Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக முக்கியமான தருணமொன்றில், இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியலும் அரசியலில் எதிர்பார்க்கப்படும் தாக்கங்களும், மிக முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது. அதுவும், பிரதான வேட்பாளராகப் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரே, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு, சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஐ.நா அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் மாத்திரமன்றி, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும், இந்த நியமனத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால், தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. கவலையையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் வெளியிட்டிருக்கின்றன.
அதேவேளை, இந்த எதிர்ப்புகள் கண்டனங்களுக்குச் சிங்களப் பௌத்த கடும்போக்காளர்களும் அரசியல்வாதிகளும், எதிர்வினையாற்றவும் தவறவில்லை.
“உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது; இராணுவத் தளபதியை நியமிப்பது, நாட்டின் இறைமைக்கு உட்பட்ட விடயம்; அது ஜனாதிபதியின் உரிமை” என்று, அவர்கள் வீராவேசமாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்களிடம் இருந்தும், இந்த நியமனம் குறித்த அதிர்ச்சியும் கவலையும் வெளிப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ள புதிய இராணுவத் தளபதியின் நியமனம் குறித்த சர்ச்சைகள், இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தச் சர்ச்சைகள் தனியே வெளிவிவகாரம் சார்ந்த விடயமோ பாதுகாப்புச் சார்ந்த விடயமோ, மனித உரிமைகள் தொடர்பான விடயமோ கிடையாது. அதற்கும் அப்பால், இதற்கென ஓர் அரசியல் பெறுமானம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
மிக முக்கியமானதொரு தருணத்தில்தான், இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில், லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதிராக, சர்வதேச மட்டத்தில் எழுந்திருக்கின்ற எதிர்ப்பலையும் அதற்கு எதிரான கருத்துகளும் மோதிக்கொள்ளும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பது கவனிக்க வேண்டியது.
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்கிடையில், அதிலிருந்து நழுவி, இராணுவத் தளபதி சர்ச்சையின் மீது, உலகின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், மிகப் பரபரப்பாக இலங்கை பற்றிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த சர்வசே ஊடகங்கள், அதன்பின்னர் சிறிது நாள்கள் அமைதியாக இருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மீது கவனத்தைத் திருப்பின.
இவ்வாறானதொரு நிலையில்தான், லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதைச் சார்ந்து எழுந்துள்ள சர்ச்சைகள், சர்வதேசக் கவனத்தை இலங்கை மீது குவிய வைத்திருக்கிறது.
போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் போரில் மிகமுக்கிய பங்காற்றியவர்களான கோட்டாபய ராஜபக்ஷ, அரசியல் அரங்குக்கு வந்திருக்கிறார். லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தின் உயர் பதவியைத் தொட்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்புறவு, 1980களின் நடுப்பகுதியில், கஜபா ரெஜிமெண்டில் தொடங்கியது. கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் ஓர் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில், கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பத்துக்கேற்ப, அவரது உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியவர் என்று சொல்லப்படுகிறது.
இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவர்களாக, கோட்டாபய ராஜபக்ஷவும் லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தனர். அவர்கள் அதனை மறுத்து வந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகள் இன்று வரை நீடித்து வருகின்றன.
போர் முடிந்து 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதிருந்த தமிழ் மக்களின் கவனம், அண்மைக் காலத்தில் கொஞ்சம் குறையத் தொடங்கியிருந்தது. இது, நீதி வழங்குவதற்கான காலத்தை இழுத்தடித்து நீர்த்துபோகச் செய்யும் உத்தியின் விளைவுகளில் ஒன்று.
நீதி கோரிப் போராடிய தமிழர்கள் பலரையும், மூப்பும் பிணியும் சாவைத் தழுவும் நிலைக்குக் கொண்டுசென்று விட்டன. ஆக, போர்க்குற்றங்களும் அதற்கான நீதி பற்றிய கோரிக்கைகளும், வலுவிழக்கச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இவ்வாறான ஒரு கட்டத்தில், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதானது, போரால் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள் மத்தியில் மீண்டும் பழைய நினைவுகளையும் காயங்களையும் கிளறி விட்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டுக்கு முந்திய ஒரு தசாப்த காலம், எவ்வாறான இருண்ட யுகமாகத் தமிழர்களுக்கு இருந்தது என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு, இவ்வாறான பீதி, தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, சர்வதேச ஊடகங்களும்கூட கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில், போர்க்காலத்தில் புலிகளுக்கு எதிராகத் துணை ஆயுதக் குழுகளாகச் செயற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாகத் தமிழர்களை வாக்களிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான ஓர் அலையில் அள்ளுண்ட வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள், “கோட்டாபய ராஜபக்ஷவின் போர்க்குற்றங்களைத் தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும்; மன்னித்துவிட வேண்டும்” என்று கூறி, தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான காயங்களை, சற்று மறந்துகொண்டிருந்த தமிழ் மக்களை, கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம், தட்டி எழுப்பியிருக்கின்ற நிலையில்தான், லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனம் இடம்பெற்றிருக்கிறது,
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தால் உத்வேகம் அடைந்திருந்த சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள், லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்தால், இன்னும் ஊக்கமடைந்து இருக்கிறார்கள்.
இன்னொரு கோட்டாபய ராஜபக்ஷவாக அவர்களால் பார்க்கப்படும் லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் அவரது நியமனத்துக்கு எதிராகவும், சர்வதேச ரீதியில் எழுகின்ற எதிர்ப்புகள், சிங்களக் கடும்போக்காளர்களுக்கு இன்னும் சினத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால்தான், ஷவேந்திர சில்வாவின் நியமனம், இராணுவப் பெறுமானங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது.
இவரது நியமனம், குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளும் கலாசாரத்துக்கு முன்னுதாரணமாகி விடும் என்ற கவலை சர்வதேச மட்டத்தில் இருக்கிறது. அவ்வாறானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்ற அச்சம் தொற்றியிருக்கிறது. இதை வெளிப்படுத்தும் போது, ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கும்போது, அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலையும் தோன்றியிருக்கிறது.
“தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல், கடும்போக்காளர்கள் பலமடைந்து விடுவார்கள்” என்ற ரவூப் ஹக்கீமின் அச்சம் நியாயமானதே.
சிங்களப் பௌத்த தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு, குளிர்காயவே மஹிந்த தரப்பு, தயார்படுத்தல்களை மேற்கொள்கிறது. அதற்கேற்றவாறு, இந்த ஆட்டத்தின் ஒரு துருப்புச் சீட்டாக ஷவேந்திர சில்வாவைக் களமிறக்கி, அவர்களுக்குச் சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றிருக்கிறார் ஜனாதிபதி. இந்நிலையில், பலரும் மறந்துகொண்டிருந்த போரையும் அதன் விளைவுகளையும், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலானதாகவே, இந்த ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகிறது.
அதற்கான இரண்டு அறிகுறிகளாகத்தான், கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் களமிறக்கமும் ஷவேந்திரவின் நியமனமும் அமைந்திருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025