Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப.தெய்வீகன்
நல்லாட்சி அரசு பதவியேற்று எதிர்வரும் எட்டாம் திகதியோடு ஒருவருடமாகிறது. கடந்த ஒரு வருடத்தில் நாடு கடந்துவந்த பாதை எத்தகையது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவர். சிங்கள ஆட்சி இயந்திர மாற்றம் எனப்படுவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை 'கொழுக்கட்டை போய், மோதகம் வந்த கதை' போன்றதுதான் என்றாலும், மைத்திரியின் ஆட்சியை வழக்கமான சம்பிரதாய மாற்றமாக பாராது, மஹிந்த ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாத்திரமே கடந்த ஒரு வருட காலத்தின் உண்மையான பரிமாணம் குறித்து ஆழமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
இந்த ஒருவருட முடிவில் நாடாளுமன்றத்தை அரசமைப்பு அதிகார அவையாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைப்பதற்கு, நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகிவருகிறார். அந்த அவையின் ஊடாக நாட்டின் மூன்று தசாப்தகால இனப்பிரச்சினைக்கு நீடித்த நிலைத்த தீர்வொன்றினை உருவாக்குவதற்கான ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த முன்னெடுப்புக்கு உள்நாட்டில் காணப்படும் எதிர்வினையை ஆராய்வதற்கு முன்னர் வெளிச்சக்திகளின் ஆர்வத்தை நாடி பிடித்து பார்த்தால், கடந்த வருடம் ஆட்சி பீடமேறிய ரணில் அரசு, நாட்டின் கொழுந்துவிட்டெரியும் இனப்பிணக்குக்கு நிரந்தர தீர்வொன்றினை காணவேண்டும் என்பதை மேற்குலகம் கடுமையாக வலியுறுத்தி நிற்கிறது. அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமையவேண்டும் என்ற மக்கள் ஆணையை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வதாக அமையவேண்டும் என்பதையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
மறுபுறுத்தில், இந்தியாவும் இதே மாதிரியான நிலைப்பாட்டினைத்தான் வலியுறுத்தியிருக்கிறது. தனது ஆசீர்வாதத்துடன் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசமைப்பு சீர்த்திருத்தத்துக்கு அதிகமான அதிகாரத்துடன் கூடிய தன்னாட்சி ஒன்றினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை பல முறை அது பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.
அப்படியானால், கடந்த காலங்களில் வெளிச்சக்திகளின் கயிறு இழுத்தல் போட்டிகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி போனதுபோன்ற எந்த பாரதூரமான குழப்பங்களும் ஏற்படாமல், இதயசுத்தியுடன் தீர்வினை நோக்கி நகர்வதற்கு திடசங்கற்பம் பூண்டால் தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியத்தை அல்லது சாதனையை மைத்திரி அரசு நிலைநாட்டுமா?
அதற்கு முதலில் சிங்கள தரப்பினை எடுத்துநோக்கினால், ஆட்சிக்குவந்த நாள்முதல் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக சாதகமான முடிவுகளை மேற்கொள்வதற்கு சிங்கள தரப்புக்களை கையாளுவதில் பிரதமர் ரணிலும் அரச ஜனாதிபதி மைத்திரியும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். இது வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் அனைவரும் கண்டுகொண்ட விடயம்.
ஜெனீவா தீர்மானமாக இருக்கட்டும், அரசியல் கைதிகள் விவகாரமாக இருக்கட்டும் ஏன் கையகப்படுத்திவைத்திருக்கும் காணியை விடுவிப்பதாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் சிங்கள கடும் தேசியவாதிகளைத் திருப்திசெய்யும் போக்கினை கடைப்பிடிக்கவேண்டும் என்ற கடப்பாட்டினை மைத்திரி அரசு பேணிவருவதும், அது போதாதென்று அப்படியான தரப்புக்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் அவர்களை நோக்கி நல்லெண்ண சமிக்ஞைகளை அவ்வப்போது காண்பித்த பின்னர்தான் தமிழ் மக்கள் பக்கமே முகத்தை திருப்பிக்கொண்டு வருகின்ற போக்கினை அரசு கடைப்பிடிப்பதையும் தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது.
இது தமிழர்களை தரப்பினை மிகவும் சீற்றத்துக்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல் மைத்திரி அரசானது மஹிந்த அரசின் இன்னொரு வடிவம்தான் என்ற கருத்தினையும் முன்வைக்க தூண்டியது.
தமிழ் மக்களின் இந்த கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில், தமிழ்மக்களின், அதாவது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குப்பலத்தினால் ஆட்சி, ஜனாதிபதி, பதவியையும் நாடாளுமன்ற பலத்தினையும் வென்றுள்ள தற்போதைய அரசு அப்படிப்பட்ட தாங்குதூண் போன்ற தமிழர் தரப்பினை தொடர்ந்தும் கருவேப்பிலை போல உபயோகிப்பது என்ன வகையில் நியாயம் என்பதுதான் தமிழ் மக்களின் ஏமாற்றத்துக்கும் சீற்றத்துக்கும் காரணம். இதே அரசியல் ஏமாற்று சடங்குகள்தான் கடந்த 30 வருடமாக நடைபெற்று அதற்காக பெரும் போரே வெடித்து பாரிய அழிவுகளுக்கு பின்னர் தற்போது எல்லாம் ஓய்ந்திருக்கிறது. இந்த அனுபவங்களிலிருந்தாவது பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றால் அரசு, ஆட்சி, மாற்றம் போன்றவற்றால் என்ன பயன் என்பது தமிழ்மக்களின் கேள்வி.
உண்மையை சொல்லப்போனால், எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கு மைத்திரி தனது செயற்றிட்டங்களை வகுத்துக்கொண்டாலும் மாற்றங்களை ஆழமாக செயற்படுத்தவேண்டிய களம் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான். தென்னிலங்கையின் மனமாற்றமும் அதனை நோக்கிய அரசாங்கத்தின் இதயசுத்திமிக்க நல்லிணக்க வகுப்புக்களும்தான் புதிய மாற்றத்துக்கு முதுகெலும்பாக அமையும்.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்த நோக்கத்தை மையமாக கொண்டு மைத்திரி அரசு எடுத்த முயற்சி எதுவுமில்லை. 'தமிழர்களுக்கு நாங்கள் எதையும் கொடுக்கவில்லை. நீங்கள் வீணாக பயப்படாதீர்கள்' என்று சிங்கள தரப்பினை நோக்கிய அவைகூவலுடன்தான் அரைவாசி பதவிக்காலமும் அவரது வண்டியோடிக்கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசமைப்பு சீர்திருத்த ஆலோசனையில் என்ன விதமான அணுகுமுறையை கையாளப்போகிறது என்பது தொடர்பில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெனீவா தீர்மானத்தில் உள்நாட்டு பொறிமுறைக்கு துணைபோனதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தரப்பின் நியாயங்களை சர்வதேச அரங்கில் விற்றுவிட்டது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மென்வலு அணுகுமுறை எனப்படுவது கடும்தேசியவாத சிங்கள தரப்பினையும் சூழ்ச்சி மிகுந்த ரணிலின் அரசாங்கத்தையும் எதிர்கொள்வதற்கு லாயக்கற்றது என்றும்,
கூட்டமைப்புக்கு எதிராக பாரிய விமர்சனம் ஒன்று தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவதிற்கும் அதன் கொள்கையில் ஒத்துப்போவபவர்கள் மற்றும் முடிவெடுக்கும் தரப்பினர் அனைவருக்கும் எதிராக கடும் பிரசாரங்கள் தமிழர் தரப்பிலிருந்து அண்மையில் முடுக்கிவிடப்பட்டது.
கூட்டமைப்புக்கு எதிரான இந்த பிரசாரத்தை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற தரப்புக்கள் தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டு தமது அரசியல் எதிர்காலத்திற்கான புதிய வியூகம் ஒன்றினை அமைப்பதற்கு முடிவெடுத்தன. அந்த நோக்கத்துக்காக கூட்டமைப்பு மீதான நியாபூர்வமான விமர்சனங்களை கொண்டிருந்த சிலரையும் உள் இழுத்துக்கொண்டு புதிதாக அமைத்துக்கொண்ட வசீகரம் மிக்க அமைப்புத்தான் தமிழ் மக்கள் பேரவை.
இந்த அவை தான், ஓர் அரசியல் அமைப்பு இல்லை என்றும் தனது பணி கூட்டமைப்புக்கு வலுச்சேர்ப்பது மட்டுமே என்றும் தன்னை பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ் கூட்டமைப்பு இதனை நம்பவில்லை. பேரவையில் உள்ளவர்கள் எதிரிகளும் துரோகிகளுமே என்று கூட்டமைப்பு சொல்கிறது. எது எப்படியோ, பேரவையின் உருவாக்கம் கூட்டமைப்புக்கு பிடிக்கவில்லை என்பதுமட்டும் இதில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், இந்த பேரவை தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான திட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான ஒரு குழுவும் அந்த பேரவையில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அடுத்தவாரமளவில் அரசமைப்பு ரீதியாக மாற்றத்தை கொண்டுவரப்போவதாக அறைகூவியிருக்கும் மைத்திரி அரசுடன் திடமாக பேரம் பேசுவதற்கு கூட்டமைப்பின் தரப்பில் இந்த பேரவைக்கு எந்த இடமும் கிடைக்கப்போவதில்லை. பேரவையை கூட்டமைப்பும் கணக்கெடுக்கப்போதில்லை.
கட்சி மட்டங்களில் இவ்வாறான குழாயடி சண்டைகள் வந்து ஆளாளுக்கு வெட்டருவாள், வேல்கம்பு என்று தூக்கிக்கொண்டு உடைத்துக்கொண்டு ஓடுவார்கள் என்று தெரிந்துதான் என்னவோ சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர் சிம்மாசனத்தில் அன்றைக்கே தீர்க்கதரிசனத்துடன் ஏறிஉட்காந்துவிட்டார் போலும். தற்போது எவர் எதிர்ப்பினும் எவ்விடர் வரினும் தான் செல்லும் பாதையில் கூட்டமைப்பை அழைத்து சென்று தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு கங்கணம் கட்டிநிற்பதாக அறிவித்திருக்கிறார்.
அப்படியானால், அது எத்தகைய தீர்வு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு உறுதியளித்தபடி சம்ஷ்டி அலகின் அடிப்படையிலான தீர்வா அல்லது ரணில் தென்னிலங்கை மேடைகளில் இன்னமும் வாய்க்குள்ளேயே மென்று விழுங்கிக்கொண்டு சொல்லி திரியும் தீர்வா? அது எது?
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு எதுவாக இருப்பினும் அந்த தீர்வின் முதல்படி வடக்கு, கிழக்கு இணைப்பு. அது சாத்தியமா?
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் எந்த தீர்விலும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்படவேண்டும். அதற்கு முஸ்லிம் தலைவர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் ஊடாக முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பான கற்பித்தல்களும் ஆழமாக மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அது கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவு காத்திரமாக நடைபெற்றது?
இப்படி எத்தனையோ முக்கியமான விவகாரங்கள் முன்னால் வந்து மிரட்டிக்கொண்டிக்கும்போது அவை அனைத்துக்கும் 'பீப்' வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடமுடியாது.
இவற்றை ஒட்டுமொத்தமாக, ஆழ நோக்கினால், ஒரு விடயம் தெளிவாக புரியும். அதாவது, எந்த ஆட்சி வந்தாலும் சிவில் சமூக இடைவெளியின் தூரம் எனப்படுவது மக்களை அரசியலில் இருந்து நிரந்தரமாக தொலைவில்தான் வைத்திருக்கும். அரசியல் தொடர்பான இந்த ஆழமான புரிதல்நிலையை எந்த தரப்பும் செயல்பூர்வமாக ஏற்படுத்தாதவரை ஆட்சிமாற்றங்கள் எனப்படுவது எலும்பு முறிவுக்கு எண்ணை தடவுவதுபோல்தான் போய் முடியும்.
சிங்கள தரப்பு மாத்திரமல்ல தமிழர் தரப்பும் இந்த மாற்றத்தை கடந்த ஒரு வருடத்தில் ஆரோக்கியமாக முன்னெடுக்கவில்லை. இந்த பலவீனமான தளத்தில், கட்டப்படுவதற்கு எத்தனிக்கும் அரசமைப்பு மாற்றமும் சம்பந்தன் - சிறிசேன உடன்படிக்கையும் எவ்வாறு பட்டொளி வீசி பறக்கப்போகிறது?
மைத்திரியின் நல்லாட்சி தேனிலவு முடிந்து ஒரு வருட இறுதியில் அவர் பெறப்போகும் பிள்ளை சுகமாக பிறக்குமா? அல்லது கடும் தேசியவாதிகளின் கைகளில் பளிச்சிடும் வாள்களுக்கு அது இரையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025