Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , மு.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
முரண்பாடுகளை முரண்பாடுகளால் தீர்த்துக்கொள்ள முனைவதானது சாபக்கேடான விளைவுகளையும் விபரீதமான முடிவுகளையும் வழங்கும் என்பது யதார்த்தம்.
எனவே, முரண்பாட்டு நிலையில் இருந்து, யாரேனும் ஒரு தரப்பு, தீர்வு நோக்கிச் செல்ல வேண்டுமானால், அவர்கள் தமது நிலையில் இருந்து, விட்டுக்கொடுப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இவ்வாறாக,பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் அற்ற, முரண்பாடான நிலைமையே இலங்கையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
கடந்த பல தசாப்தங்களாக முரண்பாட்டு நிலையில் இருந்த இரு சமூகங்கள், இன்று ஒரே பாதையில் பயணிப்பதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கான இடர்பாடுகள் களையப்படாமை பெரும் பின்னடைவாகவே உள்ளது.
காலத்துக்குக் காலம் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்கள், இத்தேசத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றி, தேசிய இனம் என்ற கோட்பாட்டுக்குள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் செயற்பாட்டை முன்னெடுக்காமை பெரும் துர்ப்பாக்கியமே.
இத்தகைய சமூக அரசியல் சூழலில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒன்றிணைந்து, சம அந்தஸ்தோடு வாழ்வதற்கு ஏற்ற, காலச்சூழல் அற்ற நிலையில், பெரும்பான்மைச் சமூகத்தின் அல்லது அந்த ஆட்சியாளர்களது போக்குகள், தொடர்ந்தும் முரண்பாடான செல்நெறியிலேயே காணப்படுவதானது எதிர்காலம் குறித்துக் கவலை அளிப்பதாகவே காணப்படுகின்றது.
இந்நிலைமை, ஆட்சியாளர்களின் ஆணவத்தின் வெளிப்பாடா அல்லது ஒரு வர்க்க அரசியலின் திமிரா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இற்றைக்கு வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் சமூகத்தினரால் வணங்கப்படும் வணக்கஸ்தலங்களிலும் அவர்களுடைய எதிர்ப்புகளையும் மீறி, மற்றுமொரு மதத்தைச் சேர்ந்த சமூகம், தமது மதச் சின்னங்களைப் புகுத்துவதும் அந்தச் சூழலைத் தமது மதம்சார்ந்த சூழலாக மாற்றியமைக்க முயல்வதானது, நல்லிணக்க முயற்சிகள் என்ற தளத்தில் இருந்து, விலகிச் செல்வதற்கே வழிகோலுகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது தேசிய கீதம், நல்லிணக்கம், இணைந்து வாழுதல் போன்ற விட்டுக்கொடுப்பு நிலைப்பாட்டு நகர்வுகளுக்கு மேலும் இடைவௌியை அகலப்படுத்தி உள்ளது எனலாம்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதற்குத் தடையுள்ளதா, இல்லையா என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அரசமைப்பு ரீதியாகச் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் தேசியகீதம் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் சிங்களத்தில் அமையப்பெற்ற தேசிய கீதம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழிலும் அரசமைப்பில் உள்ளமையானது, தேசிய நல்லிணக்கம் கருதிய செயற்பாடாகவுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த பல வருடங்களாக சுதந்திர தினத்தில் இரு மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், கடந்த வருடம் சுதந்திர தினத்தின் ஆரம்பத்தில் சிங்களத்திலும் இறுதியில் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது எவ்வாறான நிலை காணப்படப்போகின்றது என்பதே கேள்வியாகவுள்ளது.
அரச தரப்பில் சிலர், “அவ்வாறான ஒரு நிலைப்பாடு இல்லை; இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும்” என்ற கருத்தை முன்வைத்திருந்த போதிலும், உள்நாட்டலுவல்கள் அமைச்சரான ஜனக பண்டார தென்னக்கோன், அரசமைப்பில் சிங்கள மொழியில் மாத்திரமே, தேசிய கீதம் இருப்பதாகத் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சராக உள்ள ஒரு சிரேஷ்ட அமைச்சர், இவ்வாறான கருத்தை வெளியிட்டிருப்பதானது அரசமைப்பு தொடர்பாக, அரசியல்வாதிகளின் தேடல் தொடர்பில் கேள்வி எழுகின்றது.
இந்நிலையிலேயே, வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 70 வருட நிறைவுக்கொண்டாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஜனக பண்டார தென்னக்கோனை விமர்சித்துள்ளார்.
அதாவது, “உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு அரசமைப்புத் தெரியாது; அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியாது; அரசமைப்புச் சட்டத்திலே தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்தான் உள்ளது என கூறியுள்ளார்; அவ்வளவுதான் அவருடைய அறிவு; 13 ஆவது, 16 ஆவது திருத்தங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதும் அவருக்குத் தெரியாது; மொழி உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தை அவர் வாசித்தது கிடையாது” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இக் கருத்தானது, தென்னிலங்கையில் மேலும் கருத்தியல் மோதலை வலுப்படுத்தும். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையைச் சேர்ந்த தேரர் ஒருவரின் கருத்தானது, சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர், இந்தியாவை உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், பல மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில், ஒரு மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாகவும் தெரிவித்துள்ளமையானது, பௌத்த மேலாதிக்கம் எங்கே செல்கின்றது என்பதையும் அதன் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை போன்ற இன முறுகல்கள் நிறைந்த நாட்டில், இந்தியா போன்ற ஒரு தேசத்தை உதாரணம் காட்ட முதல், அந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான கரிசனை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
வெறுமனே வாய்ச்சொல்லில் வீரர்களாக இருந்துவிட்டு, தேசம் என்ற கட்டமைப்புக்குள் மட்டும் தமது கரிசனையைக் காட்ட முனைவதானது, வெறும் பசப்பு வார்த்தைகளாகவே இருக்கப்போகின்றது.
அந்தவகையில், சிறுபான்மையினரின் மன நிலையை உணர்ந்த ஆட்சியாளர்களாகத் தம்மை வெறுமனே காட்டிக்கொள்வதால் மட்டும் சாதித்து விட முடியும் என்ற எண்ணப்பாட்டில் இருந்து விடுபட்டு, யதார்த்த பூர்வமாக அவர்களையும் அவர்கள் வாழும் தேசத்தின் வாழ்வியலோடு ஒன்றிணைத்துச் செல்லும் பொறிமுறைகளை உருவாக்கத் தலைப்பட ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
வெறுமனே தேசிய கீதம் இசைப்பதால் மாத்திரம் ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட்டு விடும் என்பதாக எண்ணி, அதற்கு மட்டும் அனுமதித்து, சிறுபான்மையினரின் ஏனைய அபிலாசைகளைப் புறந்தள்ளுவதானது, காலச்சக்கரத்தில் மீண்டும் எதிர்வினையை ஏற்படுத்திவிடும்.
எனவே, இலங்கை தேசத்தில் இன நல்லுறவுக்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து பல தரப்பாலும் இடித்துரைக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் ஏற்பட்டு வரும் உள்ளக முரண்பாட்டு கருத்தியலானது, ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு தடையாகவே அமைந்து வருகின்றது.
ஏற்பதும் மறுப்பதுமான செயன்முறைகள், அரசியல் மேலாதிக்க சக்திகளின் கைகளிலேயே தங்கியுள்ளதாக நோக்கப்படும் போதிலும் கூட, இன முரண்பாடுகளுக்கு உள்ளால் மீண்டெழுந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப முற்படும் தருணங்களில், விட்டுக்கொடுப்புகளும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் ஆட்சியாளர்களிடம் இருப்பதே சிறந்த அறிகுறியாகும்.
எனினும், கடந்து வந்த காலத்தில் பல்வேறு ஆட்சிமுறைகளாகப் பெயர் சூட்டி, ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலத்தை அலங்கரித்தபோதிலும் கூட, ஏதுவான தளத்தை, இதுவரை எவரும் சிறுபான்மையினரின்பால் எட்டிவிடவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில், சிறுபான்மையினரின் அரசியல் சக்தியாக உள்ள தலைவர்களின் போக்குகளும், கடந்த காலத்தை விட பௌத்த மேலாதிக்க வாக்குளால் ஒரு ஜனாதிபதி உருவாக்கப்பட்டதன் பின்னரும், அவர் சார்ந்த ஆட்சியாளர்கள் அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையிலும் மாற்றமடைந்துள்ளது.
தம்மால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட இணக்க அரசியல் செயன்முறைகள் பயனற்றுப்போயுள்ள நிலையில், அவர்கள் கற்றுக்கொண்ட பாடத்தினூடாக, இந் நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் கூட, தற்போதைய சிறுபான்மை சமூகத்தின் தலைவர்களுக்கு மட்டுமல்ல, கடந்த காலத்தில் இருந்த எந்தத் தலைவர்களுக்கும் இவ்வாறான நிலைப்பாடே காணப்பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது.
இந்த நாட்டில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனத்துவம் சார்ந்த கருத்துகளும் அவர்களை அடக்கி ஆழ முற்படும் பொறிமுறைகளும் ஏதோ ஒரு வழியில், முரண்பாட்டு நிலையை மீள் உருவாக்கும் நோக்கம் கொண்டாதவே கருதப்படுகின்றது.
ஏனெனில், பௌத்த மேலதிக்க சக்திகளினதும் சிங்கள மக்களினதும் மனநிலை மாற்றமடைந்து, சிறுபான்மையினர் மீதான கீழ்த்தரமான பார்வை மேலோங்கியுள்ளது. இது சிறிய நாடுகளுக்கு ஏதுவானதாக அல்லாத போதிலும், இம் மனநிலையில் இருந்து அவர்களை மாற்றமடையச்செய்ய கடும் பிரயத்தனங்களைச் சிறுபான்மையினர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஏனெனில், ஆட்சியாளர்களும் தமது இருப்புக்கான தேடலை இனரீதியான கருத்துகளால் தக்க வைக்க முற்படுகையில் அவர்கள் சார்ந்த மக்களும் அதனையே பின்பற்ற பார்ப்பர். எனவே, கால ஓட்டத்தில் சிறுபான்மையினரின் மனோ நிலையை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்டமைப்பு ரீதியான பொறிமுறை உருவாக்கப்படவில்லையாயின் அது ஆட்சியாளர்களுக்கும் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கமாக மாறும் என்பது மறுப்பதற்கில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago