Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்னொரு தேர்தல்; இன்னொரு கூட்டணி; குத்துவெட்டு என்று, தமிழ்த் தேசிய அரசியல், கடந்த சில வாரங்களாக நகர்ந்துள்ளது.
இம்முறைத் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, பெருமளவு குறைந்துள்ளது. சிலர் புறக்கணிப்பு என்று ஏலவே அறிவித்துவிட்டு, பின்னர் நிபந்தனையுடன் ஆதரவு என்றார்கள்.
இன்னும் சிலர், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு என்று சொல்லிவிட்டு, பின்னர் எமது கோரிக்கைகளுக்கு உடன்படும் வேட்பாளருக்கு ஆதரவு என்று பல்டியடித்தனர்.
இப்படி, மாறிமாறிச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை, இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றன.
முதலாவது, புறக்கணிக்கச் சொல்பவர்களுக்கும் ஆதரவளிக்கச் சொல்பவர்களுக்கும் அவரவர்களின் சுயநல நோக்கங்கள் உண்டு. முடிவுகள் அதனடிப்படையிலேயே எடுக்கப்பட்டன. அதில் மக்கள் நலன் கிடையாது.
இரண்டாவது, தமிழ்த் தேசியத் தேர்தல் மரபில், வேலைத்திட்டங்கள் என்று எதுவுமே கிடையாது. கொள்கை விளக்கங்கள் மட்டுமே உண்டு. தேர்தல் விஞ்ஞாபனங்கள், என்றுமே வேலைத்திட்டங்களாக இருந்தது கிடையாது.
எனவே, ஆதரவும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயன்றி, வேலைத்திட்டங்களின் அடிப்படையில் அல்ல.
வேலைத்திட்டங்கள் ஆபத்தானவை. அவை அளவிடக்கூடியவை; எது நடந்தது, எது நடக்கவில்லை என்பதன் அடிப்படையில், தேர்தல் உறுதிமொழிகளை அவை கேள்விக்கு உட்படுத்தும்.
இதனாலேயே தமிழ்த் தேசிய அரசியலில் வேலைத்திட்டங்களுக்கு என்றுமே இடம் இருக்கவில்லை.
வெற்றுக் கோஷங்களும் உணர்ச்சிகர முழக்கங்களுமே தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருந்து வந்திருக்கின்றன. இது பாரிய சேதங்களைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
1976இல் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது மக்களுக்கு விளங்கியது. ஆனால், அதை எப்படி வெல்வதென்ற அற்பளவு சிந்தனையும் தலைவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.
தமிழ் நாடாளுமன்ற அரசியல் தலைமை, திசை தெரியாமல் தள்ளாடிய நீண்ட காலப்பகுதியில், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது பேரினவாத வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தன.
தமிழரசுக் கட்சிக்கும் பின்பு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் மக்களுடைய ஆதரவு வலுவாக இருந்துவந்த போதிலும், அந்த ஆதரவை, வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்கு மேலாக எதற்கும் பயன்படுத்த அவை எண்ணியதில்லை.
தமிழ் மக்கள் நடைமுறை அரசியலிலிருந்து விலக்கப்பட்டதற்குக் காரணங்கள் பல கூறலாம். எனினும், ‘மக்கள் அரசியல்’ மீதான அச்சமும் மேட்டுக்குடிகளின் கைகளிலேயே அரசியல் அதிகாரத்தைப் பேணும் நோக்கமுமே முக்கிய கோளாறுகள். மக்கள் அரசியல் மீதான ஐயங் கலந்த அச்சம், மக்களை ஓர் அரசியல் சக்தியாக வளர்ப்பதற்குத் தடையாக அமைந்தது.
தாம் பேரம் பேசி வெல்ல இயலாததை, மக்களைக் கொண்டு போராடி வெல்ல ஆயத்தமற்ற தலைமை, வெளியே ஆதரவை நாடியது. அதன் வர்க்க நலன்கள் இயல்பாகவே அதனுடைய முன்னாள் கொலனிய எஜமானர்களை நோக்கி உந்தின.
பிரித்தானிய எஜமானர்களின் நடுநிலையையும் நேர்மையையும் பற்றிய மூடநம்பிக்கை, எல்லாத் தமிழ்த் தலைமைகளிடமும் இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல், பொதுவாகவே மேற்குலகு சார்பானதும் குறிப்பாக, ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சார்பான ஒரு நிலைப்பாடாகவும் வளர்ந்தது.
எனவே, பிரித்தானிய ஏகாதிபத்தியம், தனது உலகச் செல்வாக்கை அமெரிக்காவிடம் இழந்த நிலையில், 1961இல் சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து, அமெரிக்கா மீதான விசுவாசம் உருப்பெறத் தொடங்கியது.
1970களில் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இருந்த முரண்பாட்டில், தமிழ்த் தலைமைகள் அமெரிக்கா சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்த போதும், அமெரிக்காவின் நம்பிக்கை யூ.என்.பி மீது இருந்த அளவுக்கு, எந்தத் தமிழ்த் தலைமைகள் மீதும் இருக்கவில்லை.
ஆனாலும், 1960களில் தொடங்கி இஸ்ரேலிய முன்மாதிரியைப் பின்பற்றும் போக்கும், பொதுவான மேற்குலச் சார்பும் தமிழரசுக் கட்சியிடம் இருந்துவந்தது.
தமிழ்க் காங்கிரஸும் பிறதமிழ்த் தேசியத் தலைவர்களும் பிரித்தானிய முடியாட்சியின் மீது வைத்திருந்த விசுவாசம் பிறழவில்லை.
இந்தவிதமான குருட்டு விசுவாசம், வெறும் பழக்க குற்றமோ மரபோ மட்டுமல்ல; அதற்கு ஓர் அதிகார வர்க்க இயல்பும் வர்க்கத் தேவைகளும் இருந்தன.
தமிழ்த் தேசியவாதத் தலைமை, இறுக்கமான பழைமைவாத மேட்டுக்குடிகளிடம் இருந்து வந்ததால், ரஷ்யப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை அனைத்துப் புரட்சிகளிலும் கொரியப் போர் முதல் வியட்நாம் போர் வரையிலான அயல் ஆக்கிரமிப்புக்கெதிரான அனைத்துப் போராட்டங்களையும் பகைமை இல்லாவிடினும் சந்தேகத்துடனேயே நோக்கின.
இந்திய மேட்டுக்குடிகளுடனான அடையாளப்படுத்தலும் தமிழ்த் தலைமைகளிடம் வலுவாக இருந்தது. முதலில் அது, இந்தியத் தேசியத் தலைமையுடனும் பின்னர் திராவிட அரசியல் தலைமைகளுடனும் தம்மைச் சேர்த்துப்பார்கிற போக்காக வெளிப்பட்டாலும், அதன் வர்க்க அணுகுமுறையில் ஒரு மாற்றமும் இருக்கவில்லை. அவை என்றும் மக்கள் நலன் சார்ந்ததாக இருந்ததில்லை.
இந்த வரலாற்றை விளங்கினால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த்தலைமைகளின் தெரிவுகள் எப்படி இருக்கும், அதற்கான விளக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை விளங்கலாம்.
மக்கள் இன்னொரு முறை ஏமாறத் தயாராக இருக்கிறார்களா என்பதை, ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago