2025 மே 02, வெள்ளிக்கிழமை

மக்களை முட்டாள்களாகக் கருதும் வாக்குறுதி மூட்டைகள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையின்படி, அவர்களது நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவேன்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அண்மையில், தமது தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறினார்.   

இரண்டொரு நாள்களுக்குப் பின்னர், தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, “நான் ஜனாதிபதியானால், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,500 ரூபாயாக உயர்த்துவேன்” என்று கூறியிருந்தார்.   

தாம் பதவிக்கு வந்தால், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாகக் கோட்டா, அநுராதபுரத்தில் நடைபெற்ற தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். அதையடுத்து, சஜித்தும் தமது பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது, அதே வாக்குறுதியை வழங்கியிருந்தார்.  

தேசிய மக்கள் சக்தியின் சார்பில், ‘திசைக்காட்டி’ச் சின்னத்தில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க ஆகியோர், இவ்வாறு வாக்குறுதி அளித்தால், அவர்கள் நேர்மையாகவே இந்த வாக்குறுதிகளை வழங்குவதாக ஓரளவுக்காவது நம்பலாம். ஏனெனில், அவர்களது கட்சிகள் ஒருபோதும் ஆளும் கட்சியாக இருந்ததில்லை.  

ஆனால், கோட்டாவும் சஜித்தும் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளிலும் பெரும் புள்ளிகள். 
கோட்டாபய அரசியல்வாதியாக இருக்காவிட்டாலும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரை, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்தில் பலம்வாய்ந்த ஒரு நபராக இருந்தார். நாட்டில், உப-ஜனாதிபதி பதவி இல்லாவிட்டாலும், அவர் அக் காலத்தில் உப-ஜனாதிபதியைப் போல் செயற்பட்டதாகவும் கூறலாம். 

பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவர், தமக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித தொடர்பும் இல்லாத விடயங்களிலும் முடிவுகளை எடுக்கக் கூடியவராக அதிகாரத்துடன் இருந்தார். 
எனவே, மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து இருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டும் எனத் தமது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் எடுத்துரைக்கவும் இல்லை.   

சில மாதங்களுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளம் கேட்டுப் போராடும் போது, கோட்டா ‘வியத் மக’, ‘எலிய’ போன்ற கருத்தரங்குகளை நடத்திக் கொண்டு இருந்தார். அதன் மூலம், நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்து வந்தார். ஆனால், அந்தக் கருத்தரங்குகளில் தோட்டத் தொழிலாளர் ஒருபுறமிருக்க, பொதுவாகத் தோட்டத் துறையையாவது கருத்தில் கொள்ளவில்லை.   

சஜித், ஆளும் ஐ.தே.கவின் பிரதித் தலைவர். அவர், 2015 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துள்ளார். அவரால், இந்தக் கால கட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்திருக்க முடியாது தான்; அவர் சம்பந்தப்பட்ட அமைச்சரோ, பிரதமரோ அல்ல. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தைக் கேட்டுப் போராடும் போது, குறைந்த பட்சம் அதைப் பற்றித் தமது கருத்தையாவது தெரிவித்திருக்கவில்லை.   

ஜனாதிபதி வேட்பாளர்களில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மட்டுமே, தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை, ஒரு வேலைத் திட்டமாக முன்வைத்திருக்கிறார். ஏனையவர்கள், அதிலும் குறிப்பாக பிரதான இரு வேட்பாளர்களும் வாய்க்கு வந்தவற்றை எல்லாம், வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றனர்.   

தாம் பதவிக்கு வந்தால், மறு நாளே பல குற்றங்களுக்காகத் தற்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவம், ஏனைய படை வீரர்களை விடுதலை செய்வதாக, கோட்டா, தமது முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.   

இந்த வாக்குறுதியை, அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்? 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்தாலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே, அவ்வாறு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு ஜனாதிபதி நினைத்தால், அவ்வாறு சிறையில் உள்ளவர்களை, நீதிமன்றத்தின் உத்தரவின்றி விடுதலை செய்ய முடியுமா?   

முன்னர் என்றால், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திருத்துமாறு அல்லது, அவற்றுக்கு நீதிமன்றத்தில் போதிய சாட்சிகளை முன்வைக்காமல் இருக்குமாறு அவர், பொலிஸ் மாஅதிபரைப் பணிக்கலாம்.   

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயிரக் கணக்கான ஊடக அறிக்கைகளை விடுத்தவரான தயா மாஸ்டர், புலிகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று, இரகசியப் பொலிஸார் கூறியது போன்றதொரு நிலைமையை உருவாக்கலாம்.   

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்று, அவ்வியக்கத்துக்குப் புத்துயிரூட்ட முயற்சித்து வரும் போது, ‘கே.பி’ எனப்படும் குமரன் பத்மநாதன், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்தை ஆயுதப் போர் மூலம் கவிழ்க்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வழக்குத் தாக்கல் செய்ய முடியாத நிலையை, உருவாக்கியதைப் போன்றதோர் நிலைமையை உருவாக்கலாம்.  

19 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்போது அவ்வாறு செய்யவும் முடியாது. ஏனெனில், ஜனாதிபதிக்கு முன்னரைப் போல அரசமைப்புச் சபையின் ஒப்புதலின்றி, பொலிஸ் மாஅதிபரை நியமிக்கவோ பதவிநீக்கம் செய்யவோ முடியாது. எனவே, ஜனாதிபதியின் உத்தரவுகளை பொலிஸ் மாஅதிபர் உதாசீனம் செய்தால், கோட்டா என்ன செய்யப் போகிறார்?   

எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் சட்டத்துக்கு புறம்பான வழிகளிலன்றி பொலிஸ் மாஅதிபர் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. அவ்வாறாயின், கோட்டா இந்தப் படை வீரர்களை, எவ்வாறு விடுதலை செய்யப் போகிறார்? சட்டத்துக்குப் புறம்பான வழிகளைக் கையாளப் போகிறாரா?   

இந்த வாக்குறுதிகள், எவ்வளவு பொறுப்பற்ற முறையில் வழங்கப்படுகின்றன என்பதைக் கோட்டாவின் சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இப்போது வழங்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால் தெளிவாகிறது.   

ஸ்ரீ ல.சு.ககாரர்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்னரே, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டனர். ஆயினும், இன்னமும் அவர்களுக்குப் பொதுஜன பெரமுனவின் தேர்தல் மேடைகளில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில், பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு எதிராகப் கூச்சலிட்டு வருகிறார்கள். எனவே, இப்போது அவர்கள் தனியாகப் கூட்டங்களை நடத்தி,கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.   

அதேவேளை, கோட்டாவின் ஆட்சியின் கீழ், தமக்கு நாளை என்ன நடக்கப் போகிறது என்பதும் அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான், அவர்கள் பொதுஜன பெரமுனவுடன் மட்டுமல்லாது, கோட்டாவுடனும் தனித்தனியான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர்.   

கோட்டாவின் ஆட்சியின் கீழ், தமது எதிர்காலத்தைப் பற்றியே உத்தரவாதம் இல்லாத ஸ்ரீ ல.சு.க தலைவர்களும் கோட்டா பதவிக்கு வந்தால், மக்களுக்கு அது கிடைக்கும்; இது கிடைக்கும் என்று வாக்குறுதி வழங்கி வருகிறார்கள்.  

கோட்டாவின் ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெறும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்துக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என ஸ்ரீ ல.சு.கவின் பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அண்மையில் கூறியிருந்தார்.   

வருட மொன்றுக்கு சுமார் 150,000 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறுகிறார்கள். ஆனால், பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு, சுமார் 30,000 மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அவ்வாறிருக்க, ஐந்து மடங்கு மாணவர்களுக்கு, கோட்டா எவ்வாறு வசதிகளைச் செய்து கொடுக்கப் போகிறார் என்பதைப் பேராசிரியர் பியதாச விளக்கவில்லை.   

வாக்குறுதி புராணம்

ஐக்கிய தேசியக் கட்சியில், திறமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாஸவா?   

பொதுஜன பெரமுனவில் சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவா, கோட்டாபய ராஜபக்‌ஷவா?   
சஜித்தும் கோட்டாவும் அவர்களது தேர்தல் பிரசார கூட்டங்களின் போது, அவிழ்த்துவிடும் வாக்குறுதி மூட்டைகளைப் பார்க்கும் போது, இந்தக் கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.   
ஏனெனில், மஹிந்த அவரது ஆட்சிக் காலத்தில் செய்யாதவற்றைத் தாம், தமது ஆட்சிக் காலத்தில் செய்வதாகக் கோட்டா வாக்குறுதியளித்து வருகிறார்.   

உதாரணமாக, “பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவேன்” என, கோட்டா கூறுகிறார். அவ்வாறாயின், மஹிந்த தமது 10 ஆண்டு கால ஆட்சியின் போது, ஏன் அவ்வாறு செய்யவில்லை. ஒன்றில், கோட்டாவைப் போல் மஹிந்த திறமையானவரல்ல; அல்லது, கோட்டாவின் வாக்குறுதி ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை.   

சிலவேளை, கோட்டா நேர்மையாகவே அதைச் செய்ய நினைக்கிறார் என்றால், அவர், தமது சகோதரர் ஆட்சி செய்யும் போது, அதைச் செய்யுமாறு அவரை, ஏன் தூண்டவில்லை, அதைச் செய்யும் முறையைத் தமது சகோதரருக்கு, ஏன் எடுத்துரைக்கவில்லலை?  

இதே கேள்விகளைச் சஜித்தின் வாக்குறுதிகள் தொடர்பாகவும் எழுப்பலாம். ரணில் செய்யாதவற்றைத் தாம் செய்வேன் எனக் கூறும் சஜித், ரணிலை விடத் திறமையானவரா? அவரிடம் இப்போது இருக்கும் நல்ல கருத்துகளை, ரணில் பிரதமராக இருந்த காலத்தில், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை அவர் ஏன் தேடவில்லை?  

உண்மையிலேயே, இலங்கையின் தேர்தல் வரலாறானது, வாக்குறுதிகளின் வரலாறு என்றே கூற வேண்டும். இலங்கை மக்கள் சுதந்திரத்துக்குப் பின்னர், ஏறத்தாழ சகல தேர்தல்களின் போதும், அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.   

அது எந்தளவுக்கு என்றால், கடலே இல்லாத பிபிலப் பகுதிக்குச் சென்று, அப்பகுதிக்கு துறைமுகம் ஒன்றை வழங்குவதாக விஜயாநந்த தஹநாயக்க வாக்குறுதி அளித்ததாக, மக்கள் மத்தியில் கதைகள் இருக்கின்றன. தஹநாயக்க என்பவர், 1959 ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்க கொல்லப்பட்டதன் பின்னர், 1960 ஆம் ஆண்டு வரை, சில மாதங்கள் மட்டும் பிரதமராக இருந்தவர்.  

1965 ஆம் ஆண்டு, பிரதமர் டட்லி சேனநாயக்க பதவிக்கு வரும் போது, இரண்டு கொத்து அரிசி மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. (அக் காலத்தல் மெற்றிக் அலகுகள் பாவனையில் இருக்கவில்லை. கொத்து, இறாத்தல் போன்ற பிரிட்டிஷ் அலகுகளே பாவனையில் இருந்தன)  
 டட்லியின் காலத்தில், அந்த மானியம் இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கொத்து அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. எனவே, தாம் சந்திர மண்டலத்திருந்து கொண்டு வந்தேனும் அந்த மானிய விலையிலான இரண்டு கொத்து அரிசியை வழங்குவதாக, 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது,சிறிமா பண்டாரநாயக்க கூறினார். ஆனால், அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேறவில்லை.   

நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் வாரத்துக்கு எட்டு இறாத்தல் அரிசியோ, வேறு தானியமோ மானிய விலையில் வழங்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மக்களுக்கு வாக்குறுதியளித்தது. அது அந்தத் தேர்லின் போது, ஐ.தே.கவின் சுலோகமாகவே இருந்தது. பதவிக்கு வந்ததன் பின்னர், ஐ.தே.க தலைவர்கள் அந்த வாக்குறுதியை மறந்துவிட்டனர்.   

அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, தாம் ஒரு தார்மிக சமுதாயத்தை உருவாக்குவதாக, 1982 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது, கூறினார். ஆனால், அதன் பின்னர் அவரது ஆட்சி மிகவும் பயங்கரமானதாக இருந்தது.   

2000 ஆம் ஆண்டு வரும் போது, சகலருக்கும் வீடுகள், கல்வி, சகல வசதிகளும் வழங்கப்படும் என்பதே, 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வாக்குறுதியாக இருந்தது. ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது மகனும் அதே வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.   

1994, 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது சந்திரிகா குமாரதுங்கவும் 2005, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்‌ஷவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தார். 2015 ஆம் ஆண்டு, ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நல்லாட்சியை உருவாக்குவதாகக் கூறினர். அவை எதுவுமே நடைபெறவில்லை.  

இன்னமும் தான், அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை மூட்டை மூட்டைகளாக வழங்கி வருகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .