2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பலம் பெறத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள்

Administrator   / 2017 மே 01 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -  90)

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

பல்கலைக்கழக  மாணவர்களின் போராட்டம்  

1983 பெப்ரவரி 24 ஆம் திகதி பேராதனை, களனி மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஏற்கெனவே கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் முன்னெடுத்து வந்த, வகுப்பு பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.  

கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் தமது வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  

 பல்கலைக்கழக மாணவர்கள் தம்மில் ஒருவர் பாதிக்கப்படும் போது, அதற்காக இணைந்து குரல்கொடுப்பது புதுமையல்ல. ஆனால், இந்த நிலைமை மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமை தலைகீழான வரலாறும் பல்கலைக்கழகங்களில் எழுதப்பட்டது என்பதுதான் மறுக்கப்பட முடியாத உண்மை.   

பலம்பெற்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள்  

1983 ஆம் ஆண்டு என்பது இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், இலங்கை வாழ் தமிழர் வரலாற்றில், இவ்வளவும் ஏன்? இலங்கை வரலாற்றிலேயே மறக்கப்பட முடியாத ஒரு வருடம்.  

 இலங்கை வாழ் தமிழர்களின் எதிர்கால அரசியலை, போராட்டத்தை, தலைவிதியை நிர்ணயித்த வருடம் என்று சொன்னால் கூட மிகையாகாது.   

தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வி; தமிழ் அரசியல் தலைமைகளின் இணக்கப் போக்கை உதாசீனம் செய்த இலங்கை அரசாங்கத் தலைமைகளின் மெத்தனப்போக்கு; தமிழ் மக்களின் அபிலாஷைகள் மீது அவர்கள் காட்டிய பராமுகம்; தமிழ் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்குமுறைகள்; வன்கொடுமைகள் எல்லாம் ஒன்றிணைந்து தமிழ் இளைஞர்களை ஆயுதவழியில் விடுதலையை நோக்கிச் செல்ல வைத்ததுடன், தமிழ் மக்கள் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க அல்லது அதன் மீது அனுதாபம் கொள்ள வேண்டிய நிலைக்குச் செல்லவேண்டிய சூழலையும் உருவாக்கியது.   

இந்த இடத்தில், வடக்கு-கிழக்கில் பலம்பெற்றுக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகிறது.   

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புதிய ஆயுதங்களுடனும் அதிகரித்து வந்த நிதிப்பலத்துடனும் பலம்பெற்றுக் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பற்றி யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த டபிள்யூ.பீ.ராஜகுரு கூறியதை டேவிட் செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “ஸ்டேலிங் சப்-மெஷின் துப்பாக்கிகள், தன்னியக்க ரைபிள்கள், 303 இலக்க ஆயுதங்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். 

இவற்றில் சில தாக்குதல்களிலும் சுற்றி வளைப்புகளிலும் அவர்களால் கைப்பற்றப்பட்டவை. ஆனால், ஏனையவை சாதாரணமாக இங்கு கிடைக்கப் பெறுபவை இல்லை. அவர்களுக்கான நிதி,  வெளிநாட்டில் வாழும் தமிழர்களால் திரட்டப்படுகிறது. அவர்கள் சுத்தமான கெரில்லாப் பயங்கரவாதிகள். அவர்களை அடக்குவது கடினமாகிறது என்பதுடன் அவர்களுடைய திறன்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது” என்கிறார்.  

 இதேபோல இலங்கை இராணுவத்தின் படைகளின் தலைமை அதிகாரியாக இருந்த திஸ்ஸ வீரதுங்க, விடுதலைப் புலிகள் பற்றிச் சொன்னவற்றையும் டேவிட் செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
 “நேர்மையாகச் சொல்வதானால் நாங்கள் அவர்களை விட முன்னிலையில் இல்லை. யாழ்ப்பாணத்தில் படையினர் ஒரு தீப்பெட்டியோ, பற்பசையோ வாங்க வேண்டுமானால் கூட பெரும் பார ஊர்தியில் படையோடு செல்லவேண்டியுள்ளது. தாக்குதலின் ஆரம்பம் பயங்கரவாதிகளின் கையிலேயே உள்ளது. அவர்களே நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்கிறார்கள். எங்களால் பதிலடிதான் கொடுக்க முடிகிறது. எங்களின் அச்சம் ஆழமாகிறது.

காரணம் விடுதலைப் புலிகளுக்கான அரசியல் பயிற்சி வழங்குவதென்பது பிரித்தானியாவிலிருந்து இணைப்பூக்கம் செய்யப்படுகிறது. இதற்கு மேற்காசிய தொடர்புமுண்டு. யாழ்ப்பாணத்திலுள்ள 16 பொலிஸ் நிலையங்களில் ஒன்பது மூடப்பட்டுவிட்டன” என்றார்.   

இவற்றைச் சுட்டிக் காட்டிய டேவிட் செல்போர், விடுதலைப் புலிகளை அடக்குவதில் பொலிஸாரும் இராணுவமும் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம், விடுதலைப் புலிகளுக்கு அவர்களுடைய சமூகம் பாதுகாப்பளிப்பதாகும் என்றும் குறிப்பிடுகிறார்.   

உண்மையில், இது குறிப்பிடப்பட்டாக வேண்டியதொரு விடயம். தமிழ் இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, அரச இயந்திரம் அடக்கியொடுக்குவதற்கு ஏறத்தாழ மூன்று தசாப்தகாலம் தேவைப்பட்டிருக்கிறதென்றால், அதற்கு அந்தப் போராளிகளுக்கு அவர்கள் போராடிய சமூகமும் அம்மக்களும் அளித்த ஆதரவும் பாதுகாப்பும்தான் காரணம்.   

பயங்கரவாதிகளுக்கு அந்த மக்கள் ஆதரவளித்தார்கள் என்று அவர்களைக் குற்றம் சுமத்துவதைவிட, பயங்கரவாதிகள் உருவாகுவதற்கும் அதை அந்தச் சமூகத்தின் சாதாரண மக்கள் ஆதரிப்பதற்கும் என்ன காரணம் என்று தேடினால் மட்டுமே, இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான மூல காரணங்களை உணர்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம், நீடித்து நிலைக்கத்தக்க சமாதானத்தை உருவாக்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கமும் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் முகம்  

இந்த நிலையில், 1983 மார்ச் 7 முதல் 15 வரை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில், அணிசேரா நாடுகளின் ஏழாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தேசிய விடுதலைக்கான தமிழ் மக்களின் போராட்டம் என்ற தலைப்பிடப்பட்ட குறிப்பாணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.   

“உலக தேசங்களின் சமூகத்துக்கு, இலங்கை தன்னை பௌத்தத்தின் கொள்கைகளான அமைதி மற்றும் தர்மத்தைப் பின்பற்றும், அதியுன்னத அரசியல் தத்துவமான சோசலிஸ ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும், நடுநிலையான அணிசாரா பாதையை முன்னெடுக்கும் சொர்க்கபுரித் தீவாகக் காட்டிக்கொள்கிறது. 

இதற்கு முரண்படும் வகையில், இந்த அரசியல் முகமூடிக்குள் யதார்த்தமான உண்மைகளான, இனரீதியான அடக்குமுறை, அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்கள், பொலிஸினதும், இராணுவத்தினதும் மிருகத்தனமான வன்கொடுமை, இனவழிப்பு முயற்சி என்பன ஒளிந்திருக்கின்றன. 

இலங்கையின் ஆளும் மேல்தட்டு வர்க்கமானது, சுதந்திரம் பெற்றது முதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு இசைவான சர்வாதிகார அரசியல் திட்டமொன்றினூடாக, தமது அரசியல் அதிகாரத்தை தேசிய பேரினவாதம், மத வெறித்தனம் போன்ற சித்தாந்தங்களினூடாகவும் மற்றும் நிதர்சனத்தில் தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட, விசமத்தனமான, கொள்கைரீதியிலான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும் தக்கவைத்து வருகிறது.   

சர்வதேச மனிதநேய அமைப்புகளால் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை போன்ற சர்வாதிகார ஆட்சி கொண்ட ஒரு நாடானது, உலகப் பேரவையொன்றில் ஜனநாயகத்தையும் தர்மத்தையும் தூக்கிப்பிடித்தபடி நடைபயில்வது ஒரு சோகமான முரண்பாடு.   

எமது நோக்கமானது, இந்தப் போலித்தனத்தை அம்பலப்படுத்தி, உங்கள் முன் உண்மையான கதையை முன்வைப்பதாகும். 

எங்கள் மக்களின் பெரும் துன்பமும் வீரம்மிகு போராட்டமும் நிறைந்த உண்மைக் கதை. தமது சுயமரியாதைக்கும் விடுதலைக்குமாகப் போராடுவதைவிட, அவர்களுக்கு வேறு வழியில்லை. இல்லையெனில் அவர்கள் அடிமைத்தனத்துக்குள்ளும் மெதுவான மரணத்துக்குள்ளும் தள்ளப்பட்டு விடுவார்கள்” எனத் தமது தரப்பின் நியாயப்பாடுகளை விடுதலைப் புலிகள் உலக அரங்கில் எழுத்து மூலம் முன்வைத்தார்கள்.   

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியலின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக இதனைக் கருதலாம்.  

அந்தக் குறிப்பாணையில் ‘ஆயுதப் போராட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கமும்’ என்ற தலைப்பின் கீழ் தமது ஆயுதப் போராட்டத்தின் காரண காரியங்களை அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்: 
“தேசிய விடுதலைக்கான போராட்டத்திலே, ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் தோல்வி கண்ட நிலையிலே, அமைதி வழியிலே மக்களைப் போராடச் செய்வதற்கான தார்மீகப் பலம் தீர்ந்துவிட்ட நிலையிலே, எழுபதுகளிலே தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் உதயமானது. காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதத்துக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதப் புரட்சியைத் தவிர வேறு வழிகள் எமது மக்களுக்கு இல்லாது போன நிலையில்தான் ஆயுதப் போராட்டம் பிரபல்யமான போராட்ட வடிவமாக எழுச்சிபெற்றது. ஆகவே, ஆயுதப் போராட்டமென்பது தாங்கமுடியாத தேசிய அடக்குமுறை வரலாற்றின் உருவாக்கம். அது அடக்குமுறைக்குள்ளான எமது மக்களின் அரசியல் போராட்டத்தின் விரிவாக்கமும், தொடர்ச்சியும், முன்னகர்வுமாகும். புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் எமது இந்த விடுதலை இயக்கமானது மிகக்கவனமாகவும் எச்சரிக்கையுடனும் எமது போராட்டத்துக்கான குறிப்பிட்ட உறுதியான நியமங்களை ஆராய்ந்தறிந்த பின்பும், தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்கு எமது மக்களுக்கு தீர்மானமான போராட்டமொன்றைத் தவிர வேறு தெரிவில்லை; வரலாற்று நிலையை முழுமையாக உணர்ந்த பின்புமே எங்களால் உருவாக்கப்பட்டது. எமது முழுமையான உபாயமானது தேசியப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பவற்றை ஒருங்கிணைப்பதுடன், வெகுசனங்களின் முற்போக்கு நாட்டுப்பற்று உணர்வையும் சோசலிஷ புரட்சிக்கும், தேசிய விடுதலைக்குமான உழைக்கும் வர்க்கத்தின் மனச்சாட்சியையும் ஒன்றிணைப்பதாக அமைகிறது. எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டமானது, தமிழ் வெகுசனத்தின் பெரும் பகுதிகளால் ஆதரிக்கப்படுகிறது. எமது புரட்சிகர அரசியல் திட்டமானது ஏகாதிபத்திய மேலாதிக்கம் கொண்ட இலங்கை அரசிலிருந்து அரசியல் விடுதலை கோரும் எமது மக்களின் உறுதியான அரசியல் அபிலாஷையை வெளிப்படுத்துவதே மக்கள் எம்மை ஆதரிப்பதற்கான காரணமாகும்.”   

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் போராட்ட சக்தியாக மட்டுமன்றி, அரசியல் சக்தியாகவும் தம்மை முன்னிறுத்தத் தொடங்கியிருந்தார்கள். 

இதேவேளை மறுபுறத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) உள்ளிட்ட வேறு சில தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் கூடத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தன.   

தமிழ்த் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறத்தொடங்கிய ஆயுதக் குழுக்கள்  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த எழுச்சி, இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பெரும் சவாலாக மாறத் தொடங்கியிருந்தது. 

இந்த ஆயுதக்குழுக்களை வளர்த்து விட்டதில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.   

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் ஆரம்பகாலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் இன்றுவரை முன்வைத்து வருகிறார்கள்.   

இளைஞர்கள் ஆயுதக் குழுக்களாக செயற்படுவதை ஆரம்பத்திலே அவர்கள் ஆதரித்திருந்தாலும், அந்த ஆயுதக்குழுக்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அந்த ஆயுதக்குழுக்களுக்கு அதிகரித்து வந்த மக்களாதரவும் தமிழ்த் தலைமைகளின் இருப்பையும், அவர்களது அரசியலையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியது.   

தம்முடைய அரசியலுக்கு ஓர் இணைத்துணையாக இந்த இளைஞர்களும் ஆயுதக் குழுக்களும் இருக்கக்கூடும் என்று தமிழ்த் தலைமைகள் எண்ணியிருக்கலாம்.  

 ஆனால், தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் மாறத்தொடங்கியதானது, தமிழ் அரசியல் தலைமைகளுக்குப் பெரும் சிக்கலையும் சங்கடத்தையும் தோற்றுவித்தது. தமிழ் அரசியல் தலைமைகளும், ஆயுதக் குழுக்களும் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்தபோது இருதரப்பிடையே இருந்த முறுகல்நிலை அடுத்தகட்டத்தை அடைந்தது. அதன் விளைவாகத் தமிழ்த் தலைவர்கள் பலரினதும் உயிர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகின.   

உள்ளூராட்சித் தேர்தலும் முரண்பாடுகளும்  

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், நாடாளுமன்றத்துக்கான இடைத் தேர்தல்களோடு, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்த அரசாங்கம் தீர்மானித்தது. 1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்தன.   

இதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன. இந்த இடத்தில்தான் தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மிக வெளிப்படையான அரசியல் நிலைப்பாடு சார்ந்த பிளவொன்று உருவானது.   

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், குறித்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்கக் கோரியது. 

ஆனால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.   

மேலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட வெகு சிலர் முன்வந்தனர். 

தமது நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது, ஒரு போதும் இந்த ஆயுதக்குழுக்கள் தயவு தாட்சண்யம் காட்டியதில்லை.  

ஆகவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாட்டுக்கும், விருப்பத்துக்கும் மாறாகச் செயற்பட்டதற்கான விளைவுகள் பாரதூரமானதாக இருந்தன.  

( அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X