Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 16 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி மாலை, கொழும்பு தொட்டலங்க பகுதியில் வசிக்கும் மக்களில் நூற்றுக்கணக்கானோர், முன்னர் விக்டோரியா பாலம் அமைந்திருந்த இடத்தில், தற்போது அமைந்திருக்கும் இலங்கை - ஜப்பான் நட்புறவு பாலத்தின் மீது மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அவர்கள், பாலத்தின் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பல மணித்தியாலங்களாக அந்தப் பகுதி முழுவதிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அந்த பாலத்தினூடாகச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள், முன்நோக்கிச் செல்லவோ, பின்நோக்கிச் செல்லவோ முடியாது, பல மணி நேரமாக முடங்கிக் கிடக்க நேரிட்டது. வெளிநாட்டுப் பயணங்களுக்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் நுற்றுக் கணக்காணவர்கள் செய்வதறியாது தவித்தனர். தொழிலுக்கு சென்றவர்களும் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களும் பெண்களும் என ஆயிரக் கணக்கானவர்கள் அந்த மாலை நேர நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.
அதனால், பெண்களும் பெரும் பாதுகாப்புப் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டது. வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களும் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களும் உயிராபத்தையும் எதிர்நோக்கினர். இது போன்று அந்த ஆர்ப்பாட்டத்தினால் பாதிப்படைந்தவர்கள் பலர்.
தாம் நீண்ட காலமாக வசித்து வரும் வீடுகளை உடைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களது கோரிக்கை நியாயமாக இருக்கலாம். அதற்காக அவர்கள் போராடுவதும் நியாயமாக இருக்காம். ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளக்கப்பட்டார்கள் என்றாலும், அதற்காக ஏனைய மக்களை இவ்வாறு இம்சிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்து ஒரு மாதத்துக்குப் பின்னர், நாம் ஏன் இப்போது அதைப் பற்றிப் பேசுகிறோம் எனப் பலர் சிந்திக்கலாம். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் அதை விடப் பயங்கரமானதோர் போராட்டத்தை நடத்தப் போவதாக கூறியிருப்பதே அதற்குக் காரணமாகும்.
அரசாங்கம் வாக்குறுதியளித்ததன் பிரகாரம், விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அறுவடை செய்த நெல்லை நியாயமான விலைக்கு விற்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கும் ம.வி.முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் தொழிற்சங்கப் பிரிவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டீ. லால் காந்த, தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால், கொழும்பு நகரின் நுழைவாயில்களான ஆறு பிரதான வீதிகளையும் முடி, கொழும்பை முற்றுகையிடுவோம் எனக் கூறியிருக்கிறார்.
அரசாங்கம், தொட்டலங்க போராட்டத்தை நடத்தியோர்களில் பலருக்கு, ஏற்கெனவே மாடி வீடுகளை வழங்கியிருப்பதால், அவர்களது போராட்டம் நியாயமற்றது என அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமற்றவை என எவருமே இதுவரை கூறவில்லை. அதற்காக போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு பூரண உரிமை இருக்கிறது. அது நியாயம் தான். அதற்காக கொழும்பை முற்றுகையிட்டால் பாதிக்கப்படப் போவது அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத அரச தலைவர்களல்லர், சாதாரண மக்களே.
அது, லால் காந்தவுக்குத் தெரியும். எனவே, எமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாம் ஆயிரக்கணக்கான மக்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்குவோம் என்றே அவர் கூறுகிறார். அவ்வாறு கூறவோ அல்லது அவ்வாறு செய்யவோ தொழிற்சங்கங்களுக்கு உரிமை இருகன்கிறது என்றதோர் அடிப்படையில் தான், அவர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அதற்கு அவர்களுக்கு யார் உரிமை வழங்கியது?
வைத்தியர்களின் போராட்டத்தின் போதும், அவர்கள் இவ்வாறே தான் நடந்து கொள்கிறார்கள். அவர்களும், எமது கோரிக்கைளை நிறைவேற்றாவிட்டால் நோயாளர்களை சாகவிடுவோம் என்றே மறைமுகமாகக் கூறுகிறார்கள்.
லால் காந்த கூறுவதைப் போல், கொழும்பு அவ்வாறு முற்றுகையிடப்பட்டால், பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளுக்குச் செல்லவோ, தொழிலுக்குச் செல்லவோ, பாடசாலைக்குச் செல்;லவோ, வைத்தியசாலைக்ளுக்குச் செல்லவோ முடியாது அவதிப்பட நேரிடும். நோயாளர்கள் உயிரிழக்கவும் கூடும். பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும். யாரோ உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பதற்காக, மக்கள் அவ்வாறு பாதிக்கப்பட வேண்டுமா?
விவசாயிகள், தமது நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மற்றவர்கள் ஒரு நாள் பாதிக்கப்பட்டால் என்ன என்றும் சிலர் கேட்கலாம். அதுவும் ஓரளவுக்கு நியாயம் தான். சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழுவினருக்காக ஏனைய குழுக்களும் குரல் கொடுக்கவும் தோள் கொடுக்கவும் வேண்டும் என்ற அர்த்தத்தில் அது நியாயம் தான். ஆனால், விவசாயிகளின் போராட்டத்துக்காக, நாம் இது போன்று கஷ்டங்களை எதிர்நோக்கினால் என்ன என்று பாதிக்கப்படப் போகும் அந்த மக்கள் தான் சிந்திக்க வேண்டும். எமக்காக ஏனைய மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகளோ அல்லது பேராடும் ஏனைய சங்கங்களோ சிந்திக்க முடியாது.
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாட்களை எண்ணிப் பார்த்தால், மக்களால் அவ்வாறு தியாகம் செய்ய முடியாது என்றே கூற வேண்டும். கடந்த ஒரு வருட காலத்தை எடுத்துக் கொண்டால், 2016ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களைத் தவிர ஏனைய 10 மாதங்களிலும், ஏறத்தாழ தினந்தோறும் ஏதாவது ஒரு தொழிற்சங்கமோ அல்லது மாணவர் சங்கமோ கொழும்பில் ஏதாவது ஒரு வீதியை அடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்;டம் செய்திருக்கிறது. சில நாட்களில் இரண்டு மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அதாவது, இந்தப் போராட்டங்களில் ஈடுபடாத மக்கள் தினந்தோறும் அவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு மக்களை வதைக்க தமக்கு உரிமை இருக்கிறதா என்று எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது மாணவர் சங்கமோ, விவசாயச் சங்கமோ நினைத்துப் பார்ப்பதில்லை. அது தமது பிறப்புரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவற்றினால் பெருங் கொந்தளிப்பான நிலைமை உருவாக வேண்டும் என்றும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் நினைக்கின்றன போலும். அதில் உண்மை இல்லாமல் இல்லை. போராட்டங்களின் போது பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டால் தான், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஓரளவுக்காவது கவனம் செலுத்துவார்கள். ஆனால், அவ்வாறானதோர் நிலைமை இருக்கிறது என்பதற்காக, தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பொது மக்களை வாட்டி வதைப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு உரிமை இல்லை.
அரச ஊழியர்களைப் பொறுத்தவரையில், அச்சேவையில் உள்ளவர்களிடம் பொது மக்கள் எதிர்பார்க்கும் சேவை கிடைப்பதில்லை. எனவே, பொது மக்களை கஷ்டங்களுக்குள்ளாகும் வகையில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்த அவர்களுக்கு எவ்வகையிலும் உரிமை இல்லை. சாதாரண மக்கள், தமது அலுவல்களுக்காக அரச அலுவலகங்களுக்குச் செல்லும் போது, வெகுவாக அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட, செய்யாமல் இருக்க வழி வகைகளைத் தேடுவதே பெரும்பாலான அரச ஊழியர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது. சேவையை நாடி வருபவர் சிறுபான்மை இனத்தவராக இருந்தால், அவரது தேவை பூர்த்தியாகும் வாய்ப்புக்கள் மேலும் குறையும்.
பொதுவாக, எவராவது அரச அலுவலகமொன்றுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், முதலாவதாக அவ்வலுவலகத்தில் தமக்குத் தெரிந்த எவராவது இருக்கிறாரா என்று விசாரித்துப் பார்ப்பார். இல்லாவிட்டால், தமது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ தெரிந்த எவராவது அந்த அலுவலகத்தில் இருக்கிறாரா என்று விசாரித்துப் பார்ப்பார். ஏனெனில், அவ்வாறு தெரிந்தவர்கள் இல்லாவிட்டால் காரியம் நிறைவேறாது என்றதொரு நம்பிக்கை பொதுவாக எல்லோரிடமும் இருக்கிறது.
எனவே, உழைக்கும் மக்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே சுமுக உறவு இல்லை என்பதே உண்மை. அவ்வாறிருக்கத் தான், தமது போராட்டங்களுக்காக பொது மக்கள் கஷ்டத்துக்குள்ளாக வேண்டும் என லால் காந்த போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
இவ்வாறு, இவ்விரு சாராருக்குமிடையில் சுமுக உறவு இல்லாமையினால், சாதாரண மக்கள், முடிந்தவரை தனியார் துறையினரிடம் செல்கிறார்கள். அரச வங்கியிலும் தனியார் வங்கியிலும் கடமையாற்றும் ஊழியர்கள், பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தனியார் வைத்தியசாலையிலும் கடமையாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள், அவ்விரு இடங்களிலும் நோயாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
அரச அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களில் பெரும்பாலானோர், அதிருப்தியுடன் வெளியேறுவதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார் என டெய்லி மிரர் பத்திரிகை அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அரச ஊழியர்களில் 60 சதவீதத்தினர், நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களை இணையத்தோடு கழிப்பதாக, அன்றைய தினமே டெய்லி மிரர் பத்திரிகை மற்றொரு செய்தி மூலம் தெரிவித்தது.
அரச மற்றும் மாகாண சபை ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரட்ணவை மேற்கோள் காட்டியே அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனால் அரச ஊழியர்கள்;, நாளொன்றுக்கு 18 இலட்சம் மனித மணித்தியாலங்களை வீணடிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் திலகரட்ண அனுப்பியிருந்த கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தான் உழைக்கும் மக்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான உறவின் உண்மையான நிலைமை.
பொது மக்கள், தமது போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் நினைக்கின்றன. அதற்காக பொது மக்களிடம், சில சந்தர்ப்பங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம், பொது மக்களுக்கு முன்னால் வந்து சுலோகங்களை கோஷித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால் பொது மக்கள், அந்தத் துண்டு பிரசுரங்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சில அடிகள் சென்று விநியோகித்தவரது கண் முன்னேயே அவற்றைத் தூக்கி எறிகின்றனர்.
ஏனெனில், அந்தப் பொது மக்களும் சாதாரண மக்களாக இருந்த போதிலும் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தவர் தம்மில் ஒருவர் அல்லது தம்மைப் போன்ற ஒருவர் என்ற உணர்வு, அவர்களிடத்தில் இல்லை. அந்த உணர்வு உருவாகும் வகையில் அரச ஊழியர்கள் நடந்து கொள்வதுமில்லை. அவ்வாறாயின், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பது எவரும் ஊகிக்க முடிந்த விடயமாகும்.
அமுனுகம கூறியதைப் போல், அதிருப்தியுடன் அரச அலுவலகங்களிலிருந்து வெளியே செல்லும் பொது மக்கள், அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள், பின்னர் தனியார் அலுவலகங்களையே நாடுகிறார்கள். மாலை நேரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றுக்குச் சென்று பார்த்தால், அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கும் கஷ்டப்படும் ஏழைகளில் ஆயிரக் கணக்கானோரை அங்கு காணலாம்.
அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், இலவசமாக சிகிச்சையளிக்கும் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்றோ, செல்லாமலோ தனியார் வைத்தியசாலைக்கு வருகிறார்கள். ஏனெனில் அரச வைத்தியசாலைகளில் இலவசமாக மருந்து கிடைப்பது போலவே இலவசமாக அவமானமும் கிடைக்கிறது. அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
ஆனால், எந்தவொரு தொழிற்சங்கமும் இந்த நிலையை சீர் செய்ய முன்வருவதில்லை. சுய விமர்சனத்தில் ஈடுபடுவதில்லை. வைத்தியர்கள், தமது சகாக்களில் ஒருவர், வலது காலுக்குப் பதிலாக தவறுதலாக இடது காலில் சத்திரசிகிச்சை செய்தால் அதனையும் நியாயப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், மேலே குறிப்பிடப்பட்ட கடிதத்தை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பிய திலகரட்ணவைப் பாராட்ட வேண்டும். அவ்வாறு பொது மக்கள் பாதிக்கப்படாதவாறு செயற்படுங்கள் என்று, தமது தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களிடம் கூறினார். அவர்கள் வேறு தொழிற்சங்கங்களில் சேரலாம் என சகல தொழிற்சங்கத் தலைவர்களும் பயப்படுகிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி, தாம் வெறுமனே தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்க மட்டும் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை எனக் கூறுகிறது. மாறாக, சோசலிச சித்தாந்தத்தை, உழைக்கும் மக்களுக்கும் பொது மக்களுக்கும் ஊட்டும் வகையிலேயே, தாம் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், பொது மக்கள் வெறுப்படையும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டங்களால் என்ன சோசலிச சித்தாந்தத்தை உணர்த்த முடியும்?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago