2025 மே 19, திங்கட்கிழமை

மோடியின் "இந்திய மொடல்' என்ன?

A.P.Mathan   / 2014 மே 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காந்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் இந்திய திருநாட்டின் 15ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் நரேந்திரமோடி. சார்க் நாட்டுத் தலைவர்கள் புடை சூழ நடைபெற்ற பதவியேற்பு விழா அரங்கத்தில் பாகிஸ்தான் நவாஷ் ஷெரிப்பும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அனைவரது கண்ணையும் கவர்ந்தவர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நவாஷ் ஷெரிப்பிற்கு அருகிலும், பா.ஜ.க.வின் இரும்பு மனிதர் என்று முன்பொரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட அத்வானி, ஜனாதிபதி ராஜபக்ஷவுற்கு அருகிலும் அமர்ந்திருந்தார்கள்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செய்து வைக்கும் முதல் பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்ச்சி இது. மோடி பிரதமராவதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்த நேரம் என்றால் அது 26 மே மாதம் மாலை ஆறு மணிதான். சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ வேளையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சிகள் தொடங்கியது. அப்போதுதான் மக்கள் எதிர்பார்த்த நரேந்திரமோடி, "நரேந்திரமோடியாகிய நான்' என்று கூறி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார். அவருடன் சேர்த்து 45 அமைச்சர்கள். அவர்களில் 23 பேர் கேபினெட் அமைச்சர்கள். மற்றவர்கள் மத்திய இணை அமைச்சர்கள். "வளர்ச்சி, வலிமையான பாரதம்' என்ற முழக்கத்துடன் "நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபடுவோம்' என்று பதவியேற்றவுடன் இந்திய மக்களுக்கு தனது பிரதமர் அலுவலக இணைய தளத்தின் மூலம் முதல் வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளார் மோடி.

நரேந்திரமோடிக்கு பதவிப் பிரமாணம் முடிந்தவுடன் அவரது டீமில் உள்ள மிக முக்கிய தலைவர்கள் கேபினெட் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். அவர்களில் முதலில் பதவிப்பிரமாணத்திற்கு அழைக்கப்பட்டவர் ராஜ்நாத் சிங். அடுத்து அருண் ஜேட்லி. மூன்றாவது வெங்கய்யா நாயுடு. இவர்களில் அருண் ஜேட்லி, நடந்து முடிந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்டு தோற்றார். ஆனால் ராஜ்ய சபை எம்.பி.யாக ஏற்கனவே இருப்பதாலும், மோடியின் தளகர்த்தா என்ற அடிப்படையிலும் அவருக்கு அமைச்சர் பாக்கியம் கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. கட்சித் தலைவர்களாக இருந்தவர்களில் மூவர் மோடி தலைமையில் இப்போது அமைச்சராகியிருக்கிறார்கள். ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்கரி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் நாத் சிங் ஆகியோர்தான் அவர்கள். இம்மூவரில் ராஜ்நாத் சிங் தற்போது பா.ஜ.க. தலைவராக இருக்கிறார். மற்ற இருவரும் ஏற்கனவே தலைவர்களாக இருந்து விலகிக் கொண்டவர்கள். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதும், பிறகு அவர் சீனியர்களை ஓரங்கட்டிய போதும் மோடிக்கு "ஏட்டிக்குப் போட்டி அரசியல்' செய்தவர்தான் சுஸ்மா சுவராஜ். அவர் அமைச்சராக பதவியேற்றுள்ளதுதான் அனைவரையும் வியக்க வைத்த விஷயம். தன் எதிர்ப்பாளர்களையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார் மோடி என்பதற்கு உதாரணம்!

கர்நாடக மாநிலத்தில் மோடியின் நம்பிக்கைக்குரியவர் எடியூரப்பா. அங்கு பிரிந்து கிடந்த பா.ஜ.க.வை மோடி சொல்லித்தான் ஒருங்கிணைத்தார் எடியூரப்பா. அதன்பிறகு அங்கு நடைபெற்ற தேர்தலில் 17 எம்.பி.க்களைக் கைப்பற்றிக் கொடுத்தார் எடியூரப்பா. அதனால் அவருடைய விசுவாசிகளான சதானந்த கவுடா, தவாங்கரே ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார் மோடி. எடியூரப்பாவை பேலன்ஸ் பண்ணுவதற்கு அனந்தகுமாருக்கும் அமைச்சராகியுள்ளார். இது எதிர்காலத்தில் கர்நாடக பா.ஜ.க.விற்குள் பவர் பாலிடிக்ஸிற்கு வழி வகுக்கும். மோடி அமைச்சரவைக்கு முஸ்லிம் முகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ராஜ்ய சபை துணைத் தலைவராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் உள்ளவர்கள் தவிர, நாடு முழுவதும் தெரிந்த தலித் தலைவர் என்ற முறையில் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் அமைச்சராகியிருக்கிறார். தன்னுடன் முதலில் கூட்டணி வைத்ததற்கு இந்த நன்றிக்கடனை செலுத்தியிருக்கிறார் மோடி. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உள்ள உமா பாரதி அமைச்சராகியிருக்கிறார் என்பது மட்டுமே ஒட்டுமொத்த அமைச்சரவையிலும் உள்ள திருஷ்டிப் பொட்டு மாதிரி. மற்றபடி நரேந்திரமோடி அப்பழுக்கற்ற அமைச்சரவை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் என்றுதான் பாராட்ட வேண்டும். வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைச்சரவையை கொடுத்துள்ளார்.

இந்திய அரசியல் சட்டப்படி மத்திய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்க முடியாது. அதனடிப்படையில் பார்த்தால் ஏறக்குறைய 80 பேரை அமைச்சர்களை நியமிக்கலாம். ஆனால் மோடிக்கு இப்போது கூட்டணிக் கட்சிகளின் தொல்லை இல்லை. அவருக்கே தனி மெஜாரிட்டி இருக்கிறது. "தனி மெஜாரிட்டி கிடைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே அரசு அமைப்பேன்' என்று தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார் மோடி. அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே  இப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு "சாம்பிளுக்கு' சில அமைச்சர் பதவிகளைக் கொடுத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் இல்லை என்பதால், இந்த முறை பல இலாகாக்களை இணைத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை 45க்குள் சுருக்கியுள்ளார். "குறைந்த எண்ணிக்கையில் அமைச்சரவை, மக்களுக்கு நிறைந்த சேவை' என்ற மோடியின் முழக்கத்திற்கு ஏற்றவாறு அமைச்சரவையின் எண்ணிக்கை அமைந்துள்ளது. மக்கள் அளித்த ஒரு கட்சி ஆட்சி முறைக்கான தீர்ப்பு அமைச்சரவை உருவாக்கத்தில் மோடிக்கு இந்த சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்திற்கு மத்திய இணை அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கூட்டணியை அமைக்க பொன் ராதாகிருஷ்ணன் அரும்பாடு பட்டார். ஆளுக்கொரு பக்கமாக இழுத்த ராமதாûஸயும், விஜயகாந்தையும் இணைத்து கூட்டணித் தேரை ஓட்டுவதற்குள் படு கஷ்டப்பட்டார். தமிழகத்தில் வீசிய "ஜெயலலிதா புயலில்' அவர் மட்டும் பா.ஜ.க.விலிருந்து வெற்றி பெற்றார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனைவரும் கேபினெட் அமைச்சர் பதவி எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைத்ததோ இணை அமைச்சர் பதவிதான். மற்றபடி பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமனுக்கும் மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆனால் இவர் தமிழக கணக்கில் வருகிறாரா அல்லது அகில இந்திய பா.ஜ.க.வின் கணக்கில் வருகிறாரா என்பது புலப்படவில்லை. தெலுங்கு தேசத்தின் சார்பில் அசோக் கஜபதி ராஜூ கேபினெட் அமைச்சராகியிருக்கிறார். அதே நேரத்தில் மோடி அமைச்சரவையிலும் காந்தி பேமிலிக்கு பிரநிதித்துவம் கிடைத்திருக்கிறது. சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்திக்கு கேபினெட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அவர் பதவி பிரமாணம் செய்து கொண்ட போது, அவரது மகன் வருண் காந்தி புன்னகை தவழும் முகத்துடன் தன் அம்மா பதவி பிரமாணத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்ருதி ஈரானிக்கும் கேபினெட் அமைச்சர் பதவி! எதிர்பார்த்த அமைச்சவரை லிஸ்ட் வெளிவந்து விட்டது.

இவர்களில் யாருக்கு என்ன இலாகா என்பது ஒரு புறமிருக்க, ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம் போன்ற மிகப்பெரும் மாநிலத்திலிருந்து ஒருவர் உள்துறை அமைச்சராகிறார். அருண் ஜேட்லி நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளுமே ஹெவியான இலாகாக்கள். நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும்தான் மோடி தேர்தலில் காங்கிரஸின் மீது வைத்த குற்றச்சாட்டு. அந்த சுமை இப்போது அருண் ஜெட்லி தலையில் வந்து இறங்கியிருக்கிறது. ரவி சங்கர் பிரசாத் சட்ட இலாகா. அத்துடன் போனஸாக தொலை தொடர்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையில்தான் தி.மு.க.வின் சுமத்தப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் இருக்கிறது. பிரதமரையும், ப.சிதம்பரம் போன்றவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று நீண்ட நாள் வலியுறுத்தி வருபவர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி போன்றோர்தான். அவர்களின் கையிலேயே சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் இந்த முறை கிடைத்துள்ளது.

வெளியுறவு இலாகா சுஸ்மா சுவராஜுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையினை தமிழக கோணத்தில் பார்க்காத பா.ஜ.க. தலைவர்களில் சுஸ்மா சுவராஜ் மிக முக்கியமானவர். ஏற்கனவே தி.மு.க. அழுத்தம் கொடுத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு "இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம்' ஒன்றை இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாமா என்று ஆலோசிக்க ஒரு கூட்டம் கூட்டியது. இப்படியொரு கூட்டத்தை ஏன் கூட்டினீர்கள் என்று அன்றைய நாடாளுமன்ற விவகாரக்குழு அமைச்சர் கமல்நாத்திடம் சண்டை போட்டவர் சுஸ்மா சுவராஜ். போர் முடிந்தவுடன் இலங்கை வந்த இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர் சுஸ்மா சுவராஜ். இந்தப் பின்னணியில் இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகளைக் கூட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினை பல வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்றாகவே எடுத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் கட்சிகளின் ஆதரவு பா.ஜ.க. ஆட்சிக்குத் தேவையில்லை என்ற நிலையில் அதிரடி மாற்றங்கள் எதுவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்துவிடப் போவதில்லை. பதவியேற்பு விழா அன்றே கறுப்புக் கொடி காட்டி, "இது மகிழ்ச்சிகரமானதும், துக்ககரமானதுமான நாள்' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லியிலேயே பேட்டி கொடுத்துள்ளார். பதவிப் பிரமாணத்தில் பங்கேற்க வேண்டியவர் கறுப்புக் கொடி காட்டி கைதானார் என்பது இந்தப் பின்னணியில்தான்!

புதிய பிரதமர் நரேந்திரமோடியின் முன்பு இருக்கும் முக்கியச் சவால் பொருளாதாரத்தில் நாட்டை முன்னேற்றுவதுதான். அடுத்து அண்டை நாடுகளால் அடிக்கடி ஏற்பட்ட தொந்திரவுகளை நிறுத்துவது. அதன் ஒரு அங்கமாகத்தான் சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளார் மோடி. விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றை கட்டுப்படுத்தி காங்கிரûஸ விட வித்தியாசமான ஒரு அரசாங்கத்தை எப்படி மோடி கொடுக்கப் போகிறார் என்பதை இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானுடன் அவரது உறவுதான் மோடியின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அடிக்கடி வாஜ்பாயைப் புகழும் மோடி அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவே முனைப்பு காட்டுவார் என்பது தெரிகிறது. பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டவுடன் இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நின்று பேசிய மோடி, "வாஜ்பாய் இந்த தருணத்தில் இங்கே இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்' என்று உருக்கமாகச் சொன்னது அவரது உள்ளக்கிடக்கை. கட்சிக்குள் அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்ற பழம்பெரும் தலைவர்கள் ஒதுங்கி விட்டார்கள். அவர்கள் எந்தப் பதவிக்காக "லீடர்ஸ் இன் வெயிட்டிங்' என்பது இதுவரை தெளிவாகவில்லை. படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியாவும், ராகுலும் பங்கேற்றது அரசியல் நாகரீகத்தின் உச்சகட்டம். இந்தியா புதுப் பாதையை நோக்கி பீடு நடை போடவிருக்கிறது.  "குஜராத் மாடல்' என்ற கோஷத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த நரேந்திரமோடியின் "இந்திய மாடல்' என்ன? ஜனநாயக பூங்காவில் மிதந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X