Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பி. ராம்மோகன் ராவ் வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை நடத்திய ‘ரெய்டு’, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ‘ஜெயலலிதாவுக்கு முன்’ என்றும் ‘ஜெயலலிதாவுக்குப் பின்’ என்றும் விவரித்துச் சொல்ல வேண்டிய கட்டத்துக்குப் போய் விட்டதோ என்ற நிலை, தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை, மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கும், தமிழகத்தில் இருந்த அ.தி.மு.க ஆட்சிக்கும் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது.
மத்திய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ‘நீட்’ நுழைவுப் பரீட்சை, உணவுப் பாதுகாப்புச் சட்டம், மின்சார வாரியத்தைச் சீரமைக்கும் ‘உதய்’ திட்டம், நில எடுப்புச் சட்டம் - இப்படி அவர் எதிர்த்த திட்டங்களைப் பட்டியலிடலாம்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், அவருக்குப் பதிலாக ‘பொறுப்பு முதலமைச்சர்’ ஓ. பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டவுடன், தமிழக அரசு அனுமதி அளித்தது. இதுவே பலரது புருவங்களை உயர்த்தியது.
இப்படியொரு சூழ்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா காலமானார். அதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்ற நிலை வரும் போது, ஏற்கெனவே செய்யப்பட்ட நடைமுறைப்படி, மாநிலத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வமே இரவோடு இரவாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
ஏற்கெனவே, அவர் ‘பொறுப்பு முதலமைச்சராக’ நியமிக்கப்பட்டு விட்டதால், இப்படியொரு அவசர பதவியேற்புத் தேவையில்லை என்று அரசியல் தலைவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தாலும், ‘மாநில அரசாங்க நிர்வாக ரீதியாக வெற்றிடம் வரக்கூடாது’ என்பதற்காகச் செய்த உடனடி ஏற்பாடாக இருக்கலாம் என்றே கருதப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வம் ‘ஆட்சிக்குத் தலைவரான’ பிறகு, கட்சிக்குத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா நடராஜன், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஆவார் என்று எங்கும் பேசப்பட்டது.
‘ஜெயலலிதா இடத்தை யார் நிரப்புவது’ என்று கேள்வி எழுந்த வேகத்திலேயே அது ‘சசிகலா நடராஜனால்தான் முடியும்’ என்ற பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் ‘மரணமடைந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த சர்ச்சைகள்’ சென்னையைத் தாக்கிய ‘வார்தா’ புயல் வேகத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசனின் மனைவியாக இருந்த கவுதமி, பிரதமர் நரேந்திரமோடிக்கே கடிதம் எழுதினார். பிறகு சில அமைப்புகளின் சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கறிஞர் தனியாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இது பற்றிய சந்தேகங்களை எழுப்பினார்.
இத்தனைக்கும் நடுவில் அ.தி.மு.கவில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவராக போயஸ் கார்டன் போனார்கள். ‘உங்களால்தான் இந்தக் கட்சியை வழி நடத்த முடியும். ஆகவே, நீங்கள் பொதுச் செயலாளராக வர வேண்டும்’ என்று சசிகலா நடராஜனைச் சந்தித்து, இரு கை கூப்பி வணங்கத் தொடங்கினார்கள். ஏன் சிலர், காலில் விழுந்தே கோரிக்கை விடுத்தார்கள்.
அ.தி.மு.கவின் பொதுக்குழு எப்போது கூடுவது? சசிகலா நடராஜனை எப்போது பொதுச் செயலாளராகத் தெரிவு செய்வது என்ற விவாதங்கள், ஆலோசனைகள் அ.தி.மு.கவுக்குள் நடைபெற்று வருகின்ற நேரத்தில்தான்,
அ.தி.மு.க ஆட்சியில் மணல் ஒப்பந்தம் எடுத்த ரெட்டி, வருமான வரித்துறை ‘ரெய்டு’க்கு உள்ளானார்.
அவரைத் தொடர்ந்து அவருக்கு உதவியாக இருந்ததாக வேறு சில மணல் ஒப்பந்ததாரர்களும் கைது செய்யப்பட்டார்கள். ‘ரெய்டு’ செய்யப்பட்ட இடங்களில் இருந்து ‘புதிய ரூபாய் நோட்டுக்கள்’ கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன. தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி ‘மணல் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் ரெய்டு’ என்று சென்ற வருமான வரித்துறையின் வேட்டை விறுவிறுப்பானது.
இது போன்ற சூழ்நிலையில்தான், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ‘வார்தா’ புயலுக்கு நிவாரணம் கோரி பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்தார். பிரதமரை, முதல்வர் சந்திப்பது வழக்கமான ஒன்று என்றாலும், டெல்லிக்குச் செல்லும் முன்பு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நேராக சென்னை ராஜ்பவனில் தங்கியிருக்கும் பொறுப்பு ஆளுநர் வித்யாகர்ராவைச் சந்தித்தார்.
இது முன்னுதாரணம் இல்லாத சந்திப்பு. இதுவரை முதல்வராக இருந்தவர்கள் யாரும் பிரதமரைச் சந்திப்பதற்குச் செல்லும் முன்பு, மாநில ஆளுநரைப் போய்ச் சந்தித்தது இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் கூடத் தங்கள் மாநிலத்தில் உள்ள ஆளுநர்களை இப்படிச் சென்று சந்தித்து விட்டு, பிரதமரைச் சந்திக்கச் செல்வதில்லை.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசமாகவும் பலருக்கு விந்தையாகவும் அமைந்தது. டெல்லி செல்லும் முன்பு, ஏன் ஆளுநரை முதலமைச்சர் போய் சந்தித்தார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்; சென்னை திரும்பினார்.
மறுநாள் அதிகாலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் வீடு, அவரது உறவினர்கள் இடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியான வருமான வரித்துறை ‘ரெய்டு’ நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், ‘மணல் ரெட்டி’யும் ‘தலைமைச் செயலாளரும்’ அ.தி.மு.கவின் செல்லப் பிள்ளைகளாகக் கடந்த ஐந்து வருடத்துக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக மறைந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் வலது கரமாக முதல்வர் அலுவலகத்திலேயே செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார் ராம் மோகன்ராவ். அப்போதெல்லாம் நடக்காத வருமான வரித்துறை ‘ரெய்டு’ திடீரென்று ஏன் இப்போது நடக்கிறது என்ற கேள்விதான் ‘ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று கருதும் அரசியல் தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
அதிலும் மாநில அரசாங்கத்தின் தலைமைப் பீடமாக செயின்ட் ஜோர்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ‘தலைமைச் செயலாளரின் அறை’ சோதனையிடப்பட்டு இருக்கிறது. அந்த அறை இருக்கும் கட்டிடத்தில்தான் அமைச்சர்கள், முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் அறைகளும் இருக்கிறன என்பது இந்த விடயத்தில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.
அதுவும் மாநில போலிஸாரின் அனுமதியின்றி, மத்திய துணை இராணுவப் படையினரே வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, இந்த ‘ரெய்டு’ நடைபெற்று இருக்கிறது.
‘மணல் ரெட்டி’யில் தொடங்கிய இந்த ‘ரெய்டு’, இப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வீடு வரை வந்திருக்கிறது. இதற்கிடையில் ‘மணல் ரெட்டி’யும் அவருக்கு உதவிய ஒப்பந்தத்தாரர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ராம்மோகன் ராவ் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, இப்போது புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்யநாதன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ‘ரெய்டு’ நடைபெற்றவுடன் ‘பா.ஜ.கவின் சதித்திட்டம்’ என்றும் ‘ஏதோ உள்நோக்கத்துடன் இந்த ‘ரெய்டு’ நடைபெற்றுள்ளது’ என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் அ.தி.மு.கவினரே கருத்து தெரிவித்தனர்.
ஆனால், ராம்மோகன் வீடு வரை வந்திருக்கும் ‘ரெய்டு’ எந்தப் பக்கமாகத் திரும்பி வீசப்போகிறது என்ற கேள்வியும் அ.தி.மு.கவில் யார் வரை இந்த ‘ரெய்டு’ போகப் போகிறது என்பதும் இனிச் சுவாரஸ்யமான அதிரடித் திருப்பங்களாக இருக்கும்.
வருமான வரித்துறையின் ‘ரெய்டு’ ‘புது நோட்டுக்கள்’ மாற்றப்பட்ட விவகாரத்துடன் நிற்குமா அல்லது அ.தி.மு.க அரசாங்கத்தின் கீழ் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்த விசாரணையாகவும் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அப்படி விசாரிக்கப்பட்டால் இப்போது இருக்கும், அமைச்சர்களில் யார் யார் மாட்டுவார்கள் என்ற பரபரப்புக்கு பஞ்சம் இன்றி சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், மணல் ஒப்பந்தத்தாரர்கள் விவகாரத்தை மேலும் தோண்டினால், முன்பு அத்துறைக்கு அமைச்சராக இருந்தவர், இதே முதலமைச்சர் பன்னீர்செல்வம்தான். இப்போது அமைச்சராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இருவரும் அ.தி.மு.க அரசியல் மையத்தில் முக்கியப் புள்ளிகளாக இருப்பவர்கள்.
தமிழகத்தில் இப்படி ‘ரெய்டு’ நடப்பது புதிதல்ல; 1991 - 96 ஆம் வருடத்தில் பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது, அ.தி.மு.கவில் சசிகலா உள்ளிட்ட அவருக்கு வேண்டியவர்கள் பலர் வீடுகளிலும் ‘ரெய்டு’ செய்யப்பட்டது.
சசிகலாவே கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அதிக இடங்களைக் கேட்டுப் பெற்று, 1996 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ‘ரெய்டு’ செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
பிறகு 2006 - 2011 இல் மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி ‘2 ஜி விவகாரத்தை’ மையப்படுத்தி தி.மு.க முன்னனிப் பிரமுகர்கள் வீடுகளில் ‘ரெய்டு’ செய்தது. குறிப்பாக, கருணாநிதியின் மகள் கனிமொழியையே கைது செய்தது. அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வாங்கி, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
ஆனால், இந்த இரு தேர்தல்களிலும் ‘ரெய்டு’ செய்த காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. அந்த வகையில், இப்போது அ.தி.மு.கவின் பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த வருமான வரித்துறை ‘ரெய்டு’கள், ‘அ.தி.மு.க என்ற கட்சிக்கு யார் தலைவர்’ என்ற பரபரப்பின் பின்னனியில் நடைபெற்றுள்ளது.
‘ரெய்டில் அரசியல் இல்லை’ என்று கருத இடமிருக்கிறது. ஆனால், ‘அரசியலுக்குள் ‘ரெய்டு’கள் இல்லை’ என்பதை நிராகரித்து விட முடியாது. ஆகவே, இன்றைய தினம் ‘ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க’ என்ற கேள்விக்குப் பதில் தேடும் போட்டியில், மத்திய அரசின் வருமான வரித்துறை ‘ரெய்டு’ என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே, அடுத்த அதிரடித் திருப்பங்களாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago