2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிராந்திய அரசியலும் ஐ.அமெரிக்கத் துருப்புகளை மீளப்பெறலும்

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

தலிபான் ஆயுதக்குழுவுக்கு எதிரான 17 ஆண்டுகால யுத்தம் முடிந்த பின்னர், இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அப்பேச்சுவா ர்த்தைகளுக்கான அவசியங்களும், கடந்தாண்டு இறுதிப்பகுதியில் இருந்து இரு தரப்புகளாலும் பேசப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அபுதாபியில் உள்ள தலிபான் பிரதிநிதிகளும், அடுத்த ஆண்டுக்கான சமாதான உச்சிமாநாட்டுக்கு முன்னரான பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர். 2001க்குப் பின்னரான காலப்பகுதியில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகித்தல்/வகிக்க தலிபான் முனைகின்றமை தொடர்பில், இவ்விரு தரப்புகளும் பேச்சுவார்த்தையை முன்வைத்திருந்ததுடன், தலிபானைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகித்தலே, அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தொடர்ச்சியாக அமைவதற்கு உறுதிப்படுத்தும் என வாதிட்டமை, அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மேலதிக பேச்சுவார்த்தையை நாடத்துதல், அதன் மூலமாக இரு தரப்புகளுக்கும் இடையிலான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பவற்றில் இணங்கியிருந்தனர்.

குறித்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில், தலிபான் விடுத்த கோரிக்கைகளில் ஒன்று, அனைத்து ஐ.அமெரிக்க துருப்புகளையும், ஆப்கானிஸ்தானிலிருந்து ஐ.அமெரிக்கா முதலில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதாகும். இதன்படி இம்மாதம் 20ஆம் திகதி, சிரியாவில் இருந்து தங்கள் துருப்புகளை மீளப்பெறுவதாக ஐ.அமெரிக்கா அறிவித்தது. அத்தோடு, ஆப்கானிஸ்தானிலுள்ள துருப்புகளை ஐ.அமெரிக்கா மீளப்பெறவுள்ளது என்பது, கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் தலிபான் இணையக்கூடியவாறான ஒரு திட்டத்தை, ஐ.அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டும் இருந்தது.

ஐ.அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, தலிபானின் கோரிக்கைக்கு ஐ.அமெரிக்கா இணங்கியதாகவே அமைகின்றது எனக் கருத முடியும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தலிபான் செய்தித் தொடர்பாளர், “உடனடியாக ஐ.அமெரிக்கா இவ்வாறாக எமது கோரிக்கைக்கு அமைவாகச் செயற்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. குறித்த விடயமானது, எமது பேச்சுவார்த்தை நன்னோக்கின் அடிப்படையில் தொடர்வதற்கு வழிவகுப்பதாக அமையும்”  எனத் தெரிவித்திருந்தார். எது எவ்வாறாயினும், குறித்த இந்நிலையானது, சர்வதேச அரசியல் மட்டத்தில் நிலையானதொரு தன்மையை ஏற்படுத்திடும் ஒரு செயற்பாடு அல்ல.

சிரியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்து தனது துருப்புகளை ஐ.அமெரிக்கா மீளப்பெறும் செயலானது, மொத்த மத்திய கிழக்கு சர்வதேச இராணுவப் போட்டி நிலைமைகளில் செல்வாக்குச் செலுத்தப்போகும் அதேவேளை, பாகிஸ்தானையும் இஸ்‌ரேலையும் பொறுத்தவரை, அவற்றின் பாதுகாப்புத் தொடர்பில் பிரத்தியேகச் செல்வாக்கை அந்நடவடிக்கை செலுத்தப்போகின்றது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் போரில், முன்னணி நட்பு நாடாக விளங்கியது, பாகிஸ்தான் ஆகும். இருக்க, பாகிஸ்தானிலும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையே அண்மைக்காலமாக இராஜதந்திரப் பிளவு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது குறிப்பாக, பிரதமர் இம்ரான் கான், பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டமை, சீனா தொடர்பில் அவர் நெருங்கிய கொள்கைகளைக் கொண்டவராக விளங்குகின்றமை, ஆயுததாரிகளுக்குத் தொடர்ச்சியாகவே பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகின்றது என ஐ.அமெரிக்கா குற்றஞ்சாட்டியமையுடன், குறித்த உறவு நிலை, மோசமடைந்திருந்தது. இதன் காரணமான, ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானை ஒரு தரப்பாக ஐ.அமெரிக்கா ஏற்றுக்கொ ண்டிருக்கவில்லை.

மறுபுறம், ஐ.அமெரிக்காவின் துருப்புகளை மீளப்பெறும் செயற்பாடு,  அநேகமாக எதிர்காலத்தில் பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஏனெனில், தலிபானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் புரிந்துகொள்ள முடியாத அரசாங்கக் கட்டமைப்பு இருத்தலானது, பிராந்தியத்தில் எதிர்காலத்தில் உள்நாட்டு யுத்தம், தொடர்ச்சியாக பிராந்திய யுத்தமொன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். ஐ.அமெரிக்காவும் இந்தியாவும் குறித்த விவகாரங்களில் நேரடியாகத் தலையிடாதவரை, குறித்த இரு நாடுகளுக்கும் இடையில் பிராந்திய யுத்தம் மூளுமேயானால், அது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.

இஸ்‌ரேலைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக இஸ்‌ரேலுக்கு ஐ.அமெரிக்கா முழுமையாக ஆதரவளித்த போதிலும், சிரியாவிலிருந்து துருப்புகளை மீளப்பெறும் ஐ.அமெரிக்காவின் குறித்த அறிவிப்பு, இஸ்‌ரேல் தொடர்பான சர்வதேச அரசியலில், ஐ.அமெரிக்கா, U திருப்பமொன்றை எடுத்தது எனலாம். சிரியாவில் இருந்து ஐ.அமெரிக்கத் துருப்புகளை மீளப்பெற, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவு, இஸ்‌ரேலுடன் தீவிரமான கொள்கை முரண்பாடொன்றை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அது, பதவிக்கு ட்ரம்ப் வந்ததில் இருந்து முதல் தடவையாக, இஸ்‌ரேல் சார்பு இல்லாத ஒரு கொள்கை வெளிப்பாட்டைக் காட்டியுள்ளதுடன். அது, இஸ்‌ரேலுடன் ஐ.அமெரிக்கா கொண்டுள்ள உறவை, மேலதிகமாகச் சிக்கலாக்கியுள்ளது. சிரியாவில் இருந்து சுமார் 2,000 வீரர்களைத் திரும்பப் பெறுவது, இஸ்‌ரேல் ஈரானியச் செல்வாக்குள்ள குறித்த பிராந்தியத்தில், தனது அதிகாரத்தைத் தொடர்ச்சியாக வைத்திருத்தலுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் என அஞ்சப்பப்படுகின்றது. இதன் பிரகாரம், இஸ்‌ரேல் குறித்த  பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது கடினமாக இருக்கும்.

ஐ.அமெரிக்க யூதக் குழு (AJC), ஐ.அமெரிக்கா தனது துருப்புகளை மீளப்பெறுதல் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அது “சிரியாவில் இருந்து அனைத்து ஐ.அமெரிக்கத் துருப்புகளையும் விலக்கிக் கொள்ள ஐ.அமெரிக்க ஜனாதிபதி எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய, ஜனாதிபதி ட்ரம்ப்பை நாம் கேட்டுக்கொள்கிறோம். ஐ.அமெரிக்க துருப்புகள், குறித்த பிராந்தியத்தில் செய்துகொண்டிருந்த அவர்களது வேலை முடிந்துவிடவில்லை. குறித்த மீளப்பெறுதல் நடைபெறுமாயின், குறித்த பிராந்தியத்தில் வென்றவர்கள் ரஷ்யா, ஈரான், ஐ.எஸ்.ஐ.எஸ் மட்டுமேயாகும்” என தெரிவித்திருந்தனர்.

இவை எல்லாவற்றையும் பார்க்குமிடத்து, குறித்த மீளப்பெறல் நடவடிக்கை, கணிசமாகவே மத்திய கிழக்கு பிராந்திய அரசியலில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றமை வெளிப்படுத்தப்படுகிறது. ஆயினும், குறித்த மீளப்பெறலுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன, மீளப்பெறலால் கைவிடப்போகும் ஐ.அமெரிக்காவின் இராணுவச் செல்வாக்குக்கு மத்தியில், ஐ.அமெரிக்காவால் குறித்த பிராந்தியத்தில் எவ்வாறு ஈடுசெய்ய முடியும் என்பவை, பொறுத்திருந்தே பார்க்கப்படவேண்டியவையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X