Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர், வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
அது, எந்த அளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன.
இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்து உரையாடியதாகக் கடந்த வாரம் வெளியான செய்தியொன்றில் கூறப்பட்டு இருந்தது.
அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்கள், பகிரங்க மேடைகளில் உரையாற்றும் போது, அரசாங்கத்தைப் பொதுவாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை குறிப்பிட்டும் விமர்சிக்கிறார்கள்.
உத்தேச அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என சிலவேளைகளில் கூறுகிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளைத் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார்கள்.
இவற்றுக்குப் புறம்பாக ஜனாதிபதியும் அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களும் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள், இரு பிரதான கட்சிகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலை, முற்றி வருவதையே காட்டுகின்றன.
அரசாங்கத்தைத் தனியாக நடத்த இந்த இரு கட்சிகளில் எதற்கும், போதிய நாடாளுமன்ற பலம் இல்லை. எனவே, இந்தச் சர்ச்சைகள் மேலும் உக்கிரமடைந்து அரசாங்கம் என்ற பிணைப்பிலிருந்து ஒரு கட்சி விலகினால், மற்றைய கட்சிக்கு அரசாங்கத்தை நடத்த முடியாத நிலைமை உருவாகும் அபாயமும் இருக்கிறது.
ஆனால், பொது எதிரணி எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழு அதனால் பயனடையவும் முடியாது.
ஏனெனில், ஸ்ரீ.ல.சு.கவின் மைத்திரி - மஹிந்த அணிகள் ஒன்றிணைந்தாலும் தனியாக அரசாங்கத்தை நடத்தப் போதிய பலம் அவர்களிடமும் இல்லை. பிடி சிறுபான்மையினரிடமே உள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதைய அரசாங்கம், பதவிக்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்களில், மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய மோசடி இரு சாராருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, அந்தப் பிணைமுறி விற்பனையின் போது, எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை என வாதிடுகிறது. அதற்குக் காரணம் இந்த விடயத்தில் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் பிரதமரின் நெருங்கிய சகாவாக இருப்பதே.
இந்த விடயத்தில், முறைகேடு இடம்பெற்றுள்ளதை ஸ்ரீ.ல.சு.க ஏற்றுக் கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக, இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டபோது, பதவியை இராஜினாமாச் செய்யுமாறு, மகேந்திரனுக்கு ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஆனால், பிரதமர் அதனைச் செய்யவில்லை. எனவே, மகேந்திரனின் பதவிக் காலம் முடிவடைந்தவுடன் அவரை மீண்டும் நியமிக்காது ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு இந்திரஜித் குமாரசுவாமியை நியமித்தார்.
தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக இரு சாராருக்கும் இடையே மோதல் மேலும் வலுவடைந்துள்ளது. ‘கோப்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்து, இந்தக் கொடுக்கல் வாங்கல் காரணமாக, அரசாங்கம் பல நூறு கோடி ரூபாய் நட்டம் அடைந்திருப்பதாகவும் அதற்கு மகேந்திரன் நேரடியாகவே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் முடிவு செய்துள்ள நிலையிலும் ஐ.தே.க இன்னமும் மகேந்திரன் நிரபராதி எனக் கூறுகிறது.
அவ்வாறிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அது சில ஐ.தே.க தலைவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மனித உரிமை தொடர்பாகப் பொறுப்புக் கூறல் என்ற விடயத்திலும், தற்போது இரு சாராருக்குமிடையே முரண்பாடு வளர்ந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைப் பேரவையில், அமெரிக்கா, இலங்கை தொடர்பாகக் கொண்டு வந்த பிரேரணையில், சில சொற்களை மாற்றி, அதற்குத் தாமும் அனுசரணை வழங்க, இலங்கை முன்வந்தது.
மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இருக்க வேண்டும் என இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கு, ஜனாதிபதியோ அரசாங்கத்தில் வேறு எவருமோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தாம் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறி வருகிறார்.
அது அரசாங்கத்தின் சார்பில் வெளிநாடுகளுடன் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.தே.க தலைவர்களைப் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் விடயமாகும்.
ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுக்கான அறிக்கையொன்றைத் தயாரித்து வருகிறது.
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமான தேசிய நடைமுறைத் திட்டம் (National Action Plan for Promotion and Protection of Human Rights- NHRAP) என்ற பெயரிலான அந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்ட இரண்டு ஆலோசனைகளை ஜனாதிபதியும் ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களும் நிராகரித்துள்ளனர்.
ஒன்று, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமாயின் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தினால் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாகும். மற்றையது, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று வியாக்கியானம் செய்யக்கூடிய ஓர் ஆலோசனையாகும்.
இந்த விடயத்திலும் பிணைமுறி விடயம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய விடயங்களிலும் மக்கள் அபிப்பிராயம்
ஐ.தே.கவுக்கு சாதகமாக இல்லை. எனவே, அந்த விடயங்களில் ஐ.தே.கவை எதிர்ப்பதில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களுக்கும் உள்நாட்டில் குறிப்பாக தென் பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
மேலும், சில விடயங்களிலும் ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களுக்கும் இடையில் வெளியே தெரியக் கூடிய அளவில் கருத்து மோதல்கள் வளர்ந்துள்ளன.
நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும் அந்தச் சர்ச்சைகளில் ஒன்றாகும். அந்த ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார் என்பது உலகமே அறிந்த விடயம். ஆனால், அவரது தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க தற்போது அந்த நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
அந்த ஆட்சி முறையை எதிர்காலத்திலும் தொடர்வதெனவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவைத் தமது வேட்பாளராகப் போட்டியில் நிறுத்துவதெனவும் அண்மையில் ஜனாதிபதியும் சமூகமளித்த அக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்றில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அந்த ஆட்சி முறையை 1978 ஆம் ஆண்டு, நாட்டில் அறிமுகப்படுத்திய ஐ.தே.க கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அம் முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூறியதோடு இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
ஐ.தே.க தலைவர்கள் எடுக்கும் சில முடிவுகளைத் தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பாவித்து இரத்துச் செய்யவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதை அவதானிக்க முடிகிறது.
வரவு செலவுத் திட்ட ஆலோசனையொன்றின் பிரகாரம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் லொத்தர் சீட்டுகளின் விலையை 20 ரூபாவிலிருந்து 30 ரூபாய் வரை அதிகரித்தார். இதற்கு எதிராக லொத்தர் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஜனாதிபதி தமது அதிகாரத்தைப் பாவித்து லொத்தர் விலையை மீண்டும் 20 ரூபாயாகக் குறைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
அது மட்டமல்ல, தனியார் நிறுவனமொன்றின் டயர் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஹொரண பிரதேசத்தில் அடிக்கல் நட்டு வைத்தார். பின்னர் அந்த நிறுவனம், சம்பந்தப்பட்ட காணியைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், 100 ஏக்கர் பரப்பளவுள்ள அக்காணி அரசாங்கக் காணியென்றும் அது ஏக்கர் 100 ரூபாய் வீதம் குத்தகைக்கே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. அதனையடுத்து, காணி சுத்தம் செய்யும் பணியை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கட்டளையிட்டதாகச் செய்திகள் வெளியாகின.
பிரதமர் பெரும் ஆர்வத்துடன் ஆரம்பித்த ஹம்பாந்தோட்டைக் கைத்தொழில் பேட்டைக்குக் காணிகளைப் பெறும் விடயத்திலும் அரசாங்கத்துக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 15,000 ஏக்கர் நிலம் அதற்காகப் பெறப்படவிருப்பதாகவும் அதற்கு ஜனாதிபதி அவ்வளவு விருப்பம் இல்லை எனவும் அண்மையில் சில ஊடகங்கள் கூறின.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதானமாக ஐ.தே.க வாக்குப் பலத்தினாலேயே பதவிக்கு வந்தார். எனவே, ஆரம்பத்தில் ஸ்ரீ.ல.சு.கவின் அவரது அணியினருக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்பட்டது.
ஆனால், ஜனாதிபதி ஸ்ரீ.ல.சு.கவின் தலைவர் என்ற முறையில் அத்தலைமைப் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியின் காரணமாகவே, தற்போதைய இந்த மோதல் நிலை உருவாகியிருக்கிறது.
ஸ்ரீ.ல.சு.கவின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள மைத்திரியின் அணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிந்ததே.
அதேவேளை, மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவது தமது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என மைத்திரிபால பல முறை பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். இந்த நிலையில், மஹிந்தவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மஹிந்தவின் காலத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்தது. அப்போது மஹிந்த, மைத்திரிக்கு எதிராகத் தேசப்பற்றை ஆயுதமாகப் பாவிக்க முற்பட்டார்.
இலங்கையைப் பொறுத்தவரை அது மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகும். திருடர்களையும் புனிதர்களாக்கிவிடும் ஆயுதமாகும். எனவே, அந்த விடயத்தில் மஹிந்த வெற்றி கண்டுவிட்டார் போலும். தாமும் தேசப் பற்றாளர் தான் எனச் சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மைத்திரிக்கு ஏற்பட்டது.
எனவே, அவர் ‘எவன்ட் காட்’ விவகாரத்துக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளைக் கைது செய்ததையும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகளை நீண்ட காலம் தடுத்து வைத்ததையும் பகிரங்கமாக விமர்சித்தார்.
தமது அரசாங்கமே உலகுக்கு வழங்கிய உத்தரவாதத்தைப் புறக்கணித்து, சர்வதேச நீதிபதிகள் வேண்டாம் எனக் கூற ஆரம்பித்தார்.
மைத்திரிபால சிறிசேன, சிறுபான்மை மக்களின் வாக்குகளாலேயே பதவிக்கு வந்தார் எனவும் வாதிடலாம். அந்தளவுக்கு சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக அவருக்கு வாக்களித்தனர்.
ஆனால், அண்மையில் அவர் சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களைச் சீண்டி வரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தமது தேசப்பற்றை வெளிக்காட்டுவதற்காக அவர், மஹிந்த ராஜபக்ஷ பொறாமைப்படும் வகையில், அண்மையில் ஒரு நடவடிக்கையை எடுத்தார். பிரிட்டஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் மகா தேசாதிபதியினால் 19 இலங்கையர்களை தேசத் துரோகிகள் எனப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமாணி அறிவித்தலை இரத்துச் செய்தமையே அதுவாகும்.
இந்தப் பின்னணியிலேயே ஐ.நா மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்ப்பார்க்கும் அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு மாற்றத்தினதும் நல்லிணக்க முயற்சியினதும் எதிர்காலத்தை ஊகித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையிலேயே இந்த விடயங்கள் தெற்கிலுள்ள அதிகாரப் போட்டிகளினூடாக மட்டுமன்றி வடக்கிலுள்ள அதிகாரப் போட்டிகளினூடாகவும் செல்ல வேண்டியுள்ளது.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையே அதிகாரப் போட்டியொன்று நிலவுகிறது என்பது தெரிந்ததே. அதுவும் தேசப்பற்றுத் தொடர்பான போட்டியாகவே நடைபெற்று வருகிறது.
தாம், அரசாங்கத்துடன் கலந்துரையாடி இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூட்டமைப்புக் கூறி வருகிறது. கூட்டமைப்பு, மக்களை ஏமாற்றுகிறது எனப் பேரவையின் சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.
உதாரணமாக, தமிழ் மக்கள், தம்மை தாமே ஆளும் வகையில் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியலமைப்பொன்றை இந்த வருடத்துக்குள் பெற்றுக் கொள்வோம் எனக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தைப் பொங்கல் நிகழ்ச்சியொன்றின் போது கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளிப்பதைப் போல், அதே மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற மற்றுமொரு கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியோ வடக்கு, கிழக்கு மாகாண இணைப்போ, உத்தேச அரசியலமைப்பு மாற்றத்தினால் கிடைக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார்.
அதேவேளை, உத்தேச புதிய அரசியலமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை எனவும், எனவே அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாபஸ் பெற வேண்டும் எனவும் கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளராகவிருந்து தற்போது தமிழ் மக்கள் பேரவையுடன் இயங்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியிருந்தார்.
எனவே, வடக்கிலும் தெற்கிலும் தற்போது ஏற்பட்டுள்ள போட்டா போட்டிகள், இனப் பிரச்சினையைத் தீர்க்கப் பெரும் தடையாக இருப்பது தெளிவாகிறது. தாம் இருக்கும் நிலைப்பாடுகளில் இருந்து ஓர் அங்குலமேனும் விலக மாட்டோம் எனத் தமிழ் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் நினைத்தால் இனப் பிரச்சினை ஒருபோதும் தீரப்போவதில்லை.
ஆனால், அரசியலமைப்புத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்களத் தலைவர்கள், தாம் தற்போது இருக்கும் நிலைப்பாடுகளில் இருந்து சற்றேனும் விலகி, பொதுவானதோர் மைய நிலைக்கு வர முற்பட்டால், அவர்களது போட்டியாளர்கள் அதனால் பயன் பெற, இன உணர்வுகளை தூண்டுவார்கள்; துரோகிப் பட்டம் சூட்டுவார்கள். அதற்கு இரு புறத்திலும் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இதற்குப் பரிகாரம் காண்பது எவ்வாறு என்பதே தற்போதுள்ள பெரும் பிரச்சினையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago