2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹிஸ்புல்லா: காவல் தெய்வம்

Thipaan   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

அமைப்புக்களைத் தடைசெய்வது புதிதல்ல. பயங்கரவாதத்தின் பெயரால் அமைப்புக்களைத் தடைசெய்யும் போது, தடை செய்யப்பட்டோர் யார் என்பதை விடத் தடை செய்தோர் யார் என அறிவது பயனுள்ளது. தடை எதற்கானது என்பதை விளங்க அது உதவும். இவ்வாறான தடைகள் பலவும் வலிமையின் விளைவுகளல்ல. பலவீனத்தின் வெளிப்பாடுகள்.

மத்திய கிழக்கின் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பான, லெபனானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தை, அரபு லீக் கடந்த வாரம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. மத்திய கிழக்கின் முடியாட்சிகளான சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத், ஓமான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில், ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தடை செய்ததைத் தொடர்ந்து இவ்வறிவிப்பு வந்துள்ளது.

ஹிஸ்புல்லாவைத் தடை செய்யும் தீர்மானத்தை அரபு லீக்கில் முன்மொழிந்தபோது நடந்த வாதப் பிரதிவாதங்கள், இத் தடையை யார் எதற்காக விரும்புகிறார்கள் என விளக்கியது. ஹிஸ்புல்லாவைப் பயங்கரவாத அமைப்பென அழைக்க முடியாது என ஈராக்கிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்த சவூதி அரேபியா, கூட்டத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறியது. இறுதியில், பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ஹிஸ்புல்லாவைப் 'பயங்கரவாத அமைப்பென' அறிவிக்கும் அரபு லீக் தீர்மானம் நிறைவேறியது. ஈராக்கும் லெபனானும் இத் தீர்மானத்தை வெளிப்படையாக எதிர்த்தன. தீர்மானங் குறித்துக் கருத்துத் தெரிவித்த லெபனான் வெளியுறவு அமைச்சர் 'நாங்கள் இத் தீர்மானத்தை எதிர்ப்பதோடு வன்மையாகக் கண்டிக்கிறோம். இத் தீர்மானம் அரபு லீக்கின் கொள்கைகட்கு மாறானது. ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் மக்களிடம் அங்கிகாரம் பெற்ற அமைப்பு. லெபனானின் இருப்பில் ஹிஸ்புல்லா முக்கிய பங்காளி' என்று தெரிவித்தார்.

இன்று மத்திய கிழக்கு நிலவரங்களில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலை தனித்துவமானது. நீண்ட யுத்தங்களில் சளைக்காது பங்கெடுக்கக்கூடிய நன்கு பயிற்சிபெற்றதும் மக்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்றதுமான ஒரே இயக்கமாக ஹிஸ்புல்லா இருக்கிறது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் செல்வாக்கு மெதுமெதுவாகக் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணங்கள், ஈரானின் எழுச்சியும் மேற்குலக - சவூதி கூட்டுக்கெதிராக, ஈரான்-சிரியா-ஹிஸ்புல்லா-ரஷ்யா கூட்டணி, சவூதி ஆதிக்கத்துக்கு வைத்துள்ள ஆப்புமாம். ஈரானின் நம்பிக்கைக்குரிய தோழனாகத் திகழும் ஹிஸ்புல்லா, இன்றுவரை இஸ்ரேலுக்குச் சிம்மசொப்பனமாயுள்ள ஒரே அமைப்புமாகும்.

ஹிஸ்புல்லாவைப் 'பயங்கரவாத அமைப்பாக' அறிவிக்க சவூதி அரேபியா கங்கணம் கட்டியதில் ஆச்சரியமில்லை. மத்திய கிழக்கில் ஒரு வலிய அரங்காடியாக இன்றுவரை இருந்துள்ள சவூதி அரேபியாவின் நிலையை இன்று சிரிய யுத்தத்தில் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், அமெரிக்கா புதிய கூட்டாளிகளைத் தேடும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சரிகின்ற எண்ணெய் விலைகளால் மோசமான நிலையை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடி ஒருபுறமும், சிரிய, யெமன் யுத்தங்களிற் கிட்டிய அவமானமான தோல்விகள் மறுபுறமுமாக சவூதி அரேபியா செய்வதறியாது திகைக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, அமெரிக்க-ஈரான் அணுசக்தி உடன்படிக்கை இடியாக இறங்கியது. சவூதியின் பிரதம விரோதியான ஈரானின் தவிர்க்கவியலாத வகிபாகமும் அதற்கு ரஷ்ய-சீன ஆதரவும் சவூதிக்குச்; செரிக்க இயலாதவை. இந் நிலையில், தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருக்க வேண்டும் என்ற பாங்கில், ஈரானின் முழுமையான ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லாவைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து சவூதி அரேபியா இன்புறுகிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என விரியும் போர்கள், சில உண்மைகளைச் சொல்கின்றன. போர்கள் மூலம் அமெரிக்கா எதையும் வெல்லவில்லை. மாறாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா ஆகிய மூன்று நாடுகளிலும் பேரழிவை உண்டாக்கி, அவற்றில் நிலையான ஆட்சி ஏற்பட இயலாத சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.

மறுபுறம், பலஸ்தீனப் போராட்டத்தை நசுக்கும் 'விசால இஸ்ரேல்' எனும் ஸியோனிசக் கனவை இன்று வரை நனவாக்க இயலவில்லை. அதற்கான பிரதான தடைகளாக ஹமாஸ் இயக்கமும் ஹிஸ்புல்லாவும் உள்ளன. எனவே, பலஸ்தீனப் போராட்டத்தை முறியடித்தல் இயலாதுள்ளது. பலஸ்தீன மக்களின் போராட்டத்துக்குப் பிரதான வெளி ஆதரவாக உள்ளவை, லெபனானில் செல்வாக்குள்ள ஹிஸ்புல்லாவும் சிரியாவின் மதச்சார்பற்ற அரசும் ஈரானின் ஷியா இஸ்லாமிய ஆட்சியுமே. இது அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, மதவாதப் பிரபுத்துவக் குடும்ப முடியாட்சிகளான சவூதி அரேபியாவுக்கும் அரேபிய வளைகுடா அரசுகள் எனப்படும் அமெரிக்க எடுபிடி ஆட்சிகட்கும் உறுத்தலாகவே உள்ளன.

1979 வரை ஈரானில் இருந்த ஷா ரெஸா பஹ்லவியின் ஆட்சி, அமெரிக்க ஆதரவில் இயங்கிய ஓர் அரச பயங்கரவாத ஆட்சியாகும். அதன் வீழ்ச்சி ஈரானுக்கு உண்மையான ஜனநாயகத்தைக் கொண்டுவராவிடினும் மத்திய கிழக்கில், அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான வலிய சவாலாயுள்ளது. ஈரானின் ஆட்சி பல குறைபாடுகளைக் கொண்ட மதவாத ஆட்சியாயினும், அது பெரும்பாலான மக்கள் நிராகரித்த அல்லது அறவே வெறுக்கும் சர்வாதிகாரமல்ல. அந்தளவில் அது மத்திய கிழக்கின் எந்த அமெரிக்க சார்பு ஆட்சியையும் விடச் ஜனநாயகமானது. அமெரிக்கா, ஈரானின் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கப் பலவாறு முயன்று தோற்றுள்ளது. அமெரிக்கா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ஈரானில் மதவாதத் தலைமையின் கைகளை வலுப்படுத்தியது. முக்கியமாக, ஈரானுக்கு எதிராகப் பத்து வருட போரைத் தொடுக்குமாறு ஈராக்கைத் தூண்டிப் போருக்கு முழு உதவி வழங்கிய நாடுகள், அமெரிக்காவும் சவூதி அரேபியாவுமே. அப்போர் ஈராக்கின் தோல்வியின் பயனாக முடிவுக்கு வந்தது.

இப்;பின்னணியிலேயே, ஈரானுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் தொடக்கப்பட்டன. ஈரானில் அணுசக்தியை விருத்தி செய்யும் முயற்சி இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அது அணு ஆயுத உற்பத்தி நோக்குடையதல்ல என அமெரிக்காவும் மேற்குலகும் நன்கு அறிந்தாலும், ஈரானைப் பணிய வைக்கும் நோக்குடன் சர்வதேச அணுசக்தி ஆணையம் என்ற ஐ.நா. சபைக்குட்பட்ட அமைப்புக்குக் கண்காணிப்பு அதிகாரங்களை வழங்கி ஈரானின் அணுசக்தி ஆராய்வுகளை முடக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஈரானைப் பணிவிக்க இயலவில்லை. இவை அனைத்தும் மத்திய கிழக்கில் மக்கள் மத்தியில் வலுவான ஆதரவையுடைய நாடாக ஈரான் விருத்தி பெற உதவின. இதையொட்டி, லெபனானில் தோன்றிய ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரானிய ஆதரவும் சிரியாவுடனான நல்லுறவும் ஈரானும் ஹிஸ்புல்லாவும் மத்திய கிழக்கில் வலுவான சக்திகளாக உருவாக வழியமைத்தன.

ஹிஸ்புல்லாவின் தோற்றம், லெபனானில் இஸ்ரேலியக் குறுக்கீட்டின் விளைவாலானது.  1982ஆம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூத்துக்கு அருகில் இருந்த ஸப்ரா, ஷட்டிலா பலஸ்தீன அகதி முகாம்கள் இரண்டிலும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வெறியாட்டம் உலக நாடுகள் பலவற்றின் கடுங் கண்டனத்தைச் சம்பாதித்த போதும், இருபது வருடங்கட்கு மேலாகத் தென் லெபனானில் இஸ்ரேலியப் படைகள் நிலைகொண்டிருந்தன.

ஹிஸ்புல்லாவின் இடையறாத நீண்ட போராட்டமே இஸ்ரேலியப் படைகளை லெபனானிலிருந்து துரத்தியது. இது ஹிஸ்புல்லாவுக்கு லெபனானில் ஆதரவுத் தளத்தை உருவாக்கியது.

லெபனானில் இஸ்ரேலிய ஊடுருவலுக்கும் ஆக்கிரமிப்புக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக விடாது வழங்கிய வலுவான பதிலடிகள், இஸ்ரேலுக்கும் அதன் லெபனியக் கூட்டாளிகட்கும் புகட்டிய பாடத்தால், லெபனானில் மீண்டும் ஓர் இஸ்ரேலிய ஊடுருவலுக்கு உடனடி வாய்ப்பில்லாமற் போயுள்ளது.

வெறுமனே ஒரு போராடும் இயக்கமாக மட்டுமன்றி, லெபனானில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சமூகநலத் திட்டங்கள், மருத்துவ வசதிகள் என ஒரு மாற்று அரசாங்கத்தையே ஹிஸ்புல்லா நடத்துகிறது. நான்கு பெரிய மருத்துவமனைகள், 12 மருத்துவ நிலையங்கள், 15 பாடசாலைகள் என 'அரசுக்குள் ஓர் அரசு' அங்குள்ளது. ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் தேர்தல்களில் வென்று லெபனான் நாடாளுமன்றப்; பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமைப்பாயினும், அது சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோரதும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

தொடரான இஸ்ரேலியத் தாக்குதல்களை முறியடித்து, மக்களைக் காக்கும் ஒரு காவலனாக ஹிஸ்புல்லாவை லெபனிய மக்கள் பார்க்கின்றனர். உலகின் அதிவலிய இராணுவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரேலிய இராணுவம், இதுவரை ஹிஸ்புல்லாவுடனான போர்களிலேயே தன் மோசமான தோல்விகளைக் கண்டுள்ளது.

ஹிஸ்புல்லா வீரர்கள், இன்று சிரியாவில் சிரிய இராணுவத்துக்கு ஆதரவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இது சிரிய இராணுவத்துக்குப் பெரிய பலமாகியுள்ளது. சிரியாவின் பல பகுதிகளைச் சிரிய இராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்கு ஹிஸ்புல்லா வீரர்களின் பங்கு பெரியது. இது அல் அசாத் ஆட்சியை அகற்றும் சவூதி அரேபியக் கனவில் மண் வீழ்த்தியுள்ளது. இதனாற் கலங்கிய சவூதி, ஹிஸ்புல்லாவைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதன் மூலம் அதற்கெதிரான ஒரு போரைத் தொடங்கும் முன்னேற்பாடுகளைச் செய்ய விழைகிறது. முதலாவதாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது போர் தொடுப்பதன் மூலம் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லா வீரர்களை லெபனானுக்கு மீளக் கொண்டுவரச் செய்து சிரியக் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் போரில் அல் அசாத் தோல்வியடைவதை உறுதிப்படுத்தல். இரண்டாவது லெபனான் மீது போர் தொடுப்பதன் மூலம் மத்திய கிழக்கின் அமைதியைக் குலைத்துக் குழப்பத்தை உண்டாக்கி ஆதாயம் தேடல்.

ஹிஸ்புல்லாவைப் பயங்கரவாதியாக அரபு லீக் அறிவித்தமை சிரியக் கள நிலவரங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. உண்மையில், இதுவரை இருந்த ஒன்றுபட்ட அரபு உலகு என்ற தோற்றம் இனி இராது என்பதற்கான முன்னுரையை அண்மைய நிகழ்வுகள் எழுதுகின்றன.

இஸ்ரேலிய எதிர்ப்பின் அடிப்படையில் 'ஒன்றுபட்ட அரபுலகு' என்றொன்று இதுவரை இருந்தது. ஆனால், சவூதி அரேபியா முன்தள்ளும் வகாபிசமும் இஸ்ரேலிய சியோனிசமும் ஒன்றுபட்டு அமெரிக்க நலன்கட்காகச் செயற்படும் நிலையில் ஒன்றுபட்ட அரபுலகு இனி இருக்கவியலாது என்பது தெளிவு. வரலாறு அதன் முடிவுரையை எழுதும் போது, அது அரபு முடியாட்சிகளின் முடிவுரையாகவும் இருக்கும்.

சவூதி எழுதியுள்ள முன்னுரைக்குரிய முடிவுரையை எழுதப்போவது யார் என்பதே மத்திய கிழக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .