Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
எதிர்காலம் நிச்சயமற்றது. அதனால் தான் அது இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் விட எதிர்பார்ப்புடையதாகிறது. உலக அரசியலின் எதிர்காலத்தை சோதிடங்கள் போற் கணிக்க இயலாது. சோதிடர்கள் எதையும் செம்மையாகக் கணித்ததில்லை என்பது ஒருபுறமிருக்கத் தொடர்ச்சியாக மாறிவரும் உலக அரசியலை எதிர்வுகூறவியலாது. எனினும் இறந்தகாலத்தினையும் நிகழ்காலத்தையும் அவதானிப்பதன் மூலம் எதிர்காலத்துக்கான திசைவழிகளை இனங்காணலாம்.
பிறந்துள்ள 2016, ஒவ்வொரு ஆண்டையும்; போல, மிகுந்த நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது. எனவே, மயக்கங்களைத் தவிர்த்து, இவ்வாண்டின் உலக அரசியல்; நிகழ்வுகள் தரும் குறிகாட்டிகளை விளங்குதல் பயனுள்ள திசைவழிகளைத் தரலாம்.
இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலக அரசியலிற் பெருஞ் செல்வாக்குச் செலுத்தவல்ல ஒரு நாட்டின் தலைவரின் தெரிவு முக்கியமானது. ஒருபுறம் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட அதிக வாய்ப்புடையவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டனின் துணைவியரான ஹிலரி கிளின்டன் கருதப்படுகிறார். மறுபுறம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுப் போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், அதிதீவிர வலதுசாரி நிலைப்பாடுடைய பெருங் கோடிஸ்வரர் டொனால்ட் ட்ரம்ப் அக் கட்சிக்குள் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் தீவிரவலது நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப்பின் அதி தீவிரக் கருத்துக்கள் ஒருவகையிற் சிக்கலாயிருப்பினும், அவரது கருத்துக்களுக்குள்ள மக்கள் ஆதரவு இன்னொரு வகையில் குடியரசுக் கட்சியின் அடையாளத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. 'முஸ்லிம்கள், புலம்பெயர்ந்து வந்தாலும் வருநராக வந்தாலும் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுக்க வேண்டும்' என்று ட்ரம்ப் தெரிவித்த கருத்து அமெரிக்காவில் வலுப்பெற்றுவரும் இஸ்லாமிய விரோத ‡பாசிச மனநிலைக்குத் தீனி போடும் நிலையில், குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே ட்ரம்ப்புக்கு வளரும் ஆதரவு அமெரிக்க மனநிலையின் நல்ல குறிகாட்டியல்ல.
குடியரசுக் கட்சிக்குள் ட்ரம்ப் எழுப்பியுள்ள அதிர்வலைகள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு உதவின், ஹிலரி கிளின்டன் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கான வாய்ப்பு அதிகம். அதன் வரலாற்று முக்கியம் பெரிதெனினும் நடைமுறையில் எதிர்பார்க்க அதிகம் இல்லை.
பராக் ஒபாமாவின் தெரிவு அமெரிக்க அரசியலின் முக்கிய திருப்புமுனையாகவும் கறுப்பின அமெரிக்கர்களின் வெற்றியாகவும் சிலாகிக்கப்பட்டது. ஆனால், ஒபாமாவின் தெரிவு எதையும் மாற்றவில்லை. அவரது ஆட்சியிற் கறுப்பின அமெரிக்கர்கள் மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் பெர்குசன் நகரில் கறுப்பின மக்களுக்கெதிரான பொலிஸ் அடாவடித்தனங்களைக் கண்டித்து நடந்த தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுகூரல் தகும்.
அவ்வாறே ஹிலரியின் தெரிவைப் பெண்களின் சமத்துவத்தின் அடையாளமாக மெச்சுவராயினும், அதிகாரம் தனது திசைவழியை ஒருபோதும் மாற்றாது. எனவே, அமெரிக்காவிலும் உலகளாவியும் பெண் ஒடுக்குமுறையோ, பால் அசமத்துவமோ ஒரு பெண் அமெரிக்க ஜனாதிபதியாவதால் மாறாது என உறுதியாகச் சொல்லலாம்.
கடந்தாண்டு ஆழமடைந்து புதிய கட்டத்தை எட்டிய உலகப் பொருளாதார நெருக்கடி, இவ்வாண்டு மூன்றாமுலக நாடுகளிற் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்தாண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிய பொருளாதாரங்களை உடைய கிரேக்கம், போத்துக்கல், அயர்லாந்து, ‡பின்லாந்து, ஸ்பெயின் போன்றன நொடிவு நிலையை எட்டின. அவற்றின் சிக்கன நடவடிக்கைகளால் மக்கள் நலத் திட்டங்கள் பல நீக்கப்பட்டன.
இவ்வாண்டு, உலகமயமாக்கலும் அதன் மூலம் உலகளாவியுள்ள நிதி மூலதனமும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள மூன்றாமுலக நாடுகளின் மேற் சுமத்தும். உயரும் உணவுப் பொருட்களின் விலை, வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு என்பன மூன்றாமுலக நாடுகளைக் கடுமையாகத் தாக்கும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன அரசாங்கச் செலவுக் குறைப்பையும் சிக்கன நடவடிக்கைகளையும் மூன்றாமுலக நாடுகளிடம் வலியுறுத்தும். இவை தவிர்க்கவியலாத நெருக்கடிகளை உருவாக்கும்.
மேற்குலகும் நேட்டோவும் தொடர்ச்சியாக நாடுகளை நிலைகுலைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் தமது அதிகாரத்தைக் தக்கவைக்கவும் சுரண்டவும் முனையும். அதற்கு எதிர்ச் செயற்பாடாகப் பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ள சீனா, நாடுகள் திடமாக உறுதியான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தத் தனது பொருளாதார உதவிகள் மூலம் முயலும். இவை மேற்குலகுக்கும் சீனாவுக்கும் இடையில் பொருளாதாராத் தளத்தில் நிழல் யுத்தம் தொடர்வதை உறுதிப்படுத்தும்.
எண்ணெய் விலைகளின் சரிவு தொடருமெனப் பொருளியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர். 2015இல் நிக்கல் உலோகத்தின் விலைகள் 40சதவீதம் வீழ்ந்துள்ளன. எனவே, துத்தநாகம் (சிங்கு), இரும்பு ஆகியனவும் மோசமான விலை வீழ்ச்சியைச் சந்திக்கலாம். கூர்மையடையும் பொருளாரதார நெருக்கடி மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கிறது. அது அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த பொருட்களின் கேள்வியைக் குறைக்கிறது. இவ்வாண்டும் இந்நிலை தொடரக்கூடுமாதலால், அது மேலும் வேலையிழப்புக்கும் புதிய வேலைகள் உருவாகாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும். உலகளாவிய உழைக்கும் வலுவில் இதன் தாக்கம்; பாரியதாகும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2015ஆம் ஆண்டின் வணிக முதலீடுகள் 2014ஆம் ஆண்டினதினும் 20சதவீதம் குறைந்திருந்தன. இத் தாக்கத்தை இவ்வாண்டும் உணரலாம்.
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியையடுத்து, உலகக் கடன் 40சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய உலகக் கடன் 200 ட்ரிலியன் (20,000,000 கோடி) அமெரிக்க டொலர்களாகும். இது உலகப் பொருளாதாரத்தின் அளவின் மூன்று மடங்கு. இதன் விலையை உலகெங்கிலுமுள்ள சாதாரண மக்களே வழங்குவர். அது, வரிகள், நலத்திட்ட வெட்டுக்கள், சம்பளக் குறைப்புக்கள், வேலை இழப்புக்கள் முதலான 'சிக்கன நடவடிக்கைகள்' 'கட்டமைப்பு மாற்றங்கள்' என்ற பெயர்களில் அரங்கேறும்.
இலத்தின் அமெரிக்காவில் இடதுசாரி ஆட்சிகட்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, எக் கட்டுப்பாடுமற்று நவ-தாராளவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இவை வளக் கொள்ளைக்கான வழிகளைத் திறந்துள்ள அதேவேளை, கடந்த பதினைந்து ஆண்டுகாலச் சமூக மாற்றங்கள் மக்கள் ஒன்றுதிரண்டு போராடும் வாய்ப்பையும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே சுரண்டலும் நவதாராளவாத கொள்கைகளும் நடைமுறைப்படும் அதே வேளை, அவற்றுக்கெதிரான மக்கள் போராட்டங்களும் இலத்தின் அமெரிக்காவெங்கும் நடக்கும்.
ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இயற்கை வளங்கட்காகவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பெயரிலும் நடக்கும் போர்கள் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும். ஆபிரிக்காவின் அதி முக்கியமான இரண்டு நாடுகளான தென்னாபிரிக்காவையும் நைஜீரியாவையும் எதிர்நோக்கும் சவால்கள் முழுக்கண்டத்தையும் பாதிக்கும்.
உலகளாவிய முறையிற் சமத்துவமின்மை இவ்வாண்டு புதிய மட்டத்தை எட்டும் என ஒக்ஸ்பாம் நிறுவன ஆய்வொன்று எதிர்வுகூறுகிறது. இவ்வாண்டு முடிவில் உலகின் 1 சதவீதம் பேரின் செல்வம் ஏனைய 99 சதவீதம் பேரின் செல்வத்தினும் அதிகமாயிருக்குமென அவ்வறிக்கை சொல்கிறது. உலகில் ஒன்பதில் ஒருவர் பட்டினியால் வாடுகிறார். ஒரு பில்லியனுக்கு (100 கோடி) அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளார்கள். இந் நிலையிலேயே 2016ஆம் ஆண்டை நாம் நோக்க வேண்டியுள்ளது.
சீனா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகள் எங்கும் தன் செல்வாக்கை அதிகரிக்கும் அதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக உலக அலுவல்களில் தன்னையும் ஓர் அரங்காடியாக்கியுள்ள ரஷ்யா, கடந்தாண்டு சிரிய நெருக்கடியில் நேரடியாகத் தலையிட்டமை ஒரு முக்கிய நிகழ்வு. இவ்வாண்டு ரஷ்யாவுக்கு மிக முக்கியமானது. உலக அலுவல்களில் அமெரிக்காவுக்குப் போட்டியாளாக ரஷ்யாவால் தொடர்ந்து நிலைக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலை இவ்வாண்டு தரும்.
கடந்த ஆண்டு உலகு தழுவி 60 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகினர். உலக வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பேர் இடம்பெயர்ந்ததில்லை. இவ்வாண்டு அகதிகள் தொகை மேலும் அதிகரிக்கும். இது பொருளாதார, அரசியல், சமூகத் தளங்களில் எதிர்விளைவுகளை உண்டாக்கும். கடந்தாண்டு ஐரோப்பாவினுள் அகதிகள் நுழைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய அகதிகள் மீது குவிந்த கவனம் பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மறைந்தது. இவ்வாண்டும் அகதிகளை உலகம் இன்னொரு முறை மறந்துவிடும் ஆண்டாகலாம்.
பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் உணரும் நிலையை இவ்வாண்டு எதிர்பார்க்கலாம். வரலாற்றின் மிகவும் வெப்பமான ஆண்டாக 2015 பதிவாகியுள்ள நிலையில், உருகும் பனிப்பாளங்களின் விளைவால் உயரும் கடல்மட்டம், பல சிறிய தீவுகளையும் நாடுகளையும் கடல்கொள்ளச் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதீத வரட்சி உலகின் பல பகுதிகளிற், குறிப்பாக 'ஆபிரிக்காவின் கொம்பு' எனப்படும் வட-கிழக்கு ஆபிரிக்க நாடுகளில், நிலவலாம்.
பிறந்துள்ள புதிய ஆண்டை மகிழ்வுடன் வரவேற்று நற்செய்தி பல சொல்ல எனக்கும் விருப்பம். ஆனால், நிலைமைகள் அவ்வாறில்லை. 2016ஆம் ஆண்டு உலக அரசியல் ஒழுங்கில் முக்கியமானதொரு காலகட்டம். அமெரிக்கா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் யூரோ என்ற பொது நாணயத்துடன் சேர்ந்திருப்பதா, பிரிந்துபோவதா என உறுப்பு நாடுகளிடையே விவாதங்கள் வலுத்துள்ளன. அமெரிக்க-ஐரோப்பிய பொருளாதார முறைமைக்கு மாற்றாக எதிர்பார்க்கப்பட்ட 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு எதிர்பார்த்த தாக்கத்தை விளைக்கவில்லை. சீன-ரஷ்யக் கூட்டும் அதனுடன் ஈரானின் இணைவும் மேற்குலகுக்கெதிரான புதிய கூட்டணிக்கான தோரணையை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாண்டை, ஒருவரியில் சொல்வதானால், 'நெருக்கடி' என்றழைக்கலாம். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 'வரும் ஆனால் வராது' என்றழைக்கலாம். திசைவழிகள் எப்போதும் நல்ல வழிகள் ஆக அவசியமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025