2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மதத்தைத் துணைக்கு அழைத்தல்

Johnsan Bastiampillai   / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 23 

 

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசியல் அதிகாரத்துக்கான அதிவலதின் போர் ஒவ்வொரு நாளும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கண்டம் முழுவதும் இந்த எழுச்சிமிக்க வலதுசாரி இயக்கங்களை இயக்குவது எது? எந்தச் சர்வதேச சக்திகள் அவர்களை இணைக்கின்றன, ஏன் இணைக்கின்றன? அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுகிறார்கள்? அரசாங்கத்துக்கு உள்ளும் அதற்கு அப்பாலும் இடதுசாரிகளின் பதில் என்னவாக இருக்க வேண்டும்? இவை இன்றைய முக்கிய கேள்விகளாகும்.

சமீபத்திய தசாப்தங்களில் இலத்தீன் அமெரிக்காவில் சுவிசேஷ தேவாலயங்கள் அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் முன்னிலைக்கு வந்துள்ளன. தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும் எல்லைகளை ஊடுருவி, பொதுமக்களின் ஒரு பகுதியினர் ஆதரிக்காத நிகழ்ச்சி நிரல்களை அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

குறிப்பாக குடும்பம், பாலினம் அல்லது பாலியல் தொடர்பான பிரச்சினைகள் என்று வரும்போது, இலத்தீன் அமெரிக்க சமூகங்களில், இத்தேவாலயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. கடந்த காலங்களில், இந்தத் தேவாலயங்களின் செல்வாக்கு, அவர்களின் சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. 

இன்று, அரசியல் மையநீரோட்டத்தில் அவர்களின் அரசியல் கட்சி அல்லது தேர்தல் பிரதிநிதித்துவம், எச்சரிக்கை மணிகளை அடிக்க ஆரம்பித்துள்ளன. இது ஜனநாயகம் மற்றும் சில நிறுவப்பட்ட உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகவும், அதிவலதின் வளர்ச்சிக்கு வாய்ப்பானதாகவும் அமைந்து விடுகிறது. 

இலத்தீன் அமெரிக்காவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 22 சதவீதம் பேர் சுவிசேஷகர்களாக அடையாளப்படுத்துகிறார்கள். இது நீண்ட காலமாக தன்னை கத்தோலிக்கராகக் கருதும் ஒரு பிராந்தியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும். பெரும்பான்மையானவர்கள் (56 சதவீதம் பேர்) கத்தோலிக்கராக இருந்தாலும், ஒருபுறம் இந்த மதத்துடன் அடையாளம் காண்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுறம், சுவிசேஷ தேவாலயங்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கேள்வி யாதெனில், ஏன் இந்தத் தேவாலயங்கள், சிறுபான்மையினராக இருந்தாலும், பிராந்தியத்தில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இவை, எவ்வாறு அதிவலதின் வளர்ச்சிக்கு உதவுகின்றன? 

இவை வெவ்வேறு உள்நோக்கங்களைக் கொண்ட குழுக்கள், சமீப ஆண்டுகளில், குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், பெந்தகோஸ்தே, நியோ-பெந்தகோஸ்தே குழுக்கள் மிகவும் வளர்ச்சியடைந்தவை. இவற்றுக்கும் அதிவலதுக்கும் நெருக்கமான உறவுண்டு. இந்தக் குழுக்கள் தங்கள் நம்பிக்கை, பேய்கள் மீதான நம்பிக்கை, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தின் கருப்பொருளை அற்புதங்களின் கருப்பொருளைக் கொண்டு வகைப்படுத்துகின்றன.

இவர்களிடம் செழிப்பு இறையியல் (prosperity theology) என்ற விடயமும் செல்வாக்குச் செலுத்துகிறது. இது பொருளாதார செழுமைக்காக கடவுளுடன் ஓர் உடன்படிக்கையை நிறுவுவதைக் குறிக்கிறது. விசுவாசிகள் தேவாலயத்துக்கு எந்த அளவுக்கு நன்கொடை அளிக்கிறார்கள் என்பது அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

இது இலத்தீன் அமெரிக்காவில் தொழில்முனைவோர் பிரச்சினையுடன் தொடர்புடையது. மேலும், தொழில்முனைவோராக கருதப்படும் மக்கள், குறிப்பாக குறைந்த நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் இது மிகுந்த செல்வாக்குடையதாக மாறியுள்ளது.

‘பெந்தேகோஸ்தலிச’ இயங்கியல் என்பது, உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை தேவாலயங்களுக்குள் கொணர்ந்து, மக்களை நெருங்கும் நெகிழ்வுத்தன்மையில்  தனித்து நிற்கிறது. அவர்களின் தேவாலய சேவைகள், ஆராதனைகள் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. போதகர்கள் பொதுவாக அவர்கள் பிரசங்கிக்கும் சமூகங்களில் வாழ்கிறார்கள்; சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். 

கத்தோலிக்க மதகுருக்​களைப் போலல்லாமல், அவர்களால் திருமணம் செய்துகொள்ள முடிகிறது, அதனால்தான் அவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சமூக ஊடகங்களை மிகவும் விரிவாகப் பயன்படுத்துகின்றனர். சுவிசேஷ போதகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். 

சமுதாயத்தில் புதுமைக்கான ஆதாரங்களை அங்கிகரிப்பது மற்றும் வழிபாட்டில் அவர்களை இணைத்துக்கொள்வது போன்றவற்றில் அவர்களின் நெகிழ்வுத்தன்மை மிகுந்த பலனளிக்கிறது.  ‘சுவிசேஷ ராக்’ இசைக்குழுக்கள் இதற்கு சிறந்ததோர் உதாரணம். இசைக் கச்சேரிகள், ஆடல்பாடல்கள், களியாட்டங்கள் இந்தக் குழுக்களுக்கு மிகவும் வலுவான உணர்ச்சிகளை தூண்டுபவையாகவும் அணிதிரட்டல் உபாயங்களாகவும் பயன்படுகின்றன. 

இந்தத் தேவாலயங்கள் பெரும்பாலும் வணிக நிறுவனங்களைப் போலவே செயற்படுகின்றன; பின்பற்றுபவர்களுக்காக போட்டியிடுகின்றன. மேலும், அவர்களின் தேவாலயங்களுடன் உணவு மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள், குழந்தை பராமரிப்பு வசதிகளும் உள்ளன. 

இந்தப் பொழுதுபோக்கு மற்றும் பராமரிப்பு வசதிகள், குடும்பங்கள் மத போதனைகளைப் பெறும் இடங்களாகும். இந்தத் தேவாலயங்கள் இவ்வாறுதான் தமக்கான சமூகத்தை உருவாக்குகின்றன. பாரம்பரிய கத்தோலிக்க சமயத்தின் இறுக்கமான நடைமுறைகள் நிலவிவந்த சமூகங்களில், இந்தச் சுவிசேஷ தேவாலயங்கள், புதுமையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையனவாகவும் இருந்தமை மிகுந்த கவர்ச்சிகரமானதாக இருந்தது. 

இந்தத் தேவாலயங்கள் பொதுவாக சர்வாதிகார அரசியல் தலைவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, பிரேஸிலில் போல்சனாரோ, அமெரிக்காவில் டிரம்ப், பெருவில் ஆல்பர்டோ புஜிமோரி  ஆகியோர் சில உதாரணங்கள். இவர்களின் எதேச்சதிகாரப் போக்குகள் மற்றும் பாலினம், பாலியல் தொடர்பான பிரச்சினைகளில் பொதுவாக மிகவும் பழைமைவாத நிகழ்ச்சி நிரல் என்பன இத்தேவாலயங்களின் இயங்கியலோடு பொருந்திப்போகின்றன. 

பெந்தேகோஸ்தே சுவிசேஷகர்கள் தங்கள் அரசியல் ஈடுபாடு மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதில் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதன் மூலம் அவர்களின் இருப்பில் தனித்து நிற்கிறார்கள். ஏனெனில், குடும்பப் பிரச்சினை ஒரு தார்மிக நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதில் வெளிப்புறமாக மட்டுமல்ல, உள்நாட்டிலும் மையமாக உள்ளது. 

போதகர்களின் குடும்பங்கள் முன்மாதிரியாகக் காணப்படுவதால், அவர்கள் தேவாலயங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு வகையான தலைவர்களாக மாறுகிறார்கள். உதாரணமாக, நல்ல குடும்பத்தை முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டிய உதாரணபுருஷர்களாக இப்போதகர்கள் உள்ளார்கள். 

அதிவலது அரசாங்கங்களை உருவாக்குவதற்கு, இந்தத் தேவாலயங்கள் கடுமையாக உழைக்கின்றன. அதிவலது அரசாங்கங்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு பொருளாதார பரிமாற்றம் உள்ளது. எடுத்துக்காட்டாக, போல்சனாரோவின் ஆட்சியிலிருந்து, அவர்களின் தேவாலயங்கள் பொருளாதார ரீதியாக பயனடைந்தன. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பழைமைவாத தார்மிக நிகழ்ச்சி நிரலை நோக்கி அரசை இட்டுச் சென்ற உறுதியான கொள்கைகளில் இவர்களின் பங்களிப்புப் பெரியது. 

மற்றொரு எடுத்துக்காட்டு, பெருவிய தலைநகர் லிமாவின் அதிவலது மேயர் ரஃபேல் லோபஸ் அலியாகா; இராணுவம், பழைமைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் சுவிசேஷ போதகர்கள் ஆகியோரை இணைத்து  ஒரு கூட்டணியை அமைத்து, தனது அதிவலது கட்சியை நிறுவினார். 

இங்கு கத்தோலிக்கர்களும் சுவிசேஷ போதகர்களும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், எவ்வாறு கூட்டணி அமைக்கிறார்கள் என்ற வினா எழுவது இயல்பானது. பழைமைவாதமும் அதிவலதும் இக்கூட்டணியை சாத்தியமாக்குகின்றன. 

2018ஆம் ஆண்டு அர்ஜென்டீனியத் தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில், கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் இவ்விருவரும் கரங்கோர்த்துப் போராடினார்கள். இலத்தீன் அமெரிக்காவில் கவனிக்க வேண்டியது யாதெனில், பழைமைவாத கத்தோலிக்கர்களுக்கும் சுவிசேஷகர்களுக்கும் இடையே சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் உருவாகின்றன. பழைமைவாதக் கத்தோலிக்கர்களும் சுவிசேஷகர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து ஒற்றுமையுடன் செயற்படும் நேரங்களும் உள்ளன. இடதுசாரிகளுக்கு எதிராக, கம்யூனிசத்துக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக எனப் பலவற்றில் இவ்விரு குழுக்களும் கைகோர்த்துள்ளன.

கடந்த இரு தசாப்தங்களில் இந்தச் சுவிசேஷ சபைகள், அரசுகளில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவனவாக மாறியுள்ளன. சுவிசேஷ சபைகளின் ஆதரவு இல்லாமல் இலத்தீன் அமெரிக்காவில் ஆட்சி செய்ய முடியுமா என்ற கேள்வி இப்போது கேட்கப்படுகிறது. 

இவ்வினாவை ஆழ்ந்து நோக்கின், உருகுவேயில் அது சாத்தியமாகலாம். அர்ஜென்டினாவில் இன்னும் சாத்தியமாகலாம். பிரேஸிலில் அது சாத்தியப்படாமல் போகலாம். மெக்ஸிகோவில் இது சாத்தியமில்லை. சமூகத்தில் எத்தனை கத்தோலிக்கர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் உள்ளனர் என்பதில் அவர்கள் சுவிசேஷகர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகம் எவ்வளவு மதம் சார்ந்தது என்பது ஒரு முக்கியமான காரணியாகும். 

எடுத்துக்காட்டாக, மெக்சிகோ மதச்சார்பின்மையை மிகவும் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டிருப்பினும் மக்கள்தொகையில் 95 சதவீதமானோர் தங்களை மதம்சார்ந்து அடையாளப்படுத்துகிறார்கள். எனவே அதிவலதின் முக்கியமான ஆதரவுத்தளமாக தொடர்ந்து மதம் திகழ்கிறது. 

பிரேஸிலில் அதிவலதின் எழுச்சி, கொலம்பிய சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்தது. பிராந்தியமெங்கும் பாலின வேறுபாடுகளுக்கு எதிரான வெறுப்பரசியல், பெரு, சிலி, குவாட்டமாலா, ஹொண்டூரஸ் ஆகிய நாடுகளில் அதிவலதின் அரசியல் செல்வாக்கு என சுவிசேஷ சபைகளும் அதிவலதும் இணைந்து புதிய திசையில் இலத்தின் அமெரிக்காவை நகர்த்த முனைகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X