Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2017 ஜூன் 28 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில வாரங்களாக மௌனித்திருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் தாமதத்தைப் பற்றிய விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம் முறை, ஒரு சிறிய நுளம்பே அந்த விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளது.
தெளிவாகக் கூறுவதாயின், டெங்கு நோய் வேகமாகப் பரவுவதற்கு, உள்ளூராட்சி மன்றங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமையே காரணம் என்று, கூட்டு எதிரணி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், கூறி வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதை அடுத்துப் புதிதாகத் தேர்தல்களை நடத்தி, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு, உறுப்பினர்களைத் தெரிவு செய்யாததனால் நாடெங்கிலும் குப்பை அகற்றும் பணிகள் முடங்கிக் கிடப்பதாகவும் டெங்கு நோய், இந்தளவுக்குப் பரவுவதற்கு அதுவே காரணம் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
முன்ஒருபோதும் இல்லாத அளவில், இவ்வருடம் டெங்கு நோய் நாட்டில் பரவியுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு வருடத்திலும் 40,000 பேருக்கு மேல், இந்த நோயினால் பாதிக்கப்படவில்லை.
ஆனால், இந்த வருடம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 67,000 பேர், நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானவர்கள், இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையினால் அவற்றின் நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து அதிகாரிகளிடம் கைமாறியுள்ளது. அவர்கள் தத்தமது பிரதேசங்களில் என்னதான் நடைபெற்றாலும், உயர் மட்டத்திலிருந்து பணிப்புரைகள் இல்லாமல் செயற்படுவதில்லை.
எனவேதான், குப்பை அகற்றும் பணி சீர்குலைந்துள்ளது என்றும், எனவே அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கூட்டு எதிரணி வலியுறுத்தி வருகிறது.
உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் போதும், 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரு வருடம் தவிர்ந்த ஏனைய வருடங்களில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.
எனவே, இந்த நோய்க்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கும் இடையே, எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், சிலர் இதற்கு பதிலடியாக வாதிடலாம். ஆனால், கூட்டு எதிரணியின் வாதத்தை முற்றாக நிராகரிக்கவும் முடியாது.
அரசாங்கம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும், மக்களுக்குப் பெருமளவில் வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றை, நிறைவேற்ற அரசாங்கம் தவறியதால், மக்கள் அரசாங்கத்தின்மீது, வெறுப்போடு இருப்பதாகவும் எனவே, அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தத் தயங்குகிறது என்றும் கூட்டு எதிரணி வாதிடுகிறது.
அதேவேளை, பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே, கலவரத்தைத் தூண்டி, அதைக் காரணமாகக் காட்டி, அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.
எப்போதும் சகல எதிர்க்கட்சிகளும் அந்தந்தக் காலத்தில் இருக்கும் அரசாங்கத்தைப் பார்த்து, இவ்வாறு நையாண்டி செய்வது வழக்கமாக இருப்பதால், கடந்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட உடன், கூட்டு எதிரணி, இந்தவாதத்தை முன்வைத்தபோது, அதுவும் வழமையான நையாண்டியாகவே காணப்பட்டது.
ஆனால், கடந்த ஒரு வருட காலத்தில் இந்தத் தேர்தல்கள் விடயத்தில், அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அரசாங்கம் தேர்தல் மூலம் வாக்காளர்களைச் சந்திக்க அஞ்சுகிறது என்ற கூட்டு எதிரணியின் வாதத்தை முற்றாக நிராகரிக்கவும் முடியாது.
புதிய தேர்தல் முறையொன்றில், அடுத்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருப்பதாலும், அந்தத் தேர்தல் முறை சிறுபான்மை மக்களைப் பாதிக்கக் கூடும் எனப் பரவலாகப் பேசப்படும் நிலையிலும், சிறுபான்மைச் கட்சிகள், இந்த விவாதத்தில் கலந்து கொள்வதாகத் தெரியவில்லை.
அந்த விடயத்தில், அவர்கள் இப்போது நடப்பது நடக்கட்டும் என்ற அப்பாவி மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
அரசாங்க மருத்துவ அதிகரிகள் சங்கமும் இம்முறை கூட்டு எதிரணியின் வாதத்தை ஆதரித்துக் கருத்து வெளியிட்டுள்ளது. கடந்தவாரம், அரச மருத்துவ சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது, உரையாற்றிய அச்சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்தஆனந்த, “குப்பை அகற்றும் பணி, தடைப்பட்டுள்ளமையே, நுளம்பு பெருகக் காரணமாக இருப்பதாகவும் அதுவே, டெங்கு நோய் வேகமாகப் பரவுவதற்குக் காரணம்” எனவும் கூறியிருந்தார்.
ஒரு, தொழிற்சார் தொழிற்சங்கம் என்ற வகையில், டெங்கு நோய் பரவுவதற்குக் குப்பை அகற்றும் பணிகள், தடைப்பட்டுள்ளமையே காரணம் என்று கூறுவதோடு, அவர் நிறுத்திக் கொண்டிருந்தால், அது பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆனால், ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு வரும், ஓர் அரசியல் காரணம் ஒன்றை, அத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வது, எந்த அரசியல் கட்சியையும் சாராத, தொழில்சார் தொழிற்சங்கம் எனக் கூறிக் கொள்ளும் அரச மருத்துவ சங்கத்துக்கு பொருத்தமாகாது.
ஆனால், அவர் அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அண்மைக் காலமாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசியல் நிலைப்பாடு கொண்ட கருத்துகளை வெளியிட்டு வருவதாகத் தெரிகிறது.
அவர்கள், அரசியல் சாயல் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி, சைட்டம் நிறுவனத்தை ஆரம்பிக்கக் கடன் வழங்கி, அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சில மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி, அதற்கு ஓரளவு அங்கிகாரமும் வழங்கிய போது, மௌனமாக இருந்த மருத்துவ அதிகாரிகள் சங்கம், இப்போது அந்தக் கல்லூரியை மூடுமாறுகோரி, தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில், அச்சங்கத்தின் முக்கிய நபர் ஒருவர், அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் எனப் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அவர்கள், திரட்டிய வெள்ள நிவாரணப் பொருட்களை, விநியோகத்துக்காக, மஹிந்த ஆதரவு தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கினர். இப்போது தேர்தல் வேண்டும் என்ற மஹிந்த ஆதரவாளர்களோடு சேர்ந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் மொத்தம் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. 23 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் அவற்றில் அடங்குகின்றன. 2006 ஆம் ஆண்டு, 330 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல்கள் நடைபெற்றன.
அதன் பின்னர், மேலும் ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர், அடுத்த தேர்தல் 2010 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த போதிலும், அது ஒத்திப் போடப்பட்டது.
அதன்படி, பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 2011 ஆம் ஆண்டும் மிகுதி சபைகளுக்கான தேர்தல்கள் 2012 ஆம் ஆண்டும் நடைபெற்றன.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இன்னமும் நடைபெறவில்லை.
2011 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற சபைகளின் பதவிக் காலம், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில், 2015 ஆம் ஆண்டிலும் 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற சபைகளின் ஆயுட்காலம் 2016 ஆம் ஆண்டிலும் முடிவடைந்தன.
ஆனால், உடனடியாக அவற்றுக்காக தேர்தல் நடைபெறவில்லை. 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றப்பட்டமையே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
2012 ஆம் ஆண்டு வரை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே நடைபெற்று வந்தன. ஆனால், 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்ச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்கள் மூலம், விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தொகுதிவாரி தேர்தல் முறையும் இதில் சம்பந்தப்பட்டு இருந்தததால், புதிய தேர்தல் முறையின்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதாயின் அச்சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களைத் தேர்தல்த் தொகுதிகளாகப் பிரிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
இது பாரதூரமான விடயம்; இந்தப் பணியின்போது, ஒவ்வொரு தொகுதிகளினதும் சனத்தொகை, பரப்பளவு போன்ற பல விடயங்கள் கருத்தில் எடுத்தே, அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தொகுதிகளின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்காக ஒரு குழுவை நியமித்தது. சிரேஷ்ட நிர்வாகச்சேவை அதிகாரியான ஜயலத் ரவி திசாநாயக்க, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும், தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும் வரை பழைய விகிதாசார முறையிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரம் இருந்தது.
ஆனால், எல்லை நிர்ணயக் குழுவின் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என்ற எண்ணத்திலோ, என்னவோ புதிய தேர்தல் முறை அமுலுக்கு வருவதாக அறிவித்து, அப்போதைய உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
அவர் நினைத்தபடி, எல்லை நிர்ணயப் பணிகள் விரைவில் நடைபெறவில்லை. அந்தப் பணிகள் முடிவடைந்து, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, 2015 ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அப்போது 2011 ஆம் ஆண்டு, தேர்தல்கள் நடைபெற்ற சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்து இருந்தது.
அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த பல தொகுதி எல்லைகள், பொருத்தமானவையல்ல என அமைச்சுக்கு சுமார் 1,000 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் பல ஆதாரபூர்வமானதாகவும் இருந்தன.
எனவே, அந்தக் குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் அசோக பீரிஸ் தலைமையில் மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டன.இதன் காரணமாக, 2015 ஆம் ஆண்டில், பதவிக் காலம் முடிவடைந்த சபைகளுக்காகத் தேர்தல் நடத்த முடியாமல் போய்விட்டது.
2015 ஆண்டு ஒக்டோபர் மாதமே எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்காக, அசோக பீரிஸ் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் அக்குழு தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பணிப்புரை வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதன் பின்னர் இடம்பெற்ற விடயங்கள்தான், அரசாங்கத்தின்மீது சந்தேகத்தைத் தூண்டுகின்றன. 2016 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், பீரிஸ் தமது அறிக்கையை உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்க வேண்டியிருந்தது. அந்தக் கால எல்லைக்குள் தமக்கு அந்தப் பணியைப் பூர்த்தி செய்ய முடியும் எனப் பீரிஸ் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அது நடைபெறவில்லை. மாறாக, அறிக்கை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அமைச்சரிடம் கையளிக்கப்படும் என, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது. அதுவும் நடைபெறவில்லை. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி, பீரிஸ் மீண்டும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “அடுத்த நாள் அறிக்கை, அமைச்சரிடம் கையளிக்கப்படும்” என்றார்.
அதுவும் நடைபெறவிலலை. மாறாக சில நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக, அறிக்கையை அமைச்சரிடம் கைளிக்கும் பணி தாமதமாகும் என உள்ளூராட்சி அமைச்சுத் தெரிவித்தது.
இவ்வாறு, இந்த விடயம் நகைப்புக்குரியதாகி வரும்போது, பீரிஸ், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி வெளியான, ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைக்கு ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.
அறிக்கை தொடர்பான விடயங்களை இழுத்தடிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, தம்மிடம் கூறியதாகவும் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் அறிக்கை சம்பந்தமான விடயங்கள் தாமதமடைவதையே விரும்புவதாகவும் அவர் அந்தப் பேட்டியின்போது கூறியிருந்தார்.இந்தப் பேட்டி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் முஸ்தபா, அதேபத்திரிகையின் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இதழுக்கு ஒரு பேட்டியை வழங்கி, பீரிஸின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
அதற்கு முன்னர் அவர், பீரிஸை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவும் நடவடிக்கை எடுத்தார். பீரிஸின் பேட்டி வெளியான நாளுக்கு, அடுத்த நாளே, அவர் ஊடகவியலாளர்கள் முன், அறிக்கையை பீரிஸிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
பீரிஸ், அதைக் கையளிக்கும்போது, அதில் பீரிஸின் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்களா எனப் பார்க்குமாறு அமைச்சர், தமது செயலாளரைப் பணித்தார்.
“இல்லை” எனச் செயலாளர் கூறவே, தமக்கு இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் செயலாளர் கூறியது போலவே, குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டு இருக்க வில்லை. ஆனால், விந்தை என்னவென்றால், கையெழுத்திடாத இருவரில் ஒருவர் அமைச்சரின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதியாக இருந்தமையாகும்.
இறுதியில், ஜனவரி 17 ஆம் திகதி குழுவின் சகல உறுப்பினர்களினதும் கையெழுத்தோடு, அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.பின்னர், அதை வர்த்தமானியில் பிரசுரிப்பதும், இன்று செய்வோம், நாளை செய்வோம் என்று இழுத்தடிக்கப்பட்டது.
இன்னமும் அரசாங்கம், எப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தப் போகிறது என்பது எவருக்கும் தெரியாது. எதிர்க்கட்சியினருக்கு மட்டுமன்றி ஆளும் கட்சியினருக்கும் தெரியாது.
இதனால், கடந்த வாரம் மூன்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட சில சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிவைச் சந்தித்து, இது தொடர்பாகக் கலந்துரையாடினர்.
மிக இலகுவாக் தீர்க்கக் கூடிய சில சிறிய நிர்வாகப் பிரச்சினைகளைத் தவிர, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த, தற்போது எவ்வித தடையும் இல்லை என தேசப்பிரிய அந்தச் சந்திப்பின்போது கூறியதாக, அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ‘பப்ரல்’ எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டிஆரச்சி கூறியிருந்தார்.
கடந்த வருடம், ஹெட்டிஆரச்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தைப் பணிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
எனவே, அரசாங்கம் தேர்தல்களை நடத்தப் பயப்படுகிறது என்ற கூட்டு எதிரணியின் வாதம் முற்றாக ஒதுக்கித் தள்ளக் கூடியதல்ல.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இதுவே நடைபெற்றது. அவர்கள் 2010 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அவசரகால சட்டத்தைப் பாவித்து ஒத்திப் போட்டார்கள்.
மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தியாகவில்லை என்றும் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என்றும் கூறி புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை ஒத்தி வைத்தார்கள்.
போர் முடிவடைந்து ஐ.நா மனித உரிமை பேரவை தலையிடும் வரை, அதாவது 2013 ஆண்டு வரை வட மாகாண சபைக்கான தேர்தலை மஹிந்தவின் அரசாங்கம் நடத்தவில்லை.
அவர்களுக்கு இந்த அரசாங்கத்தை, இந்த விடயத்தில் விமர்சிக்க தார்மிக உரிமை இல்லை. அதேபோல், அவர்கள் அன்று அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்காக இன்றுள்ளவர்களுக்கும் தேர்தல்களைக் காரணமின்றி ஒத்திப்போட தார்மிக உரிமை இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
2 hours ago