2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

விகிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.

ஆரப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை அடுத்து, அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இராஜினாமா செய்ய நேர்ந்ததோடு, முன்னாள் பிரதம நீதியரசரான சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜென் ஸீ (Gen Z) என அமெரிக்க ஆங்கிலத்திலும் ஜென் இசெட் என்று பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் 1997க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்து, தற்போது 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கும் தலைமுறையினரின் போராட்டமாகவே வங்காள தேசத்தில் வெடித்த போராட்டம் நோக்கப்படுகிறது.

வறுமை, வேலைவாய்ப்பின்மை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாரியளவிலான ஊழல், ஆட்சியாளர்கள் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தனிச் சலுகை வழங்குதல் ஆகியனவே நேபாள இளைஞர்களின் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால், திடீரென அரசாங்கம் 26 சமூக வலைத்தளங்களைத்  தடை செய்தமையே அந்த எதிர்ப்பை போராட்டமாக வெடிக்கச் செய்த விசையாகும்.

கடந்த 4ஆம் திகதியே நேபாள அரசாங்கம் இத்தடையை விதித்தது. அச்சமூக வலைத்தளங்கள் பொய்யான செய்திகள், திரிபுபடுத்தல்கள், துவேசத்தைப் பரப்புதல், சமூகக் குழுக்களிடையே வைராக்கியத்தை 
பரப்புதல் என்பனவற்றில் ஈடுபடுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நேபாள அரசாங்கம் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இலங்கையிலும் சமூக வலைத்தளங்களின் நிலைமை அதுவாகும்.

ஆனால், நேபாளத்தில் சில சமூக வலைத்தளங்கள் மட்டுமே பதிவு செய்துகொள்ள இணக்கம் தெரிவித்தது. முகநூல், எக்ஸ் (டுவிட்டர்), வடஸ்அப் உள்ளிட்ட  வலைத்தளங்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே, தான் அவற்றுக்கு இத்தடை விதிக்கப்பட்டது.

அத்தோடு, கடந்த 8ஆம் திகதி இளைஞர்கள் அத்தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  பொலிஸார் இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சில மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சமடைந்து பின்வாங்குவார்கள் என்று அரசாங்கமும் பொலிஸாரும் நினைத்த போதிலும், இது மேலும் மாணவர்கள் வெறி கொண்டு எழக் காரணமாகியது. எனவே, பாதுகாப்புத் துறையினர் மேலும் கொடூரமாக நடந்து கொண்டனர். அவ்வாறு 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசாங்கம் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியது.

ஆனால், நிலைமை கட்டுக்கடங்காமலேயே இருந்தது. ஏனெனில், தடை நீக்கத்துக்கு முன்னரே இளைஞர்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்தும் சுலோகங்களை எழுப்ப ஆரம்பித்து இருந்தனர். ஊழல் மலிந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறினர். அத்தோடு, துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, ஏனைய இளைஞர்களும் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தும் இருந்தனர்.

எனவே, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட போதிலும், பாராளுமன்றக் கட்டிடம், உயர் நீதிமன்ற கட்டிடம், சில பொலிஸ் நிலையங்கள், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றவர்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஒரு முன்னாள் பிரதமரின் மனைவி எரி காயங்களால் உயிரிழந்தார். நிதி அமைச்சர் வீதியில் ஓட ஓட தாக்கப்பட்டார்.

சிறைச்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டனர். கைதிகள் தப்பி ஓடினர். இதற்கிடையே அரசியல்வாதிகளின் பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரங்களால் 72 பேர் கொல்லப்பட்டதாக இந்தியச் செய்தி நிறுவனமான என்டிரிவி தெரிவித்தது.

9ஆம் திகதி பிரதமர் சர்மா ஒலி தமது பதவியை இராஜினாமா செய்தார். இராணுவ தளபதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்தார். இணையம் ஊடாக கலந்துரையாடிய போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கியை பிரதமராக நியமிக்குமாறு ஆலோசனை கூறினர்.

11ஆம் திகதி இராணுவத் தளபதி ஜெனரல அசோக் ராஜ் சிகதெல், ஜனாதிபதி இராமசந்திர பவுடேல் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடி இறுதி முடிவை எடுத்தனர். அதன் படி, ஜனாதிபதி 12ஆம் திகதி சுஷிலா கார்க்கியை இடைக்கால பிரதமராக நியமித்தார். அத்தோடு, ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார். 

இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், சமூக வலைத்தளங்கள் விடயத்தில் இளைஞர்களின் கோரிக்கை நியாயமாக இருந்த போதிலும், சமூக வலைத்தளக் கம்பனிகளின் நிலைப்பாடு சரியா என்பதேயாகும். அந்த வலைத்தளங்கள் மீது பலர் பல குற்றச்சாட்டுகள் சுமத்தி வருவதனாலேயே அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.

அத்தோடு, தாம் விரும்பாத செய்திகள் தணிக்கை செய்வதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளின் கம்பனிகள் சிறிய நாடுகளின் அரசாங்கங்களைப் புறக்கணிப்பதையும் இங்குக் காணக்கூடியதாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார். ஆனால், அது நிரந்தர தடையல்ல என்பதை சமூக வலைத்தள நிறுவனங்கள் அறிந்திருந்தன.

இல்லாவிட்டால் சிலவேளை அன்றே இலங்கை அரசாங்கத்துக்கும் அந்நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்திருக்கக் கூடும்.
கடந்த நான்காண்டுகளில் தெற்காசியாவில் நான்கு நாடுகளில் இதேபோன்ற மக்கள் எழுச்சிகள் இடம்பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டு இலங்கையிலும், கடந்த வருடம் வங்காள தேசத்திலும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இந்தோனேசியாவிலும் இவ்வாறான போராட்டங்கள் வெடித்துள்ளன. அவற்றில் இந்தோனேசியாவில் போராட்டம் இன்னமும் நீடித்து வருகிறது.

கடந்த வருடம் ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டமாகவே வங்காள தேசத்தில் போராட்டம் ஆரம்பமாகியது. அரசாங்க தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காள தேசத்தை உருவாக்கிய ஆய்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கும் நடைமுறைக்கு எதிராகவே தொழில் வாய்ப்பின்மையை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கே 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய அரசாங்கத்தின் உதவியோடு போரிட்டது. எனவே, தொழில்துறையில் இந்த இட ஒதுக்கீடானது ஆளும் கட்சியில் ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாகவே அமைந்தது.

ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புத் துறையினர் நடத்திய தாக்குதல்களால் பல மாணவர்கள் கொல்லப்பட போதிலும், நிலைமை கட்டுக்கடங்காது போய்விட்டது. அத்தோடு, வங்காள தேச உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இரத்துச் செய்தது. ஆயினும், ஏற்கெனவே அரச உயர் மட்டத்தில் இடம்பெறும் பாரியளவிலான ஊழல்களுக்கு எதிராகக் குரல்கள் எழ ஆரம்பித்தன. சமூக வலைத்தளங்களில் அது முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டது.

அக்கட்டத்தில் ஏற்கெனவே 300க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். ஹசீனாவின் அரசாங்கம் பேராட்டத்துக்கிடையே அவற்றை அடக்கும் நோக்கில் அடிக்கடி இணைய வசதிகளைத் துண்டித்தமை இளம் தலைமுறையினரை மேலும் ஆத்திரமூட்டியது. வன்முறை பரவியது. கோட்டாபய ராஜபக்‌ஷவைப் போலவே பிரதமர் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி ஓடி விட்டார். எதிர்க்கட்சித் தலைவி காலிதா சியா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடிய இராணுவத் தளபதி ஜெனரல வகர்-உஸ்-ஸமான் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவுவதாக அறிவித்தார். அதன் பிரகாரம், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணரான முஹம்மத் யூனூஸ் அரச தலைவராகக் கடந்த வருடம் ஒகஸ்ட் 8ஆம் திகதி ஜனாதிபதி முஹம்மத் சஹாபுத்தீன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

இந்தோனேசியாவிலும் இலங்கை, வங்காள தேசம் மற்றும் நேபாளத்தில் போலவே வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும்  சுரண்டல் ஆகியவற்றால் கடந்த பெப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. சில வாரங்களுக்குப் பின்னர் நிலைமை தணிந்து கடந்த மாத இறுதியில் அவை மிகப் பயங்கர உருவத்தில் மீண்டும் வெடித்து நாடெங்கிலும் பரவின.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டு வசதி கொடுப்பனவாக மாதமொன்றுக்கு 3,000 டொலருக்கு மேலாக (இலங்கை பணத்தில் சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய்) பெறுகிறார்கள் என்பது தெரிய வந்ததை அடுத்தே நிலைமை மோசமாகியது.
இலங்கை, வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் நேபாளம் ஆகிய நான்கு நாடுகளிலும் மக்களின் பிரதான பிரச்சினையன்றி தற்செயலான ஒரு காரணியே போராட்டங்களுக்கு திடீர் விசையாக அமைந்தன.

இலங்கையில் மின் வெட்டு, வங்காள தேசத்தில் இட ஒதுக்கீடு, இந்தோனேசியாவில் வீட்டு வசதிக் கொடுப்பனவு, நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கான தடை இவ்வாறு விசையாக அமைந்தன.

நான்கு நாடுகளிலும் இரண்டாம் கட்டமாகவே பிரதான பிரச்சினையான ஊழல், உறவுச் சலுகை, அரசியல்வாதிகளின் பகல் கொள்ளைகள் ஆகியன சுலோகங்களாகக் களமிறங்கியுள்ளன.

நான்கு நாடுகளிலும் போராட்டக்காரர்களுக்கு மத்திய தலைமைத்துவம் இருக்கவில்லை. தற்செயலாக முன்வந்தவர்கள் கூட்டுத் தலைமைத்துவம் வழங்கினர். போராட்டக்காரர்கள் ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கமாகக் கொண்டாலும், அதற்கடுத்து என்ன செய்வதென்ற அரசியல் குறிக்கோள் அவர்களிடம் இருக்கவில்லை.

அதன் காரணமாக இந்தோனேசிய தவிர்ந்து ஏனைய மூன்று நாடுகளிலும் ஆட்சி கவிழ்ந்தாலும் ஆட்சி முறை மாற்றம் உடனடியாக சாத்தியமாகவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X