Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
காரை துர்க்கா / 2018 மார்ச் 06 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாங்கள் ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் படித்த அந்த பொன்னான நாட்களுக்குச் செல்வோம்... அந்தப் பசுமையான, என்றும் வாழ்நாளில் மறக்க முடியாத வசந்த காலத்தை, மீள ஒரு முறை எண்ணிப் பார்ப்போம். எத்தனை குறும்புகள், வம்புகள், வேடிக்கைகள், விநோதங்கள் எனப் பட்டியல் நீளும், அல்லவா?
அங்கே எம் பள்ளித் தோழர், தோழிகளுடன் விளையாடுவோம். விளையாட்டின் போது, எங்களுக்குள் சிறு பிணக்குகள் ஏற்படும். ‘வலிமை உடையோன், தப்பிப்பிழைப்பான்’ என்ற டார்வினின் கொள்கை போல, அவ்விடத்திலும் உடல் வலிமை உள்ளோர், உடல் வலிமை அற்றோரைத் தாக்க முற்படுவார்கள்.
அந்த வேளையில், வலு அற்றோர், வலு உடையோருக்கு எதிராகக் கூறும் ஆக்ரோசமான வார்த்தைகள், “எனக்கு (எங்களுக்கு) அடித்தால், அதிபரிடம் சொல்லுவேன்” என்பதாகும்.
அது அந்த இடத்தில் தம்மைப் பாதுகாக்க அல்லது தப்பிப் பிழைக்க, அவர்கள் கூறிய வார்த்தைகள் அல்லது வெருட்டல்கள் எனவும் கூறலாம்.
இனி விடயத்துக்கு வரலாம். தற்போது சுவிஸ்லாந்து நாட்டில், ஜெனீவா நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது மனித உரிமை மாநாட்டு கூட்ட அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.
“இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள், குறிப்பாக தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜெனிவாவுக்குக் கொண்டு செல்வோம்; அங்கு முறையிடுவோம்; அதில் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துவோம்” என்றவாறான சொற்தொடர்கள், நம் நாட்டில் சிறுபான்மை இனங்கள், பெரும்பான்மை இனத்து, அதிகாரத் தரப்பைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள் அல்லது வெருட்டல் நடத்தைகள் ஆகும்.
அவைகள், அன்று வலுக் குன்றியோர், பள்ளிக்கூடத்தில் தம் சக நண்பனின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, பாடசாலை அதிபர் எமக்காக இருப்பார் என்ற தைரியத்தில் கூறிய வார்த்தைகள் ஆகும்.
இவைகள், இன்று ஸ்ரீ லங்காவில் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்கள், சக இனத்தின் (ஆளுகின்ற அரசாங்கத்தின்) தொடர் தொந்தரவுகளில் இருந்து தம்மைப் பாதுகாக்க, தமக்காக உலகத்தின் அதிபர் (ஐக்கிய நாடுகள் சபை) இருக்கிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பில் கூறும் வார்த்தைகள் ஆகும்.
ஆகவே, சிறுபான்மை மக்களின் இவ்வாறான நடத்தைகள், கடந்த காலங்களில் ஆண்ட அரசாங்கங்களில் அல்லது நிகழ்காலத்தில் ஆளுகின்ற அரசாங்கத்தில் எள்ளளவும் நம்பிக்கை கொள்ளாத நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
அண்மையில், அம்பாறையில் ஒரு தேநீர்க் கடையில் நடைபெற்ற சம்பவம், நகரிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் உடுத்த உடுப்புடன் ஊரை விட்டு ஓட்டம் எடுக்கும் அளவுக்கு விபரீதமானது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலங்களில், அம்பாறை நகரில் அதிகமாகத் தமிழர்கள், முஸ்லிம் மக்களே வாழ்ந்தார்கள். கோயில்கள், பாடசாலைகள், வணிக நிலையங்கள் என சீரும் சிறப்புமாக வாழ்க்கையை அனுபவித்தார்கள்.
சிங்கள அரசாங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால், அம்பாறை நகரம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து முற்றாகக் கை நழுவியது.
தற்போது நகரில் சொற்ப அளவில் வதியும் முஸ்லிம் மக்களையும் தொந்தரவு கொடுத்து வெளியேற்றும் நகர்வே நடைபெற்று உள்ளது.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; தண்டனை வழங்கப்படும் என சூழுரைப்பார்கள்; வீர முழக்கம் கொட்டுவார்கள் அரசியல்வாதிகள். ஆனால், எல்லாம் கண்துடைப்புத்தான்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஐனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு என்ற செய்திகள், சிறுபான்மை மக்களுக்கு பழக்கப்பட்ட, அவர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிட்ட செய்திகள் ஆகும்.
ஆனால், தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும். ஏனெனில், இது சிங்களப் பேரினவாதத்தின் நீண்டகாலத் திட்டமிடலின் சிறிய வௌிப்பாடு மட்டுமே.
அத்துடன், இவ்வாறாகத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை இங்கு பட்டியல் இட வேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை.
அவை, ஆட்சியில் அமர்ந்திருப்போர் மீது கொண்ட அதிருப்தி மற்றும் நம்பிக்கை இன்மை போன்றவையாகும். இவற்றையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்வோம் என்ற கருத்துகள் ஆகும்.
தற்போது அம்பாறையில் நடந்த அசம்பாவிதங்களை ஐ.நாவுக்கு கொண்டு செல்வோம் என யாழ். பன்னாட்டு முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
அதாவது, இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் மீது இலக்கு வைக்கப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை, ஜெனீவா மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கரிசனைக்கு உட்படுத்தும் செயல் முறையில் எமது அமைப்பு தொடர்ந்து பயணிக்கும் எனத் தெரிவித்து உள்ளது.
இதன் கருத்து யாதெனில், உள்ளூரில் நடக்கும் இது தொடர்பான விசாரணையில் நம்பிக்கை இன்மையே ஆகும். பாரபட்சமற்ற, நடுநிலையான தீர்ப்பு வரப் போவது இல்லை என்ற திடமான எண்ணமே ஆகும்.
இதற்கிடையே காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்துக்கான ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் கடந்த 28ஆம் திகதி வழங்கப்பட்டு உள்ளது. காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னரே, மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அரசாங்கம் உண்மையாக, இதயசுத்தியாக, உணர்வு பூர்வமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளவில்லை; கையாள விரும்பவில்லை என்பதை, நீண்ட காலதாமதமான அலுவலர்கள் நியமனம், எளிய முறையில் எடுத்துக் காட்டி உள்ளது. ஏழு அலுவலர்களை நியமிக்க அண்ணளவாக 600 நாட்கள் தேவைப்பட்டுள்ளன.
அது கூட, அவசரம் அவசரமாக ஐ.நாவின் அமர்வுகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இங்கு நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயம் அல்ல. அவ்வாறு நியமிக்கப்பட்ட எழுவரில், இருவர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவர். இவர்கள் எவ்வளவு தூரம் நடுநிலையாக, நம் நாட்டில் செயற்படுவார்கள் என்பது பெரும் வினாவே?
அத்துடன் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிப்பதே இந்த அலுவலகத்தின் நோக்கம் ஆகும். அதைக் கண்டு பிடிக்க, மூன்று வருடங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
நடப்பு நல்லாட்சியின் தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் காணாமல் போனோர் என எவரும் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள்.
ஆக, இவ்வாறாக தலைவர்களால் இல்லை எனக் கை விரிக்கப்பட்டவர்கள், இனி கைக்கு கிடைப்பார்களா? ஆகவே இவர்களால் நியமிக்கப்பட்ட அலுவலகமும் அலுவலர்களும் எதைக் கண்டு பிடிக்கப் போகின்றார்கள்?
அண்மையில், நம் நாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், அரசாங்கத்தின் ஆட்சி கூட ஈடாட்டம் கண்ட நிலையில் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு, எதிரான அல்லது தலைமையை மாற்றுகின்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
அடுத்து, ஐனாதிபதி தனது கட்சியை எப்படி வலுப்படுத்தலாம், அதனூடாக ஆட்சியை எவ்வாறு கட்டிக்காக்கலாம் என்பதில் குறியாக உள்ளார்.
ஆகவே, இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அவர்களது எண்ணமும் சிந்தனையும் செயற்பாடும் ஆட்சிக் கனவிலும் அதை எப்படி தக்க வைக்கலாம் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர்.
அதற்கு இடையில் வந்து, நந்தி போல புகுந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரை எதிர் கொள்ள, உலகத்தை நம்ப வைக்கும் ஒரு தற்காலிக ஏற்பாடே, இவ்வாறான நியமனங்கள் ஆகும்.
கண்டு பிடிப்பு அலுவலகம், ஆட்களைக் கண்டு பிடிக்கும் எனச் சில வேளைகளில், மேற்குலகம் நம்பலாம். ஆனால், இது வெறும் கண் துடைப்பேயன்றி, தமது கண்ணீரைத் துடைக்காது என்பதே, தமிழ் மக்களின் நிலைப்பாடு ஆகும்.
மேற்குலகத்திடம், “காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் அலுவலகம் தனது செயற்பாட்டை ஆரம்பிக்க உள்ளது” எனக் கூறி, நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, எவ்வாறு மரணப் பத்திரம் வழங்கலாம் எனச் சிந்திக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இது, நாட்டை ஆளுவோருக்கு பத்தோடு பதினொராவது பிரச்சினையாக இருக்கலாம். அல்லது அது ஒரு பிரச்சினையே இல்லை என்ற நிலையில்கூட இருக்கலாம்.
ஆனால், உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் வேதனையும் விரக்தியும் இன்னமும் வலித்துக் கொண்டே இருக்கின்றது. அவர்களைப் படையினரின் தடை முகாம்களில் ஒப்படைக்கும் போது, அவர்கள் இட்ட அழு குரல் எம் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே, அந்த வலியும் வேதனையும் அனுபவித்தால் மாத்திரமே நன்றாகப் புரியும்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago