2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எல்லோரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதனோடு தொடர்புடைய இரண்டு முக்கிய செய்திகள் வெளியாகின. கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அக்கட்சியின் பொதுச் செய்லாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணையகத்திடம் அறிவித்திருந்தார். அது தான் அவற்றில் முதற்செய்தி.

தாமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அக்கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கூறியதாக, அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மற்றொரு  செய்தி மூலம் தெரியவந்தது.

இந்த இரண்டு செய்திகளும் அதுவரை நாட்டு மக்களிடையே ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் இருந்து வந்த சில அபிப்பிராயங்கள், எதிர்வு கூறல்களில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டன. ஸ்ரீ ல.சு.க போட்யிடப் போவதாக வந்த செய்தியோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, சற்று அதிர்ச்சியடைந்தது. அதேபோல் ரணில் போட்டியிடப் போவதாக வெளிவந்த செய்தியோடு ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கெனவே பொதுஜன முன்னணியின் வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி” என்ற புதிய கூட்டணியின் சார்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். 

அத்தோடு, ஐ.தே.கவின் உத்தியோகபூர்வமான முடிவொன்றும் இல்லாமலே தாமே அக்கட்சியின் வேட்பாளர் எனக் கூறி, சஜித் பிரேமதாஸ நாட்டில் பல பாகங்களில், பெரும் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டங்களில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். அவருக்கு எதிரானவர்கள் ஐ.தே.கவில் இருக்கிறார்களா என்று கேட்குமளவுக்கு அக்கட்சியின் அடி மட்டத்தினர் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருவதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் கோட்டாபயவும் அநுர குமாரவும், சஜித்தும் தேர்தலில் களமிறங்குவார்கள் என்றே பலர் நினைத்திருந்தனர். தேர்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடலாம் என, அப்போது பலர் ஊகங்களை தெரிவித்திருந்தனர். (இருபது பேருக்கும் மேல் போட்டியிடலாம் என இப்போது தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது) எத்தனைப் பேர் போட்டியிட்டாலும், இந்த மூவருக்கிடையிலேயே பிரதானமாக வாக்குகள் பிரிந்து செல்லும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. 

எதிர்வரும் தேர்தல்களில், கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பாக, பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிலையிலேயே, பொதுஜன முன்னணி கோட்டாவை தமது கட்சி வேட்பாளராக அறிவித்தது. அதனால் மனமுடைந்த ஸ்ரீ ல.சு.கவின் ஆதரவு எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

ஸ்ரீ ல.சு.க தமது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என பொதுஜன முன்னணி கருதுகிறது. அதேவேளை ஸ்ரீ ல.சு.கவைப் புறக்கணித்து முடிவுகளையும் எடுக்கிறது. தம்மால் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒரு புறமிருக்க, வெட்கமில்லாமல் வீதியில் இறங்கிப் போகக்கூடிய அளவில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்று ஸ்ரீ ல.சு.க பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. 

எனவே, பொதுஜன முன்னணியை ஆதரித்து, தமது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர, ஸ்ரீ ல.சு.கவுக்கு வேறு வழியில்லை என்றே தெரியவிருந்தது. 

ஆனால், தாம் பொதுஜன முன்னணியிடம் மண்டியிடவில்லை என்று காட்டிக்கொள்ள ஸ்ரீ ல.சு.க விரும்புகிறது. பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னத்திலன்றி, வெற்றிலை போன்ற மற்றொரு சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வாதடிக் கொண்டிருந்தார். ஏதாவது ஒன்றைக் கேட்டு வென்று, அதன் பின்னர் பொதுஜன முன்னணியுடன் இணைவதற்காகவே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார் என்பது தெளிவாகிறது. அந்தக் கோரிக்கையால் ஸ்ரீ ல.சு.க அடையப் போகும் எந்த நன்மையும் இல்லை.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு விதமாகச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவர் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. அக்கட்சி, கோட்டாவைப் போட்டியில் நிறுத்த முடிவு செய்துவிட்டது. எனவே, கோட்டாவோ மற்றொருவரோ பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை ஜனாதிபதி விரும்பவில்லைப் போலும். அதேவேளை, ஐ.தே.க சார்பில் ரணில் போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவதையும் ஜனாதிபதி விரும்ப மாட்டார். 

ஆனால், வேட்பாளராகக் களமிறுங்கும் சஜித்தின் திட்டம் வெற்றி பெறும் போல் தான் கடந்த வாரம் நிலைமை இருந்தது. அவர் வெற்றி பெறுவதை சிலவேளை, மைத்திரி விரும்பலாம். கடந்த ஒக்டோபர் மாதம் முதல், பிரதமராகப் பதவி ஏற்குமாறு, ஜனாதிபதி தம்மை அறுபது முறைக்கு மேல் கேட்டுள்ளதாக, சஜித் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். அந்த அளவுக்கு இருவருக்கிடையே புரிந்துணர்வு இருக்கிறது. எனவே, சஜித்தே ஐ.தே.கவின் வேட்பாளராக இருப்பார் என நினைத்த ஜனாதிபதி, கோட்டாவின் பக்கம் போகக்கூடிய ஸ்ரீ ல.சு.க வாக்குகளைத் தடுத்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக தமது கட்சியும் தேர்தலில் குதிக்கும் என அறிவித்திருக்கலாம்.

இதனையிட்டு, பொதுஜன முன்னணி அவரை குறைகூற முடியாது. ஏனெனில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே, பொதுஜன முன்னணி தமது வேட்பாளரை அறிவித்தது. அவ்வாறாயின், அதேபோல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ ல.சு.கவும் தமது வேட்பாளரை அறிவிக்க முடியும்.

ஸ்ரீ ல.சு.க ஆதரவு இல்லாமல் தனித்து போட்யிட்டு, பொதுஜன முன்னணியால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி, பல அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 340 உள்ளூராட்சி மன்றங்களில் 230 மன்றங்களைக் கைப்பற்றி, முதலாம் இடத்துக்கு அம்முன்னணி வந்தது. 

நாடு முழுவதிலுமிருந்து, மொத்தம் 49 இலட்சம் வாக்குகளையும் பெற்றது. ஆனால், அதன் மூலம் பொதுஜன முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் எனக் கூற முடியுமா என்ற கேள்வி இப்போது எழுப்பப்பட்டு வருகிறது. 

ஜனாதிபதித் தேர்தலின் போது, முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியைப் போல் கருதப்படும். எனவே, நாட்டின் மொத்த வாக்காளர்களில் 50 சதவீதமானவர்களின் ஆதரவைப் பெறுபவரே, தேர்தலில் வெற்றி பெறுவார். இம்முறை சுமார் 10.3 மில்லியன் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிகக் தகுதி பெறுவர் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதாவது 65 இலட்சம் வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார். அதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பெற்ற வாக்குகளை விட, சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றாலே பொதுஜன முன்னணி வெற்றி பெற முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ ல.சு.க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே, பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ ல.சு.கவின் ஆதரவு கிடைத்தால், அக்கட்சி இலகுவாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவேதான், சஜித்தை வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க வேட்பாளர் ஒருவரை நிறுத்த நினைத்தாரோ என்று பலர் கருதுகின்றனர். 

சஜித் வெற்றி பெறுவதை விட, கோட்டா வெற்றி பெறுவதை ரணில் விரும்பலாம். ஏனெனில், சஜித் வெற்றி பெற்றால், அத்தோடு ரணிலின் அரசியல் முடிந்துவிடலாம். மறுபுறத்தில் ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே ஒருவித புரிந்துணர்வு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த, முதலாவதாக ரணிலையே அலரி மாளிகைக்கு அழைத்து, தமது பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடினார். அதன் பின்னரே, அலரி மாளிகையை விட்டு அவர் வெளியேறினார். 

எனவே, தாம் வெற்றி பெறுவதை விட, குறிப்பிட்ட சிலரை வீழ்த்தவதே சிலரது நோக்கமாகத் தெரிகிறது. 

ஜனாதிபதித் தேர்தலில் விருப்ப வாக்களிக்கும் முறை

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீத்துக்கு மேல் பெறமாட்டார் என்றதொரு கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. இந்தக் கருத்திலுள்ள முக்கியத்துவம் என்வென்றால், ஏனைய தேர்தல்களில் போலன்றி, ஜனாதிபதித் தேர்தலில், ஒரு வேட்பாளர் முதலாவது கணக்கெடுப்பிலேயே வெற்றி பெறுவதற்காகச் செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கு மேல் ஒரு வாக்கையேனும் பெற வேண்டும் என்பதாகும். 

அவ்வாறு பெறாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் மூலம் வெற்றி பெறுபவர் நிர்ணயிக்கப்படுவார். இதற்கு முன்னர் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் வெற்றிபெற்றவர்கள் முதலாவது கணக்கெடுப்பிலேயே 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்ததால், அந்தத் தேர்தல்களின் போது இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் அவசியம் ஏற்படவில்லை. 

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் ரணசிங்க பிரேமதாஸ 50.43 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.  

ஏனைய தேர்தல்களின் போது, எவரும் இரண்டு கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவர் ஒரு கட்சிக்கு தமது வாக்கை வழங்கிவிட்டு விரும்பினால் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்க முடியும். அதேபோல் மற்றொருவருக்கு மூன்றாவது விருப்பு வாக்கையும் வழங்க முடியும்.

வாக்குகளை எண்ணும் போது, எவரேனும் ஒரு வேட்பளர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்தால், இந்த இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளுக்குப் பெறுமதியே இருக்காது. எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறுபவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்காக இரண்டாவது விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தால், அவையும் அந்த இருவரின் வாக்குகளோடு சேர்க்கப்படும். 

போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் வாக்குகளில், இந்த இருவரில் எவருக்கும் இரண்டாம் விருப்பு வாக்கு வழங்கப்படாது. மற்றவர்களில் எவருக்காவது அது வழங்கப்பட்டு இருந்தால், அந்த வாக்குச் சீட்டுகள் அந்த இரண்டாம் கணக்கெடுப்பின் பின்னரும் மீதமாக இருக்கும். அவற்றில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்காக மூன்றாவது விருப்பு வாக்கு அளிக்கப்பட்டு இருக்கிறதா என அடுத்து சோதித்துப் பார்க்கப்படும். அவ்வாறு இருந்தால், அவையும் அந்த இருவரின் வாக்குகளோடு சேர்க்கப்படும். 

இந்த மூன்று கணக்கெடுப்பின் பின்னர், ஆரம்பத்தில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களில் எவர் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 

முதலாவது கணக்கெடுப்பின் போது வெற்றி பெறுவதற்காக, செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற வேண்டும் என்று சட்டம் கூறிய போதிலும், விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் அது அவசியமில்லை. மூன்றாவது கணக்கெடுப்பின் பின்னரும் எவரும் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றிருக்காவிட்டாலும் கூடுலான வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்படுவார். 

ஆனால், இலங்கை வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை வாக்குச் சீட்டில் குறிக்க பழக்கப்பட்டவர்கள் அல்லர். இதற்கு முன்னர் எவரும் அதைப் பற்றி பேசியதே இல்லை. எனவே, இம்முறையும் வாக்காளர்கள் தமது அபிமான வேட்பாளருக்கு மட்டும் வாக்கையளித்துவிட்டு வரலாம். அவ்வாறு ஒரு வாக்குச்சீட்டிலும் இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்கு குறிப்பிடப்படாமல் இருக்க, எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாமல் இருந்தால் என்ன செய்வது என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 

எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாத நிலையில், சில வாக்குச்சீட்டுகளில், முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கன்றி ஏனைய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், என்ன செய்வது என்று சட்டம் கூறவில்லை. ஒரு விருப்பு வாக்கேனும் அந்த இருவரில் ஒருவருக்காக வழங்கப்பட்டு இருந்தால், சட்டப் பிரச்சினை எழாது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .