2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தலைவர்கள் எதற்கு?

கே. சஞ்சயன்   / 2020 ஜனவரி 24 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார்.  

தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை.  

2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. 

இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்காமல், விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.  

வெறும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ‘லேபிளை’ வைத்துக் கொண்டு, அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி விடலாம் என்று, அவர் கருதுகின்றார் போல் தோன்றுகின்றது.   
ஆனால், அவரது கணிப்புக்கு மாறாக,  தமிழரசுக் கட்சி மறுபிறப்புப்  பெற்றதுடன், கூட்டமைப்பின் முதன்மையான பங்காளிக் கட்சியாகவும் மாறியது.  

அரசியல் ரீதியாக, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டு விட்ட நிலையிலும் கூட, எதிர்வரும் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகிய தேர்தல்களில், தமது தலைமையில், புதியதொரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் கனவில் ஆனந்தசங்கரி இருக்கிறார்.  

சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தவிர, மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியிருக்கிறார்.  

தேர்தல் அரசியலை, யாரும் கணிக்க முடியாது. அதில், ஆனந்தசங்கரி வெற்றி பெறுகிறாரா என்பதைப் பற்றி, இந்த இடத்தில் ஆராய வேண்டியதில்லை.  

ஆனால், அவர் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வெளியிட்ட ஒரு கருத்து, இந்த இடத்தில் கவனத்தை ஈர்க்கின்றது.  

சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் ஆட்சிமுறையை ஒத்த தீர்வு குறித்தும் அவர், அங்கு கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.  

ஆனந்தசங்கரி எப்போதுமே, சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தவர். அதற்கு எதிராகவே, கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறார்.  

தமிழ்க் காங்கிரஸ் மூலம், ஆனந்தசங்கரி அரசியலுக்குள் வந்திருந்தார்.  தமிழ்க் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த, ‘பெடரல்’ கட்சியை (தமிழரசுக் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்ட) விரோதமாகவே கருதி, அரசியலை முன்னெடுத்தவர் என்பதாலோ, அவருக்கு சமஷ்டி மீது, அவ்வளவு காழ்ப்புணர்வு இருக்கிறது.  

சமஷ்டித் தீர்வு சாத்தியமில்லை என்பது, அவரது நிலைப்பாடாக இருந்தாலும், “சமஷ்டி சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்; இந்திய முறைமையை கேட்குமாறும் அவர் கூறினார். அதன்படியே தான், இந்திய முறைமையைக் கேட்கிறேன். அதைக் கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்றொரு கருத்தை, வெளியிட்டிருக்கிறார் ஆனந்தசங்கரி.  

அவரது இந்தக் கருத்துக்குள், பல விடயங்கள் ஒளிந்திருக்கின்றன. தன்னை ஒரு மூத்த, பழுத்த, தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் அரசியல் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளும் ஆனந்தசங்கரியின் ஆளுமையை, இந்தக் கருத்துகள் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன.  இந்திய முறைமையை ஒத்த அரசியல் தீர்வை, அவர் வலியுறுத்துபவர் என்பது தெரிந்த விடயம் தான். அவரது அரசியல் கணிப்புக்கு, அது பொருத்தமானது என்றால், அதை அவர் வலியுறுத்துவதும் தவறில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து; தனிப்பட்ட விடயம்.  

ஆனால், அவர் இந்திய முறைமையைக் கேட்கவும், சமஷ்டியைச் சாத்தியமற்றது என்று ஒதுக்கவும், ஒரு காரணத்தை முன்வைத்திருப்பது தான், இங்கு வேடிக்கையானதாக உள்ளது.  
மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசைனைப்படியே, சமஷ்டியை விட்டு விட்டு, இந்திய முறைமையைக் கேட்பதாக அவர் கூறியிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைப்படி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கேட்கின்ற நிலையில், ஒரு தமிழ்த் தலைவர் இருக்கிறார் என்பது, பெருமைக்குரிய விடயம் அல்ல.  

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு, பொருத்தமான தீர்வு என்ன, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு என்ன, என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது, தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு ஆகும்.  

அந்த தீர்வு, அவரவரின் கொள்கை, சிந்தனைக்கு ஏற்ப மாறுபடலாம்; வேறுபட்டதாகவும் இருக்கலாம். சமஷ்யாகவோ, அரை சமஷ்டியாகவோ ஏன், ஒற்றையாட்சியாகவோ கூட இருக்கலாம். அது பிரச்சினையில்லை.  

அந்தத் தீர்வு தான் சரியென்பது, தமிழ்த் தலைவர்களின் சொந்த நிலைப்பாடாக இருக்க வேண்டும்.  

தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வு என்று, இன்னொருவர் சொல்லிக் கொடுப்பதை, ஏற்று நடப்பதற்கு, இது ஒன்றும், பாடசாலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்ற விடயம் போல அல்ல.  

தமிழ் மக்களுக்கு, சமஷ்டித் தீர்வு வழங்க முடியாது; இந்திய முறைமையை வழங்கலாம் அல்லது அதனைப் பரிசீலிக்கலாம் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு சிங்களத் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ அவ்வாறு கூறலாம்.  

ஆனால், தமிழ் மக்களின் நிலையில் இருந்து அவர், சமஷ்டி சரிப்பட்டு வராது; இந்திய முறைமை தான் சரிவரும் என்று கூறமுடியாது.  

அவர் கூறியபடி, தமிழ்த் தலைவர்கள் தமது கொள்கையை, நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதென்றால், தமிழ் மக்களுக்குத் தனியான தலைவர்கள் தேவையில்லை. அந்த வேலையையும் மஹிந்த ராஜபக்‌ஷவோ, இன்னொரு சிங்களத் தலைவரோ பார்த்து விட்டுப் போகலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ கூறியபடி, சமஷ்டியைக் கைவிட்டு விட்டு, இந்திய முறைமையைக் கோரியதாகக் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் இருப்பது, உண்மையில் வெட்கக்கேடானது.  

இன்னொரு பக்கத்தில், தான் முன்மொழிந்த இந்திய முறைமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனந்தசங்கரி ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.  

இந்திய முறைமை என்பது, 13 ஆவது திருத்தச்சட்டம் அல்ல. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு மாகாண சபை முறைமை தான்.  

ஆனால், மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள், இந்தியாவில் மாநகராட்சிகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் தான். இதனை, இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும் இலங்கை விவகாரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவருமான கேணல் ஹரிகரன் கூறியிருக்கிறார்.  

13 ஆவது திருத்தச்சட்டம், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய ஊடகங்களிடம், “அது சாத்தியமில்லை” என்று பதிலளித்திருந்தார்.  

13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதற்குக் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தயாராக இல்லை.  

ஆனால், இந்திய அதிகாரப் பகிர்வு முறைமையில், பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், குறிப்பிடத்தக்க நிதி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 

அவ்வாறானதொரு தீர்வை வழங்க, கோட்டாபய ராஜபக்‌ஷ எங்கே, எப்போது இணங்கினார் என்று தெரியவில்லை.  

13 ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே ஏற்கத் தயாராக இல்லாத ஓர் அரசாங்கத்திடம் இருந்து, இந்திய முறைமை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட நினைப்பது, தமிழ் மக்களிடம் இருந்து, சமஷ்டித் தீர்வு மீதான நம்பிக்கையை, இழக்கச் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது.  

விடுதலைப் புலிகளின் காலத்தில், ரணில் அரசாங்கம் உள்ளக சமஷ்டி குறித்துப் பேச இணங்கியது. ஆனால் அந்தப் பேச்சுகள் நடக்கவில்லை.  விடுதலைப் புலிகளின் சார்பில், பேச்சுகளை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், லண்டனில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, “சிங்கள அரசாங்கம், ஒருபோதும், சமஷ்டியை வழங்காது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.  

புலிகளின் காலத்திலேயே சமஷ்டியை வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம், தற்போது, அதற்கு நெருக்கமாக உள்ள எந்தத் தீர்வுக்கும் இசைந்து வரும் என்பது சந்தேகம் தான்.  தமிழ் மக்கள், சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் தான், அதற்கு குறைவானதொரு தீர்வையாவது பரிசீலிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.  

இந்திய முறைமையைக் கேட்டால், அதற்குக் கீழான ஒன்றைத் தான் அரசாங்கம் பரிசீலிக்க முன்வரும். இது யாருக்கும் தெரியாத இராஜதந்திரம் அல்ல.  

கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய முறைமையையே 13 ஆவது திருத்தச்சட்டத்தையோ கூட முழுமையாக நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டில் இல்லை என்ற நிலையில், எதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறான ஒரு நம்பிக்கையைக் கொடுக்க முனைந்திருக்கிறார்?  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பது அவரது கனவு. அதற்காக அவர், எதையெதையோ கூற முனைகிறார்.  

அதற்காக அவர், தமிழ் மக்களின் இலட்சியம், கொள்கைகள், அபிலாசைகள் போன்றவற்றைத் தோற்கடிக்கவோ, விலை பேசவோ கூடாது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X