2025 மே 17, சனிக்கிழமை

வாபஸ் பெறப்படும் இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம்

Thipaan   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நடத்தைகளுக்கு தண்டனை வழங்கும் விதத்திலமைந்த உத்தேச சட்டமூலம் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பகல் நாடாளுமன்;றத்தில் அறிவித்துள்ளார். இதற்கமைய, திட்டமிட்டிருந்தபடி, அடுத்த மாதம் இச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெறுவதான அரசாங்கத்தின் அறிவிப்பு, சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியா? இல்லையா? என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தமிழர்களும் முஸ்லிம்களும் தம்முடைய இனங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கான சுதந்திரத்தை, நேற்றைய அறிவிப்பு மேலும் உறுதி செய்திருக்கின்றது என்று சந்தோசப்பட்டுக் கொண்டாலும், பேரினவாதத்தை எதிர்கொள்வதில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தலையிடியை எதிர்கொள்ளலாம் என்ற அபாய உணர்வையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது என்ற மறுபக்கமும் இதிலுள்ளது.

முதலில் இச்சட்டம் பற்றிய அடிப்படை புரிதல் அவசியமாகின்றது. கடந்த நான்கைந்து வருடங்களிலான இலங்கையின் அனுபவங்களை வைத்துக் கொண்டு நோக்குகின்ற போது, இவ்வாறான சட்ட ஏற்பாடு ஒன்று மிகச் சிறந்தது என்றே சாமான்ய மக்கள் கருதுகின்றனர். ஆனால், எப்போதும் போல பொது பலசேனா அமைப்பு இச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றது. எப்போதுமில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க ஆட்சேபத்தை வெளியிட்டிருக்கின்றது. சிவில் அமைப்புகள் ஆட்சேபித்துள்ளன. இதற்கு மேலதிகமாக இச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

'நல்லாட்சி' என்ற அடைமொழியை நிஜமாக்குவதற்காக பகீரதப் பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கும் இப்போதைய அரசாங்கமானது, இனவாதத்துக்கு அப்பாலான கொள்கையைக் கொண்டதாகும். நாட்டில் இனவாதம் மேலோங்கியிருந்த ஒரு காலப்பகுதியில், அது வளர்வதற்கு இடமளித்த மகாராஜாவை தோற்கடித்து, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மேற்படி கொள்கையே முக்கிய கருவியாகப் பாவிக்கப்பட்டது. இதன்காரணமாகவே சிறுபான்மை மக்களின் ஆதரவும் கிடைத்தது.

முன்னதாக, சிங்கள ஆட்சிக் கோட்டையின் கிணற்றடி நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட ஒரு நச்சுச் செடி போல இனவாதம் அளவுக்குமீறி வளர்ந்திருந்தது. தமிழ் மக்களைப் போல முஸ்லிம்களுக்கும் ஒரு 'பாடம்' புகட்டுவதற்காக 'இனவாதம்' என்ற ஆயுதம் கையில் எடுக்கப்பட்டது. ஹலால் சான்றிதழில் தொடங்கி, அளுத்கமை கலவரத்தில் வந்து நின்றது பேரினவாதத்தின் பெரும்போக விளைச்சல்கள். அந்த நேரத்தில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனவே, முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களுக்கும் இதனால் ஓர் ஆறுதல் ஏற்பட்டது.

இருப்பினும், பரபரப்பு அடங்கும் வரைக்கும் பதுங்கியிருந்த கடும்போக்கு சக்திகள், நேரம் பார்த்து தற்போது வாயைத் திறந்திருக்கின்றன. மீண்டும் இனவெறுப்பு - இனவாத, மதவாத பேச்சுக்களை நாளாந்தம் வெளியிடுகின்றன. ஆனால், சிறுபான்மை மக்களின் ஆணையைப் பெற்ற இந்த நல்லாட்சி அரசாங்கம், இவ்வாறு பேசிய யாரையும் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. இது குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. 'என்னடா இது, இந்த அரசாங்கமும் இவனுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டாது போலும்' என்று அவர்கள் தமக்குள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே புதிய சட்டமூலம் பற்றிய அறிவிப்பை அரசாங்கம் அதிரடியாக வெளியிட்டது. 

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடொன்றில் பேரினவாதிகளை, இனவாதம் பேசுகின்ற காவியுடைதாரிகளை நேரடியாக கைதுசெய்து சிறையில் அடைத்தால், எவ்வாறான பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்பது அரசாங்கத்துக்கு தெரியும். ஆகவேதான் அதற்கான அடிப்படை சட்டமொன்றை இயற்றிவிட்டு, பின்னர் மிக இலகுவான முறையில் 'உள்ளே தள்ளும்' பொறிமுறையையே நல்லாட்சி அரசாங்கம் கட்டமைக்க நினைத்தது எனலாம். ஆனால், நாட்டில் தற்போது எழுத்தில் இருக்கின்ற சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படாதிருக்கின்ற ஒரு சூழமைவில், புதிதாக கொண்டு வரப்படுகின்ற சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் எவ்வாறு இருக்கும்? என்ற குழப்பநிலை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருந்தது.

கடந்த 11ஆம் திகதி, நாடாளுமன்;ற ஒழுங்குப் பத்திரத்தில் உத்தேச சட்டமூலம் தொடர்பான விவரம் உள்ளடக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமுல்படுத்தப்படுமிடத்து மத, இன குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசுவோர், எழுதுவோர், செய்கைமூலம் வெளிப்படுத்துவோர் போன்ற பல்வேறு தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவர் அவ்வழக்கில் குற்றவாளியாக காணப்படுமிடத்து, இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம் இலங்கையின் நியாயதிக்கத்துக்கு கிடைக்கும்.

இவ்வாறான சட்டம் ஒன்று கொண்டு வரப்படப் போகின்றது என்று அறிந்தவுடனேயே கடும்போக்கு இயக்கமான பொதுபலசேனா இதற்கெதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டது. இது எதிர்பார்த்ததுதான். ஏனெனில், கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகளே இப்படியான சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியது. ஆதலால், பொது பலசேனா இதை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் அவர்கள் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது வார்த்தைகளை வடிகட்டி வெளியிட வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்(?).

முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மை இனங்களையும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுபவர்களாக காண்பித்து, தம்மை தேசப் பற்றாளர்களாகவும் தமது எதிர்த்; தரப்பினரை  தேசத்துரோகிகளாகவும் சித்திரிப்பதன் மூலம் தமக்கு 'வேண்டியதை' காலமெல்லாம் பெற்றுக் கொள்ளவே அடிப்படைவாதிகள் விரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் உத்தேச சட்டம் அமுலுக்கு வந்தால், தமது 'வியாபாரம்' படுத்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு. எனவே இச் சட்டமூலம், சட்டமாவதை எந்த வழியிலேனும் தடுத்து விட வேண்டுமென அவர்கள் முனைகின்றனர்.

இவ்வாறு இருக்கத்தக்கதாக , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இச்சட்டமூலத்துக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றது. இதுவரை காலமும் பொதுபலசேனா அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு சாதகமாக செயற்பட்டது கிடையாது என்பதால், பொது பலசேனாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எந்தவொரு விடயத்திலும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்ததில்லை. இவ்வாறிருக்க, இவ் விவகாரத்தில் இரண்டும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றமையானது, ஒரு தொகுதி மக்களுக்கு புரியாத புதிராக இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் தமிழர்களுக்காகவே குரல் கொடுத்து வருகின்றது. அவ்வப்போது தமிழ் பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் பற்றியும் பேச மறந்ததில்லையாயினும், தேசிய ரீதியில் எல்லா இனங்களையும் நோக்காகக் கொண்ட அணுகுமுறையை த.தே.கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை. இது மிகவும் இயல்பானதும், நியாயமானதும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தமது சுயநிர்ணய உரிமைக்காக ஒரு விடுதலைப் போராட்டத்தையே நடாத்தி அதில் பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள் தமிழர்கள். ஆயுதமேந்திய போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டாலும் அவர்களது விடுதலை தாகமும் அபிலாஷைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த விடயங்களை எல்லாம் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பிரதிநிதியாகவே இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நோக்கப்படுகின்றது. ஆகையால், தமிழர்கள் குறித்து அதிகம் பேச வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது. தமிழர்கள் பற்றிப் பேசுவதை எப்போது கூட்டமைப்பு நிறுத்திக் கொள்ளுமோ அப்போது, ஒன்றில் - பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டும். இல்லாவிடின் த.தே.கூட்டமைப்பின் அரசியல் அஸ்தமனமாகி விடும் என்பதே நடைமுறை யதார்த்தம்.

இவ்வாறான நிலையில்,  'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தை வைத்துக் கொண்டே அரசியல் செய்கின்றது. அதனாலேயே புதிய சட்டமூலத்தை எதிர்க்கின்றது' என்று மேலோட்டமாக நோக்குகின்ற சிலர் கருதக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் செயற்பாட்டாளர்கள் தத்தமது சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பேரினவாதிகளுக்கு எதிராக பேசவே வேண்டும். அப்படி பேசுவதென்றால் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் தனித்தனியாக வரையறை செய்தே பேச வேண்டியிருக்கின்றது. இவ்வாறிருக்கையில் சிங்களவர்கள் அவர்களது இனத்திற்கு சார்பாக பேசுவது சிறுபான்மை இனத்தவருக்கு 'பேரினவாதமாக' தெரிவது போலவே, தமிழர்களும் முஸ்லிம்களும் தம்முடைய சமூகங்கள் பற்றி குரல் கொடுப்பதும் அறிக்கைவிடுவதும் ஒருவிதமான '(சிற்றின) இனவாதமாகவே' சிங்களவர்களால் நோக்கப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது விடயத்தில் சிங்களவர்களை பிழைகாண முடியாது.

இவ்வாறான ஒரு பின்புலத்தோடு புதிய சட்டமூலம், சட்;டமாக்கப்பட்டு அமுலுக்கு வருமானால், எல்லோரும் தனியொரு இனம் என்ற அடிப்படையிலன்றி ;'தேசியம்' என்ற அடிப்படையில் பொதுவாகவே செயற்பட வேண்டியிருக்கும். சட்டத்தின் உள்ளரங்கங்களை துறைசார்ந்தோர் விளங்கி வைத்திருக்கும் அளவுக்கு ஏனையோர் தெளிவாக விளங்கி வைத்திருப்பதில்லை. வெறுப்பூட்டும் இன, மத பேச்சு என்று சட்டம் எவ்வாறான விடயங்களை வரைவிலக்கணப்படுத்தும் என்பதும் இப்போதைக்கு தெரியாது. அப்படியாயின், பலருக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட பின்னரே சட்டம் பற்றிய விளக்கம் மெல்ல மெல்ல ஏற்படும்.

எனவே நியாயமான காரணங்களுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளோ தம்முடைய இனம் சார்ந்து தெரிவிக்கும் எந்தக் கருத்தையும் சிங்கள மாற்றுக் கருத்தாளர்கள், புதிய சட்டத்தின் கீழ் சவாலுக்கு உட்படுத்தலாம். 'இது இனவாதக் கருத்து' என்று வழக்குத் தொடரலாம். சட்டத்தரணியின் வாதமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சாட்சியங்களும் அதை இனவாத கருத்தாக நிரூபணமாக்கலாம். இதன்படி தமது சமூகத்துக்காக, மதத்துக்;காக, இனத்துக்காக குரல்கொடுத்த ஓர் அரசியல்வாதி, ஊடகவியலாளர், முற்போக்காளர் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரலாம். தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது இவ்வகை சார்ந்த அச்சமென்ற அனுமானிக்க முடிகின்றது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதற்கு வித்திடுவதாக த.தே.கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. 'ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி கைது செய்யப்படுவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாக அமைந்தது. அதனது ஒரு பிரிவை ஒத்ததாகவே புதிய சட்டமூலம் இருக்கும் என தோன்றுவதாக' குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பு, 'இச் சட்டம் அமுலுக்கு வந்தால், அது அரசியலமைப்பின் 14(1)(அ) பிரிவை மீறுவதாக அமையும்' என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

பொது பலசேனாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உத்தேச இனவெறுப்பு பேச்சுக்கு தடைவிதிக்கும் சட்டத்தை எதிர்க்கின்றன என்றபோதிலும், இரண்டு தரப்பினதும் நோக்கங்கள் வேறுபட்டனவாகும். பொது பலசேனா தனது சுய இலாபத்துக்காக எதிர்க்கின்றது. சிறுபான்மை மக்களின் நலன்களை பேச முடியாமல் போய்விடும் என்பதற்காகவும், கருத்து சுதந்திரத்தை தக்க வைப்பதற்காகவுமே இதனை கூட்டமைப்பும் அதேமாதிரி சிவில் அமைப்புக்களும் எதிர்க்கின்றன என்பதும் இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விடயத்தை பொது பலசேனாவுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே பார்க்கின்றனர். இதனால் தமது சமூகத்துக்காக குரல் கொடுக்க முடியாமல் போய்விடுமே (அப்படி குரல்கொடுக்கின்றார்களா?) என்ற முன்னுணர்வு ஏற்படுவதில் அவர்கள் 'டியூப்லைட்களாகவே' தோன்றுகின்றனர். எப்படியாவது இச்சட்டம் அமுலுக்கு வந்தால், அதைச் சொல்லியே சமூகத்துக்காக குரல் கொடுப்பதை தவி;ர்த்துவிடலாம் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்திருந்தார்களோ தெரியாது. 

என்ன இருந்தாலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் குரல்களாக - சிவில் அமைப்புக்களும் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அரசியல்வாதிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்திருக்கின்றது. சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த இனவெறுப்புப் பேச்சு சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்தகால அரசாங்கத்துக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை பொதுமக்கள் உணரும்படி செய்திருக்கின்றது அரசாங்கம்.

சரி - இதற்காக தனியொரு சட்டத்தை உருவாக்கவில்லை என்றாலும், மிதமிஞ்சிய இனவாதிகள் விடயத்தில் தற்சமயம் எழுத்தில் இருக்கின்ற சிவில் சட்டங்களைப் பயன்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. புத்தியுள்ள யாரும் அதனை எதிர்க்கப் போவதும் இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .