2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

வெட்கம்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 மார்ச் 20 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

 நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில்  சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

நமது நாட்டில், அவ்வப்போது முறுக்கேற்றி வளர்க்கப்பட்டு வந்த இனவாதத்தை, இப்போது அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், இங்கு யாரும் யாரையும் பலிகொள்ள முடியும் என்கிற நிலைவரம் உருவாகியிருப்பது பெரும் ஆபத்தானமாகும்.

யார் பொறுப்பு?

கண்டி மாவட்டத்தில் நடந்து முடிந்த கலவரம், அம்பாறையில் நடந்த கலவரத்தை மறக்கடித்து விட்டது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான அம்பாறையிலுள்ள ஹோட்டலொன்றில், சிங்களவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பராட்டாவுக்குள், ஆண்களின் இனப்பெருக்க வீரியத்தை இல்லாமல் செய்யும் வகையிலான, குளிசையைக் கலந்திருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தியே, அங்கு இனவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டது. 

இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பராட்டாவில் இருந்த சந்தேகத்துக்குரிய பொருளை, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு, பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர். அது குறித்த முடிவு வெளிவந்தபோது, அந்த பராட்டாவில் மருந்துகள் எவையும் கலந்திருக்கவில்லை என்றும், பராட்டாவில் இருந்ததாகக் கூறப்பட்ட பொருள், மா உருண்டை எனவும் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட அழிவுகளுக்கு, யார் பொறுப்புக் கூறுவது என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும். 

நிரூபிக்கப்படாத ஒரு சந்தேகத்தை முன்வைத்து, நடத்தி முடிக்கப்பட்ட அந்தக் கலவரத்தின் மூலம், ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை யார் மீட்டுக் கொடுப்பது? அந்த இனவாதத் தாக்குதல் மூலம், உடலாலும் மனதாலும் வலிகளை அனுபவித்தவர்களுக்கு, எந்த நியாயத்தைக் கூறி ஆறுதலளிப்பது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது மிகக் கடினமாகும்.

அதுபோலவே, கண்டியில் நடத்தி முடிக்கப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு, சிங்கள இளைஞர் ஒருவரின் மரணத்தை, பேரினவாதிகள் காரணமாகச் சொல்கின்றார்கள். முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதால், சிங்களவர் ஒருவர் மரணித்து விட்டார் என்கிற கோஷத்தை முன்னிறுத்தியே, இனவாதிகள் தங்கள் வேட்டையை, கண்டி மாவட்டத்தில் நடத்தி முடித்தார்கள். 

ஆனால், அந்த மரணம் என்பது, இந்தக் கலவரத்துக்கான வெற்றுக் காரணமாகும் என்பதைப் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். இனவாதிகள், ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த ஒரு தாக்குதலை நிறைவேற்றி முடிப்பதற்கு, சிங்கள இளைஞர் ஒருவரின் மரணத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றனர்.

அச்சம் தரும் கேள்வி

கண்டி மாவட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதத் தாக்குதல்கள், துல்லியமானத் திட்டமிடப்பட்டவை என்று, முஸ்லிம் அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

மரணித்த சிங்கள இளைஞரின் நல்லடக்கம் நடைபெறும் தினத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும், அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம், தான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவர்கள் அதைச் செய்யத் தவறி விட்டனர் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதே போன்றதொரு குற்றச்சாட்டை, அமைச்சர் ரவூப் ஹக்கீமும் முன்வைத்திருந்தார்.

நான்கு அல்லது ஐந்து நாட்கள், இனவாதக் காடையர்களுக்கு, அவர்களின் விருப்பப்படி தாண்டவமாடும் பொருட்டு, கண்டி மாவட்டம் ‘திறந்து’ விடப்பட்டிருந்தது. போதுமென்றளவு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்ட பிறகுதான், அரசாங்கம் சோம்பல் முறித்துக் கொண்டு, வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. 

முஸ்லிம்கள் மீதான, இனவாதத் தாக்குதல்களுக்கு, அரசாங்கத்தின் அல்லது அரசாங்கத்துக்குள் இருப்பவர்களின் ஆதரவு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் தமது கடமைகளைச் சரியாகச் செய்திருந்தால், இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்று பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி, சில சிங்கள அமைச்சர்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

தாக்குதல் நடைபெறும் போது, பதிவான சி.சி.டி.வி வீடியோ காட்சிகளில், பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பார்த்திருக்கத் தக்கதாக, அவர்களை அருகில் வைத்துக் கொண்டே, காடையர்கள் தாக்குதல் நடத்தியதைக் காணமுடிகிறது.

இன்னொருபுறம், பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும், கண்டியில் இடம்பெற்ற தாக்குதல்களை, அவர்களாகவே கண்டும் காணாமல் இருந்தார்களா? அல்லது ‘கண்டும் காணாமல் இருங்கள்’ என்று, எங்கிருந்தோ வந்த உத்தரவுக்கமைவாக, இந்த விடயத்தில் அவர்கள் கண்டும் காணாமல் இருக்கச் செய்யப்பட்டார்களா என்கிற கேள்விகளும் உள்ளன.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, இந்த அரசாங்கம் மீது, முஸ்லிம்கள் தரப்பில் மிகப்பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள முடிகிறது. வேலியே பயிரை மேய்ந்திருக்கிறதா? என்கிற அச்சம் தரும் கேள்வியும் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது.

இந்த அச்சத்தை, மேலும் அதிகரிக்கும் வகையில் அல்லது உறுதிப்படுத்தும் வகையில், கண்டித் தாக்குதலுக்குப் பின்னர், பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அப்பன் குதிருக்குள் இல்லை

கண்டி மாவட்டத்தில், முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், இருந்தார்கள் எனச் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களில், ஞானசார தேரரும் ஒருவராவார். கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மீது, தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும், ‘மஹசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க என்பவர், ஞானசார தேரருடன் கண்டியில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்துப் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. 

கண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதலில், ஞானசார தேரர் தொடர்புபட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டுக்கு, அந்த வீடியோ மிக முக்கியமான ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. குறித்த வீடியோ, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் சென்றிருந்தபோது, இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் சில வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. 

இது முஸ்லிம்களிடையே கடுமையான விசனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஜப்பானுக்கு ஜனாதிபதி அழைத்துச் சென்ற குழுவில், ஞானசார தேரரும் அடங்கியிருந்தார் என்கிற பேச்சுகளும் எழுந்தன. 

ஆனால், அதை ஜனாதிபதி செயலகம் அவசரமாக மறுத்திருந்தது. ஜனாதிபதியின் ஜப்பான் நிகழ்வில், ஞானசார தேரர் கலந்து கொண்டமையானது, தற்செயலானதொரு நிகழ்வு என்று காட்டுவதற்கு, அரசாங்கம் பெரும் பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும், அந்தப் பிரயத்தனங்கள், ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற கதையை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ‘குற்றவாளிகள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவார்கள்’ என்கிற மாமூலான உத்தரவாதங்களை, பிரதமரும் ஜனாதிபதியும் வழங்கியுள்ளனர்.

ஆனாலும், இதில் முஸ்லிம்களுக்கு துளியளவும் நம்பிக்கை கிடையாது என்பதை, மிக வெளிப்படையாகக் கூறியே ஆகவேண்டும். 

அம்பாறை நகரில், இனவாதத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை, மிக இலகுவாகச் சட்டத்தின் பிடியிலிருந்து கழற்றி விடுவதற்காக, நீதிமன்ற மரபுகளையும் மீறி, பொலிஸார் நடந்து கொண்டமை குறித்து, முன்னர் இந்தப் பத்தியில்  எழுதியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. அதுபோல்தான், கண்டி விவகாரத்திலும் நடந்து விடும் என்கிற சந்தேகம், முஸ்லிம் மக்களிடம் பரவலாக உள்ளது.

மஹேந்திரனை மறக்கடித்தல்

இன்னொருபுறம், “கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், அர்ஜுன மஹேந்திரனை மறக்கடிக்கச் செய்துள்ளன” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள விடயம், மிகவும் கவனத்துக்குரியது. 

நாட்டில் பிரதான பேசுபொருளாகவும் மக்களின் அதிக கவனத்தைப் பெற்றதுமாக, பிணைமுறி மோசடி தொடர்பான விடயங்கள் இருந்தன. பிணைமுறி மோசடி விவகாரமானது, ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பெரும் அவப்பெயரையும் அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியது.

ஆனால், கண்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர், பிணைமுறி மோசடி விவகாரம் பற்றிய பேச்சுகள் அப்படியே அமுங்கிப் போய் விட்டன. கிட்டத்தட்ட மக்கள் அதை மறந்து விட்டார்கள். அதைத்தான், “அர்ஜுன மஹேந்திரனை மக்கள் மறந்து விட்டனர்” என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

 பிணைமுறி மோசடியில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றுக்கு, ஓர் உள்ளர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைப் புரிந்து கொள்கின்றவர்களுக்கு, கண்டியில் நடைபெற்ற தாக்குதலின் சூத்திரதாரியாக, யாரை மஹிந்த ராஜபக்ஷ விரல் நீட்டிச் சொல்ல முற்படுகின்றார் என்பதை, விளங்கிக் கொள்ள முடியும்.

தப்பித்தல்

இது இவ்வாறிருக்க, கண்டியில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலுக்கு, அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.இந்த இடத்தில், ‘அரசாங்கம் என்பது யார் அல்லது எது’ என்கிற கேள்வி முக்கியமானது. 

வெட்கம்கெட்ட தனம்

அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இயலாமைகளை மேலும், அப்பட்டமாக விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பம், கண்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலமாக, மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. 

ஆட்சியாளர்களை அதட்டிக் காரியம் சாதிக்கும் வல்லமையை முஸ்லிம் அரசியல் இழந்து  போய்விட்டமையை, கண்டித் தாக்குதல் பறை சாற்றியுள்ளது. 

ஒரு காலத்தில், இந்த நாட்டினுடைய அரசாங்கங்களை அமைப்பதற்கும், கலைப்பதற்குமான வீரியத்தைக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல், ‘மலடாகி’க் கிடப்பதைக் காணும் அவலத்தை, கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் புரிய வைத்தன.

முஸ்லிம் சமூகம் மீது, இனவாதத் தாக்குதலொன்று நடத்தப்படுகின்ற போதிலும், அது குறித்து ஆட்சியாளர்கள் உடனடிக் கரிசனை எடுக்கவில்லை என்பதை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளங்கிக் கொண்ட பின்னரும், இந்த அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குத் தடையாக, அவர்களைத் தடுப்பது எது? அல்லது என்ன? என்கிற கேள்வி முக்கியமானதாகும். 

முஸ்லிம்களுக்கு இத்தனை அநீதி நடந்து விட்ட பிறகும், “அரசாங்கத்தில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, அரசாங்கத்தில் இருக்கும் வெட்கம்கெட்ட தனம், தனது பிரதிநிதிகளுக்கு, எப்போது உருவானது என்பதையும் முஸ்லிம் சமூகம் அடையாளம் காண வேண்டும்.  

இன்னொருபுறம், அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விலகிச் சென்றாலும் கூட, ஆட்சியை கவிழ்த்து விட முடியாது என்கிற உண்மையையும் மறந்து விடக் கூடாது. 

‘முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்று விடுவதால், அரசாங்கம் விழுந்து விடக் கூடாது’ என்பதற்காகவே, ஆட்சியாளர்களுக்கு முட்டுக் கொடுக்க, கணிசமானோர் முன்வரக் கூடிய சூழ்நிலை, அரசியலரங்கில் உள்ளமையும் கவனத்துக்குரியதாகும்.

நிரூபித்தல்

இனி, எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு, அரசாங்கத்தில் இருந்து காலத்தைக் கழிக்க வேண்டிய நிலையில்தான், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 

மீறி, யாராவது வெளியில் வருகின்றமை ‘அரசியல் ஆச்சரியமாக’வே பார்க்கப்படும். ஆனால், ஆச்சரியங்கள் அத்தனை இலகுவில் நிகழும் என்று, நம்பிவிட முடியாது.

இதேவேளை, தமது எதிர்ப்பைக்  காட்டும் பொருட்டு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதால், என்னதான் நடந்து விடப் போகிறது என்கிற கேள்விகளும் வேறொருபுறமாக உள்ளன.

‘எங்களுக்கும் சொரணை இருக்கிறது’ என்பதையாவது, ஆகக்குறைந்தது அந்த வெளியேற்றத்தின் மூலம் நிரூபிக்க முடியாமலா போய்விடும்.

படப்பிடிப்பு: ஷெஹான் குணசேகர


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .