   

இந்த அரசாங்கத்தின் கீழ், காணாமற்போனோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டம், மனித உரிமைகள் பேரவையில், மேற்படி 2015 ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டு, சுமார் ஒரு வருடத்தில் தான் நிறைவேற்றப்பட்டது.   

அதையடுத்து, அந்த அலுவலகத்தை நிறுவ, அதாவது அதற்கு ஆள்களை நியமிக்க, மேலும் ஒரு வருடம் சென்றது. அத்தோடு, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி ரவி விஜேகுணவர்தனவைக் கைது செய்ய இருக்கிறோம் என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்த போது, மைத்திரி தலையிட்டார். கைது நடைபெறவில்லை. இவையெல்லாம், “எம்மை நம்புங்கள்” என்று கோரிக்கை விடுக்கும் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறுகிறது.

இங்கு எழும், மற்றொரு பிரச்சினை என்னவன்றால், ஐ.நா பொதுச் சபையில் ஆற்றப்படும் உரையொன்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் மீது, தாக்கம் ஏற்படப் போகின்றதா என்பதேயாகும்.   

அவ்வாறு, தாக்கம் ஏதும் இடம்பெற்றதாக எந்தவொரு தகவலும் இல்லை. எனவே, ஜனாதிபதியின் உரையால் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  

அரசாங்கத்துக்கு இருக்கும் ஆறுதல் என்னவென்றால், மனித உரிமைகள் விடயத்தில், சர்வதேச சமூகமோ, தமிழ்த் தரப்பினரோ முன்னர் போல் பலத்த நெருக்குதலை ஏற்படுத்தாமையே ஆகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X