2025 மே 19, திங்கட்கிழமை

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தத்திற்கு என்ன நடக்கும்?

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்களின் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியாகின. அதன்படி பாரதீய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) நான்கு மாநிலங்களில் ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும் கூடுதலான ஆசனங்களை வென்றிருந்தது. எனவே அடுத்த ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியீட்டி அரசமைக்கும் என்றதோர் அபிப்பிராயம் உருவாகி வருகிறது.

இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியின் கீழ் இலங்கை பல்வேறு நெருக்குதல்களுக்கும் தாக்கங்களுக்கும் உள்ளாகி வரும் நிலையில் பா.ஜ.க. பதவிக்கு வந்தால் இலங்கை மீதான நெருக்குதல்கள் அதிகரிக்கலாம் என்றதோர் அபிப்பிராயமும் உருவாகி வருகிறது. குறிப்பாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இந்தியா இதுவரை செலுத்தி வந்த தாக்கம் அதிகரிக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

இருந்த போதிலும் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கை மீது நெருக்குதல்களை தொடுத்து வந்தமையினால் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ள சிலர் கருதலாம். மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் பா.ஜ.க. அரசாங்கமொன்று காங்கிரஸ் அரசாங்கமொன்றைப் பார்க்கிலும் சாதகமானதாக அமையலாம் என கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

பா.ஜ.க. இந்து தீவிரவாத கட்சி எனக் கூறப்படுவதனால் அக்கட்சி பதவிக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் இந்துக்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் விடயத்தில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை விட கூடுதலான அக்கறை செலுத்தலாம் என்றும் இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கொண்டிருக்கும் நெருங்கிய உறவின் காரணமாக இலங்கை அரசாங்கம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இவற்றை ஆராயும் முன் உண்மையிலேயே பா.ஜ.க. பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை மீண்டும் ஒருமுறை ஆராய்வது பொருத்தமாகும். வெளியிடப்பட்டு இருக்கும் தேர்தல் முடிவுகளை கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது அதனை திட்டவட்டமாக கூற முடியாமல் இருக்கிறது.

நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தியாவில் மிஸோராம், மத்திய பிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கார் ஆகிய மாநிலங்களிலும் தேசிய தலைநகர் டில்லி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றில் மிஸோராம் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அங்கு 40 தொகுதிகளில் 30 தொகுதிகளை அக்கட்சி பெற்றுக்கொண்டது.

ஏனைய நான்கு இடங்களிலும் அருதிப் பெரும்பான்மை அல்லது மிகக் கூடுதலான ஆசனங்களை பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அவற்றில் மத்திய பிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கார் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. பதவிக்கு வர முடியும். டில்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 70 தொகுதிகளில் 32 ஆசனங்களை மட்டுமே அக்கட்சி வென்றது. அதற்கு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கவும் கட்சியொன்று இல்லை.

8 ஆசனங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வோடு சேராது. ஊழல் எதிர்ப்பு குரல் எழுப்பி போட்டியிட்ட ஆம் ஆத்மி என்ற புதிய கட்சி 28 ஆசனங்களை வென்றுள்ள போதிலும் அக்கட்சி தாம் பா.ஜ.க.வுடன் சேரப்போவதில்லை மறு தேர்தலுக்குத் தயாராகிறோம் என்று கூறுகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் ஆசனங்கள் 23இலிருந்து 32ஆக அதிகரித்த போதிலும் 3 வீதத்தால் வாக்குகள் குறைந்துள்ளன. எனவே மறு தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி கட்சி மேலும் முன்னேரவும் கூடும்.

மத்திய பிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கார் ஆகிய மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் மத்திய பிரதேஸ் மற்றும் சத்திஸ்கார் ஆகிய இரு மாநிலங்களில் ஏற்கனவே இரண்டு முறை பதவியில் இருப்பது பா.ஜ.க.வே. எனவே அக்கட்சி புதிதாக அவற்றில் வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. போதாக்குறைக்கு சத்திஸ்காரில் பா.ஜ.க.விடம் இருந்த 50 ஆசனங்கள் 49 ஆக குறைந்துள்ளது.

பா.ஜ.க. புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது ராஜஸ்தானில் மடடுமே. அம்மாநிலத்தில் பதவி தொடர்ந்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு பிரதான கட்சிகளிடையே கை மாறியுள்ளது. எனவே அங்கும் பா.ஜ.க. அலை வீசியது என்று கூறுவதற்கில்லை. அங்கு வழமைப் போல் பதவியில் இருப்பவர்கள் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

எனவே பா.ஜ.க.வுக்கு இந்தியாவில் பாரிய அலை வீசுகிறது என்று கூற இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கூற முடியாது. அதேவேளை மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி லோக் சபா தேர்தலில் தோல்வியுற்ற வரலாறும் உண்டு.

இதற்கு முன்னர் பா.ஜ.க. இந்தியாவை ஆட்சி செய்யும் போது அதாவது 2003ஆம் ஆண்டு மத்திய பிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றது. எனவே அக்கட்சி 2004ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை முன்கூட்டியே 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தியது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையலான தேசிய ஜனநாயக கூட்டணியே பதவிக்கு வந்தது. எனவே அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. பதவிக்கு வரும் என்று கூற தற்போதைய தேர்தல் முடிவுகள் போதுமானதாக இல்லை.

இந்தியாவானது பல மொழிகளை பேசும் பலவேறு சமூகங்கள் வாழும் பாரியதோர் நாடாகும் அங்கு அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட 22 பிராந்திய மொழிகள் உள்ளன. அவற்றுக்குப் புறம்பாக பத்து இலட்சத்துக்கும் கூடுதலான மக்கள் பேசும் 26 மொழிகள் இருக்கின்றன. பல மாநிலங்கள் வெளிநாடுகளின் எல்லைகளில் உள்ளன. எனவே ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும் இன, மத, சமூக, அரசியல் பிரச்சினைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. இதன் காரணமாகவே ஒரு சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகளைக் கொண்டு தேசிய மட்டத்திலான அரசியல் சாய்வுகளை எதிர்வு கூறுவது கடினமானதாக இருக்கிறது.

பா.ஜ.க. பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்தாலும் இலங்கை விடயத்தில் அதன் கொள்கை காங்கிரஸின் கொள்கையைப் பார்க்கிலும் பாரியளவில் வித்தியாசமாக இருக்காது. ஏனெனில் இந்திய வெளிநாட்டுக் கொள்கை அனேகமாக எந்தக் கட்சி பதவியயில் இருந்தாலும் வேறுபடுவதில்லை. ஆனால் சில விடயங்களில் அழுத்தம் கூடலாம், குறையலாம்.

பதவிக்கு வந்ததன் பின்னர் கொள்கை எதுவாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவின் இரு பிரதான கட்சிகளினதும் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சற்று இருக்கமாக அமையலாம் என்று ஊகிக்கலாம். இந்திய பொதுத் தேர்தல் அனேகமாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலேயே நடைபெறும். அதாவது மார்ச் மாதத்தில் பிரசார வேலைகள் நடைபெறும். மார்ச் மாதத்திலேயே ஐ.நா. மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு இடம்பெறவிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தில் நிலைப்பாடு தொடர்பாக தமிழகத்தில் சகல கட்சிகளுமே காங்கிரஸ் கடசியுடன் மோதிக்கொண்டு இருக்கின்றன. எனவே தமிழகத்தில் உள்ள 40 லோக் சபா ஆசனங்களுக்காக அங்குள்ள கட்சிகளை தம் பக்கம் சாய்த்துக் கொள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கடும் போட்டியில் இறங்கலாம். இலங்கைப் பிரச்சினை அதங்கு சிறந்த ஆயுதமாகலாம்.

எனவே இரு கட்சிகளும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையை நெருக்குவதில் போட்டிப் போடலாம். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாம் மார்ச் மாதத்தில் சர்வதேச விசாரணையொன்றை கோரப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் கூறியிருக்கும் நிலையில் இந்தப போட்டி இலங்கைக்கு பாதகமாக அமையலாம்.

ஏனெனில் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் மேலும் பல நாடுகளும் இந்தியாவை பின்பற்றும். கடந்த வருடமும் இந்திய அரசாங்கத்தின் முடிவு வேறு பல நாடுகளின் முடிவுகளில் மாற்றத்தை கொண்டு வந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார்.

பா.ஜ.க. பதவிக்கு வந்தால் தற்போஐதய குஜ்ராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடியே பிரதமராவார். அவர் 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த பா.ஜ.க. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல் மிதவாதி அல்ல. மோடி ஒரு கடும்போக்குவாதியாகவே கருதப்படுகிறார். 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட 2002ஆம் ஆண்டு குஜ்ராத் இனக் கலவரம் தொடர்பாக அவரும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். இதனால் 2005ஆம் ஆண்டு அவருக்கு அமெரிக்கா விசா வழங்கவும் மறுத்துவிட்டது.

அவர் பிரபல்யம் அடைந்து வருவதைக் கண்ட சீன அரசு சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு 2011ஆம் ஆண்டு அவருக்கு அழைப்பு விடுத்தது. அதன் பிரகாரம் அவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஆனால் சீனா விடயத்தில் அவரது நிலைப்பாடு இன்னமும் கடமையானதாகவே இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சீனா விடயத்தில் கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கடந்த ஒக்டோபர் மாதமும் கூறி இருந்தார்.

இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறது. மோடி பதவிக்கு வந்து இவ்விரு நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டால் இலங்கையும் சில சிக்கல்களை எதிர்நோக்கலாம்.

அவ்வாறான பிரச்சினைகள் உருவாகாவிட்டால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அக்கறை பா.ஜ.க.வுக்கு இருக்கும் என்று கூற முடியாது. எனவே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாதுகாக்கும் விடயத்தில் பா.ஜ.க. காங்கிரஸைப் போல் உறுதியாக இருக்காது என்றே ஊகிக்க முடிகிறது.

அண்மையில் இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய முற்பட்டமையும் இந்திய அரசாங்கம் அதனை தடுத்து வட மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைப் படையினருக்கு இந்திய படையினர் பயிற்சி வழங்குவதை தாம் ஏற்கவில்லை என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். அது இலங்கை எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாக அமையலாம்.

இருந்த போதிலும் பல கட்சிகள் எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது காட்டும வீரம், ஆவேசம் ஆகியவற்றை பதவிக்கு வந்தால் காட்டுவதில்லை. ஏனெனில் வீரம், ஆவேசம் ஆகியவற்றை பதவிக்கு வருவதற்காகவே அவர்கள் பாவிக்கிறார்கள் அதேவேளை அரசாட்சி பொறுப்பு என்ற யதார்த்தத்தை அவர்கள் பதவிக்கு வந்ததன் பின்னரே உணர்ந்து கொள்வர். 1998ஆம் ஆண்டு பதவிக்கு வரும் முன்னரும் பா.ஜ.க. பெரும் பயங்கர தோற்றத்தையே உலகுக்கு காட்டிக் கொண்டது. ஆனால் வாஜ்பாய் அரசு ஒட்டு மொத்தத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் போல் தான் இருந்தது.

You May Also Like

  Comments - 0

  • nagarajan Wednesday, 18 December 2013 03:27 AM

    தவறான கருத்து,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X