Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இலட்சுமணன்
தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாதவர்கள், தாம் நினைத்ததை எல்லாம் வரலாறாக எடுத்தியம்பி, வரலாற்றுத் திரிபுகளைச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம், அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்த தமிழர் வரலாறு, திரிபுபடுத்தப்பட்டு, மூடிமறைக்கப்பட்டு வரும் நிலை உருவாகிறது.
புறநானூற்று காலத்துப் பாரம்பரியம் எனப் பரப்புரை செய்யப்படும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும், அதற்கு முன்னரான தமிழர் தம் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உள்ளடக்கிய, இலங்கையின் சுதந்திரத்துக்கு (1948க்கு) பின்னரான வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எழுதப்பட்டாலும், அவற்றில் அஹிம்சை, போர், வீரம், வெற்றி, தோல்விகள் போன்றவை, வரலாறாகப் பதியப்படுவதற்கான ஆவணங்கள், அந்த வரலாறுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள், இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய சூழலில், தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபிதம் பற்றிய முரணான கருத்தாடல்கள், முளைவிடத் தொடங்கியுள்ளன.
இந்தத் தவறான பதிவுகள், எதிர்காலச் சந்ததிக்குத் தவறான வரலாற்றைக் கற்பித்துவிடக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில், காரணகர்த்தாவாக இருந்தவர் ஊடகவியலாளர் அமரர் டி.சிவராம் ஆவார். இவருடன், சுதந்திர மாணவர் முன்னணி, கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் போன்றவற்றின் பங்களிப்புகள் முக்கியமானவை.
இன்று, கூட்டமைப்பு சிக்கலுக்குள் இருந்தாலும், அதன் உருவாக்கம் 1998 இல் ஆரம்பித்த போதும் 2002 இல், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பொங்குதமிழ்’ நிகழ்வின் பின்னர், கொக்கட்டிச்சோலை ஒன்றுகூடல் உடன் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வரலாறுகளை அறிந்தவர்களும், கூட்டமைப்பின் உருவாக்கத்தில் உழைத்தவர்களும் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்பவர்கள் மறந்துவிடக்கூடாது.
இந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை உடையவர்கள், கட்சியில் இருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் சூழல்கள் இன்று உருவாகின்றன. இந்தச் சூழலுக்குப் பிரதான காரணம், தமிழரசுக் கட்சி ஆகும்.
புலிகளின் ஆயுதப் போராட்டம், மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழரசுக் கட்சி, தன்னைப் பலப்படுத்துவதிலும் ஏனைய கட்சிகளை அரசியல் ரீதியாக ஓரங்கட்டும் தந்திரோபாயத்திலுமே, அதீத கவனம் செலுத்தி வந்திருந்தமையை, அதன் நடவடிக்கைகளை உற்றுக் கவனிப்பவர் உணர்ந்திருப்பர்.
இதன் காரணமாகத்தான், தன்னைத் தாய்க் கட்சியாகச் சுவிகரித்துக்கொண்டு, கிடப்பில் கிடந்த வீட்டுச் சின்னத்தை, புலிகள் பயன்படுத்த அங்கிகரித்ததால், சின்னத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.
உண்மையில், இன்று தமிழரசுக் கட்சியில் இருப்பவர்கள், ஆரம்பகால உறுப்பினரான கிழக்கில் துரைராஜசிங்கம், வடக்கில் மாவை சேனாதிராஜா போன்றவர்களாவர். ஏனையவர்கள், உதயசூரியன் இல் இருந்தே, தமிழரசுக் கட்சிக்குத் தாவியவர்கள் ஆவர். அதேபோல, பிற்காலத்தில் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து, மற்றைய கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி, வெற்றியின் பின், தமிழரசுக் கட்சியில் இணைந்தவர்கள் வடக்கிலும் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
உண்மையில், தமிழரை ஒன்றுபடுத்துவதற்காகத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்திருந்தால், கூட்டமைப்புக்கு உரிய யாப்பு, பொதுச் சின்னம், அதிகாரப்பகிர்வு முதலானவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
கூட்டமைப்பைப் பதிவு செய்யுங்கள் என்றும் கூட்டமைப்பின் ஒற்றுமை குறித்தும் தமிழர் ஓரணியில் நிற்க வேண்டும் எனவும் கருத்துகளை முன்வைப்பவர்களும், அறிக்கை வாதம் செய்பவர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தம்மைத் தயார்படுத்தும் காய்நகர்த்தல்களாகக் கொள்ளப்பட வேண்டும்.
ஏனெனில், தமிழரசுக் கட்சி, தமது பிரதான வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, தனது பிரதிநிதித்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உறுதிசெய்யும். தேர்தலில் வாக்குகள் சிதறாமல், வெற்றியை உறுதிப்படுத்தி, வாக்குகளைச் சேகரித்துக் கொடுப்பதற்கான முயற்சிகளாகவே இது இருக்கும். இதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், ஜனநாயகத் தன்மையற்ற செயற்பாட்டுக்கு முதலாவது உதாரணம் எனலாம்.
இன்றைய சூழலில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்கள் கிடைப்பது உறுதி. இதில், அம்பாறை, திருகோணமலை ஒவ்வொன்றும் மட்டகளப்பில் இரண்டு ஆசனங்களும் கிடைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு.
மட்டக்களப்பைப் பொறுத்தவரையில், முஸ்லிம் கட்சிகளுக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கும். இதுவரை, கூட்டமைப்பு வைத்திருந்த மூன்றாவது ஆசனத்தைக் கைப்பற்ற, தமிழர்களின் மாற்று கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விகிதாசார ரீதியில் போராட வேண்டிய, ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில், உரிமை அரசியலா, சலுகை அரசியலா என்ற அடிப்படையில், உரிமை பேசி, உயிர் விட்டு, உடைமை இழந்து, தியாகங்கள் செய்து, கிடைத்தது ஒன்றுமில்லை.
ஆயினும், தமிழ் அரசியல் கட்சிகளும் தலைமைகளும், தமிழர்களது அபிலாசைகள் எனக் கூறி, கடந்த 70 ஆண்டுகளாகத் தனி நாடு, சமஷ்டி, வடக்கு - கிழக்கு இணைப்பு, என எல்லாத் தேர்தல்களிலும் பங்கு கொண்டும் பகிஷ்கரித்தும் அனைத்துக்கும் காலம் வரும் எனத் தீர்வுகளை மறுத்தும், பின்னர் ஏற்றும், ஒரு நிலையான பாதையில் பயணிக்காமல் காலம் கடத்தி விட்டன.
தமிழரது அரசியல் தியாகங்களில், தமிழ் அரசியல் தலைவர்கள் குளிர்காய்ந்தார்கள். “கூட்டமைப்பு, தமிழர்களின் உரிமைக்காகத் தானே ஆதரவு அளித்திருக்கிறது; நாம் அதற்காகத்தான் போராடுகிறோம்” என்று கூறித் தங்கள் நாடாளுமன்றச் சலுகைகளையும் பதவிகளையும் சந்தோசமாக அனுபவித்து விடுவார்கள். ஆகவே, இம்முறையும் பாவம் தமிழ் மக்கள் தான்.
தர முடியாத, கொடுக்கக் கூடாத உரிமை என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே அபிவிருத்தியைப் பெற்றுக்கொண்டு, இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதா, தமிழ் உரிமை அரசியலைத் தொடர்ந்து துன்பத்தை அனுபவிப்பதா என்பதைத் தமிழ்மக்கள் தீர்மானிப்பதற்கான ஒரு மூலோபாயக் கருத்தே ஜனாதிபதியின் கருத்தாகும்.
உண்மையில், தமிழ் மக்கள் இந்த உணர்ச்சி அரசியலில் அள்ளுண்டு வாக்களிப்பதே மிச்சம். உரிமையா, சலுகையா என்ற மேடைப் பேச்சுக்கள், தேர்தல் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்கு வழமைபோல், உரிமையும் இல்லை, சலுகையும் இல்லை; இதுவே, தமிழ்த் தேசிய அரசியலில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத உணர்ச்சி அரசியல் காணப்பட்டது. இந்த உணர்ச்சி அரசியலுக்கு, ஆப்பு அடிக்கும் ஒரு வெடிகுண்டே, ஜனாதிபதியின் வெளிப்படையான கருத்தாகும்.
எனவே, கூட்டமைப்பு மீண்டும் கிடைக்காத, தரமுடியாத ஒன்றை உரிமையா, சலுகையா என எவ்வாறு போராட முடியும். “எமக்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதிகாரப்பகிர்வு தான் வேண்டும்” என்று, தேர்தலில், கூட்டமைப்பின் கோரிக்கை பின் நகர்ந்தால், சகோதர இனத்துக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் போலும், இவற்றின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் தந்திரோபாயமாக இது அமைந்துள்ளது.
ஏனெனில், தேசிய ரீதியில் இனவாதக் கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை, அவர்களது இனவாத அரசியல் கருத்தாடல்களில் இருந்து புறந்தள்ளுவதற்கான ஒரு முன் முயற்சியாகவும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது எனலாம்.
இந்தவகையில், ஜனாதிபதியின் சாதகமான அரசியலுக்குத் தமிழ் மக்களை அழைத்துள்ளமை மூலம், தமிழ் மக்கள் இப்பொறிக்குள் சிக்கினால், நிச்சயம் தீர்வு வழங்கப்படாது.
ஜெனீவா பிரகடனத்தில், பொதுமக்கள் தீர்வு கேட்கலாம் எனக்கூறி, ஆப்பும் வைக்கப்படும். எனவே, இத்தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள், நின்று நிதானித்துத் தங்கள் வேலைத்திட்டத்தைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லையெனில், தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காகத் தமிழ் மக்களை, உணர்ச்சி அரசியலில் மோதவிட்டு, நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago