R.Tharaniya / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன.
கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழீழம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களுடைய நிகழ்வின் நோக்கம் இராணுவத்தினர், பாதுகாப்புத் தரப்பினருடைய நெருக்கடிகளுக்கானதாக இருந்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெறுவதைத் தடுப்பது தொடர்பிலேயே இருந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்காகவே நிதி சேகரித்துவருவதாகவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கமைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் என்றும் கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவருடைய கருத்துக்களின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தல், 13ஆவது அரசியலமைப்புத் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. கடந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பேராதரவு தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருந்தது. தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள்.
பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கம் நீதியை பெற்றுத் தரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை அமைந்திருக்கவில்லை.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் பல திருத்தங்களை மேற்கொண்ட அரசாங்கம் இறுதியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என்றே தெரிவித்திருந்தது.
தமிழர் தரப்பால் முழுமையான ஆதரவு பெற்ற தீர்மானமாக இல்லாத போதிலும் இந்தத் தீர்மானத்தினை தமிழீழம் அமைத்துக் கொடுக்கவிருக்கும் தீர்மானமாகவே பெரும்பான்மை சமூகம் பார்க்கிறது என்பதற்கான சில உதாரணங்களே அதிலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோரது கருத்துக்களைக் கொள்ளலாம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின்போது, 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அதனைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உடனடியாகவே கடுமையாக எதிர்த்திருந்தது.
அது மாத்திரமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கட்டமைப்பையும் கடுமையாக எதிர்த்திருந்தது. பிரேரணை ஒரு வருட காலம் நீடிக்கப்படக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது.
ஏனெனில், தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளியோம் என்பதே அவர்களது உறுதிமொழியாகும்.
இந்த உறுதிமொழியில் பிழை ஏற்படுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காது. பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்மறையான செயற்பாட்டையும் நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகள் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஒருபக்கம் வைக்கப்பட்டபடி அரசாங்கம் தன்னுடைய வேலைகளை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சிங்கள அடிப்படைவாதிகள் தங்களுடைய வேலைகளை முன்னெடுக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நல்லிணக்கத்தினை கடந்த அரசாங்கங்கள் திணிக்க முயன்றது போன்றே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், 13ஐ அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் தமிழ் மக்களுக்கு நிம்மதியை கொடுத்துவிடப் போவதில்;லை. இதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் உருவாகிவருகிறது எனலாம்.
இந்த இடத்தில், நாட்டுக்குள் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் தூண்டிவிடப்படுவது வழமையாகும்.
ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவே சிங்களவர்கள் பார்க்கின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது, அது அச்சத்தின் பயனாக உருவானதே. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த அச்சம் ஓரளவுக்குத் தணிந்திருந்தாலும் முழுமையாக இல்லாமல் போய்விட்டதாக யாரும் கொள்ள வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகிறன.
ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சி இலங்கையில் உருவானவுடன் போராட்ட இயக்கம் ஒன்றின் ஆட்சி தமிழர்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் அவர்களுடைய மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றே தமிழர் தரப்பு நம்பியிருந்தது.
குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் புலிகளின் மீளுருவாக்கம் குறித்தும் போராட்டம் பற்றியும் தெற்கில் கருத்துக்கள் உருவாக்கப்படுவது வழமையானதாகக் காணப்பட்டது. தற்போது நாட்டுக்குள் உருவாக்கப்படுகின்றவற்றுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் நகர்த்திவிடப்படுகின்றன.
திலும் அமுனுகமவின் கருத்து அவ்வாறானதொன்றே. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் அனுபவித்த கொடுமைகள் சிங்கள மக்களின் மனோநிலையில் அச்சத்தை விதைத்தே வைத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இந்த அச்சத்தைப் பயன்படுத்த அரசியல் தரப்பினர் வீருப்பங்கொள்வதில் தவறில்லை. என்றாலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்று வருகின்ற தமிழர்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் தற்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னப்படுகின்ற தவறான கற்பிதங்களில் ஒன்றாக திலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோருடைய கருத்துக்கள் இருக்கலாம்.
இலங்கையின் சுதந்திரத்தையடுத்தே உருவான பாகுபாடு, பாரபட்சம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கையில் நல்லிணக்கம் சாத்தியத்துக்குட்படுத்தக் கூடியதா என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி.
2022ஆம் ஆண்டில். பௌத்த பிக்குகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எரித்தார்கள். அவர்களது அந்த எரிப்பானது 13ஐஅல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரித்ததாகப் பேசப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய அக்கிராசன உரையில் பொலிஸ் அதிகாரமற்ற, ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பரவலாக்கிப் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும்.
2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார் ஆனால், அதனை நடத்தி முடிக்காமலே அவர் பதவி முடிந்து வீட்டுக்குச் சென்றார். தற்போது நிதிக் குற்ற விசாரணையில் இருக்கிறார்.
அதிகாரப் பரவலாக்கம் நடைபெறவில்லை. அரசியலமைப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல்கள் ஒழுங்கான நடைமுறையில் நடைபெறவில்லை. தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், மீண்டும் மீண்டும் நாட்டுக்குள்ளும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்ற கருத்துக்கள் மாத்திரம் பரப்பப்படுகின்றன.
இதற்கான காரணங்கள் சரியான முறையில் கையாளப்பட்டாலே தவிர இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாது என்பது மாத்திரமே நிதர்சனமானது.
1948முதல் 30 ஆண்டுகள் அகிம்சை ரீதியான போராட்டம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாக போராட்டம். 2009 மே மாதத்துக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியான முயற்சிகள் என நகர்ந்து கொண்டிருப்பதைத் தவிர,
வேறு ஒன்றும் நடைபெறவில்லை.
1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம். அதன்மூலம் சிறி கொண்டுவரப்பட்டது. 1958, 1978, 1983களில், பாரிய இனக் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது, தமிழர்கள் கடல் வழியாகத் தப்பிச் செல்லவேண்டிய நிலையும் உருவாகியிருந்தது.
1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் உருக்கொண்டது. வடகிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். உக்கிரமடைந்த போர் நிலைமையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபை அதிகாரம் உருவாக்கப்பட்டது.
ஆனால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை தயாராக இல்லை.இந்த நிலையில் தமிழர் தரப்பின் அரசியலில் வெறுத்துப் போன தமிழர்கள் ஆட்சியை மாற்றியும் அடிப்படையில் மாற்றம் ஏற்படாத நாட்டில் தமிழீழ அச்சம் விதைக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை என்ற முடிவுக்கே வரமுடியும்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago