Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.காசிநாதன்
பெப்ரவரி 2ஆம் திகதி பிரதமர் நரேந்திரமோடி 'சட்டமன்ற தேர்தல் சீசனில்' முதன் முறையாக தமிழகம் வருகிறார். அதுவும் சென்னைக்கு வராமல் கோயம்புத்தூருக்கு வருகிறார். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) செல்வாக்கு இருக்கிறது என்பது கடந்த கால தேர்தல் முடிவுகள் அரங்கேற்றியுள்ளன.
அப்படி செல்வாக்கு உள்ள ஒரு மாவட்டத்துக்கு தன் முதல் பயணத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திரமோடி தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே செயல்படுகிறார். தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராகியுள்ள பொன். ராதாகிருஷ்ணன், 'பிரதமரின் பயணமே பிரசாரத்தின் தொடக்கம்' என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.
பா.ஜ.க.வின் பல்வேறு கூட்டணி முயற்சிகள் இதுவரை கைகூடவில்லை. அக்கூட்டணியில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த
ராஜபக்ஷவை அழைத்ததை எதிர்த்து முதன் முதலில் வெளியேறினார். பிறகு 'அன்புமணிதான் முதலமைச்சர் வேட்பாளர்' என்று அறிவித்து சில மாதங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டொக்டர் ராமதாஸ் வெளியேறினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் 'மதில் மேல் பூனை போல்' அமர்ந்திருக்கிறார்.
அவர் முன்புள்ள 'தி.மு.க. ஒப்ஷன்', 'பா.ஜ.க. ஒப்ஷன்', 'மக்கள் நலக் கூட்டணி ஒப்ஷன்' ஆகிய மூன்று ஒப்ஷன்களில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பலத்தை அதிகரித்துக் கொள்ளவே அமைதி காக்கிறார் விஜயகாந்த். ஆனாலும் அமைதி காக்க இனி நேரம் இல்லை. ஆகவேதான் வருகின்ற பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காஞ்சிபுரத்தில் 'அரசியல் திருப்பு முனை மாநாடு' நடத்துகிறார் விஜயகாந்த். அந்த மாநாட்டில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மதுரையில் கடந்த 26ஆம் திகதி சிறப்பான மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் மதுரையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் 'அதிமுகவுக்கும், தி.மு.க.விற்கும் மாற்று நாங்கள்தான்' என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.
'இந்தக் கூட்டணி உடைந்து விடும்' என்ற பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி இப்போதைக்கு வைத்துள்ளார்கள். வருகின்ற பெப்ரவரி 6ஆம் திகதி மதிமுக கட்சி அலுவலகமான 'தாயகத்தில்' கூடி, மக்கள் நலக்கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த தயாராகி விட்டார்கள். ஆகவே, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து பா.ஜ.க.விற்கு வரும் கட்சிகள் ஏதுமிருக்காது என்பதுதான் இப்போதைக்கு உள்ள நிலைமை.
இப்படி தேர்தல் களம் பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும், தன் கூட்டணி கட்சிகள் விலகி சென்று விட்டாலும் பா.ஜ.க. இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. 'எங்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி தொடரும்' என்றே அக்கட்சியினர் பேசி வருகிறார்கள். குறிப்பாக தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளை பா.ஜ.க. அணியிலேயே தக்க வைத்து விட முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அது மட்டுமின்றி மக்கள் நலக்கூட்டணியில் உள்ள வைகோவை மீண்டும் நம் கூட்டணிக்கு அழைத்து வந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் ஒரு சில பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் உள்ளது. அதே நேரத்தில் 'தி.மு.க. மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையுமே பா.ஜ.க. வெறுத்து ஒதுக்க தயாராக இல்லை' என்பதும் வெளிப்படுகிறது.
'தி.மு.க.வும், அதிமுகவும் எங்களுடன் கூட்டணி கிடையாது என்று அறிவிக்கவில்லை' என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கூறியிருப்பதே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. இன்றைய தேதியில் 'தி.மு.க. அல்லது அதிமுக', 'ஏற்கனவே இருந்த நாடாளுமன்ற கூட்டணி'- இந்த இரண்டில் ஒன்றுக்கு பா.ஜ.க. தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
ஆகவே, தமிழக தேர்தல் களத்தில் சிறப்பு அம்சங்கள் நிறைந்த மாதமாக அடுத்து வருகின்ற பெப்ரவரி மாதம் இருக்கப் போகிறது. பிரதமர் மோடியின் பயணம் 2ஆம் திகதி. மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பெப்ரவரி 7ஆம் திகதி. தே.மு.தி.க.வின் அரசியல் மாநாடு பெப்ரவரி 20ஆம் திகதி. முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை பெப்ரவரி 23. இது தவிர தேர்தல் அறிவிப்பும் அனேகமாக பெப்ரவரி மாத இறுதிக்குள் வந்து விடும். இப்படி பரபரப்பான அம்சங்கள் நிறைந்த மாதத்தில் பிரதமர் நரேந்திரமோடியும் தமிழகத்துக்கு வருவது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை களைகட்ட வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியைப் பொறுத்தமட்டில் சென்ற முறை அவர் செய்த பிரசாரம் பா.ஜ.க.விற்கும், கூட்டணிக் கட்சியான பா.ம.க.விற்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தமிழகத்திலிருந்து பெற்றுக் கொடுத்தது. ராஜீவ் காந்தி 13 முறை தமிழகத்தில் ரவுண்ட் அடித்து 1989இல் பெற்ற 20 சதவீத வாக்குகள் போல் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு 19 சதவீத வாக்குகளை அந்த அணிக்கு திரட்டினார்.
ஆனால், அன்று காங்கிரஸுக்கு எதிரான அலை தமிழகத்தில் வீசியது. இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் மீது கோபம் இருந்தது. அந்த கோபத்தின் வெளிப்பாடாக பா.ஜ.க.வை தேசிய அளவில் மாற்று சக்தியாக நினைத்த தமிழக மக்கள் பா.ஜ.க.விற்கு தி.மு.க.வும், அதிமுகவும் துணை இல்லாமலேயே ஒரு எம்.பி. வெற்றி பெறுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தார்கள்.
ஆனால் இன்று நிலைமையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. சட்டமன்ற தேர்தல். ஆகவே இப்போது 'அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா' என்ற ஒரே கேள்விதான் தமிழக வாக்காளர்கள் மனதில் இருக்கிறது. இதற்கு 'ஆம்' என்றோ அல்லது 'வேண்டாம்' என்றோ வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அதனால் இயற்கையாகவே தேர்தல் களம் மோடியை விட்டு விலகி 'அதிமுகவா அல்லது தி.மு.க.வா' என்ற பாதைக்குச் சென்று விட்டது. அதாவது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவா அல்லது தி.மு.க. தலைவர் கருணாநிதியா என்ற கட்டத்தில் இப்போது சட்டமன்றத் தேர்தல் களம் நிற்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவரை மையப்படுத்தி நடக்காத தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அதாவது நாடாளுமன்ற தேர்தல் மனநிலையில் மக்கள் வாக்களிக்கவில்லை. சட்டமன்ற தேர்தல்களில் உள்ளூர் நிலவரப்படியே வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். அதனால்தான் டெல்லியில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். ஜம்மு அன்ட் காஷ்மீரில் மப்தி முஹமது சயீது வெற்றி பெற்றார். பீஹாரில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். இதே சூழ்நிலைதான் தமிழகத்திலும் நிலவுகிறது.
'மாற்று அரசியல்' என்ற முழக்கத்தை தமிழக தேர்தல் களத்தில் இப்போது 'மக்கள் நலக்கூட்டணி', 'பா.ஜ.க.' 'பாட்டாளி மக்கள் கட்சி' ஆகிய மூன்று கட்சிகளுமே முன் வைக்கிறது. ஆனால் மூன்று கட்சிகளுக்குமே தி.மு.க.வையோ அல்லது அதிமுகவையோ தோற்கடிக்கும் வாக்கு வங்கி பலம் இல்லை.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திரமோடி கோவைக்கு வருவதால் மட்டும் பா.ஜ.க.விற்கு அந்த சக்தி வந்து விடும் என்று தோன்றவில்லை. தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக போன்ற கட்சிகள் வந்தால் பா.ஜ.க.வால் உருப்படியான மாற்று சக்தியாக எதிர்காலத்தில் உருவெடுக்க இந்த சட்டமன்ற தேர்தல் உதவலாம். அப்படி இந்தக் கட்சிகள் வராத பட்சத்தில் அதிமுகவுடன் எப்படி கூட்டணி அமைப்பது என்பதில் மட்டுமே பா.ஜ.க. அதிக கவனம் செலுத்தும் என்பதுதான் தற்போதைய சூழ்நிலை. ஆனால் இந்த சூழலுக்கு அதிமுக எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுவரை தமிழகத்தில்- அதுவும் குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தி.மு.க.விற்கோ, அதிமுகவிற்கோ வெற்றிக்கு வழி காட்டியிருக்கிறது.
ஆனால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் உதவியிருக்கிறதே தவிர, சட்டமன்ற தேர்தலில் உதவவில்லை. 2001 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தி.மு.க. தோல்வியைத்தான் சந்தித்தது. ஆகவே அதிமுக, தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே மாநிலம் சார்ந்த தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைப்படும் என்பது தெளிவாகவில்லை.
இந்த சூழ்நிலையில் '234 தொகுதியிலும் வெற்றி பெறும் அளவிற்கு பணி புரியுங்கள்' என்று அதிமுகவினருக்கு 29 ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்டளை பிறப்பித்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஆகவே பிரதமரின் பயணத்தால் 'அதிமுக கூட்டணி உருவாகுமா' என்பது பிரதமர் நரேந்திரமோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் உள்ள அரசியல் ரீதியான நட்பின் அடிப்படையில் மட்டுமே நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதுதான் இன்றைக்கு இருக்கும் அடிப்படை அரசியல் சூழ்நிலை.
மற்றபடி ஏற்கனவே இருந்த நாடாளுமன்றக் கூட்டணியோ, தி.மு.க. கூட்டணியோ பா.ஜ.க.விற்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்த சட்டமன்ற தேர்தலில் இல்லை என்றே அறுதியிட்டு சொல்ல முடியும். ஆக, தமிழக அரசியல் பரபரப்பு மிகுந்த காட்சிகள் நோக்கி அதி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
4 hours ago