Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 ஜனவரி 03 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முகம்மது தம்பி மரைக்கார்
எமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது.
2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதையடுத்து, ஆட்சியாளர்கள் பிடிமானமின்றித் தள்ளாடத் தொடங்கினார்கள்.
பிடிமானம் இல்லாவிட்டால், ஆட்சிக் கதிரை அசைந்து விழும் அபாயம் ஏற்படுமென உணர்ந்தார்கள். அதனால், கைகளுக்கு இலகுவாகக் கிடைத்த ஒரு பிடிமானத்தைப் பற்றிக் கொண்டார்கள். ‘இனவாதம்’ என்கிற அந்தப் பிடிமானம் மிகவும் பழைமையானது; அபாயகரமானது.
இனவாதம்
யுத்தத்துக்குப் பின்னர் இனவாதத்தை மஹிந்த ராஜபக்ஷ கையிலெடுத்தார். தனது ஆட்சிக்குப் பௌத்த பேரினவாதம் கைகொடுக்கும் என்று அவர் நம்பினார்.
சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்கிற நப்பாசை அவருக்கு ஏற்பட்டது. அதனால், சிங்கள மக்களின் கதாநாயகனாகத் தன்னைச் சித்திரித்துக் கொண்டார். அதற்காக, சிறுபான்மை மக்களை அவர் நசுக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார். இதற்காக, பொதுபலசேனா என்கிற பூதத்தை ஏவி விட்டார். மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி ஐந்து ஆண்டுகளின் ஒவ்வொரு நாளும், முஸ்லிம்களுக்கு அச்சம் தருகின்றவையாகவே இருந்தன.
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று சும்மாவா சொன்னார்கள். தனது ஆட்சிக்குச் சிங்களப் பேரினவாதம் கைகொடுக்கும் என்று நம்பிய மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போனார்.
இலங்கையில், சிறுபான்மையினரைப் பகைத்துக் கொண்டு, ஆட்சி பீடமேற முடியாது என்கிற ‘பாடத்தினை’ தமிழர்களும் முஸ்லிம்களும் 2015ஆம் ஆண்டு அழுத்தம் திருத்தமாக எழுதினார்கள். இனவாதம் எப்போதும் ஜெயிக்காது என்கிற படிப்பினை, மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியூடாகக் கிடைத்தது.
இதுவெல்லாம் நடந்த கதைகள். நம் எல்லோருக்கும் தெரிந்த கதைகள்.
நல்லாட்சி
ஆயிரம் படிப்பினைகள் நமக்கு முன்னே இருந்தாலும், அவற்றினை எல்லோரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னர், ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு ‘நல்லாட்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.
பெயருக்கேற்ற அர்த்தம், இந்த ஆட்சியில் இருக்குமென்று சிறுபான்மை மக்கள் நம்பினர். ஆனால், நம்பிய மாதிரி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ‘பேயை விரட்டி விட்டு, பிசாசுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோமா’ என்று தமிழர்களும் முஸ்லிம் மக்களும் கலவரப்படும் மனநிலை - நல்லாட்சியில் உருவாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவினர் செய்த தீமைகளுக்காக, அவர்களை நல்லாட்சியினர் தண்டிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு சிறுபான்மை மக்களிடம் இருந்தது. பௌத்த இனவாதிகளுக்கு இந்த ஆட்சியில் இடமளிக்கப்பட மாட்டாது என்று முஸ்லிம்கள் நம்பினர்.
வெள்ளை வேன் கடத்தல்களுக்கும், பெறப்பட்ட கப்பங்களுக்கும் காரணமானவர்கள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்று, நல்லாட்சியாளர்கள் சத்தியம் செய்தபடி நடக்கும் என்கிற கனவில் கணிசமானோர் மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. வெறும் இழுத்தடிப்புகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ராஜபக்ஷவினருக்கும் நல்லாட்சியாளர்களுக்கும் ‘கள்ள உறவுகள்’ உள்ளதாக, அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. முன்னாள் ஆட்சியாளர்களில் ஒருவர் கைது செய்யப்படுவதை, நல்லாட்சி அரசாங்கத்தின் யாரோ ஓர் அமைச்சர் தடுத்து நிறுத்தினார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவாறு எங்கும் ‘டீல்’ மயமாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நல்லாட்சியில், தாங்கள் எதிர்பார்த்தவாறு ஏதாவது நடந்து விடும் என்கிற நம்பிக்கையுடன் இருந்த சிறுபான்மை மக்கள் அலுத்துப் போய் விட்டார்கள்.
கோர முகம்
இவ்வாறானதொரு நிலையில்தான், நல்லாட்சியாளர்களின் கோர முகம் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது.
இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்கள் குறித்த கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று, நல்லாட்சி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார். நாட்டில் சிறுபான்மையினரின் மதத் தலங்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரர் சிவன் கோயில் ஐந்து மடங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, புராதன பௌத்த சின்னங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, ஏட்டிக்குப் போட்டியான மனநிலையுடன் முன்வைக்கப்பட்டதாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவையற்ற இடங்களிலும், சட்டத்துக்கு விரோதமாகவும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு, சிறுபான்மை மக்கள் அவ்வப்போது, தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புக்குப் போட்டியாகத்தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
சம்பிக்க ரணவக்க எனும் நபரை சிறுபான்மை மக்கள் ஒரு பௌத்த இனவாதியாகத்தான் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் அமைச்சராக இருந்தபோது, தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்களை இவர் முன்வைத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. ஜாதிக ஹெல உறுமய என்கிற கட்சியின் செயலாளராக சம்பிக்க ரணவக்க பதவி வகிக்கின்றார்.
இவ்வாறானதொரு நிலையில், கடந்த வியாழக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். அதன்போது அவர் வெளியிட்ட சில தகவல்கள் கவனிப்புக்குரியனவாகும். சம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்பின் காரணமாகவே, பொதுபலசேனாவுக்கு எதிராக, தனது ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இந்தக் கூற்றானது, தனது தவறை வேறொருவர் தலையில் சுமத்துவதற்குரிய எத்தனமாக இருந்தாலும் கூட, பொதுபலசேனா என்கிற அமைப்புக்கு சம்பிக்கவின் ஆசீர்வாதம் இருந்திருக்கிறது என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறது.
இதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் சர்வ மதத் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருந்தார். இதில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டிருந்தமையானது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதியை சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவொன்றினை, ஊடகங்களின் முன்னிலையில் ஞானசார தேரர் கிழித்தெறிந்திருந்திருந்தார். இவ்வாறானதொரு பேர்வழியை, மதத் தலைவர் என்கிற அங்கிகாரத்துடன் ஜனாதிபதி அழைத்துப் பேசியமையின் பின்னாலுள்ள மனநிலையினைப் புரிந்து கொள்தல் அவ்வளவு சிரமமான விடயமல்ல.
குட்டைகளும் மட்டைகளும்
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு ஒரு பொதுவான குணாம்சம் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே அரசியல் குட்டையில் ஊறியவர்கள் என்பதும் இங்கு கவனிப்புக்குரியது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய சுதந்திரக் கட்சியில் செயலாளராக இருந்து கொண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேனவிடம், ‘அங்கே’ இருந்த சில குணங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றமையானது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், சமீப காலமாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பௌத்த இனவாதச் செயற்பாடுகள் மிகக் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் எவருமற்ற இறக்காமத்திலுள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்றினைச் சில மாதங்களுக்கு முன்னர், ஒரு குழுவினர் அடாத்தாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
அங்கிருந்த தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். குறித்த புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோசமிட்டார்கள். இந்த விடயம் ஊடகங்களில் பற்றியெரிந்தது. மாயக்கல்லி மலை விவகாரம் தேசிய மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், ஜனாதிபதியோ பிரதமரோ இவ்விடயம் குறித்து வெளிப்படையாக வாய் திறந்து இதுவரை பேசவுமில்லை, நியாயம் பெற்றுக் கொடுக்கவுமில்லை.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிரதேசத்தில் அங்குள்ள மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமான அராஜகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு கிராமசேவை உத்தியோகத்தரை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ காட்சிகள் இணையமெங்கும் பரவியிருந்தன.
பொலிஸார் முன்னிலையில் வைத்துத்தான் தேரர் அதனைச் செய்தார். இன்னொரு நாள், மட்டக்களப்பிலுள்ள தமிழர் ஒருவருடைய காணிக்குள் சென்று குந்திக் கொண்ட அம்பிட்டிய தேரர், இங்கு பௌத்த விகாரையொன்றைக் கட்டாமல் போக மாட்டேன் என்றார்.
பிறகொரு நாள், இன்னொரு தனியார் காணிக்குள் நுழைந்த தேரர், அங்கு பௌத்த புராதன சின்னங்கள் உள்ளதெனவும், அவை அழிக்கப்படுவதாகவும் கூறி, சண்டித்தனம் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைகளின் பொருட்டு, அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அம்பிட்டிய தேரர் என்பவர் பௌத்தத்தின் அச்சுறுத்தும் முகமாகவே, சிறுபான்மையினத்தவர்களின் கண்களுக்குத் தெரிகின்றார்.
மட்டக்களப்பு வீதிகளில் காவியணிந்த ஒரு சண்டியனாக சுமனரத்ன தேரர் உலவுகிறார்.
இவை அனைத்தும் உண்மைகள். தேரரின் இந்த அட்டகாசங்கள் அனைத்தும் ஊடகங்களில் வீடியோக்களாக வெளிவந்திருந்தன. இருந்தபோதும், இந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியோ, பிரதமரோ ஏன் உத்தரவிடவில்லை.
அதற்கான காரணம் என்ன என்பதை ஊகித்துக் கொள்வது அத்துணை சிரமமல்ல.
இது இப்படியிருக்க, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மட்டக்களப்புக்கு வந்து, சுமனரத்ன தேரரிடம் ஆசிபெற்றுச் சென்றுள்ளார். மட்டக்களப்பில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களின் மீட்பராக, சுமனரத்ன தேரரை, நீதியமைச்சர் கூறியுள்ளார்.
அவருக்கு தனது வாழ்த்துகளையும் நீதியமைச்சர் தெரிவித்திருக்கின்றார். வடக்கு, கிழக்கில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர் என்றும், இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் பிரச்சினைகளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் எதிர்கொள்வதாகவும், அங்கு வைத்து ஊடகங்களுக்கு நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு, இவையெல்லாம் அதிர்ச்சியான காட்சிகளாகவே உள்ளன. ஆனாலும், நல்லாட்சியாளர்களின் பின்னணி, அவர்கள் இருந்த இடம், ஊறிய குட்டைகள் குறித்த அறிவும் தெளிவும் உள்ளவர்கள், இவற்றினையெல்லாம் கொஞ்சம் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றார்கள்.
விளையாட்டு
இது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறுகையில், “நல்லாட்சியின் ஒரு பகுதியினருக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல், மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்று நல்லாட்சியினர் விரும்புவதாகவும் எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத மற்றும் இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இந்த உணர்வூட்டலை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்” என்றும் தவிசாளர் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நிறைவேற்றுவதற்காக, சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்து, அங்கு பௌத்த புராதன சின்னங்களைக் கண்டுபிடிக்கும், ஒரு லாவக விளையாட்டு இடம்பெற்று வருவதாகவும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிடுகின்றார்.
நல்லாட்சியாளர்களின் முகமூடி அரசியல் குறித்து மு.கா தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களவர்களைப் பிராந்திய ரீதியான சிறுபான்மையினர் என்ற அரசியல் அடையாளத்துக்குள் கொண்டுவந்து, அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும், உடமைகளின் உரித்துக்காகவும் போராடுவது இதற்குரிய மற்றுமொரு சிறந்த வழி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பௌத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாகச் செயல்படுத்த மத அமைப்புகளும், அமைச்சர்களும், நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத அரசியல்வாதிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்செயற்பாடுகளால் கிளர்ந்தெழும் சிறுபான்மையினரைச் சாந்தப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க, ஏற்கெனவே சிறுபான்மை மக்கள் மீது அனுதாபம் கொண்டு பேசிவரும் சில சிங்கள அமைச்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்களுக்கு பேசா மடந்தைகளாக இருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், நீதி, புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, பௌத்த தீவிரவாத சக்திகளுக்கு தீனி போடவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் டிலான் பெரேரா, ராஜித சேனாரட்ன போன்றோர் சிறுபான்மையினரை சாந்தப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
பௌத்த தீவிரவாத அமைப்புகள் எவை என்றும், பேசாதிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் யார் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார். ஆக, மஹிந்த ராஜபக்ஷ செய்த அதே அரசியலைத்தான் நல்லாட்சியாளர்களும் செய்து வருகிறார்கள் என்பது அப்பட்டமாகப் புரிகிறது. மஹிந்தவுக்கும் நல்லாட்சியாளர்களுக்கும் இலக்குகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதை அடைந்து கொள்வதற்கான பாதைகள்தான் வித்தியாசப்படுகின்றன.
‘போக்கிரி’ திரைப்படத்தில் முகத்தின் அடையாளத்தினை மறைத்துக் கொண்டு உளவுபார்க்க வருகின்ற வடிவேலு, மண்டை மேல் இருக்கும் கொண்டையினை மறைக்க மறந்ததால், பிடிபடுகின்ற காட்சி, இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. எத்தனை மாறு வேடங்களைப் போட்டாலும், இனவாதம் என்கிற சமாசாரத்தினை மறைத்துக் கொண்டு அரசியல் செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
வடிவேலின் மண்டை மேல் இருக்கும் கொண்டைபோல், நல்லாட்சியாளர்களின் இனவாத அரசியல், அருவருப்பான தோற்றத்துடன் துருத்திக் கொண்டு தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
58 minute ago