2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு

Editorial   / 2020 மே 31 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது.

இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைந்த, கொரோனா வைரஸின் உலகளாவிய  தொற்று, கடந்த 67 நாள்களாக இலங்கைத் தீவையும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், இலங்கைத் தீவு இச்சூழ்நிலைச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. சர்வதேச ரீதியில், இத்தொற்றுக் காரணமாகக் கணக்கிடப்பட்ட உயிர் இழப்புகளை, இலங்கையில் ஏற்பட்ட இழப்புக்களின் அளவோடு ஒப்பிடும்போது, இச்சவாலை முன்னேற்றகரமாக வெற்றி கொண்ட முறைமை துலாம்பரமாகும்.

இச் சூழ்நிலைக்கு முன்னதான கடந்த ஆண்டு ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளும் 2018இல், உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வளர்ச்சி கண்ட இலங்கை பொருளாதார துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் அளவு அதிகரிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகள், உல்லாசப் பயணத்துறை என்பன, கணிசமான பின்னடைவைச் சந்தித்தது.

 இதன் காரணமாக, பெருமளவு அந்நியச் செலாவணி வீழ்ச்சி கண்டது. இத்தகையதொரு சூழ்நிலையில், இலங்கை அரசானது யுத்தம் காரணமாகவும் யுத்தத்துக்குப் பின்னரான புதிய அபிவிருத்தி தொடர்பான சிந்தனை காரணமாகவும் வெளிநாடுகளில் பெற்ற நீண்டகால, குறுகியகால கடன்களையும் அதற்கான வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையை கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் சந்திக்க ஆரம்பித்தது. இத்தகைய நிலைவரம் என்பது, மக்கள் மீது அதிக வரிச் சுமையைத் தூண்டுவதற்கும் ஏதுவாக அமைந்தது. பெட்ரோலிய பொருள்களின் சர்வதேச சந்தை அனுகூலங்களை மக்கள் அனுபவிக்க முடியாத அளவுக்கு, விலை குறைப்புகளை மேற்கொள்ளாமல் அதில்வரும் இலாபத்தின் மூலம் பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கு உத்தேசித்தது.

எனினும், கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னரான அரசாங்கத்தின் சூழ்நிலையானது, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்ததால், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியுடன் இவ்வாண்டும் தேர்தல் ஆண்டாகவே கருத வேண்டிய அல்லது எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது. எனினும், எதிர்பாராத விதமாகச் சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம், சீனாவில் ஆரம்பித்து உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியதோடு, பெரும் உயிர்கொல்லி நோயாக விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக, உலக நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸ் மூலம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து, பெரும்பாலான உயிரிழப்புகளையும் தொற்றுகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில், இலங்கைத் தீவும் இதன் இலாப நட்டங்களை மேலும் ஒருபடி மேலாக அனுபவிக்கத் தொடங்கியது.

இதன் வெளிப்பாடாகவே, தனியார் தொழிற்றுறை ஊழியர் குறைப்பு, புதிய நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளமை என்பவற்றுடன் மேலும் வெளிநாட்டுக் கடன் உதவி பெறுவதற்கான முயற்சிகளும் சீனா, இந்தியா முதலான நாடுகளுடனான  கடன் உதவி நகர்வுகளும் அதன் ஊடான அரசியல் காய்நகர்த்தல்கள் ஒருபுறம் நிகழ மறுபுறம் மேலும், ஒருபடி விலை வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய் இலாபத்தை மேலும் மக்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றினூடாக இழந்த பொருளாதாரத்தையும் துண்டு விழும் தொகையையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், இலங்கையில் தேர்தல் சூழல் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றத் தீர்மானங்கள், ஜனாதிபதிக்கு இடையிலான அரசியல் ஜனநாயக ஆட்சி அதிகார இலாப நட்ட கணக்குகளும் தேர்தல் விடயத்தில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலைக்கு, இலங்கை அரசியல் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நிலைமைகளுடன் இலங்கை எதிர்க்கட்சி அரசியல் சூழலின் கையறுநிலை, கடந்த காலங்களை விட ஒருபடி மேலான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கட்டியெழுப்ப அதிகார சூழலை விரும்புகின்றமை வெளிப்படையாகும். அப்போதுதான் தாம் நீண்டகால நிலையான ஆட்சி முறைமை ஒன்றை ஏற்படுத்துவதுடன் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை மூலம் தமக்குச் சாதகமான முறையில் அரசியல் யாப்பைத் திருத்துவதுடன் 19ஆவது திருத்தத்தைச் செயலிழக்கச் செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

இந்த வகையில், பழையது கழிதலும் புதியன புகுவது போல் உலகில் மாற்றம் என்ற சொல்லைத் தவிர வேறு ஒன்றும் மாறாதது. இயற்கை என்பது அளிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பது இந்தக் கொரோனா வைரஸ் தொற்றில் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொற்று மூலம் இக்காலகட்டத்தில் உலகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் உலகம் முழுவதும் இயங்கவில்லை. போக்குவரத்துகள் மிகமிக அரிதாக இடம்பெற்றன. உலக நாடுகள் முழுவதும் விவசாய உற்பத்திகள் தவிர ஏனையவை இடை நிறுத்தப்பட்டன. ஊர்கள் அடங்கின; அடக்கப்பட்டன; மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். உலகமே தனிமைப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதிகள் நாணயப் புழக்கங்கள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் அதிக அளவில் தொற்று நீக்கப்பட்டது. வளிமண்டலம் சுத்தமடைந்தது; நீர் தூய்மை ஆகியது. இரசாயன உற்பத்திகள் தடுக்கப்பட்டன. உலகமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது. இது இலங்கைத் தீவுக்கும் பொருந்தும். இது நாணயத்தின், இரு பக்கம் போன்றது. நன்மை ஒரு பக்கம், தீமை ஒரு பக்கம் என்பது போல் அமைந்திருப்பது உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது.

இவ்வாறான சூழ்நிலையில், அரசு நிவாரணங்களை வழங்குவதாக அறிவித்து, அந்த அறிவிப்பில் ரூபாய் 5,000 பெற்றவர்களைத்தவிர  ஏனையவர்கள் அரச உத்தியோகத்தர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் என்பது, வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன் தொகையைப் பின்நோக்கிப் போட்டு வட்டியும் முதலுமாக அறவிட்டதுடன் கடன் எல்லை நிறைவடையும் காலம் மூன்று மாதம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மூன்று மாத கால வட்டித் தொகையுடன் வட்டியும் முதலும் கழிக்கப்படும்போது, இந்த உண்மை, கடன் பெற்றவர்களுக்குப் புரியும். இவற்றைவிட அத்தியாவசியப் பொருள்கள் சலுகை விலையில் சதோச நிறுவனத்திலும் ஒரு சில சில்லறைக் கடைகளிலும் சலுகை விலையில் இக்காலத்தில் விற்கப்பட்டன. இதை அனுபவித்தவர்கள் இலங்கையில் 25 சதவீதத்துக்கும் குறைவானவர்கள். 

மேலும், மே மாதம் மூன்றாம் வாரத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பும் அரசுக்கு இலாபமாயினும் அன்றாட உழைப்பில் கடன், வட்டி, வாழ்க்கைச் செலவு என வாழும் மத்தியதர, பாமர மக்களின் சம்பள அதிகரிப்பு அற்ற இந்தத் திடீர் செயலொழுங்கு, இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தற்காலிகமாகத் தவிர்க்க உதவினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகப் போகின்றது.

மேலும், பதவிநிலை உத்தியோகத்தர்கள் 15,000 ரூபாய் முகாமைத்துவக் கொடுப்பனவு நிறுத்தம், வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமை போன்ற அழுத்தங்கள் தங்கள் தொழில் உரிமை, வாழும் உரிமை மறுக்கப்படுவதோடு பெருமளவு பொருளாதார அழுத்தத்தை ஈடுசெய்ய அளவற்ற வரிகள், வட்டிகள்,  இடைக்காலத் தடைகள் மூலம் இறுக்கமான நிலைக்குக் கொண்டு வருவது என்பது, அரசாங்கம் தமது ஆட்சி அதிகாரத்தை, மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

எனவே, அரசின் இத்தகைய அணுகு முறைகள் தொடருமானால், ஆட்சி அதிகாரத்தை, அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, அரசு, மக்கள் நிலைமையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படத் தவறின் மக்களின் பொருளாதார வளம் என்பது பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதோடு பலவீனமுற்றுள்ள எதிர்க்கட்சிகள் பலம் உள்ள திட்டத்துடன் முன்னகரும்போது, ஆட்சி மாற்றம் மீண்டும் ஏற்படும்.

கடன் சுமையைத் தவிர்க்க, ஏற்கெனவே கடன் சுமையுடன் வாழும் மக்கள் மீது, பொருளாதாரச் சுமைகளைச் சுமத்துவது, அரசு மீதான வெறுப்பைத் தவிர வேறு ஒன்றையும் அரசு வெற்றி கொள்ளாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X