Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 01 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
தலைமைத்துவம் என்பது ஒரு சமூகத்தின், நாட்டின் மிகப் பெரிய பொறுப்பாகும். இலங்கைச் சூழலில் சமூக, சமய, அரசியல் தலைமைத்துவங்கள் எந்தளவுக்கு இந்தப் பணியைச் செய்திருக்கின்றன என்பது மீளாய்வுக்குரியது.
தேசிய மட்டத்தில் மக்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமைத்துவம் இல்லை என்பதுடன், ஒவ்வொரு இன, மத, சமூகக் குழுமத்திலும் கூட இதுதான் நிலைமையாகும். ‘உங்களது அடுத்த தலைவர் யார்?’ என்று கேட்டால் உடனடியாக விடையும் இல்லை.
ஒரு தலைமைத்துவம் என்பது, தன் மீதான பொறுப்பை சரியாக நிறைவேற்றுவது மட்டுமன்றி, தனக்கு அடுத்தடுத்த நிலைகளில் இரண்டாம், மூன்றாம் மட்ட தலைவர்களையும் உருவாக்க வேண்டும்.
மற்றையவர்கள் முன்னேற இடங்கொடுத்தால், தனது பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று ஒருவன் அச்சப்படுவானாயின், அவன் தலைமைத்துவத்திற்கான தனது
சொந்த தகுதியைச் சந்தேகப்படுகின்றான் என்பதே அர்த்தமாகும்.
சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தமட்டில் தமிழர்கள், முஸ்லிம்களிடையே அரசியல் தலைமைத்துவங்கள் காலத்திற்குக் காலம் உருவாகின்ற போதிலும், முறையான தலைமைத்துவ அடுக்குகள் உருவாக்கப்படவில்லை. தலைமைத்துவச் சங்கிலித் தொடர் ஒன்றைக் காண முடியவில்லை.
இப்போது ஒட்டுமொத்த சமூகத்தாலும் எற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் யார் என்பதும், இதற்கடுத்த தலைவராக வரவிருப்பவர் யார் என்பதும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் திண்ணமாகத் தெரியாது. அது நடக்கும்போது பார்க்கலாம் என்ற தோரணையிலேயே எல்லோரும் செயற்படுகின்றனர்.
உதாரணமாக, தமிழர் அரசியலை எடுத்துக் கொண்டால் முன்னைய காலங்களில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களும், அதற்கடுத்த நிலை தலைவர்களும் இருந்தார்கள் எனலாம்.
தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன் என ஓரளவுக்கு ஒரு தலைமைத்துவச் சங்கிலி இருந்து வந்தது.இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பிறகு நிலைமைகள் மாறின. மாவை சேனாதிராஜா குறுகிய காலத்திற்கேனும் அந்த இடத்தில் இருப்பதற்கு இடமளித்திருக்கலாம். அது நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் தமிழர் அரசியலுக்குப் பல கட்சிகள், அணிகள். கட்சிக்குள்ளேயே பிரிவுகள் உருவாகியுள்ளன.
அடுத்த தலைவர் யார் என்பது சரியாக இனம் காணப்படாமையும், எல்லோருக்கும் பதவி, தலைமைத்துவ ஆசை ஏற்பட்டமையுமே இதனடிப்படைக் காரணங்கள் எனலாம்.மலையகத்திலும் இதுதான் நிலைமையாகும். தொண்டமான், ஆறுமுகன், சந்திரசேகரன் ஆகியோரோடு அந்த தலைமைத்துவச் சங்கிலி தொடராமலேயே போய் விட்டதாகத் தோன்றுகின்றது.
அதற்குப் பிறகு அடுத்த தலைமுறையில் பல அரசியல்வாதிகள் உருவாகினாலும், அவர்களால் மலையக தோட்டப்புற மக்களின் ஏக தலைவர்களாக வர முடியாமல் போயிருக்கின்றது என்றே கூற வேண்டும்.தலைமைத்துவச் சங்கிலி விடயத்தில் முஸ்லிம் சமூகமே மிக மோசமான நிலையில் உள்ளது.
இப்போது யார் தலைவர் என்று அறுதியாகக் கூறவும் முடியாது. அடுத்த
தலைமுறையின் தலைவர்கள் யார் என்ற கேள்விக்கும் விடையில்லை.
குறிப்பாக முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் என்பது பிரத்தியேகமான முஸ்லிம் கட்சிகளின் அரசியலை மையமாகக் கொண்டதாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நிறுவியதன் மூலம் தனித்துவ அடையாள அரசியலை மக்கள்மயப்படுத்தி அவர் வெற்றியும் கண்டார். அவர் தன்னைச்
சுற்றி அறிவார்ந்தவர்களை வைத்திருந்து, தனக்குத் தெரியாத விடயங்களில் அறிவுரையைப் பெற்றுக் கொண்டார்.
சமகாலத்தில், தனக்குக் கீழே அடுத்த அடுக்கில் பல தலைவர்களை உருவாக்கினார். தனக்கு அடுத்த தலைவர் யார் என்பதை வெளிப்படையாக
அஷ்ரப் அறிவிக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சாடைமாடையாக சிலவற்றைக் குறிப்புணர்த்தியதாக கூறுபவர்களும் உள்ளனர்.
மர்ஹூம் அஷ்ரப் மு.காவின் தலைவராக இருந்தது 15 வருடங்கள்தான். 11 வருடங்கள் எம்.பியாக இருந்தார். இதில் 6 வருடங்கள் மட்டுமே அமைச்சராக இருந்தார். இப்போது இருக்கின்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களது பதவிக்காலத்தை விட இது குறைவானதாகும். எனவே அவர் தனது அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி அறிவிப்புச் செய்யாதிருந்திருக்கலாம்.
மறைந்த தலைவர் தனக்குக் கீழே பலரை அடுத்த தலைவர்களாக உருவாக்கினார் என்பதை மறுக்க முடியாது. இவற்றுள் சிலர் அவரது மரணத்திற்குப் பிறகு பதவிகளை பெற்றுக் கொண்டனர். சிலர் ஒதுங்கி விட்டனர்.
2000ஆம் ஆண்டு அஷ்ரப் மரணித்த போது அடுத்த தலைவர் யார் என்ற தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டது. ‘இவர்தான் தலைவர்’ என்று உறுதியாக, ஏகமனதாக பிரேரிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இது முஸ்லிம் அரசியல் வீழ்ச்சியடைவதற்கு மிக அடிப்படையான காரணம் எனக் கூற முடியும்.
இந்நிலையில், முதலில், பேரியல் அஷ்ரப் மற்றும் றவூப் ஹக்கீம் ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் சிறிது காலத்தின் பின்னர் ஹக்கீம் மு.காவின் தனித் தலைவராக அறிவிக்கப்பட்டார். பேரியல் அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை முன்கொண்டு சென்றார்.
இது நடந்து 25 வருடங்கள் சென்று விட்டன. உலக ஒழுங்கும் நாட்டு அரசியலும் வெகுவாக மாறியிருக்கின்றது. இக்காலப்பகுதியில் பல முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் கட்சிகள் உருவாகியிருக்கின்றன.
ஆனால், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில், அபிலாஷைகளை வென்றெடுப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது மிகப் பெரும் கைசேதமாகும்.
மர்ஹூம் அஷ்ரப் ஸ்தாபித்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெரிய கட்சியின் தலைவராக றவூப் ஹக்கீம் இன்று வரை இருக்கின்றார். ஏ.எல்.எம்.அதாவுல்லாவும், றிசாட் பதியுதீனும் ‘காங்கிரஸ்களை’ ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றன. இன்னும் சில உதிரிக் கட்சிகள், அணிகளும் இருக்கின்றன.
தலைவர்களாக ஹக்கீம், றிசாட், அதாவுல்லா போன்றோர் மட்டுமன்றி, அடுத்த கட்ட தலைவர்களாகக் கருதப்பட்ட ஹிஸ்புல்லா, ஹரீஸ், அமீர்அலி, ஹசன்அலி, பசீர் உள்ளிட்டோர் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றினார்களா இல்லையா என்பது நாம் வழமையாக முன்வைக்கின்ற கேள்வியாகும்.
இங்கு இன்னுமொரு கேள்வியும் உள்ளது. அதாவது இவர்களுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தின் அடுத்த அரசியல் தலைமைத்துவம் யார், அதற்கான தலைமைத்துவ சங்கிலி உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை அவர்களோ சமூகமோ இன்னும் சிந்திக்கத் தொடங்கியதாகத் தெரியவில்லை.
ஏந்த முஸ்லிம் தலைவரும் தனது பதவியை விட்டுக் கொடுக்க தயாரில்லை என்பது யதார்த்தமாக நமக்குத் தெரிகின்ற விடயமாகும். அதேபோல, அவர்கள் தமக்குக் கீழே பல அரசியல்வாதிகளை வைத்திருக்கின்ற போதிலும் கூட, அவர்களை அடுத்த தலைவர்களாக வளர்க்கவும் இல்லை, முன்மொழியவும் இல்லை.
பதவி ஆசை பிடித்த, திரைமறைவில் டீல் பேசும் தளபதிகள் பலர் இருக்கின்றனர். இப்படியானவர்கள் தமக்கே குழிபறித்து விடுவார்கள் என்று தலைவர்கள் அச்சப்படுகின்றமையும் இதற்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.
மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் தனக்குக் கீழே பலரை அடுத்த தளத்தில், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவராக வைத்திருந்திருக்கின்றார். ஒரு கட்டத்தில் மூன்றாம் நிலை தலைவர்களைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு இரண்டாம் நிலை தலைவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார் அல்லது அப்படியொரு சூழல் உருவாக்கப்பட்டது.
அதாவுல்லா தொடக்கம். ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் தொட்டு இப்போது ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் மு.காவில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட விவகாரம் வரை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இது புரியும். இந்த வரிசையில்தான் இரண்டாம், மூன்றாம் அடுக்குகளில் வெற்றிடமான இடங்களுக்கு ஹிஸ்புல்லா. உதுமாலெப்பை, முசாரப் என இப்போது சிலர் மு.காவுற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இது ஹக்கீமின் ஓரு வகையான வியூகம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் அடுத்த தலைவர் யார் என்பதை அறிவிக்கவில்லை.மக்கள் காங்கிரஸ் கட்சியில் தலைவர் றிசாட்டுக்கு அடுத்த அடுக்கில் பலர் இருந்தாலும் அவர்கள் அடுத்த தலைவர்கள் என்ற புள்ளியை நோக்கி நகர்ந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் கட்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு சில வருடங்களுக்குள்ளேயே முடிந்து விடுகின்றது.
இதனால் கட்சித் தலைவரிலும் ஒரு எம்.பியிலும் தங்கியிருக்கின்றது.
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா கிழக்கின் பல ஊர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால், அவர்கள்
சில காலத்தின் பின்னர் முரண்பட்டுச் சென்றனர்.
இதனால் தேசிய காங்கிரஸ் கட்சி முற்று முழுதாக அதாவுல்லாவிலேயே தங்கியுள்ளது. அங்கு, இரண்டாம் நிலை தலைவர் என்ற ஒரு அடுக்கே இல்லை.
இந்த நிலைமைகள் மாற வேண்டும். ஒரு சமூகத்தின் இன்றைய தலைவர்கள் யார், அடுத்த தலைவர்கள் யார் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இது
அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago