2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஹஸன் அலி: வழி தப்பிய ஓர் ஆடு

Gopikrishna Kanagalingam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நவாஸ் சௌபி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக பலரும் ஏறி ஆடிவிட்ட மேடையிலே, இன்று ஹஸன் அலி, ஏறி ஆடவந்திருக்கிறார். அப்போது பலரும் ஆடிய ஆட்டங்களுக்கும் பாடிய பாட்டுகளுக்கும் பதில் சொல்லி, கட்சியினதும் தலைமையினதும் இருப்பை நியாயப்படுத்திய ஹஸன் அலி, இப்போது அதே ஆட்டத்தை தான் ஆட வந்ததன் நியாயத்தை அவரது மனச்சாட்சி எவ்வாறு ஏற்றுக்கொண்டதோ?

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மேடை போடுகின்றவர்களின் பொதுவான தன்மையும் அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற மிகப் பெரிய குற்றச்சாட்டும், அவர்கள் அக்கட்சிக்குள்ளும் அத் தலைமையோடும் இருக்கும்வரை இருந்துவிட்டு, இறுதியில் தங்களுக்கொன்றும் ஆகவில்லை என்ற பிறகு இப்படி எதிர் ஆட்டத்தை ஆடத் தொடங்குகிறார்கள் என்பதாகவே இருக்கின்றது. இதுவே உறுதியான உண்மையுமாகும்.

சமூக அரசியலுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படவில்லை என்ற சமூக நோக்கத்தோடு, இவர்கள் யாரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிவிடவில்லை. அவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டாலும் கூட, அதில் எத்தகைய நேர்மையும் இல்லை. தங்களின் சுயநலமான பதவி ஆசைகள் நிறைவேறாத போது, கட்சிக்குள்ளிருந்து விலகிவிட்டு, அந்தக் காரணத்தை வெளியில் தெரியாதவாறு மறைப்பதற்கு, சமூக உரிமைகள் எனும் பெரும் போர்வையால் தங்களின் தலைகளை  மூடிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால், கட்சிக்குள் அவர்கள் இருக்கும் போது, அக்கட்சியும் அதன் தலைமையும் சமூகத்துக்காகச் செயற்படுவதாக ஆணித்தரமான பிரசாங்களால் பகிரங்க மேடைகளில் பலநூறு தடவைகள் பேசிவிட்டு, பின்னர் அவர்கள் கட்சியைவிட்டு விலகிக்கொண்டதும், அந்தக் கட்சியும் தலைமையும் சமூகத்துக்கும் மக்களுக்கும் ஒன்றும் செய்யாதபடி உடனே மாறிவிட்டதாக அதே கதையை மாற்றிச் சொல்ல வருகிறார்கள். 

அவர்கள் இருக்கும் போது மட்டும் அது சமூகத்துக்கான கட்சியாக இருக்க வேண்டும். அவர்கள் இல்லாதபோது, அது சமூகத்துக்கு வேண்டாத கட்சியாகிவிட வேண்டும். இது என்ன குருட்டு நியாயம்? அவர்களுடைய சுயநலன்களுக்காக மக்களை எப்படி மடையர்களாக்கப் பார்க்கிறார்கள்?

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரங்களையும் விமர்சனங்களையும் செய்கின்றவர்களான இன்றைய ஹஸன் அலியிலிருந்து இதற்கு முன்னரான சேகு இஸ்ஸத்தீன் வரையுள்ள அத்தனைபேரையும் எடுத்து நோக்கினால், அவர்கள் அனைவரும் முதலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வந்து, நாடாளுமன்றத்திலோ அல்லது மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்றங்களிலோ  அரசியல் முகவரி ஒன்றை எடுத்துவிட்டு, பின்னர் மேலான கதிரைகளுக்கும் பதவிகளுக்கும் அமைச்சுகளுக்கும் மிக அவசரமாக ஆசைப்பட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களாக இருக்கின்றார்கள்.

இத்தகைய சுயநலம் பிடித்தவர்கள் யாருமே, இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எத்தகைய அருகதையும் இல்லாதவர்கள் என்றே மக்கள் கருதுகின்றார்கள். அவர்களுக்குள்ள உண்மையான பிரச்சினை, சமூக நலன்களுக்கு ஏற்றவாறு கட்சி இருக்கவில்லை என்பது அல்ல. மாறாக, அவர்களின் சுயநலன்களுக்கு ஏற்றவாறு கட்சி இருக்கவில்லை என்பதுதான்.

இப்படி தங்களின் சுயநலன்களுக்கும் பதவி மோகங்களுக்கும் தீனி போடுவதற்கு ஏற்ற இடமாக கட்சி இல்லை என்ற பிறகு, அதற்குள்ளிருந்து வெளியேறி, அக்கட்சியை சிதைப்பதற்கும் தலைவரைப் பிழையாக்குவதற்கும் படம் எடுத்தாடியவர்கள் பலரும், அந்த முயற்சியில் தோற்றுப் போனவர்களாக சோர்வாக இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு உற்சாகம் கொடுப்பதற்கும் அவர்கள் ஊதுகின்ற மகுடிக்கு தான் ஆடுவதற்கும், இறுதியாக ஹஸன் அலி வந்திருக்கின்றார்.

இன்று ஊர் ஊராக பல இலட்சங்களை செலவு செய்து பொதுக் கூட்டங்களை நடத்துகின்ற ஹஸன் அலி, உண்மையாக சமூக உணர்வுடன் சமூக உரிமைக்காக பேசுகின்றவர் என்றால், இந்தப் பணத்தினைக் கொண்டு சமூகத்தில் உள்ள அடிமட்ட மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு உதவுவதன் மூலம், ஒரு முன் உதாரணத்தைச் செய்திருக்கலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் விமர்சிப்பதற்கும் பழி தீர்ப்பதற்கும் இப்படி இலட்சக்கணக்கில் செலவு செய்து, கட்சியைச் சீர்திருத்த வேண்டிய தேவை இல்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சமூகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்று பழி சுமத்துவதற்கு மேடை போடுவதற்கு செலவு செய்கின்ற பணத்தை வைத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யாது விட்டதாக  விமர்சிக்கின்ற ஒரு காரியத்துக்கு அதனைச் செலவு செய்து, தான் ஒரு சமூக அரசியல்வாதி என்பதை ஹஸன் அலி நிரூபித்திருக்கலாம். அவ்வாறு செய்யாது, அவரும் மாமுலான மேடை ஆட்டத்தைத்தான் ஆடித்திரிகிறார் என்பதனூடாக, அவருடைய சுயநல அரசியல் எந்தளவிற்கு மேலோங்கி இருக்கின்றது என்பது எமக்குத் தெளிவாகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிக்கொள்கின்றவர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும்  அதன் தலைமையையும் விமர்சித்தால், உடனே தாங்கள் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அரசியல்வாதிகள் ஆகிவிட்டோம் என்று எண்ணுகின்ற ஒரு நோய் இருக்கின்றது. ஆனால் இவர்கள் யார் என்று, இவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் அளந்து வைத்திருப்பதை, இவர்கள் அறியவில்லை போலும்.

தேர்தல் இல்லாத ஒரு காலத்தில் ஹஸன் அலி முன்னெடுத்திருக்கின்ற இந்த ஆட்டம், எதிர்வருகின்ற ஒரு தேர்தலை குறி வைத்து நகர்த்தப்படுகின்ற பின்னணிகளையும் மறை கரங்களையும் கொண்டிருப்பதையும் மக்கள் அறிவார்கள்.

வழக்கமாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் செல்கின்றவர்கள் ஒரு கட்சியை ஆரம்பிப்பார்கள் அல்லது ஆரம்பித்த ஒரு கட்சியுடன் இணைந்து கொண்டு, ஸ்ரீ லங்கா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்வார்கள், அவ்வாறு செய்கின்ற போது அது மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படாது போகின்றது என்பதை உணர்ந்துகொண்டு, இன்று அதற்கு மாற்றமாக சுயாதினமானவர்களாக தங்களை காட்டிக் கொண்டு, எந்தக் கட்சிகளின் பின்னணியும் இல்லாத தனித்தரப்பினர்களாக மேடை அமைத்து, ஹஸன் அலி அணியினர்  கூட்டங்களை நடத்தினாலும்  இவர்கள் எங்கு சென்று முடிக்கப் போகிறார்கள் என்பதை, மக்கள் இப்போதே தெளிவாக விளங்கி  வைத்திருக்கிறார்கள். 

அதாவது, ஏற்கெனவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக தனித்தனி நஞ்சுகளாக செயற்படுகின்ற ஒவ்வொருவரையும், மொத்தமாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி, முஸ்லிம் கூட்டமைப்பு என்ற ஆயுதத்தை உருவாக்கி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கான இறுதிகட்ட தேர்தல் போட்டியை ஆடுவதற்கான ஒத்திகை ஆட்டம்தான், தற்போது ஹஸன் அலி ஆடுகின்ற இந்த தனித்த மேடை ஆட்டம்.

எதிர்வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும், அத்தேர்தலில் ஹஸன் அலி தரப்பினர்கள் இன்னும் பல புதிய கூட்டாளிகளோடு கூட்டுச் சேர்ந்து, முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோஷத்தோடு வெளிப்படுவார்கள். அப்போது இவர்களுடைய சுயநல அரசியல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சுத்தப்படுத்த வேண்டும் அதன் தலைமையைத் திருத்த வேண்டும் என்பதை, தனது சோடித்த பிரசாரமாக மக்களுக்கு சொல்லிக்கொண்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்கின்றவர்களின் கூடாரத்துக்குள், வழிதப்பிய ஓர் ஆடாக, ஹஸன் அலி சென்றிருக்கிறார்.

ஏனென்றால், கட்சியை சுத்தப்படுத்தி தலைவரைத் திருத்துகின்றவர், இப்படி பகிரங்க மேடை போட்டு பேசித்திரிய மாட்டார். அவர் கூறுகின்ற காரணமும் அதற்காக அவர் செய்கின்ற செயலும், முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றது. எனவே இவை, மக்கள் முன் தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக கூறுகின்ற அரசியல் பேச்சுக்களே தவிர, யதார்த்தமான உண்மைகள் அல்ல.

இதற்குப் பின்னாலுள்ள தேவை என்னவென்றால், எதிர்வருகின்ற தேர்தலில், கூட்டமைப்பு மூலமாக நாடாளுமன்றம் செல்வதற்கும் அமைச்சராகுவதற்கும் பெரும் எதிர்பார்ப்பை, ஹஸன் அலி கொண்டிருக்கிறார். இது நிறைவேற வேண்டுமானால், இன்று முஸ்லிம் சமூகத்தின் ஏக கட்சியாக முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை, சமூகத்துக்கு எதிரியாகக் காட்டி, அக்கட்சியின் வாக்குப் பலத்தைச் சரியச் செய்ய வேண்டும். அதற்காக இப்போதிருந்தே தனித் தரப்பு என்ற போர்வைக்குள், கூட்டமைப்பை ஒளித்து வைத்துக் கொண்டு, ஹஸன் அலி, தன் ஆட்டத்தை தனியே ஆடிக்கொண்டிருக்கின்றார்.

இத்தகையதொரு கூட்டமைப்பு அமைய வேண்டுமானால், அரசியலுக்கு புதியவர்களால் இதனை உருவாக்க முடியாது. எப்படியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக மாற்று அரசியல் செய்கின்ற  கட்சிகளின் கூட்டாகத்தான் இது அமையும். அந்தவகையில், ரிஷாட் பதியுதீன், அதாஉல்லா போன்றவர்களது கட்சிகளை மையமாகக் கொண்டு, இந்த கூட்டு அமைவதற்கான ஊகங்கள் இருப்பதாக, ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு, இவர்களைக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு உருவாகுமாயின், ஏற்கெனவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிரிகளாகவும் விரோதிகளாகவும் மக்கள் பார்க்கின்றவர்களின் கூட்டாகத்தான் இது அமையும். போத்தல் புதிதாக இருந்தாலும்,  ஊற்றுவது பழைய கள்ளைத்தான் என்பதுதான், இதன் யதார்த்தம். அப்படியானால் இவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஹஸன் அலி அணியினரால் மக்களுக்கு எதையும் புதிதாக சொல்ல முடியாது, சொல்வதற்கும் எதுவும் இருக்காது. இவர்கள் யாரும், புதியவர்களும் அல்லர், மக்கள் அறியாதவர்களும் அல்லர்.

எனவே, கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனவர்வளும் எதிர்வருகின்ற தேர்தலில் தோற்றுப் போக இருக்கின்றவர்களும், தங்கள் கதிரைகளைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாக உருவாக்க நினைக்கும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு, காடு வெட்டிப் பாதை எடுக்கும் ஹஸன் அலி, இதன் மூலம் எந்தப் பயனையும் அடையப் போவதில்லை. காரணம், பழைய இரும்பைக் கொண்டு புதிய கட்டடத்தை கட்ட முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X