2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 12 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புருஜோத்தமன் தங்கமயில்   

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்குள்ளேயே தென் இலங்கை மக்களிடம் பெரும் அதிருப்திகளைச் சந்தித்து நிற்கின்றார்கள்.   

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையும் ராஜபக்‌ஷர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சிக் கட்டமைப்பொன்றை, ராஜபக்‌ஷர்கள் நிலைப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது.  

ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மனநிலை தென் இலங்கையில் எழுந்திருக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்து நெருக்கடிகள், மக்களைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சாதாரண மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் முகமான அறிவித்தல்களை, அரசாங்கம் விடுத்திருக்கின்றது.   

ஆட்சிக்கு வந்த சில காலத்துக்குள்ளேயே உழுத்து, பயறு, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கான தடை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விதிக்கப்பட்டது.   

அண்மைக்காலத்தில் அரிசி, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. அரிசியை அடிப்படையாகக் கொண்டதே, இலங்கையர்களின் உணவு முறை. அப்படிப்பட்ட நிலையில், அரிசியின் விலை அதிகரிப்பு என்பது, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றது. 

அதிலும், அரிசிக்கான தட்டுப்பாடு, இடைத்தரகர்கள் உள்ளிட்ட முதலைகளால் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக் காலத்தில், அரிசிக்கான தட்டுப்பாடு உருவாகி இருக்கின்றது. அதை, சீர்செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.  

இன்னொரு கட்டத்தில், விவசாய உர இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அரசாங்கம் விதித்திருக்கின்றது. இயற்கை உர விவசாய முறைமையை நோக்கி, நாட்டை முன்நகர்த்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ கூறியிருக்கின்றார். அதற்காக எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.   

நாட்டின் விவசாயத்தை, இயற்கை உரத்தைப் பயன்படுத்தும் கட்டங்களை நோக்கித் திருப்புவது வரவேற்கக் கூடியதுதான். ஆனால், அதனை ஒரு சில நாள்களில், ஏன் சில வருடங்களில் கூட ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு நீண்ட காலத் திட்டமிடலுடன் கூடிய முன்னாயத்தமும் வேண்டும். மாறாக, ஒரே நாளில் தீர்மானத்தை எடுத்து அறிவித்துவிடுவதால், விவசாய முறைமையை மாற்ற முடியாது.  

நாட்டிலுள்ள விவசாயிகள், பெரும்போக விவசாயத்துக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக் காலத்திலும், உரத்துக்காகக் கடைகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.   

சரியான தருணத்தில் உரம் கிடைக்காமையால், வாடிக் கருகிய பயிர்கள் முன்னால் நின்று அழும் விவசாயிகளைக் காண வேண்டியிருக்கின்றது. ராஜபக்‌ஷர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளில் விவசாயிகளைக் காத்தல், குறிப்பாக, உரமானியங்களின் ஊடாக விவசாயத்துக்குப் புத்துயிர் அளிப்பது என்பன, முக்கியமான வாக்குறுதிகளாக  வழங்கப்பட்டன. ஆனால், சதாரண விவசாயிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல், மேல் மட்ட சிந்தனைகளின் தீர்மானங்களில் அடிப்படையில் நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது.  

உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகமிருக்கின்ற நிலையில், நாட்டின் விவசாய முறைமை, இயற்கை வழிமுறையில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. அதற்கான தயார்படுத்தல் ஏதும், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை.   

அப்படியான நிலையில், மக்களின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்தாத வகையில் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். ஆனால், அதனை ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆலோசகர்களும் செய்கிறார்கள் இல்லை.   

கடந்த சில மாதங்களுக்குள்ளேயே, விவசாய அமைச்சின் செயலாளர்கள் இருவர் இராஜினாமாச் செய்திருக்கிறார்கள். அது ஏன் என்று ஆராய்ந்தாலே, அரசாங்கத்தின் முறையற்ற சிந்தனைகள் தெளிவாகத் தெரியும்.  

கடந்த வாரம், ‘ஷும்’ செயலி மூலமான கலந்துரையாடலொன்றில், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன், “ராஜபக்‌ஷ அரசாங்கம், என்றைக்கும் இல்லாதளவுக்கு, தென் இலங்கை மக்களிடம் நம்பிக்கை இழந்திருக்கிறது” என்று கூறினார்.   

ஆளுங்கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கிற ஒருவரால், பொது உரையாடல் தளத்தில், தனக்கு இருக்கின்ற நெருக்கடிகளை எல்லாம் தாண்டி நின்று, தென் இலங்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க முடிந்திருப்பது என்பது, கவனத்தில் கொள்ளக்கூடியது.  

நாட்டில் எதிர்க்கட்சி(கள்) எப்போதும் போல, இப்போதும் அமைதியாகவே இருக்கின்றன. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதிர்வினையாற்றுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ, நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றார்.   

சிலவேளை, ஒரு பிரச்சினை நடத்து முடிந்து, சில வாரத்துக்குப் பின்னர்தான் அவர், அந்தப் பிரச்சினை குறித்து எதிர்வினையாற்றுகிறார். அரசாங்கத்தின் தவறுகளை, அந்த நொடியிலேயே சுட்டிக்காட்டி, மக்களின் பிரச்சினைக்காகத் தொடர்ச்சியாகச் செயற்படும் எண்ணம் என்பது, எதிர்க்கட்சிகளிடம் காணக்கிடைக்கவில்லை.  

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் காலம் முடிவதற்கு, இன்னும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அப்படியான நிலையில், பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை’ எனும் போக்கில், எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். இன்னொரு தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் அன்றி, எதிர்க்கட்சிகளை செயற்பாட்டுத் தளத்துக்குக் கொண்டு வருவது என்பது முடியாத காரியம்.  

நாடும், நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகச் சிந்திப்பதற்கான தரப்புகள், நீர்த்துப் போயுள்ள நிலையில், மக்கள் என்ன செய்வதென்று தெரியாது, குழம்பிப் போயிருக்கிறார்கள்.   

தேர்தல் அரசியலால் ஆட்கொள்ளப்பட்டுவிட்ட மக்களுக்கும், பிரச்சினைகளைத் தேர்தல்கள் மாத்திரமே தீர்க்கும் என்ற எண்ணம் புகுத்தப்பட்டு இருக்கின்றது. அதனால், அவர்களும் தேர்தல்கள் வரும் வரையில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் புளுங்கிக் கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டது.  

ஆனால், வழக்கத்துக்கு மாறாக, ராஜபக்‌ஷர்கள் ஆட்சியமைத்து சில மாதங்களுக்கு உள்ளேயே, ஆட்சிப் பங்காளிகளுக்கு இடையில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.   

அதாவது, ராஜபக்‌ஷர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக உழைத்த தரப்புகள், குறிப்பாக பௌத்த அதிகார பீடங்கள், ஊடகங்கள், தென் இலங்கை அடிப்படைவாத சக்திகள், இன்றைக்கு தங்களுக்குள் முரண்படத் தொடங்கிவிட்டன. அமைச்சர்களுக்கு இடையிலான மோதல்கள் ஊடகங்களில் ‘பல்லிளிக்கிறது’. ராஜபக்‌ஷ சகோதர்களுக்கு இடையிலான அதிகார மோதல், ஆளுங்கட்சிக்கு உள்ளேயே குழுக்களை உருவாக்கி இருக்கின்றது.  

20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், ஆட்சி ரீதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ செலுத்தி வந்த அதிகாரங்களும் கட்சி ரீதியில் அவர் செலுத்தி வந்த அதிகாரங்களும், சகோதரர்களான கோட்டா, பஷில் ஆகியோரால் பறிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானங்களை எடுக்கும் ஒருவர் அல்ல.   

ஆட்சி அதிகாரம் கோட்டாவிடமும் கட்சி சார் அதிகாரமும் அடுத்த கட்டத் தீர்மானங்களும் பஷிலிடமும் சென்று சேர்ந்துவிட்டன. வழக்கமாக இலங்கையின் அரசியல் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, ஒருவரை மையப்படுத்தியே இருந்திருக்கின்றது. அவ்வாறுதான், ஆளுங்கட்சியும் அதன் பங்காளிகளும் ஒரே புள்ளியில் சுற்றியிருக்கின்றன.   

கட்சி ஒருவரிடமும், ஆட்சி இன்னொருவரிடமும் இருந்த தருணங்களில் அவை, குழப்பங்களில் முடிந்திருக்கின்றன. ஏனெனில், அவ்வாறானதோர் அரசியல் ஒழுங்கு, இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை.   

அதாவது, கேள்விகளுக்கு அப்பாலான மன்னர் ஆட்சிக் கட்டமைப்பு ஒன்றைப் பேணுவது சார்ந்தே, ஆட்சியாளர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். அதன் விளைவுதான், ஆட்சியும் கட்சியும் இரு வேறு நபர்களிடம் இருக்கும் போது வருவது. இப்போதும், அதுதான் நிலை.  

ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. அந்த அதிருப்திக்களுக்கான காரணங்களை, ராஜபக்‌ஷர்களே ஏற்படுத்துகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி உள்ளிட்ட ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உழைக்க வேண்டிய தரப்புகள் எல்லாமும், அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.   

அவ்வாறான நிலையில், ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, ஒரு கட்டத்தில் மக்களுக்கு பழகிவிடும். அது, இன்னும் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X