2025 மே 15, வியாழக்கிழமை

1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலும் தமிழ் மக்களும்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 53)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலாசார, சமூக, பொருளாதார, தேசிய ரீதியிலான அமைப்புசார் சீர்திருத்தங்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சகல மொழிப்பிரச்சினைகள் உள்ளிட்ட அமைப்புசார் சீர்திருத்தங்கள் பற்றி அரசாங்கத்துக்கு அறிவுறுத்தவும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் அவை பற்றிய நடவடிக்கைகள் எடுப்பதற்குமான சகல தேசியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரச ஆலோசனைச் சபை அமைக்கப்படும் என்று கூறியது.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறன என்ற விடயத்தைக் கூட நேரடியாக அங்கீகரிக்கத் தயங்கியது. மாறாக 'அமைப்புசார் சீர்திருத்தங்கள்' பற்றியே அது பேசியது. அதன் ஒரு பகுதியாக சிறுபான்மையினர் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினைகளையும் குறிப்பிட்டது. இந்த நாட்டில் மொழிப்பிரச்சினை காணப்பட்டது தமிழ்மொழி தொடர்பில் மட்டும்தான். அதனைக்கூடக் குறிப்பிட்டுக்கூறி அங்கீகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பவில்லை.

'தோழர்களின்' நிலைப்பாடு

மறுபுறத்தில் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பை உருவாக்குவதில் சிறிமாவோடு இணைந்திருந்த 'தோழர்கள்' தற்போது அந்த மூழ்கும் கப்பலிலிருந்து விலகி, ஐக்கிய இடது முன்னணி என்ற பதாகையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டான இந்த ஐக்கிய இடது முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'தேசிய சிறுபான்மை இனங்கள்' என்ற தலைப்பின் கீழ் 'அரசின் ஒற்றையாட்சித் தன்மை பேணப்படும் அதேவேளையில், பிராந்திய சுயாட்சி என்ற கொள்கையானது தேசிய கட்டமைப்பின் கீழ், மாவட்ட சபைகளினூடாக அமுல்படுத்தப்படும்.

ஏற்கெனவே உள்ள மொழியுரிமைகள் முற்றாக பேணப்படும் அதேவேளை, தமிழ்மொழி, தமிழ்பேசும் பிரதேசங்களில் நிர்வாக மொழியாக்கப்படுவதற்கு எமது அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிர்வாக ரீதியாக ஏலவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் முதலாவது குடியரசு அரசியல் யாப்புத் திருத்தப்படும். சிங்கள மொழிக்கு உத்தியோக பூர்வமொழி அந்தஸ்து வழங்கிய 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கும், சிங்கள மொழியின் அந்தஸ்துக்கும் எந்தவித குந்தகமுமின்றி, தமிழ் மொழி தேசிய மொழியாக அரசியலமைப்பு திருத்தமொன்றின் மூலம் ஆக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இனம், மதம் சாதி ரீதியான பாகுபாடு இல்லாதொழிக்கப்படும். இன, மத வெறுப்பைத் தூண்டுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

'இருமொழி ஒரு நாடு; ஒருமொழி இரு நாடு' என்று 1956 இல் உரைத்த 'தோழர்கள்', தமது கொள்கையை மறந்துபோய், சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனான கூட்டின் விளைவாக, 1972 இல் 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய முதலாவது குடியரசு யாப்பை உருவாக்கினர். இன்று அந்தக் கூட்டிலிருந்து விலகிய பின்புகூட 'தனிச்சிங்களச்' சட்டத்தை 1956 இல் அவர்கள் எதிர்த்தது போல, எதிர்க்கும் திராணியை, நேர்மையை இழந்து விட்டிருந்தார்கள். வாக்குவங்கி அரசியலுக்காக தமது கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டிருந்தார்கள் கற்றறிந்த தோழர்களான கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா உள்ளிட்டவர்கள்.

சிறிமாவின் திடீர்க் கரிசனை

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை பற்றி, தான் ஆட்சி செய்த ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாகக் கவலைகொள்ளாத சிறிமாவோ, தனது ஆட்சிக்காலம் இறுதியை எட்டிய காலப்பகுதியில் கரிசனை கொள்ளத் தொடங்கியிருந்தார். தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது, தனது ஆட்சியின் சிறப்புக்குக் கேடு என்பதோடு, வடக்கு - கிழக்கிற்கு அப்பால் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளின் அவசியப்பாடு அவர் இறங்கி வந்ததற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

1977 பெப்ரவரி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதே கூட்டத்தின் நோக்கம். இங்கு உரையாற்றிய அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க 'தனிநாடு என்ற எண்ணத்தை அரசாங்கத்தால் கருத்திற் கொள்ள முடியாது. ஆனால் சிறுபான்மை மக்களின் நியாயமான கவலைகளை நாம் கவனத்திற் கொள்வோம்' என்றார். இதற்குப் பதிலளித்த சா.ஜே.வே. செல்வநாயகம் 'தனிநாடு என்ற கோரிக்கையில் சமரசத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வெதனையும் இடைக்கால ஏற்பாடாக நாம் ஏற்றுக்கொள்வோம்' என்றார். கூட்டத்தின் பின்பு அரசாங்கம், 'சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டம் சுமுகமாகவும் நட்புறவுடனும் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும்' என்று அறிவித்திருந்தது.

ஏழு வருடங்களாக தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றிப் பராமுகமாக இருந்த சிறிமாவோ அரசாங்கத்தின் இந்தத் திடீர் கரிசனையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் இதனைத் தேர்தல் நேர கபட நாடகமாகவே கருதினர். குறிப்பாக 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' வழி நிற்பதற்கான அழுத்தத்தை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு தமிழ் இளைஞர்கள் வழங்கினர்.

ஆனாலும் 1977 மார்ச் 16 ஆம் திகதி நடந்த இரண்டாவது கூட்டத்திலும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கருத்துரைத்திருந்தனர். தமிழ்மொழியின் பயன்பாடு, அதிகாரப் பரவலாக்கம் பற்றி சிறிமாவோ இறங்கி வரத்தயாராக இருந்தார். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிகளின் தரப்படுத்தல் முறையை மாற்றியமைக்கவும் இசைந்தார். ஆனால் தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் சிறிமாவோவை நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. இது இரண்டு தசாப்தகால நம்பிக்கைத் துரோகங்களின் விளைவாக இருக்கலாம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் உறுதியாக இருந்த தமிழ்த் தலைமை

1977 மார்ச் 26 ஆம் திகதி திருகோணமலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாநாட்டில் உரையாற்றிய சா.ஜே.வே. செல்வநாயகம் '1976 மே மாதம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் இந்த நாட்டிலுள்ள தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றி மாற்றியமைக்கப்பட முடியாத முடிவு ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரையானது, எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள்ƒ நாங்கள் கசப்புணர்வினைத் தவிர்த்துவிட்டு அமைதியாகப் பிரிவோம். இது இரு தேசங்களும் சமத்துவத்தின்பால் இணங்கிச்செல்ல பெரிதும் உதவும். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியில்லை. இளைய தலைமுறையினரிடையே கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. அதனை இனியும் வளரவிடக் கூடாது. விட்டால் அது பெரும் முரண்பாட்டில் சென்று அந்நியத் தலையீட்டின் அவசியப்பாடு வரை செல்லும்.

ஆகவே இதனை அமைதியான முறையில் தீர்ப்பது அவசியம். சத்தியமே இறுதியில் வெல்லும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். பொறுமை எனும் யுத்தத்தில் நாம் வெற்றிபெறுவோம்' என்று குறிப்பிட்டார். நிலைமையின் தீவிரத்தை செல்வநாயகம் உணர்ந்திருந்தார். அதன் விளைவுதான் இந்த வார்த்தைகள். இந்தப் பிரிவு காலத்தின் தேவை. இதை அமைதியான முறையில் நடக்க நீங்கள் விடாவிட்டால் இளைஞர்கள் இரத்தம் சிந்தி இதனை அடைய எத்தனிப்பார்கள் என்பதே இந்த உரையின் உட்பொருள். இந்த உரை இடம்பெற்று 10 நாட்களிலேயே செல்வநாயகம் தனது வாழ்வின் இறுதியை எட்டிவிட்டார். தமிழ் இளைஞர்கள் அதிகம் நேசித்த 'தளபதியாக' இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு' மக்கள் அங்கீகாரம் பெறுவதே முன்செல்ல வேண்டிய வழி என்பதைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உணர்ந்தது.

ஐ.தே.க - த.ஐ.வி.கூ பேச்சுவார்த்தை

அதேவேளை அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவர் அக்கறை கொள்ளவில்லை. அது மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆகவே தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகமிருந்த ஐக்கிய தேசியக் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று அமிர்தலிங்கம் எண்ணினார். ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரும், ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் நெருங்கிப் பழகியவருமான சௌமியமூர்த்தி தொண்டமான் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றை கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரிலிருந்த தனது இல்லமொன்றில் ஏற்பாடு செய்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர் தலைமையில் எம்.டி. பண்டா மற்றும் எஸ்மண்ட் விக்ரமசிங்ஹ ஆகியோரும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம் தலைமையில் எம்.சிவசிதம்பரம் மற்றும் எஸ்.கதிரவேற்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலில் எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்காத தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தற்போது நாம் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை; அதனை முன்வைக்க வேண்டிய நேரத்தில் நாம் முன்வைப்போம். தற்போது இந்த நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வரும் ஜே.ஆரின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் கோரிக்கைகளாக எதனை முன்வைப்பீர்கள் என்று ஜே.ஆர் கேட்டபோது, தமிழ் மொழியின் அந்தஸ்து, தமிழ் மக்களின் தொழில் வாய்ப்பு, திட்டமிட்ட குடியேற்றம், மொழிவாரித் தரப்படுத்தல், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வினை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கோரினர். இதனை ஏற்றுக் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி இவற்றுக்கான தீர்வு பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வடக்கு - கிழக்கிற்கு அப்பால் போட்டியிடப் போவதில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அறிந்திருந்தது. அதேவேளை வடக்கு - கிழக்கிற்கு அப்பால் கொழும்பு,

மலையகம் உள்ளிட்ட பலபிரதேசங்களிலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த வாக்குகளைக் கவர வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. ஜே.ஆரைப் பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் என்பது வாழ்வா சாவா என்ற போராட்டம். அப்போது ஜே.ஆர் இளைஞரல்லƒ 1977 இல் அவருக்கு 70 வயது. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற இதுதான் தனக்கிருக்கும் இறுதி வாய்ப்பு என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். ஆக, அதனை அடைவதற்கு எந்தச் சமரசத்துக்கும் அவர் தயாராகவே இருந்தார்.

த. ஐ. வி. கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

மறுபுறத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான' அங்கீகாரத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியது. 'தனது மொழியுரிமை, குடியுரிமை, மதவுரிமை என்பவற்றை இழந்து, தினம் தினம் தனது பாரம்பரிய தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களிடம் இழந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்துக்கு வேறு என்ன மாற்றுவழி இருக்கிறது? தரப்படுத்தலினால் தனது கல்வி வாய்ப்பை இழந்துள்ள, வேலைவாய்ப்பில் சமத்துவத்தை இழந்துள்ள ஒரு தேசத்துக்கு தற்போது வேறென்ன மாற்றுவழி இருக்கிறது? காடையர்களாலும், அரச பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டு, எதுவித உதவியுமின்றி நிர்க்கதியாக நிற்கும் தேசத்துக்கு வேறென்ன மாற்று வழியுண்டு? இருளிலே தனது அடையாளத்தை தேடிக்கொண்டு, விரக்தியின் விளிம்பிலே நிற்கும் தமிழ்த் தேசத்துக்கு வேறென்ன மாற்றுவழியுண்டு? ஒரே ஒரு மாற்றுவழிதான் இருக்கிறது. எமது முன்னோர் ஆண்ட மண்ணை இனி நாமே ஆள்வோம் என்ற இறுதியான, உறுதியான பிரகடனம்தான் அந்த ஒரே வழி. சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாய்மண்ணை விட்டு நீங்க வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் இந்தப் பிரகடனத்தை சிங்கள அரசுக்கு உணர்த்தும் ஒரு வழியாக, இந்த 1977 பொதுத் தேர்தலை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி காண்கிறது. ஆகவே நாம் தமிழ் தேசத்திடம் ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிஸ தமிழீழ அரசை இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் அமைப்பதற்கான மக்களாணையைக் கோருகிறோம்' என்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது தமிழீழ அரசின் அமைப்பு, அதற்கான திட்டங்கள், கொள்கைகள் பற்றியெல்லாம் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் விரிவாக விளக்கியது.

தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த வண்ணமே அமைந்தன. ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த அதேவேளை, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் தமது அமோக ஆதரவினை அளித்திருந்தார்கள்.

(அடுத்த வாரம் தொடரும்)

 

 

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .