Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஆர். ஹஸன்
நாடாளுமன்றத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அண்மையில் ஆற்றிய உரை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் பேசியது சரியா, அல்லது பிழையா, என்ற வாதம் பரவலாகப் பேசப்படும் ஒரு கருப்பொருளாகியுள்ளது.
இதனைச் சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமது அறிவுக்கு எட்டியவாறு பல விடயங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அவற்றில் வரவேற்கத்தக்க கருத்துக்கள் இருந்தாலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா பேசியது என்ன?
புத்தசாசன, முஸ்லிம் அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள், கிறிஸ்தவ மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதமே குறித்த தினத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் விவகார அமைச்சு மீதான விவாதத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு பேருக்கே கட்சி, நேரம் வழங்கியிருந்தது. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு 11 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் குறித்த தினத்தில் நாடாளுமன்றத்தில் இருப்பதை நன்கு அறிந்த நிலையில் தனது உரை அரசாங்கத்துக்கு ஒரு பலத்த செய்தியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஹிஸ்புல்லா தனது உரையை அமைத்துக்கொண்டார்.
அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களே செய்தியைத் திரிவுபடுத்தினர். இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருந்து செயற்பட்டமை தெட்டத் தெளிவு.
விஜயதாச - ஹிஸ்புல்லா கருத்து மோதல்
ஹிஸ்புல்லாவின் உரைக்கு விஜதாச ராஜபக்ஷ கடுமையாகப் பதிலடி வழங்கியதாக சிலர் உண்மைக்குப் புறம்பாக எழுதியிருந்தனர். ஆனால், உண்மையிலேயே அன்றைய தினம் ஹிஸ்புல்லாவுக்கும் - விஜயதாசவுக்கும் இடையில் விவாதம் ஏற்பட்டது இடைவேளைக்கு முன்னிருந்த அமர்வின் போதே.
அதுவும் வேறொரு விடயத்திலேயே அவர்கள் வாதிட்டுக்கொண்டனர். அதற்கான விளக்கத்தை ஹிஸ்புல்லா, இடைவேளைக்குப் பின்னரான தனது உரையில் வழங்கியிருந்தார்.
மட்டு. மாவட்ட த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தனது உரையில், மங்களாராம விகாராதிபதி சுமனரத்தின தேரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பேசியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட புத்தசாசன அமைச்சர் விஜயதாச, யோகேஸ்வரனுக்கு ஆங்கில மொழியில் பதில் அளித்தார். அதில் அவர், “நீங்கள் குறிப்பிடுவது போன்று பிக்குவை கைது செய்ய முடியாது. இது பெரிய பிரச்சினை; இதனை கலந்துரையாடல்கள் மூலமே தீர்க்க வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரையாடல்கள் மூலம் ஒரு தீர்வுக்கு நாங்கள் வந்துள்ளோம்” என்றார்.
இடையில் குறுக்கிட்ட ஹிஸ்புல்லா, விஜயதாசவுக்கு ஆங்கில மொழியிலேயே பதில் அளித்தார். அதில் “மங்களாராம விகாராதிபதி சுமனரத்ன தேரர், ஞானசார தேரர் ஆகியோர் தமது செயற்பாடுகளைக் கடுமையான முறையில் முன்னெடுத்து வருகின்றனர். நீங்கள் அவர்களை அழைத்துப் பேசியிருந்தீர்கள். ஜனாதிபதியும் பேசியிருந்தார். ஆனால், அதன் பின்னரும் அவர்கள் கட்டுப்படவில்லை. இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும் அல்லாஹ்வுக்கும் எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டுள்ளனர். நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்துள்ளனர். அவ்வாறாயின், நீங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லை என்றே அர்த்தம்” என்றார்.
ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு விஜயதாச பதில் வழங்கியிருந்தார். அதில், “யோகேஸ்வரன், ஹிஸ்புல்லாவுக்கும் கலந்துரையாடல்களில் நம்பிக்கையில்லை. அவர்கள் மக்களைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். நாங்கள் எமது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம்” என்றார்.
இதற்கு ஹிஸ்புல்லா வழங்கிய விளக்கத்தையே சில ஊடகங்கள் தமது செய்திகளில் காண்பித்தன. அதில், “நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன், ஆதரிக்கின்றேன். கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். நீங்கள், நான் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்” என்றார்.
இந்தக் கருத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாதவகையில், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கடுமையாகச் சாடி, விஜயதாச பேசியிருந்தார். அவரது கருத்தில் சில உண்மைகள் இருந்தாலும், அவர் பொதுப்படையாகக் கூறிய விடயத்தை, ஹிஸ்புல்லாவுக்கு மாத்திரம் கூறிய ஒன்றாக சிலர் வடிவமைத்துக் கொண்டனர்.
இவ்வாறான பின்னணியில் இடைவேளைக்குப் பின்னர், ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட நேரத்தில், அவர் விஜயதாச உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான விளக்கத்தை வழங்கியிருந்தார். அதில் “இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படலாம். இந்நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது” என்ற வகையில் தனது உரையில் தெட்டத்தெளிவாகக் குறிப்பிட்டார். இதனைச் சிலர், அரசியல் நோக்கங்களுக்காகத் திரிவுபடுத்தி, அந்த உரையின் கருத்தாழத்தை மறைத்து விட்டனர்.
ஹிஸ்புல்லா தனது உரையில் “ஆயுதம் ஏந்துவேன்” என்றோ “ஏந்துவோம்” என்றோ குறிப்பிடவில்லை. ஆயுதக் கலாசாரத்தை முஸ்லிம்கள் வெறுக்கின்றனர் என்ற அர்த்தத்திலேயே அவர் பேசியிருந்தார். ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் இந்த உரையில் அவர் கடுமையாகத் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவின் உரைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். நாட்டின் பிரதான கட்சியொன்றின் முக்கிய உறுப்பினர் என்ற ரீதியில் அவர் பேசிய விடயம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனாலேயே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர், முஸ்லிம்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண்பதாக உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர். அத்துடன், முஸ்லிம் எம்.பிக்களை ஜனாதிபதி சந்தித்தும் பேசியிருந்தார்.
உரையின் பின்னணி
சிங்கள தேசியவாத அமைப்புக்களின் கோரிக்கைகள் நியாயபூர்வமானது என்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வரும் நிலைக்கு, விஜயதாச ராஜபக்ஷ பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த பின்னணியில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையாகப் பேச வேண்டும்; முஸ்லிம் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் தலைமைகள் சிலர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர்.
எனினும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஹிஸ்புல்லா கூறியதனால் அவரது உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
1989ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தை முதன்முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்திய ஹிஸ்புல்லா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப காலப் போராளி. தலைவர் அஷ்ரபுடன் இணைந்து கட்சியை வளர்த்ததில் அவருக்குப் பெரும் பங்குள்ளது.
2000 ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பேரியல் அஷ்ரபுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றார்.
1983 இல் வெறும் 20 வயதில் தனது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்த ஹிஸ்புல்லா, பல்கலைக்கழக மாணவராக இருக்கும் போதே, மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்.
எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பில் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தவர்.
விடுதலைப் புலிகள் இயக்க காலத்தில் ‘அரியல் தான் எமது ஆயுதம்’ என குறிப்பிட்டிருந்த ஹிஸ்புல்லா, நாடாளுமன்றத்தில் பேசியது முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமே ஆகும்.
எனவே, ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையை வேண்டுமென்றே திரிவுபடுத்தி மக்களைக் குழப்ப முற்படுவது தவறான செயலாகும்.
அளுத்கம கலவரம் இடம்பெற்ற முதல் நாள் வெளிநாட்டிலிருந்த ஹிஸ்புல்லா, தனது அனைத்து வேலைகளையும் ரத்து செய்து விட்டு, உடனே மறுநாள் அதிகாலை 5 மணிக்கு இலங்கை வந்தார்.
கலவரத்தின் இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு முதல் அரசியல் வாதியாக பேருவளை- அளுத்கமைக்குச் சென்றது ஹிஸ்புல்லாவே. அதனை அங்குள்ள மக்கள் மறக்கவில்லை; இங்குள்ள விமர்சகர்களே மறந்துள்ளனர்.
அளுத்கம கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் அரசாங்கத்தைச் சாடி ஹிஸ்புல்லாவும் பேசியிருந்தார். அவரது உரை கடுமையாக அமைந்தமையாலேயே ராஜபக்ஷர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஆட்சியிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கலந்துரையாடல்களுடன் மாத்திரமே நின்றுவிட்டன.
இப்போதும் அதே நிலையே உருவாகியுள்ளது. சிறுபான்மையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வற்புறுத்தி, எச்சரித்துப் பெற்றெடுப்பதில் தவறில்லை.
ஹிஸ்புல்லாவின் உரை, வீண் பிரச்சினைக்குத் தூண்டுகோலாக அது அமைந்துள்ளதாகவும் சிலர் விமர்சனம் முன்வைத்திருந்தனர். இலங்கையில் இனவாதப் பிரச்சினை அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரங்கேறிய காலத்தில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இதனை விடக் கடுமையான வார்த்தைகளையும் அறிக்கைகளையும் விட்டிருந்தார்கள்.
அன்று ஓர் அரசியல்வாதி ‘ஆயுதம் ஏந்துவோம்’ என்றே குறிப்பிட்டு சிக்கலில்மாட்டியிருந்தார். அப்போது, அந்த விடயம் இனவாத அமைப்புக்களால் எந்தளவு ஊதி ஊதி பெரிதுபடுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே, ஹிஸ்புல்லாவின் உரை, இல்லாத பிரச்சினைக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என குறிப்பிடுவது நியாயமற்ற விமர்சனமாகும்.
நாட்டின் நிகழ்கால பிரச்சினைகளையே ஹிஸ்புல்லா பேசியிருந்தார். அவரது உரையில் குறைகள், தவறுகள் இருந்தாலும் அதில் குறைகாண்பவர்களாக மட்டும் முஸ்லிம்கள் இருப்பார்களாயின், விமர்சனங்களுக்கு அஞ்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தொடர்பில் தெளிவாக பேசுவதற்கு இனி எந்த முஸ்லிம் தலைமையும் முன்வரமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago