2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரணமும் சில கதைகளும்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி, தந்தையார் திடீரென்று காலமானார். அவ்வதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாவிட்டாலும், சொல்ல வேண்டிய சில கதைகளும் பகிரவேண்டிய சில செய்திகளும் பதிவாக்கப்பட வேண்டியவை. அதற்காக இந்தவாரப் பத்தியைப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்நிகழ்வுகள், இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் குறித்துத் தொடர்ந்து போதிக்கப்படும் கற்பிதங்கள் மீது கல்லெறிகின்றன.  

ஒருமரணம் தரும் வேதனையையும் அதிர்ச்சியையும், அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் மேலோங்கச் செய்யும்போது, விரக்தியும் வெறுப்புமே மிஞ்சுகின்றன. எந்தவொரு நோயுமற்ற மனிதனின் திடீர் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி ஒருபுறமும் என்ன நடந்தது என்ற விடைதெரியாத கேள்வி மறுபுறமுமாய் காலங்கள் கடக்கின்றன. 

அப்பாவின் மரணம் கொரோனா மரணம் என்று பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்ட நிலையில், அப்பாவை நன்கறிந்த வைத்தியர்கள், இது மாரடைப்பால் ஏற்பட்ட மரணமே என்று வாதிடுகிறார்கள். அது எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், நிர்வாக ரீதியாக ஒரு மரணத்தைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் ஏற்படுத்துகின்ற மனஉளைச்சல் சொல்லி மாளாதவை.

கொரோனா மரணம் என்று ‘சொல்லப்பட்ட’ ஒரு சமானியனின் உடலை, இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கு நிறையவே போராட வேண்டியிருந்தது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரை, இறுதியாகப் பார்க்க குடும்பத்தினருக்கு சில நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன; கொரோனா நல்ல சாட்டானது. 

இலங்கையில் எல்லாக் கொரோனா மரணங்களும் ஒரே மாதிரியானவையல்ல. சில அதிவிஷேசமானவை. அம்மரணச் சடங்குகளில் பலர் பங்குபெறலாம்; பிரித் ஓதலாம்; மரணத்தைக் கூட்டாக நினைவுகூரலாம். ஆனால், மரணித்த சமானியனை இறுதியாக ஒருதடவை பார்ப்பதற்கு, அதிகாரத்துடன் இடையறாது போராட வேண்டும். 

உலகில் இறக்கும் அனைவரும், மரியாதையான இறுதியாத்திரைக்கு உரித்துடையவர்கள். ஆனால், இப்போது இலங்கையில் நடப்பது அதுவல்ல. மரணித்த ஒருவரை மரியாதையாக வழியனுப்ப அனுமதியாத அரசாங்கத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் மனிதர்களையும் என்னவென்பது? மனித வாழ்வும் மனித மாண்பும் பொருளற்றுப்போன ஒரு தேசத்தில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத்தான். 

அப்பாவின் மரணத்துக்கு, ‘கொரோனா’ காரணமாக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து வீடு 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. 14 நாள்கள் முடிவடைந்த நிலையில், மேலும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது. 

“ஏன் மேலதிகமாக ஏழு நாள்கள்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை, பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழங்க முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யமுடியுமா என்று கேட்டால், “அவசியமில்லை, 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினால் போதும்” என்று சொல்லப்பட்டது.

21 நாள்களின் பின்னர் பரிசோதனை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டத்தை கிழித்து விட்டு, வெளியே செல்லலாம் என்று பதில் வந்தது. சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்க விரும்புகிறவர்களின் கேள்விகளுக்கான பதில்களோ செயல்களின் நியாயங்களோ என்றும் சொல்லப்படுவதில்லை. 

கொரோனா அச்சம், ஒருவகை மனநோயாக உருவெடுத்துள்ளது. அந்நோயை, எயிட்ஸ் நோய்க்கு நிகரானதாகச் சித்திரித்துப் பயம் காட்டும் போக்கு, அபத்தமானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட!

இரண்டு சம்பவங்களை இங்கு நினைவுகூர்கிறேன். எங்கள் வீடு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், எங்கள் வீட்டுக்கு யாரும் வராமல் இருப்பதை உறுதிசெய்யும் பணியை, அயலவர்கள் கண் துஞ்சாது முன்னெடுத்தார்கள். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்தவர்களைத் தடுத்து நிறுத்தி, பொருட்களை வாசலில் வைப்பதை அனுமதிக்கவில்லை. அப்பொருட்களை எடுக்க நாம் கதவைத் திறந்தால், எங்கள் வீட்டில் உள்ள கொரோனா வைரஸ், காற்றின் ஊடாக வெளியே வந்துவிடும் என்று சொன்னார்கள். 

எமக்கு, உணவுப்பொருட்களை கொண்டுவந்த நண்பனொருவனை இடைமறித்து எச்சரித்த அயலவர்கள், முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை; சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. ஆனால், நண்பனுக்குக் கொரோனா பற்றிப் பாடமெடுத்தார்கள். மிகக் கொடிய நோயொன்றுக்கு ஆளாகிய மனிதர்களைக் கொண்ட வீடாக எங்கள் வீடு பார்க்கப்பட்டது. இந்த மனநிலை, அச்சத்தின் விளைவிலானது. இந்த அச்சத்தை விதைத்தது யார்? இந்த அச்சத்தில் பயனடைவது யார்? இந்த அச்சம் நாட்டின் ஏனைய விடயங்களில் இருந்து மக்களைத் திசைதிருப்புகிறது.  

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவுடன் இலங்கையர்கள் அல்லற்படுகிறார்கள். ஆனால், இன்றுவரை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பதிலிறுப்பு ஒன்றைச் செய்ய இயலவில்லை. கொரோனா தொற்றை அரசாங்கம் கையாண்ட விதம், தொடக்கத்திலிருந்து தவறு. கொரோனா பற்றி மிகையான பீதியைக் கிளப்பியதும் போதாமல், எந்த முன்னேற்பாடுகளுமின்றி ஊரடங்கைப் பிறப்பித்து, மக்களை அல்லற்படுத்திய போதும் எவரும் மறுபேச்சுப் பேசவில்லை. 

அரசாங்கத்தின் அணுகுமுறையின் கோளாறுகளை, அரசியல் இலாப நோக்கு இல்லாமல், அறிவார்ந்த முறையில் மக்களிடையே பரப்புவதன் மூலமும் பரந்த உரையாடல் மூலமும் பிரச்சினையை கையாளச் சரியான வழிகளை ஆராயவும் எந்த அரசியல் கட்சிக்கும் துணிவிருக்கவில்லை. மக்களிடையே சென்று கலந்துரையாடும் மரபை, அரசியல் கட்சிகள் இழந்து நீண்டகாலமாகிவிட்டது.  

அரசாங்கம் போரை வென்றது போல, வைரஸையும் வெல்கின்றது என்ற வெட்டிப்பேச்சு உண்மை போல் தெரிந்த வேளை, ஊமையாய் இருந்தோர் புதிதாக எதை விமர்சிக்க இயலும்? மருத்துவ சேவையினர் ஆற்ற வேண்டிய பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தது தவறு என்று சொல்லும் தைரியம், பலரிடம் இல்லாத காரணம் இராணுவத்துடன் முரண்படத் தைரியமின்மையே. இலங்கை இன்னும் இராணுவமைய சிந்தனைவாதத்திலிருந்து வெளியேறவில்லை. எனவே அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும். 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்போம் என்று அறிவித்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதியை இழந்தது. 

இன்றுவரை கேட்கப்படாத கேள்வி யாதெனில், மக்களின் வாழ்வாதாரத்துக்கு கேடின்றி, தொற்றைத் தடுக்கும் வழிகளை அரசாங்கம் ஏன் விசாரிக்கவில்லை என்பது. இப்போது தடுப்பூசிகள் மூலம் தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் சொல்லிவருகிறது. தடுப்பூசி அனைத்துக்குமான தீர்வல்ல! 

உலக சுகாதார நிறுவனம் 2022 டிசெம்பரில் இத்தொற்று கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லியுள்ளது. அதுவரை என்ன செய்வது? மேற்குலக நாடுகள் போல மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளுக்குச் போகப்போகிறோமா?

ஆட்சியாளர்களுக்கு கொரோனா நல்லதொரு காரணமாகிவிட்டது. அனைத்தையும் அதன் மீது போடவும் பொறுப்புகளில் இருந்து நகரவும் இயலுமாகிறது. இலங்கையின் ஆட்சியாளர்களின் செயல்களைப் பார்க்கும் போது, டொன் கிஹோட்டே நினைவுக்கு வருகிறது. 

மிஹுவெல் டி செர்வான்டெஸ் 1605இல் ஸ்பானிய மொழியில் எழுதிய ‘டொன் கிஹோட்டே’ (Don Quixote) உலகின் அதி சிறந்த ஆக்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதை உலகின் முதலாவது நாவல் எனவும் கூறுவர். ‘லா மன்ச்சாவின் கூர்மதி மிக்க இடால்ஹோ டொன் கிஹோட்டே’ (The ingenious Idalgo Don Quixote of la Mancha) எனும் தலைப்பில் வெளியான இந்நாவலின் இரண்டாம் பாகம் 1615இல் வெளியானது. 

50 வயது தாண்டிய கிராமத்துக் கனவானான அலொன்ஸோ கிஹானோ, வீரசாகசக் கதைகள் பலவற்றை வாசித்து, அவற்றால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டு, தன்னையும் முன்னைய காலத்து வீரப் பெருந்தகைகளில் ஒருவனாகக் கற்பனை செய்து, தன்னை ‘லா மன்ச்சா என்ற ஸ்பெயினிலுள்ள பெருநிலப்பரப்பொன்றின் டொன் கிஹோட்டே’ என அழைத்துக் கொண்டு, சாகசச் செயல்களில் ஈடுபட விழைகிறான். தனது நோஞ்சான் குதிரைக்கு ‘றொசினாட்டே’ எனப் பெயரிடுகிறான். 

டொன் கிஹோட்டேயினது வீரசாகசப் பயணம் தொடர்கையில், யதார்த்தம் பற்றிய உணர்வே அவனிடம் இல்லாமல் போகிறது. டொன் கிஹோட்டே, வலிந்து வம்பை விலைக்கு வாங்கி, அடி உதையையும் அவமானத்தையும் பெற்றாலும், அவனுக்குத் தன்னைப் பற்றிய மயக்கம் தீராது, மேலும் கற்பனையான எதிரிகளுடன் மோதுகிறான். 

லா மன்ச்சா பீடபூமியின் நிற்கும் பெரிய காற்றாலைகள் அவனுக்குப் பயங்கர இராட்சதர்களாகத் தெரிகின்றனர். குதிரையில் ஏறிக் குத்தீட்டியுடன் காற்றாலைகளைப் போரிட்டுப் பலமுறை விழுகிறான். 

நூலின் இரண்டாம் பாகத்தில், டொன் கிஹோட்டேக்குக் காலங்கடந்து நிதானம் திரும்பிய போது, வாழ்க்கை பொருளற்றுப் போகிறது. டொன் கிஹோட்டே, ஏளனத்துக்குரிய ஒரு கதாநாயகன். தம்மைப் பற்றி மிகையான மதிப்புடையோராகத் தம்மாலேயே உலகை உய்விக்க இயலும் என எண்ணுவோருக்குரிய ஒரு படிமமாக டொன் கிஹோட்டேயைக் கொள்ளலாம். இலங்கையின்  டொன் கிஹோட்டே யாரென்பதை, நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .