Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 04 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சஞ்சயன்
புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாம் ஒருபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று, சில நாட்களுக்கு முன்னர் தலதா மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து, தம்மை வழிநடத்துவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், அவரை வைத்து அரசியல் இலாபம் தேடும் தரப்பினருக்கும் அவரது இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில், மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த அவரது கூட்டாளிகளான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்களின் திட்டம், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தான்.
நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய கட்சியைப் போட்டியிட வைத்து, எப்படியாவது அவரது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் கனவு.
மஹிந்த ராஜபக்ஷவின் பலத்தை அரசாங்கத்துக்கு அச்சமூட்டும் வகையில் வெளிப்படுத்தினால் தான், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச விருப்பங்களை நிறைவேற்றும் செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.
அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டால் தான் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்றும், சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தை ஓரம்கட்டச் செய்யலாம் என்றும் மஹிந்த ஆதரவு அணியினர் கருதுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனியான ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருந்த போதிலும், இன்னமும் கூட அதனை ஆரம்பிப்பதில் அவர்களுக்குத் தயக்கம் இருந்து வருகிறது. இதுதான் அவர்களின் பலவீனம்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை எவராலுமே குறைத்து மதிப்பிட முடியாது.
அதேவேளை, புதிய கட்சியை அவர் ஆரம்பிப்பது அவரை பலப்படுத்த உதவுமா என்பது கேள்விகளும் சந்தேகங்களும் நிறையவே இருக்கின்றன. இந்த விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கூட நம்பிக்கையீனம் இருப்பதாகவே தெரிகிறது.
அத்தகைய நம்பிக்கை அவரிடம் இருந்திருக்குமானால், அவர் எப்போதோ புதிய கட்சியை ஆரம்பித்து, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருப்பார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால், புதிய கட்சி ஒன்றின் ஊடாகப் போட்டியிடவும் அவர் தயாராக இருந்தார். தமக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் மாற்று அணியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அவரே கூறியிருந்தார்.
கடைசி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைப் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்தார். அந்த முடிவு கட்சிக்குள்ளேயும் வெளியேயும், பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அறிவிப்பு ஒன்றின் ஊடாக அதனைச் சமனிலைப்படுத்திக் கொண்டார் ஜனாதிபதி.
நாடாளுமன்றமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க எடுத்த முடிவு, மஹிந்த தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தாம் தனித்துச் செயற்படவுள்ளதாக அறிவித்து நாடாளுமன்றத்துக்குள் செயற்பட முனைந்தனர்.
ஆனாலும், அவர்களால் எதையும் சாதிக்கவும் முடியவில்லை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மோசடிகளையும் குற்றங்களையும் கண்டுபிடிக்கும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அதனைத் தடுப்பதற்கும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காகவுமே, மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சி உருவாக்கப் போவது போன்ற பிரமையை ஏற்படுத்தத் தொடங்கினார்.
ஏற்கெனவே, அவரை தினேஸ் - விமல் - கம்மன்பில - வாசுதேவ அணி உசுப்பேற்றி விட்டிருந்தது. இதனால், புதிய கட்சி போதை மஹிந்தவுக்கும் ஏற்பட்டது.
மாவட்ட ரீதியாக, உள்ளூராட்சி
சபைகளின் பிரதிநிதிகளாக இருந்தவர்களை சந்தித்து புதிய அணி அமைத்துப் போட்டியிடுவது குறித்தெல்லாம் பேசினார். ஆனாலும் புதிய அணியையோ கட்சியையோ அவர் அறிவிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் உள்ள கணிசமான செல்வாக்கே அவரது பலம் என்றாலும், அந்தச் செல்வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது. அது அவரது பெரும் பலவீனம்.
அதனால், புதிய கட்சியை அமைத்து அக்னிப்பரீட்சை ஒன்றை நடத்த அவர் இப்போதைக்குத் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
சுதந்திரக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை வெளியே துரத்தினால் தவிர, மஹிந்த ராஜபக்ஷவாக வெளியே போய் புதுக்கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்பதே இப்போதைய நிலையாக இருக்கிறது.
தன்னை கட்சியை விட்டு வெளியேற்ற பலரும் துடிக்கின்றனர் என்றும், ஆனால் தாம் வெளியேறப் போவதில்லை என்றும் அவரே கூறியிருக்கிறார்.
எதற்காக மஹிந்த வெளியேறப் பயப்படுகிறார் என்றால், ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் நீட்சி பெற வேண்டுமானால், சுதந்திரக் கட்சியில் தான் அவர்கள் தொடர வேண்டும்.
புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அது தோல்வியில் முடிவெடைந்தால், ஒருவேளை ராஜபக்ஷக்களின் அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடக்கூடும். அதனால் தான் அவர் நின்று நிதானமாக கட்சிக்குள் இருந்து கொண்டே போரை நடத்த முடிவு செய்திருக்கிறார்.
கட்சியை விட்டு வெளியேறினால், அந்தக் கட்சி செல்வாக்கை நிரூபித்துக் கொண்டால் மட்டுமே தப்பித்துக் கொள்ளமுடியும். இல்லையேல் அரசியலில் அஸ்தமனம் காண வேண்டியது தான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வந்து தோல்வியுற்ற பின்னர், காமினி திஸாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் தனியாகச் சென்று ஐக்கிய தேசிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியை உருவாக்கினர்.
ஜே.ஆர். காலத்தில் சக்திவாய்ந்த அமைச்சர்களாக இருந்த இவர்களால், அந்தப் புதிய கட்சியை கொண்டு நடத்த முடியாமல் தடுமாறினர். லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்ட பின்னர், காமினி அதன் தலைவரானார். பிரேமதாஸவின் மரணத்துக்குப் பின்னர், காமினி மீண்டும் ஐ.தே.கவுடன் ஒட்டிக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷ இதுபோன்ற நிலை தனக்கு ஏற்படுவதை விரும்பமாட்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் ஒரு காலகட்டத்தில் இதேநிலையை எதிர்கொண்டார். ஆனால், அவர் கட்சியை விட்டு வெளியேறாமல், உள்ளிருந்தே போராடினார். அதன்மூலம் மீண்டும் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற முடிந்தது.
ஆக, மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சியை ஆரம்பித்தால், தனது செல்வாக்கு உடைந்து போய் விடுமோ என்ற அச்சத்தைக் கொண்டிருக்கும் வரையில் அவரால் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியே வரமுடியாது.
அவ்வாறாயின் மஹிந்த எதற்காக புதிய கட்சியின் தேவை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்?
மஹிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி. அவரது சகோதரர்களான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களும் கூட இதனையே தான் கூறி வருகின்றனர்.
நாட்டில் எதிர்க்கட்சி என ஒன்று இல்லை என்று மக்கள் கருதுவதாகவும், வலுவான எதிர்க்கட்சி ஒன்று புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மக்களின் பெயரால் இவர்களே வெளியிடுகின்ற கருத்துக்கள் தான் இவை.
புதிய கட்சி உருவாவது திண்ணம் என்று, பசில் ராஜபக்ஷ கூறுகிறார். மக்களின் எதிர்பார்ப்பை சுதந்திரக் கட்சி நிறைவேற்றாவிடின் புதிய கட்சி உருவாகும் என்கிறார் கோட்டாபய.
ஆனால், மக்களின் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவோ, புதிய கட்சியை தான் உருவாக்குவேன், தலைமை தாங்குவேன் என்று கூறத் தயங்குகிறார்.
சுதந்திரக் கட்சியிலேயே இருப்பேன் என்று அவர் கூறுவதன் மூலம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தலைவராக தான் இருப்பேன் என்பதை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.
அதைவிட, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது, தனது குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய தேவைகளும் உள்ளன.
ஏற்கெனவே, ஒரு மகன் சிறையில் இருக்கின்ற நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள கடைசி மகன் தவிர்ந்த மற்றைய நால்வரும், விசாரணைகள், வழக்குகள் என்று திரிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
புதிய கட்சியை ஆரம்பித்தால், தனது குடும்பத்தை சிறைக்குள் அனுப்பி விடுவார்களோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.இவையெல்லாம் அவரைப் புதிய கட்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுத்து நிற்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்தும் விடயத்தில் உறுதியாக முடிவெடுத்த அவரால், தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து முடியாமல் தடுமாறுகிறார். இது தான் அவரது பலவீனத்தின் உச்சம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago