2025 மே 14, புதன்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் உணர்நிலையும்

Administrator   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு - கிழக்கில் காணி மீட்புப் போராட்டங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்களும் இடைவெளி ஏதுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக (அரசாங்க) வேலை கோரும், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. அவை, குறிப்பிட்டளவு கவனத்தையும் பெற்றிருக்கின்றன.  

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் உலகம் பூராவும் இடம்பெறுவன. இலங்கைக்கும் அந்தப் போராட்டங்கள் புதியவை அல்ல. அது எதிர்காலத்திலும் தொடரத்தான் போகின்றது. எனினும், வடக்கு - கிழக்கில் கடந்த கால் நூற்றாண்டில் வேலையற்ற பட்டதாரிகள் வேலை கோரிப் போராடியமை குறைவு.  

தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மேல் மட்டத்தில் காணப்பட்ட நிலையில், இரண்டாம், மூன்றாம் நிலைப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்கான அவகாசம் அங்கு காணப்படவில்லை. அதனால், அப்படியான போராட்டங்களும் நடைபெற்றிருக்கவில்லை. 

இறுதி மோதல்களின் முடிவுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டாம், மூன்றாம் நிலைப் பிரச்சினைகளும் தம்மை முன்னோக்கி கொண்டு வர ஆரம்பித்தன. அப்படியான நிலையில் இருந்தவற்றில் ஒன்றுதான், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளாகும். 

தமிழ் வாழ்வியல்ச் சூழல் வடிவமைத்து வைத்திருக்கின்ற அந்தஸ்து என்பது பெரும்பாலும் கல்வி மற்றும் அரசாங்க வேலை சார்ந்தவை. (சாதி மற்றும் வெளிநாட்டு மோகம் சார் அந்தஸ்து மதிப்பீடும் தமிழ் மக்கள் மத்தியில் பலமாக உண்டு. அவற்றை இந்தப் பத்தியாளர் மறுக்கவில்லை) அரசாங்க வேலை சார் அந்தஸ்து மதிப்பீடு கொலணித்துவ காலத்தில் தொற்றிக் கொண்டதாகும்.  

கல்வி சார் முன்னேற்றம் தொடர்பில் எல்லாச் சமூகங்களும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், நிலையான வேலை சார்ந்த சிந்தனை என்பது எப்போதுமே, அரசாங்க வேலை என்கிற நிலையில் உணரப்படுகின்ற போது, சிக்கல் உருவாகின்றது. இது, தமிழ் மக்களின் உளப்பிரச்சினை மாத்திரமல்ல!  

 ஆனாலும், அந்தப் பிரச்சினையின் தாக்கத்தை அதிகமாக எதிர் கொண்டிருப்பவர்கள் தமிழ் மக்கள். ஏனெனில், தமிழ் மக்களின் கல்வி முறை என்பது அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகங்களை நோக்கிய இலக்கினைக் குறிக்கோளாகக் கொண்டது. அதில் வெற்றி கொள்ளுதலும் அதனூடாக அரசாங்க வேலையைப் பெற்றுக் கொள்ளுதலும் இறுதி இலக்காகும். அதுதான், அந்தஸ்தின் அடிப்படையாகவும் நோக்கப்படுகின்றது.  

மாறாக, புதிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் அவ்வளவுக்கு அங்கிகரிக்கப்படுவதில்லை. அதன்விளைவாக, பல்கலைக்கழகங்களை நோக்கிய இலக்கு உறுதி செய்யப்பட்டவுடன் அனைத்துக் கட்டங்களும் முடிந்துவிட்டதாகப் பெற்றோர் நிம்மதியடைகின்றார்கள்.

ஆனால், பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் இளைய தலைமுறைக்கான வெற்றிடம் என்பது குறுக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோருக்கு இடையில் நூற்றுக்கணக்கான அரசாங்க வெற்றிடங்களுக்காகப் போட்டிபோட வேண்டிய தேவை உருவாகின்றது.  

இப்போதுதான், பாரிய சிக்கலொன்றை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஏனெனில், போட்டிச் சூழலை எதிர்கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தயார்ப்படுத்தப்படுவதில்லை; அல்லது தயாராவதில்லை.

விளைவு, வேலையற்ற பட்டதாரிகள் என்கிற புதிய லேபிளுடன் வீடுகளில் இருக்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலை, அவர்களைக் காலம் செல்லச் செல்ல அந்தஸ்து நீக்கம் செய்கின்றது. அதனை, வேலையற்ற பட்டதாரிகள் மாத்திரமல்ல, அவர்களின் பெற்றோராலும் ஜீரணிக்க முடிவதில்லை.

இதனால், சமூக முரண்பாடுகளும் அதிகரிக்கின்றன. ஏனெனில், வேலையற்ற பட்டதாரிகள் என்பது சமூகத்துக்கு அப்பாலான பகுதியினர் அல்லவே.  

வேலை கோரிப் போராடிய பட்டதாரிகளில் குறிப்பிட்டளவானவர்கள் போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வது தொடர்பில் பெரும் அச்சத்தோடு இருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. அவர்களின் கோரிக்கைக் கோசங்களில் ஒன்று, போட்டிப் பரீட்சைக்கு எதிரானதாகவும் இருந்தது.   

இந்த விடயமே, ஊடக மட்டத்தில் அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதாவது, இலங்கையின் கல்வித்துறையில் அதிக உச்ச பீடங்களாக பல்கலைக்கழகங்களே இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள், அரசாங்க வேலைகளுக்கான போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வது தொடர்பிலான தயக்கத்தினை ஏன் அடைகிறார்கள் என்பதாகும்.   

அப்படியான கேள்விகளுக்கு விடை தேடினால், ஆளுமையற்ற தலைமுறையொன்றை பல்கலைக்கழகங்கள் உருவாக்கி வெளித்தள்ளுகின்றனவோ என்கிற கேள்வியும் அப்படியான நிலையோடு இருக்கின்ற கல்வி முறையைப் புதுப்பிக்காது தொடர்வது மீண்டும் மீண்டும் கரும்பு ஆலைகளிலிருந்து வெளித்தள்ளப்படும் சக்கைகள் போன்று பயனற்ற பொருட்களின் வெளியேற்றத்துக்கு ஒப்பான நிலையை பட்டதாரிகள் சார்ந்தும் உருவாக்கிவிடுமோ என்கிற விடயத்தை மேல் நோக்கிக் கொண்டு வருகின்றது.  

இங்கு மாணவர்களின் இன்னொரு உளவியலும் நோக்கப்பட வேண்டியது. பல்கலைக்கழகக் கல்வி முடிந்தவுடன், தமக்கான வேலை உறுதி என்கிற உணர்நிலையோடு பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், அவர்களிடம் ஓர் ஏனோதானோ என்கிற மனநிலையோடான அணுகுமுறையும் தொடர்கின்றது.  

இதனால், அரசாங்க வேலை வாய்ப்புகள் தொடர்பிலான அறிவித்தல்கள், போட்டிப்பரீட்சைகளுக்கான கேள்விகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் இருக்கத் தலைப்படுகின்றார்கள். அது, கிட்டத்தட்ட பட்டதாரிகளான தமக்கு தங்கத்தாம்பாளத்தில் வைத்து வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற சிறப்புரிமை (privilege) மனநிலை சார்ந்தது. ஆனால், அதனை இன்னொரு வகையிலும் சொல்லிக் கொள்ளலாம்; அது சோம்போறித்தனத்தின் நீட்சி.  

பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அவற்றினை பெரும்பாலும் நிராகரிக்கவும் முடியாது. குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்கிற ரீதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தங்களுடைய செயற்திறனை அதிகமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தருணம் இது.

நிர்வாகக் கட்டமைப்பையும் தொழிற்துறை சார் கட்டமைப்பு வலுவாக்கத்தினையும் இந்த இரண்டு மாகாண சபைகளும் நேர்த்தியாகவும் கண்ணியத்தோடும் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், பட்டதாரிகளின் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் மாகாண முதலமைச்சர்களே ஓடி ஒழிந்து கொள்கிறார்கள்.  

போராடும் பட்டதாரிகளை வந்து சந்தித்து பிரச்சினைகள் பற்றி உரையாடுமாறு ஆழ்ந்து, இரங்கிக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதன்பிறகே, வேறு வழியின்றி அவர்கள் சந்திப்புகளுக்கு இணங்குகின்றார்கள்.

ஏன் இந்த நிலை என்று நோக்குகின்ற போது, பட்டதாரிகளின் கோரிக்கைகளில் பிரதானமானது வேலை. அதற்கான வாய்ப்பினை எப்படி உருஅப்படியான சந்தர்ப்பத்தில், வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளை கையாள்வது தொடர்பில் மாகாண சபைகளும் தவறியிருக்கின்றன.

 பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை உருவாக்கி வெளித்தள்ளும் வளாகங்கள் மாத்திரமல்ல. மாறாக, சமூக மதிப்பீடுகளை உலக மாற்றத்தின் தன்மைகளுக்கு ஏற்ப உள்வாங்கித் தக்க வைத்துக் கொள்ளும் மத்திய நிலையங்களாகும்.  அங்குதான், சமூக அரசியலுக்கான அர்ப்பணிப்பின் பக்கங்கள் திறக்கும்.  

அத்தோடு, சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பிலான உரையாடல்களும் இடம்பெறவேண்டியது பல்கலைக்கழக வளாகங்களில் ஆகும்.

ஆனால், அவற்றுக்கான வாய்ப்புகள் தற்போது அங்கு காணப்படுகின்றனவா என்கிற கேள்வியும் பலமாக எழுகின்றது. அந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில் தேடாது போனால், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் போன்று, இன்னும் நூற்றுக் கணக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X