Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 'சுதேசியம்' என்று முகமூடிக்குள்ளாக ஆதிக்கம் பெறத்தொடங்கிய சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்தகட்ட நிலையை, 1960ஆம் ஆண்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்நாட்டின் தமிழர்கள் மட்டுமல்ல, சிறுபான்மை இனத்தவர்களும், சிறுபான்மை மதத்தவர்களும் கடும்சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதொரு சூழ்நிலையை எதிர்கொண்டனர். இதன் முதல்கட்ட சமிக்ஞைகள் 1960இன் இறுதிப் பகுதியிலேயே வெளிவரத்தொடங்கின.
1960 நவம்பர் 8ஆம் திகதி, பிரதமர் ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்துக்கும், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 'அலரி மாளிகையில்' இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், அதன் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம், என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், மசூர் மொளலானா மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், அரசாங்கம் சார்பில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீமாவின் உறவினரும், நிதி அமைச்சருமான ‡பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, நீதி அமைச்சர் செனட்டர் சாம் பீ.ஸி.‡பெர்ணான்டோ, வர்த்தக, உணவு மற்றும் மீன்பிடி அமைச்சர் ரீ.பி.இலங்கறட்ண, அவைத் தலைவரும் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான சி.பி.டி சில்வா, கல்வி மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பதியுதீன் முஹம்மத், அமைச்சர் பி.பி.ஜி.களுகல்ல மற்றும் டொக்டர் சீவலி ரத்வத்தை ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், இதற்கு முன்னர் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாம் முன்னிறுத்திய முக்கிய கோரிக்கைகளைத் தமிழரசுக் கட்சி மீண்டும் வலியுறுத்தியது. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துதல்;, பிராந்திய சபைகளை ஸ்தாபித்தல், தமிழ்மொழியை சிறுபான்மையினரின் மொழியாகவும், வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும் அங்கிகரித்தல், அத்துடன் ஏனைய மாகாணங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ்மொழியில் கருமங்களையாற்றத்தக்க ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தினர். அத்தோடு, குறிப்பாக அரச சேவையில் தமிழ் மக்கள் இணைவதற்கு பாரிய முட்டுக்கட்டையைத் 'தனிச் சிங்கள' சட்டம் ஏற்படுத்தியுள்ளமையையும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசப்பட்டது.
இந்தப் பிரச்சினையில் புதிய ஆட்சேர்ப்பு மற்றும் ஏலவே சேவையிலுள்ளவர்கள் என்ற இருதரப்பு இருந்தது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கு முன்பாக சேவையில் இணைந்திருந்த தமிழ் பேசும் மக்களுக்கு 'தனிச் சிங்கள' சட்டத்தின் விளைவாக சேவையில் தொடரமுடியாத நிலையிருந்தது. அதாவது சிங்கள மொழியறிவில்லாத, சிங்கள மொழியில் கருமமாற்ற முடியாதவர்கள் பணியினை இழக்கும் சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. இவர்களை ஆங்கில மொழிமூலத்தில் பணியாற்றவிடுதல் அல்லது சகல பலாபலன்களுடன் அவர்களை ஓய்வு பெறச் செய்தல் என்ற முன்மொழிவை தமிழரசுக் கட்சி முன்வைத்தது.
அவர்களை சிங்களமொழிமூலம் வேலைசெய்ய வற்புறுத்துதல், அது இயலாத பட்சத்தில் அவர்களுக்குரிய பலாபலன்களேதுமின்றி அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்தல் என்பது அநீதியானது என தமிழரசுக் கட்சி கூறியது. மேலும் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பின்பான ஆட்சேர்ப்பின் போது சிங்களம் அறியாமையைக் காரணம் காட்டி தமிழர்களை ஆட்சேர்ப்பிலிருந்து விலக்கக்கூடாதெனவும், ஆட்சேர்ப்பின் பின் அவர்களுக்கு சிங்களம் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்மென்றும், அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கு 'தனிச் சிங்கள' சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி கோரியது.
தமிழரசுக் கட்சி இந்தப் பேச்சுவார்த்தைகளில் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளையே முன்வைத்தது. அவர்கள் தனிநாடு கோரவில்லை, சமஷ்டி அரசொன்றைக் கோரவில்லை, அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை, 'தனிச் சிங்கள' சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருப்பினும், அவர்கள் அதனைக் கோரவில்லை. மாறாக தமிழ் மொழிக்கு சிறுபான்மையினர் மொழி என்ற குறைந்தபட்ச அந்தஸ்தையேனும் தருமாறும், தமிழ் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை தமிழ் மொழியில் செய்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்பொன்றையேனும் தரும் தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதன்படி வடக்கு-கிழக்கில் மட்டுமேனும் நிர்வாக மொழியாக தமிழை மாற்றுமாறும் ஆகக் குறைந்தபட்ச நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்தனர்.
இந்த வரலாற்றறை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். தமிழ் மக்கள் தனிவழி அரசியலை மேற்கொள்ளும் முடிவை இரவோடிரவாக அல்லது அடாவடியாக எடுக்கவில்லை. சமரசமும், அஹிம்சை வழிப் போராட்டமுமே தமிழ்த் தலைவர்களின் வழிமுறையாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தனது கணவரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கனவினை நனவாக்குவேன் என சபதமிட்டு ஆட்சிப்படியேறிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு, அவரது கணவன் நிறைவேற்றிய 'தனிச் சிங்கள' சட்டத்தை அமுல்படுத்த விளைந்தார். ஆனால், அதே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அதன்பின் நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. 1960 நவம்பர் 23ஆம் திகதி மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இருதரப்பும் இணங்கக்கூடிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நிறைய சமரசங்களைச் செய்ய தமிழ்த் தரப்பு தயாராகவே இருந்தது. ஆனால் 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதையே அரசாங்கம் விரும்பியது.
இந்நிலையில் நீதி அமைச்சரான செனட்டர் சாம் பீ.ஸி. ‡பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நீதிமன்றங்களின் மொழிச் சட்டமூலம் தமிழரசுக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் மொழியாக சிங்களமொழியை அமுல்படுத்தும் அதிகாரத்தை நீதியமைச்சருக்கு குறித்த சட்ட வழங்கவிருந்தது. நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடக்கு-கிழக்கில் தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற திருத்தத்தை இலங்கை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
இணக்கப்பாடொன்று எட்டப்படுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் போது, இந்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்ததை முதுகில் குத்தும் செயற்பாடாகவே தமிழ்த் தலைவர்கள் பார்த்தனர். தமிழ் மக்கள் நீதியைப் பெறுவதற்குக் கூட சிங்கள மொழி தேவைப்படும் நிலையை இந்தச் சட்டம் உருவாக்கிவிடக்கூடும். இது, இலங்கையிலுள்ள சிங்கள மொழி பேசாத சிறுபான்மையினங்கள் யாவற்றுக்கும் எதிரான அநீதி என்பதுதான் உண்மை. இலங்கை தமிழரசுக் கட்சி வேறுவழியின்றி இதற்கெதிராக தமது வலுவான எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியப்பாட்டிலிருந்தது. அரசாங்கத்தோடு நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், 1961 ஜனவரி 1ஆம் திகதி 'தனிச் சிங்கள' சட்டம் முழுமையாக அமுலுக்குவரும் என அரசாங்கம் அறிவித்தது. இது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. 1960 டிசெம்பர் 18ஆம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழான, முதலாவது வேலை நாளான 1961 ஜனவரி 2ஆம் திகதி அன்று ஹர்த்தால் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்தனர். அவ்வண்ணமே மக்களிடம் வேண்டினர்.
இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம் தனது அறிக்கையில் 'இது இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இன்னொரு வஞ்சனையாகும். 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அன்றைய பிரதமரால், இது சிங்களமல்லாத மொழியில் அரசசேவையில் ஏலவே ஈடுபட்டுள்ளோரைப் பாதிக்காதவாறே அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியளித்திருந்தார்.
இதனை நாம் இன்றைய அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டியிருந்தோம். மறைந்த முன்னாள் பிரதமரின் கனவினை நிறைவேற்றுவதாகச் சொல்லும் இந்த அரசாங்கம் முன்னாள் பிரதமரின் உறுதிமொழிகளை மறந்துவிட்டது' எனக்குறிப்பிட்டார். ஹர்த்தால் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியது.
இதனைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கையில் ஈடுபடுத் தீர்மானித்தது. வடக்கு-கிழக்கில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழ் சிங்களமொழியில் இயங்கும் அரச அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துதல் மற்றும் 'தனிச் சிங்கள' அமுலாக்கத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்துதல் எனத் தீர்மானித்தது. அஹிம்சை வழி ஆர்ப்பாட்டங்கள், ஒத்துழையாமைப் போராட்டம் என்பவையெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியினால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருந்த உத்திகளாகும்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் அஹிம்சை வழியில் போராடி பிரித்தானியர்களிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இதையொத்த அஹிம்சை வழி உத்தியே இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றத் தரக்கூடிய சிறந்த வழியென்று சா.ஜே.வே.செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியினரும் நினைத்தனர்.
இந்நிலையில், இன்னொரு முக்கிய பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத்தொடங்கியது. குறிப்பாக ஒரு சில பௌத்த அமைப்புக்கள் இதனை முன்வைத்தன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அன்றைய பாடசாலைகளின் நிலையைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான பாடசாலைகள் கிறிஸ்தவ மிஷனரிகளினால் நடாத்தப்படுபவையாக இருந்தமையே ஆகும்.
கிழக்கில் தேசங்களைப் பிடிக்க வந்த ஐரோப்பியர், தம்முடன் ஆயுதம் தாங்கிய போர்வீரர்களை மட்டுமன்றி பைபிள் தாங்கிய பாதிரியார்களையும் அழைத்து வந்தனர். ஒரு நாட்டைக் கைப்பற்ற ஆயுதங்களும், போர் வீரர்களும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு கைப்பறிய ஆட்சியைத் தக்கவைக்க மக்களாதரவு முக்கியம், அதனை ஏற்படுத்துவதற்கு மதம் என்பது மிகமுக்கியமானதொரு கருவி என்ற அரசியல் சூட்சுமத்தை அவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள்.
இலங்கை வரலாற்றில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்ததாக இருப்பினும் மேலைத்தேய கல்வி முறையின் அறிமுகம், மேலைத்தேய வைத்திய வசதிகள் என அவர்களூடாக பெற்ற நன்மைகளும் அதிகம். மேலும் சுதேசிய மொழிகளுக்கு அவர்கள் செய்த சேவைகளும் அதிகம். ஆனால், ஆங்கில வழிக் கல்வியினூடாக மதமாற்றம் நடப்பதைச் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து பௌத்தர்களும், இந்துக்களும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள்.
அநகாரிக தர்மபால, ஆறுமுகநாவலர் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் விளைவாக மிஷனரிப் பாடசாலைகளுக்கு நிகராக ஆங்கிலக் கல்வியை வழங்கத்தக்க பௌத்த மற்றும் இந்துப் பாடசாலைகள் உருவாயின. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தப் பாடசாலைகள் அனைத்தும் அதனால் பயன்பெற்றன.
இலங்கையில் பாடசாலைகள் என்பவை வெறும் கல்விக்கூடங்களாக மட்டுமின்றி அவை ஒரு கௌரவத்தின் சின்னமாகவும் மாறியிருந்தன. ஒருவர் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றார் என்பது முக்கியத்துவமிக்கதொன்றாக பார்க்கப்படும் கலாசாரம் இலங்கையில் இன்றுவரை தொடர்வதைக் காணலாம்.
ஒருவர் கல்வி கற்ற பாடசாலையானது, அவரது சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் கருவியாக இருத்தல் என்பது பிரித்தானியாவின் பிரபுத்துவ பண்புகளிலிருந்து எமது நாட்டுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை பாடசாலைகள் என்பது வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல அது ஓர் அடையாளச் சின்னமும் கூட என்பதே நிதர்சனம்.
ஆகவே பாடசாலைகளைத் தேசிய மயமாக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் திட்டம் பலதரப்பட்ட சிக்கல்களை, பல மட்டத்திலும் ஏற்படுத்தியது. குறிப்பாக கத்தோலிக்கர்களின் கடும் எதிர்ப்பை ஸ்ரீமாவோ அரசாங்கம் எதிர்கொண்டது.
(அடுத்தவாரம் தொடரும்... )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago