2025 நவம்பர் 05, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கான அரசியலை ஒழுங்குபடுத்துவது யாரின் பொறுப்பு?

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

முஸ்லிம்களுக்கான திட்டமிட்ட அடிப்படையிலான சமூக அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்ற போதிலும், அப்பணியை யார் சரிவரச் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி அண்மைக்காலமாக பலரதும் அடிமனதில் அலைந்து திரிகின்றது.

முஸ்லிம் சமூகம் சார் அரசியலின் வரலாற்றுப் பின்னணியை, அது கடந்து வந்த பாதையை நன்கு அறிந்திருந்த சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகக் குரல் கொடுத்த எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எச்.சேகு இஸ்ஸதீன் போன்ற பல அரசியல்வாதிகளும் மரணித்து விட்டார்கள்.

குறிப்பாக, தனித்துவ அடையாள அரசியலின் அடிப்படைக் கோட்பாட்டை நன்கு அறிந்த எம்.ரி. ஹசன்அலி உள்ளிட்ட சிலர் இன்று செயற்பாட்டு அரசியலில் இல்லை.
ஆயினும், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்குள் மட்டுமன்றி பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாகவும் முஸ்லிம் சமூகம் பற்றிய ‘முன்;-கதைகள்’ எதுவும் தெரியாத பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகி இருக்கின்றனர். இனி வரும் காலங்களிலும் இதுதான் நடக்கப் போகின்றது எனலாம்.

பண முதலீடும் கட்டமைக்கப்பட்ட தேர்தல் பிரசாரங்களும் ஒரு சிலரை 
எம்.பிக்களாக ஆக்கியுள்ளது. அனுரகுமார திசாநாயக்க என்ற ஆளுமை இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்ததன் காரணமாக அந்தக் கட்சியில் பல முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர். கதை. 

முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இளம் வயதிலிருந்தே பாடுபட்டு, தியாகங்களைச் செய்தவர்கள், இச் சமூகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புக்களை அறிந்தவர்கள், முஸ்லிம்களின் அபிலாஷை என்னவாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை கொண்டவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக வருகின்ற போக்கு இப்போது  இறங்குமுகமாக உள்ளது.

ஏனென்றால், முஸ்லிம் சமூகமும் பொதுவில் அப்படித்தான் உள்ளது. யார்? என்ன? செய்தாலும் பரவாயில்லை. யார் எம்.பியாக வந்தாலும், தலைவராக வந்தாலும் நமக்கென்ன கவலை. நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்ற மனப்பாங்கில்தான் கிட்டத்தட்ட முக்கால்வாசி முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சமூகம் எப்படி இருக்கின்றதோ அது போலத்தான் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைவார்கள் என்ற முதுமொழியை நாம் யதார்த்தபூர்வமாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் கட்சிகளின் சார்பாக இம்முறை பல பழைய முகங்களும் சில புதிய முகங்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  
கொள்கை சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த அரசியலை விட இலங்கைப் பரப்பில் கட்சி சார்ந்த அல்லது மறைமுக நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. இது எல்லா சமூகங்களின் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள ஒரு சில எம்.பிக்கள்தான் தொடர்ச்சியாக சபையில் முஸ்லிம்களின் விவகாரங்களைப் பேசி வருகின்றனர். முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த சிலரும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒரு சிலரும் இதில் உள்ளடங்குவர்.

ஏதிரணியில் இருந்து கொண்டு சமூகத்திற்காகப் பெரிதாக வாயைத் திறக்காத எம்.பிக்களும் உள்ளனர். ஒருவேளை ஆளும் தரப்பில் இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட எம்.பிக்கள் கூட அரசாங்கத்திற்குத்தான் வக்காலத்து வாங்கியிருப்பார்கள் என்பதை நாமறிவோம்.

சமகாலத்தில், இந்த அரசாங்கத்தில்  மட்டும் இதுவரை முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. சமத்துவம். இனங்களைக் கடந்த அரசியல் என்று எதனைச் சொல்லியும் இதனை நியாயப்படுத்த முடியாது.

அப்படியென்றால் என்.பி.பி. அரசாங்கமானது அதிகமான தமிழ், முஸ்லிம் எம்.பிக்களை அமைச்சர்களாக நியமித்து விட்டு, இந்தக் கதைiயை, நியாயப்படுத்தலை சிங்கள மக்களுக்குக் கூறியிருந்தால் அதனை சிங்கள தேசியம் ஏற்றுக் கொண்டிருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு தமது சமூகத்தின் சார்பில் ஒருவருக்கு அமைச்சு கொடுக்கப்படவில்லை என்பதைக் கூட தட்டிக் கேட்க முடியாத ‘கட்டுப்பாட்டுக்குள்தான்’ என்.பி.பி. முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர்.

முஸ்லிம்களின் விவகாரங்களைப் பற்றி ஆளும்கட்சியின் ஓரிரு எம்.பிக்கள் பேசசுகின்றனர். குருக்கள்மடம் புதைகுழி தொடர்பாக பாராட்டத்தக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதையும் மறுக்கவியலாது. ஆயினும். பெரும்பாலான ஆளும் தரப்பு முஸ்லிம் எம்.பிக்கள் புதினம் பார்க்க வந்தவர்கள் போலவே செயற்படுகின்றனர் எனலாம்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எம்.பி. பதவி கிடைத்தது அதிர்ஷ்டவசமாக ஆகும். எனவே, ‘மேலிடத்திற்கு அசௌகரியம்’ ஏற்படும் விதத்தில் பேச அவர்கள் விரும்பமாட்டார்கள். இதற்கு அவர்கள் ‘கட்சியின் கட்டுக்கோப்பு’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

ஆளும், எதிர்த் தரப்பு முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம்களின் விவகாரங்களைக் குறிப்பாக, கடந்த கால வரலாற்றுடன் தொடர்புபட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசுவது என்றால் அது பற்றிய ஆவணங்களும், வரலாற்று அறிவும் இருக்க வேண்டும். அவை இல்லாத காரணத்தினாலும் பல முஸ்லிம் எம்.பிக்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வாழாவிருக்கின்றனர் எனலாம்.

ஆக, இப்படியான அரசியல் யதார்த்தங்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் முஸ்லிம் அரசியலை ஒப்படைத்து விட்டு முஸ்லிம் சமூகம் ஒய்யாரமாக ஓய்வெடுக்க முடியுமா? அல்லது எல்லாம் சரியாக நடக்குமென தம்பாட்டில் இருக்க முடியுமா?
இந்த கேள்விக்கு விடை ‘இல்லை’ என்பதாக இருந்தாலும், உண்மையில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக தங்களது அரசியல் ஒழுங்கு பற்றியும் அரசியல்வாதிகள் அதற்காக ஆற்றுகின்ற பங்களிப்பு பற்றியும் பெரியளவில் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முஸ்லிம்களுக்கான அரசியலை சரியாக முன்கொண்டு செல்லவில்லை என்று முஸ்லிம் மத அமைப்புக்களோ, புத்திஜீவிகளோ, பள்ளிவாசல்களோ, சமூக நிறுவனங்களோ, பல்கலைக்கழக சமூகமோ, புலம்பெயர் சமூகமோ, பொன்னாடைக்காக அலையும் பன்னாடைகளோ  கேள்வி எழுப்பியதுண்டா?

சிங்கள அரசியலில் பௌத்த பீடங்கள் ஏற்படுத்துகின்ற செல்வாக்கில் 10 சதவீத வகிபாகத்தைக் கூட முஸ்லிம் அரசியலை வழிப்படுத்துவதில் ஜம்மியத்துல் உலமா சபை போன்ற உயரிய நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் கொண்டிருக்கவில்லை என்பதுதான் நமது காலத்தின் யதார்த்தமாகும்.

பெருந்தேசிய அரசியலில் களணி, பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்கள் காலகாலமாக கடுமையான செல்வாக்கைச் செருத்தி வருகின்றன. தமிழர் அரசியலை வழிப்படுத்துவதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒரு பங்கினை எடுத்து வருவதைக் காண்கின்றோம்.

ஆயினும், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை மக்கள்மயப்படுத்திய எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற பெரும் அரசியல் தலைவரின் சிந்தனையில் உருவான தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது, முஸ்லிம் அரசியலை வழிப்படுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் இதுவரை ஒரு வகிபாகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

முஸ்லிம் அரசியலை ஒழுங்குபடுத்துவதற்கான அறிவார்ந்த ஆலோசனைகள் அங்கிருந்து வர வேண்டும். முஸ்லிம் சமூகம் தொடர்பான அபிலாஷைகள், அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். சமூக ஆய்வுகளின் மையப் புள்ளியாக இப் பல்கலைக்கழகம் இருக்க வேண்டும்.

ஆளால், அரசாங்கங்களாலும் தமிழ்த் தரப்பாலும் இன்று வரை பேசப்படுகின்ற ஒலுவில் பிரகடனத்தை இப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் வெளியிட்ட போது இருந்த வீச்சும் வீரியமும் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே அடங்கிப் போனது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

முஸ்லிம்களின் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தொழில் நிமித்தம் நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். இவ்வாறானவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில புலம்பெயர் முஸ்லிம் தனிநபர்கள் சமூகம் சார்ந்த விடயங்களில் முன்னிற்கின்றனர்

இருப்பினும், ஏனையோர் நாட்டு அவலங்களைக் காட்டி அடைக்கலம் எடுத்தோம், குடிபெயர்ந்தோம், உழைத்தோம் என்றுதான் வாழ்கின்றார்கள். தமிழ் புலம் பெயர் சமூகத்துடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானது.

முஸ்லிம் அரசியல் மட்டுமன்றி ஏனைய விடயங்களும் தவறான வழியில் பயணிக்கின்ற போது, தாங்கள் எந்தக் கட்சி என்பதைப் பற்றி சிந்திக்காமல், சமூகத்திற்கான அந்த அரசியலை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையுள்ளது.

ஆளும் என்.பி.பி. எம்.பிக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் கட்சிகளின் அல்லது எஸ்.ஜே.பி.யின் எம்.பிக்கள் என்றாலும் சரி, எல்லாரையும் தட்டிக்கேட்கவும் ஒரு அழுத்தக் குழுவாக இருந்து வழிநடத்தவும் வேண்டிய தேவைப்பாடு இந்நாட்களில் அதிகமாக உணரப்படுகின்றது.

இவ்விடயத்தை, மேற்சொன்ன தரப்பினர் தொடக்கம் சாதாரண முஸ்லிம் மக்கள் வரை அனைவரும் சரிவர உணர்ந்து கொண்டு செயற்படத் தவறினால், முஸ்லிம்களுக்கான அரசியலானது மூக்கணாங்கயிறு அறுந்த மாட்டு வண்டி போல, தறிகெட்டு ஓடி, ஒரு முட்டுச் சந்தில் நிற்கும். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X